Published:Updated:

நினை அவனை! - 9 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

நல்லோர் உறவால் பற்றின்மை உண்டாகும். அதனால் மதிமயக்கம் நீங்கும்.

`ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்

நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி'

கருத்து: நல்லோர் உறவால் பற்றின்மை உண்டாகும். அதனால் மதிமயக்கம் நீங்கும். மதிமயக்கம் நீங்கினால், நிரந்தர உண்மை விளங்கும். அப்படி விளங்கினால், அதுவே ஜீவன் முக்தி.

திருமூலர் ‘மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை’ என்கிறார். அதாவது மரத்தாலான யானை பொம்மையைப் பார்க்கும்போது குழந்தை கைகொட்டிச் சிரிக்கும். ‘ஐ... யானை’ என்று ஆனந்தப்படும். குழந்தையைப் பொறுத்தவரை அது நிஜ யானை.

நினை அவனை! - 9 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

ஆனால், தச்சர் ஒருவர் அதைப் பார்க்கும்போது, ‘இது எந்த வகை மரத்தினால் ஆனது, இதை இன்னும் நுணுக்கமாகச் செதுக்கியிருக்க முடியுமா’ என்றெல்லாம் யோசிப்பார். மற்றபடி யானை என்ற விலங்கு குறித்து அவருக்கு எந்தச் சிந்தனையும் எழாது. இந்த இரண்டு நிலைகளுமே மதிமயக்கம். ‘பாம்பு என்று தாண்டவும் முடியவில்லை. பழுதை (கயிறு) என்று மிதிக்கவும் முடியவில்லை’ என மயங்கி நிற்கும் நிலை.

இந்த மதிமயக்கம் நீங்கவேண்டும் என்றால், அதற்கு நல்லவர்களின் உறவு வேண்டும் என்கிறது இந்த ஸ்லோகம். நல்லோர் உறவின் மேன்மையை விளக்க மிகச்சிறந்த உதாரணம் பிரகலாதன். ஓர் அசுரனின் மகனாக இருந்தும் எப்படி அவன் உள்ளத்தில் திருமால் பக்தி அவ்வளவு ஆழமாக ஊடுருவியது. அவன் தாய்கூட இறைபக்தியைவிட பதிபக்தியைத்தானே பெரிதாக எண்ணினாள்!

ஆனால் பிரகலாதனால் மட்டும்... அவனைக் கடலில் வீசியபோதும், பாம்பு கடித்தபோதும், விஷத்தை அருந்தியபோதும்கூட நாராயணன் நாமத்தை சிறிதும் பதற்றமின்றி உச்சரிக்க முடிந்தது.

அதற்குக் காரணமான பின்னணி இது.

ரண்யகசிபு காட்டுக்குச் சென்று கடுந்தவம் புரியத் தொடங்கியிருந்தான். ஏற்கெனவே தான் பெற்ற வரங்களால் மூவுலகங்களையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த அவன், இம்முறை தவம் செய்தது மரணம் இல்லாத வாழ்வைப் பெறுவதற்காக.

இதையறிந்த தேவேந்திரன் பயந்தான். இரண்யகசிபுவின் அரண்மனைக்குச் சென்றான். கர்ப்பவதியான அவன் மனைவி லீலாவதியைக் கண்டான். அசுரன்மீது கொண்ட கோபத்தால், அவளைத் தன் ரதத்தில் கடத்திச் சென்றான். கருவுடன் சேர்த்து அவளைக் கொல்லவேண்டும் என்பது அவனது திட்டம். வழியில் சந்தித்த நாரதர் அவன் மனதை மாற்றினார். அவரிடம் லீலாவதியை ஒப்படைத்துவிட்டுச் சென்றான், தேவேந்திரன்.

காட்டில் ஆஸ்ரமம் ஒன்றை ஏற்படுத்தி அதில் லீலாவதியைத் தங்கவைத்தார் நாரதர். தினமும் அவளுக்குப் பக்திக் கதைகளை எடுத்துரைத்தார். அவற்றில் திருமாலின் பெருமைகளை விளக்கும் கதைகள் நிறைய இருந்தன.

