Published:Updated:

நினை அவனை! - 19

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

யோகரதோ வா போகரதோ வா

ஸங்கரதோ வா ஸங்கவி ஹீன

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்

நந்ததி நந்ததி நந்தத்யேவ

கருத்து : மகிழ்ச்சி என்பது சிலருக்கு யோகத்திலும் சிலருக்குப் போகத்திலும் கிடைக்கிறது. அதேபோல் சிலருக்கு மற்றவர் களுடன் சேர்ந்திருக்கும் தருணம் மகிழ்ச்சி அளிக்கும். இன்னும் சிலருக்குத் தனிமையே மகிழ்ச்சி தரும். ஆனால், உண்மையான மகிழ்ச்சி என்பது பிரம்மத்தில் ஏற்படுவதேயாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிரம்ம பதத்தில்தான் உண்மையான ஆனந்தம் உண்டு என்பதைப் பெரியோர்கள் உணர்ந்தும் நெடுங்காலமாக நமக்குப் போதித்தும் வந்துள்ளார்கள்.

‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்று இரண்டு எழுத்தினால்’

என்றெல்லாம் பக்தர்கள் உருகிப் பாடுவது இதனால்தான். தெய்வ ஞானத்துக் குத் தனி சக்தி உண்டு.

நினை அவனை! - 19

உத்தானபாதன் என்ற மன்னனுக்கு இரண்டு மனைவியர். அவர்களில் சுரூசி என்பவளிடமும் அவள் மூலம் பிறந்த உத்தமன் எனும் தன் மகனிடமும் அதிக பிரியம் காட்டிவந்தான் மன்னன்.இரண்டாவது மனைவி சுனீதி. அவள் மகன் துருவன்.

ஒருநாள், தந்தையிடம் சென்றான் துருவன். தந்தையின் மடியில் உத்தமன் இருந்தான். அருகில் சுரூசியும் அமர்ந்திருந் தாள். துருவனுக்குத் தானும் தந்தையின் மடியில் அமரவேண்டும் என்று ஆசை. ஆகவே, தானும் அவர் மடிமீது ஏற முயற்சி செய்தான். உத்தமனுக்கும் அவன் தாய் சுரூசிக்கும் இது பிடிக்கவில்லை. மிகுந்த வெறுப்புடன் துருவனைப் பிடித்து கீழே தள்ளிவிட்டாள் சுரூசி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வருத்தத்துடன் தாயிடம் திரும்பிய துருவன், அவளிடம் நடந்ததை விவரித் தான். அவள், ‘`மகனே! முற்பிறவியில் நீ செய்த பாவங்களால் இப்படி நடந்திருக்கலாம். இந்தப் பிறவியில் நீ நல்ல காரியங்களைச் செய். அதனால் நன்மைகள் விளையும். உனது நற்செயல் கள் மட்டுமே முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும்’’ என்றாள்.

துருவன் யோசித்தான். அவனுக்கு உண்மை புலப்பட்டது. தந்தையின் மடியில் அமர்வதைவிடவும் உண்மை யான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் எது என்பது அவனுக்குப் புலப்பட்டது.

‘`அம்மா! நான் வனத்துக்குச் சென்று திருமாலைக் குறித்து தவம் செய்யப் போகிறேன்’’ என்றான்.

தாய் திடுக்கிட்டாள். துருவன் புன்னகைத்தான். பிறகு, ‘`தந்தையின் புறக்கணிப்பு என்னை வருத்தவில்லை. அவருக்குப் பிறகு உத்தமனே நாடாளட்டும். நான் என் சக்தியால் அவனைவிட உயர் பதவியை அடைவேன்’’ என்று கூறிவிட்டு வெளியேறினான்.

வனத்துக்குச் சென்று சப்த ரிஷிகளைச் சந்தித்து, ‘`வேறு எவரும் அடைவதற்கரிய உன்னத இடம் எனக்கு வேண்டும். அதை நான் எப்படி அடைவது. வழி கூறுங்கள்’’ என்று வேண்டினான்.

``திருமாலை தியானித்து தவமிருப்பது ஒன்றே வழி’’ என்றனர் ரிஷிகள்.

அதன்படி, கடும் தவத்தில் ஆழ்ந்த துருவன் சாகாவரம் பெற்றான். அவன், வடதிசையில் ஒளிவீசும் நட்சத்திரமாய்ப் பிரகாசிப்பதை நாம் அறிவோம். பிரம்மத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி... அதனால் ஏற்பட்ட உன்னத நிலை அது!

நினை அவனை
நினை அவனை

யானையைத் தடவிப்பார்த்த குருடர்கள் போல் இறைவனை அறியும் முய​ற்சியில் இறங்குப வர்களும் உண்டு.

ஒரு பள்ளியில் ஆசிரியர் தன் மாணவர்களிடம் இப்படிக் கூறினார்: ‘`தொலைக்காட்சி விளம்பரங் களில் வாசகங்கள் வரும். அவற்றைக் கொண்டு கடவுளை வர்ணியுங்கள் பார்க்கலாம்.’’

அடுத்த நாள் கீழ்க்காணும் விடைகளை எழுதிக் கொண்டுவந்தார்கள் மாணவர்கள்.

