Published:Updated:

நினை அவனை! - 18

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

ஸுரமந்திர தருமூல நிவாஸ

சய்யா பூதலம் அஜினம் வாஸ

ஸர்வ பரிக்ரஹ போகத்யாக

கஸ்ய ஸுகம் ந கரோதி விராக

கருத்து : ஆலயங்களின் அருகிலுள்ள மரத்தடி வாசம், மண்தரையில் உறக்கம், உடைகளையும் மோகங்களையும் துறந்துவிடுதல்... இப்படிப்பட்ட வைராக்கியம்தான் சுகம் அளிக்கவல்லது.

ப்போதும் எல்லாவற்றையும்விட உயர்ந்தது, ஞான வைராக்கியம். அதனால்தான் மன்னர்கள் ஞான வைராக்கியம்கொண்ட முனிவர்களைப் பணிந்து வணங்கினார்கள். குருவின் கட்டளையை ஏற்று முழு மூச்சுடன் செயற்பட்டார்கள். செல்வம் ஞானத்துக்கு முன் எப்போதும் அடிபணிந்தே இருந்தது.

கல்வியின் பயனும் அத்தகைய ஞான வைராக்கியத்தை உருவாக்குவதுதான்.

குருகுலக் கல்வி முடிந்து வீடு திரும்பினார் சுவேதகேது என்பவர். தன் தந்தையை வணங்கி னார். அப்போது சுவேதகேதுவின் தந்தை சில கேள்விகளைக் கேட்டார்.

நினை அவனை! - 18

``நீ குருகுலத்தை முடிக்கும்போது இதற்கு மேலும் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என்று நினைத்தாயா?

துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு விட்டதாக எண்ணினாயா?

கற்றுத்தர முடியாத கல்வியும் உண்டு என்பதை அறிந்துகொண்டாயா...”

அத்தனை கேள்விகளுக்கும், `இல்லை’ என்ற பதிலே சுவேதகேதுவிடமிருந்து வந்தது.

``அப்படியானால் இத்தனை வருடங்களாக நீ படித்ததெல்லாமே வீண்தான்’’ என்றார் தந்தை.

தந்தை கூறியது சுவேதகேதுவின் மனத்தில் வெகு ஆழமாகப் பதிந்தது. ஒவ்வொரு கேள்வியையும் மீண்டும் மீண்டும் மனத்தில் கொண்டுவந்து சிந்தித்த போது, `கல்வியைவிட முக்கியம் அதன்மூலம் தனக்குத்தானே கேள்விகளை எழுப்பிப்பெறும் ஞானம்தான்’ என்பதை உணர்ந்துகொண்டார்.

கேள்விகளுக்கான பதில்களை அறிவது மிகவும் சிரமமான செயல் என்று தொடக்கத்தில் எண்ணினார். ஆனால், மிகமிக எளிமையான அணுகுமுறையும் வாழ்க்கையும்தான் கல்வியின் சாராம்சம், ஞானத்தின் வெளிப்பாடு என்பதை அவர் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டார்.

ரு நாள் இரவு பிரம்மன் உறங்கிவிட்டார். மறுநாள் காலையில் எழுந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பல்வேறு உலகங்கள் புதிதாக இயங்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு சூரியன்.

‘`எப்படி இது சாத்தியம். என் அனுமதியின்றி இந்த உலகங்களை உருவாக்கி இயங்கவைத்தது யார்?’’ தனக்குள் எழுந்த கேள்விகளைப் புதிதாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சூரியனிடம் கேட்டார் பிரம்மன்.

சூரியன் தயங்கிக்கொண்டே விடையளித்தார்.

நினை அவனை
நினை அவனை

‘`கயிலாய மலைக்கருகே வாழும் ஒரு பிராமணத் தம்பதிக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. அவர்கள் சிவபெருமானை மனமுருகி வேண்ட, அடுத்தடுத்து பத்து ஆண் குழந்தைகள் பிறந்தனர். பத்துப் பேரும் கல்வியறிவில் மேம்பட்டு பல்வேறு சாஸ்திரங்களில் மேதைமை அடைந்தார்கள்.

ஒருநாள் பெற்றோர் இருவருமே இறந்துவிட, பத்து மகன்களும் சோகவயப்பட்டனர். கயிலாயத்தின் மீதேறி தவம்புரிய தொடங்கினார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது. `தவம் என்றால் அதற்கு ஒரு நோக்கம் இருப்பதுதானே இயல்பு... தங்கள் நோக்கம், எதுவாக இருக்க வேண்டும்' என்பதுதான் அது.