அந்தக் கதைகளைக் கேட்டு ஆனந்தப்பட்டது லீலாவதி மட்டுமல்ல; அவள் வயிற்றில் வளர்ந்த பிரகலாதனும்தான். இதை உணர்ந்த நாரதர் கருவிலேயே பிரகலாதனுக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்தார். குறிப்பிட்ட காலத்தில் குழந்தை பிறந்தது. அதற்குள் இரண்யகசிபுவும் தவத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பியிருந்தான். லீலாவதியையும் பிரகலாதனை யும் அவனிடம் ஒப்படைத்தார் நாரதர்.

நாரத முனிவரின் சத்சங்கம் காரணமாகத்தான் ஓர் அரக்கனுக்கு மகனாக இருந்தும் பிரகலாதனின் மனம் பக்குவப்பட்டதாக இருந்தது. அவன், பக்தர்கள் பட்டியலில் தனிச்சிறப்பு பெற்று விளங்கியதற்கு நாரதர் முக்கியக் காரணம்.

இதுபோன்ற சத்சங்கத்தின் நற்பலன்களை உணர்ந்ததால்தான் ஒளவையார் மூதுரையில் இப்படிக் கூறுகிறார்.

`நல்லாரைக் காண்பதுவும் நன்றே. நலம் மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே. நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே. அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.'

`ஜீவன் முக்தர்’ என்று சிலரை அழைப்பார்கள். அவர்கள் உண்மையை உணர்ந்தவர்கள். அவர்களைக் குறித்து காஞ்சி மகாபெரியவர் இப்படிக் கூறியிருக்கிறார்.

“மனம் விலகி ஆத்மாவின் உண்மை ஸித்திப்பதை புத்தியாலும் யுக்தியாலும் நிரூபிக்க முடியாது. அதற்கு நிரூபணம், இப்படி ஆத்மானந்தத்தில் ஆண்டிருக்கும் மகான்கள்தான்.

நினை அவனை! - 9 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

சதாசிவ பிரம்மேந்திரர் அப்படி இருந்தார். கொடுமுடியில் அவர் நிஷ்டைகூடி காவிரிக் கரையில் உட்கார்ந்திருந்தார். வெள்ளம் புரண்டு வந்து அவரை அடித்துக் கொண்டுபோய் பின்னர் அவர் மேலேயே மண்மேடிட்டு விட்டது.

பல நாள்கள் கழித்து யாரோ அதைக் கொத்தியபோது உள்ளே இருந்த அவருடைய கையில் அடிபட்டு ரத்தம் பீய்ச்சியடித்தது.

‘அடடா, உள்ளே யாரோ இருப்பதுபோல் இருக்கிறதே’ என்று அவர்கள் இழுத்துப் போட்டார்கள். அவர்பாட்டுக்கு ஆனந்தமாக சிரித்தபடி எழுந்து கால்போன போக்கில் போனார்’’ என்கிறார்.

கும்பகோணத்திலிருந்த மெளன சுவாமிகள், நேரம்-காலம் போவது தெரியாமல் நிஷ்டையில் இருப்பாராம். அப்போது, விழித்திருக்கும் அவரின் கண்கள் இமைக்காமல் நிலைக்குத்தியபடி இருக்குமாம். விரலை விழிக்கருகே கொண்டு சென்றாலும் இமைகள் மூடாதாம். அவரின் முகத் தில் ஆத்மஜோதி ஒளிவீசிக் கொண்டிருக்குமாம்!

இதேபோல் காசியில் பாஸ்கராநந்தர் எனும் மகானைத் தினம் தினம் நேரில் தரிசித்த பலரும் சாட்சி சொல்கிறார்கள்.

நமக்கெல்லாம் ரமண மகரிஷியை நன்றாகத் தெரியும். புழுவும், பூச்சியும் தொடை, பிருஷ்ட பாகங்களைக் குடைந்தாலும் அதை உணராதவராக ‘ஆத்மா ராமனா’க அமர்ந்திருப்பாராம்.

இவர்களைப் போன்ற மகான்களுக்கு, நிஷ்டை கலைந்தபிறகும் அவர்களின் உள்ளுக்குள் அனுபவம் மாறாது. அவர்கள் வெளி உணர்வோடு இருப்பதாக நாம் கருவோம். ஆனால், அவர்கள் ஆத்மாவிலேயேதான் ஐக்கியமாகி இருப்பார்கள். எவ்வித பந்தமும் துளியும் இல்லாமல் இங்கேயே மோட்சம் அடைந்துவிட்ட அவர்களை ‘ஜீவன் முக்தர்கள்’ என்கிறார் காஞ்சிப் பெரியவா.