‘கடவுள் அந்த மாத்திரை போன்றவர். ஏனெனில் அவர் அற்புதங்களைச் செய்கிறார்.’

‘கடவுள் அந்தக் கூரியர் சர்வீஸ் போன்றவர். நீங்கள் எங்கு சென்றாலும் உடன் வருவார்.’

‘கடவுள் அந்த பசை-டேப் போன்றவர். உங்களால் அவரைக் காண முடியாது; ஆனால், அவர் இருப்பதை உணர முடியும்.’

‘கடவுள் அந்தக் காப்பிப்பொடியைப் போன்ற வர். அவர் காலத்தை வென்ற ரசனை.’

ஆக, இறைவனை எந்தக் கோணத்தில் வேண்டு மானாலும் நோக்கலாம். `இறைவனே இல்லை’ என்ற பார்வையும் இங்கு உண்டுதான். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்குச் சில வசதிகள் உண்டு. அவர்களால் தோல்விகளிலிருந்து விரைவில் மீளமுடிகிறது.

தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்பிக்கையும் சேரும்போது, மனதுக்கு வலிமை கூடுகிறது. கடவுள் என்பக்கம் இருக்கும்போது வேறு யாரால் எதிர்ப்பக்கத்தில் இருக்க முடியும் - `IF GOD BE WITH ME, WHO CAN BE AGANIST ME?’ என்பது போன்ற வாக்கியங்கள், மனத்தில் விதைக்கும் ஆக்க உணர்வு கொஞ்சநஞ்சமல்ல.

உங்கள் கடந்த கால தோல்விக்குச் சிலருடைய அநியாயச் செயல்கள் காரணமாக அமைந்திருக்க லாம். அவர்களை எதிர்த்து உங்களால் ஏதும் செய்யமுடியாத நிலை தோன்றியிருக்கலாம். அப்போது, கடவுள் நம்பிக்கையே உங்களுக்கு உதவும்.

‘அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும். எனக்குத் தவறு இழைத்தவர்கள் தானாக அதற்குரிய பலனை அனுபவிப்பார்கள்’ என்ற எண்ணம், மனத்துக்குப் பெரும் ஆறுதல் அளிக்கும்; வஞ்சம்தீர்க்கும் எண்ணங்களை அது தணிக்கும். உணர்வுபூர்வமாக மட்டுமே யோசிக்கா மல், அமைதியாக ஒரு மாற்றுப் பாதையை அமைத்துக்கொண்டு லட்சியத்தை அடைய முயற்சி செய்வதற்கு அது வழிவகுக்கும்.

சுவாமி சிவானந்தர் மாறிவரும் புதிய பண்பாடு குறித்து தம் வருத்தத்தைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

“பணக்கார பொறியியல் வல்லுநர் ஒருவர், ‘என் வாழ்க்கையில் முப்பது கார்களைப் பயன்படுத்தியுள்ளேன்’ என்கிறார். பணக்கார மருத்துவரோ, ‘என் வீட்டில் இருபது வேலைக் காரர்கள் இருக்கிறார்கள்’ என்கிறார். வழக்கறிஞர் ஒருவரோ, ‘நான் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பத்து முறை சென்று வந்துள்ளேன்’ என்கிறார். அதேபோல் பெரும் வணிகர் ஒருவர், ‘எனக்கு ஐந்நூறு மாளிகைகள் உள்ளன. எனக்குப் பாயசமும், ரசகுல்லாவும் இல்லாமல் உணவருந்த முடியாது’ என்கிறார்.

ஆனால், எவரும் ‘காயத்ரி ஜபம் இருபத்து நான்கு லட்சம் முறை சொல்லியிருக்கிறேன்’ என்று சொல்வதில்லை. யோகவாசிஷ்டம் நூலை பத்து முறை படித்துள்ளேன்... கீதையை நூறுமுறையும் ராமாயணத்தை ஐம்பது முறையும் படித்துள்ளேன்... தசராவின்போது உண்ணாநோன்பிருந்தேன்... ஞாயிற்றுக்கிழமைகளில் பன்னிரண்டு மணி நேரம் மனத்தை ஒருநிலைப்படுத்துவேன்... தினந்தோறும் மூன்று மணிநேரம் பிராணாயாமப் பயிற்சி செய்கிறேன்... பத்மாசனத்தில் இரண்டு மணி நேரம் ஜபம், தியானம் செய்கிறேன்- இப்படியெல்லாம் எவரும் சொல்வதில்லை. இதுதான் புதிய பண்பாடு!

கைக்கடிகாரம் கட்டிக்கொள்ளுதல், கடன் பெற்று அதன்மூலம் கார் வாங்குதல், விலையுயர்ந்த ஆடைகளையும் காலணிகளையும் அணிதல், உணவைக் கரண்டிகளாலும் கத்திகளாலும் எடுத்து உண்ணுதல், புகைத்தல், மது அருந்துதல்... இவைபோன்ற வாழ்கையை வீணாக்கும் செயல் களில் ஈடுபடுதல்... இதுதான் புதிய பண்பாடு’’ என்று இடித்துரைக்கிறார் சுவாமி சிவானந்தர்.

உண்மையான மகிழ்ச்சி எதில் என்பதில் நாம் தெளிவுகொள்வோம்.

(நினைப்போம்...)