‘நோக்கம் எதுவாயினும் அது மிக உயர்ந்ததாக இருக்கவேண்டும்’ என்பதில் மட்டும் அவர்கள் வெகு தெளிவாக இருந்தார்கள். பணம், புகழ், அதிகாரம் போன்ற நோக்கங்கள் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இறுதியில் அவர்கள் ஒன்றுபட்ட முடிவுக்கு வந்தனர்.

‘அனைத்து உயிர்களையும் படைப்பது பிரம்மன். எனவே அவர்தான் அனைவரையும்விட மகத்தானவர். எனவே, நாமும் அவரைப்போலவே பிரம்மத்துவம் பெறவேண்டும்’ என்று தீர்மானம் செய்துகொண்டனர்.

இந்தக் குறிக்கோளை எப்படி அடைவது என்பதற்கான வழிமுறைகளை அவர்களில் மூத்தவன் எடுத்துரைத்தான். “நாம் பிரம்மா ஆனதாகவே முழுமையாக நம்பவேண்டும்” என்றான்.

அனைவரும் தனித்தனி இடங்களில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்கள். “நான் பிரம்மன்” என்ற எண்ணத்தை மட்டுமே மனத்தில் கொள்ளத்தொடங்கினார்கள். அதாவது, தங்கள் உடலையே மறந்தார்கள். காலம் கடந்தது. மரத்திலிருந்து இலை உதிர்வது போல அவர்கள் உடல்கள் பிரிந்து விழுந்தன. ஆத்மாக்கள் நிலைத்து நின்றன. ‘நான் பிரம்மன்’ என்று முழுமையாக முடிவெடுத்ததன்படி ஒவ்வொருவரும் பிரம்மனாக மாறி ஓர் உலகைப் படைத்தார்கள்’’ என்று பதில் கூறினார் அந்தச் சூரியன்.

இதைக் கேட்டதும் மூல பிரம்மன் திகைத்து விட்டார். ஒன்றை மிக ஆழமாக நினைக்கும்போது நாம் அதுவாகவே ஆகிவிடுவோம் என்பதை மேலும் தெளிவாகத் தெரிந்துகொண்டார்.

அந்தப் பிராமண குமாரர்கள் கொண்டதுவே ஞான வைராக்கியம்!

ஆனால், இதை நாம் எதிர்மறையாகப் பின்பற்றுகிறோம். நம் உலக ஆசாபாசங்களை ஆழமாக எண்ணி அவற்றில் மூழ்கி நாம் ‘அதுவாகி’ விடுகிறோம்.

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற

பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்

சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே

யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.

பட்டினத்தார் இப்படி தெளிவாகவே நிலையாமையை உணர்த்துகிறார். ஊர் என்பது நிரந்தரம் அல்ல. ‘எனது ஊர் திருச்சி’ என்றாலும் அதுவா எனது ஊர்? அங்கிருந்தும் புலம் பெயர்ந்திருப்போம். அந்த ஊரில் ஒரு வீடு இருந்திருக்கலாம். அதையும் காலப்போக்கில் விற்றிருப்போம். நம் முன்னோர்களின் ஊர் அது என்பதெல்லாம் முழு உண்மை இல்லை. ஏதோ ஒருகட்டத்தில் அவர்களும் வேறு இடத்திலிருந்து அந்த ஊருக்கு வந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த வேகமான யுகத்தில் உறவினர்களும் நிரந்தரம் அல்லர். திருமணத்துக்குக்கூட குடும்பத்தி லிருந்து ஒருவர் என்றுதானே வருகிறார்கள். நமக்குப் பொருளாதாரத் தேவை என்றால் உறவினர்கள் எங்கோ ஓடி ஒளிகிறார்கள்.

‘`ஒரு மாதம் தங்கிவிட்டுப் போகலாம்னு இருக் கேன்’’ என்று உரிமையுடன் கூறுமளவுக்கு, நமக்கு எத்தனை உறவினர்களின் வீட்டுக் கதவுகள் திறந்திருக்கின்றன?

பெற்ற புகழும் நிரந்தரம் அல்ல. நிரந்தரம் என்பது அனைத்தையும் விழுங்கக் கூடியது.

முதியோர் இல்லங்கள், தனிக்குடித்தனம் என்பவையெல்லாம் நம் பிள்ளைகளும் நமக்கு நிரந்தரம் அல்ல என்பதை உணர்த்துகின்றன. ‘கொள்ளி போடத்தான் பிள்ளை’ என்பார்கள். வெளிநாடுகளில் பிள்ளைகள் இருந்தால் அந்தக் கடமையைக்கூட சரிவரச் செய்ய முடிவதில்லை. ஆக, இறைவனின் பாதங்களைத் தவிர எதுவுமே நிரந்தரமல்ல என்பதைத்தான் பட்டினத்தாரும் ஆதிசங்கரரும் வலியுறுத்துகிறார்கள்.

- நினைப்போம்...