ஜாதகக் கதை ஒன்று உண்டு. காசியில் யானை ஒன்று இருந்தது. அதன் காலில் ஒரு முள் குத்திவிட்டது. வலி தாங்க முடியாமல் பிளிறியது.

அதைக்கண்ட தச்சர்கள் சிலர் பரிதாபப்பட்டு, அந்த முள்ளை நீக்கி, முள் தைத்த இடத்தில் பச்சிலைகளை வைத்துக் கட்டினார்கள். காயம் குணமானது.

நன்றிக்கடனாக அந்தத் தச்சர்களுக்குப் பல மரங்களைக் கொண்டு வந்து கொடுத்தது யானை. மேலும், குட்டி வெள்ளை யானை ஒன்றையும் அவர்களுக்கு அளித்தது.

குட்டி யானை தச்சர்களின் பிள்ளைகளோடு சந்தோஷமாக விளையாடத் தொடங்கியது. ஒரு நாள் மன்னனும் அவன் வீரர்களும் யானைகளில் ஏறி, சாலையில் வலம் வந்தனர்.

அப்போது, வெள்ளை யானைக்குட்டி லத்தி போட்டது. அது அரண்மனை யானைகளின்மீது தெறிக்க, அந்த யானைகளின் முதுகுகள் மின்னின. வெள்ளை யானையிடம் ஏதோ விசேஷம் இருக்கிறது என்பதை உணர்ந்த மன்னன், பணம் கொடுத்து அதை வாங்கிக்கொண்டான்.

அந்த மன்னனுக்கு நீண்டநாள்களாக பிள்ளை வரம் வாய்க்கவில்லை. வெள்ளை யானை அரண்மனைக்கு வந்த வேளை, மகாராணி கர்ப்பம் தரித்தாள். அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால், சிறிது காலம் கழித்து மன்னன் இறந்துவிட்டான். இதுதான் சரியான நேரம் என்று நினைத்த கோசல மன்னன் காசியின்மீது படையெடுத்தான்.

இளவரசனோ மிகச் சிறியவன். இந்த நிலையில், அந்த வெள்ளை யானை தானே போருக்குத் தலைமை ஏற்றது. அதன் போர்த் தந்திரங் களால் கோசல நாட்டுப் படை பின்வாங்கி ஓடியது. அதற்குப் பிறகு, காசிநாட்டு இளவரசன் பக்குவம் அடையும் வரை அவனுக்கு ஆதரவாக அந்த யானையே ஆட்சி நடத்தியது.

இளவரசன் முடிசூடிய பிறகு அந்த யானை காட்டுக்குச் சென்றது. ஆக நல்ல நண்பர்கள் - அது ஐந்தறிவு கொண்ட மிருகமாக இருந்தாலும்கூட, வாழ்க்கைக்கு இன்றியமையாதவர்களாகத் திகழ்வார்கள். அவர்கள் நம் சோகம் களைபவர்கள்.

உண்மை விளங்குவது என்பது, இருளிலிருந்து ஒளிக்குச் செல்வதாகும். பிரஹதாரண்யக உபநிஷத் திலிருந்து ஓர் அருமையான பிரார்த்தனை.

‘அஸதோ மா ஸத்கமய

தமஸோ மா ஜ்யோதிர்கமய

ம்ருத்யோர் மா அம்ருதம்கமய’

பொய்மையிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல் இறைவா. இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல். மரணத்திலிருந்து மரணமிலாப் பெருநிலைக்கு என்னை அழைத்துச் செல்.

இதுதான் இந்த வரிகளின் பொருள்!

- நினைப்போம்)...

பூஜையில் கவனிக்க...

பூஜை மற்றும் பித்ரு காரியங்கள் செய்யும்போது ஓராடையுடன்... அதாவது அங்கவஸ்திரம், துண்டு போன்ற மேல் வஸ்திரம் இல்லாமல் செய்யக் கூடாது. ஆட்காட்டி விரலை பயன்படுத்தக் கூடாது.

நினை அவனை! - 9 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

எவர்சில்வர் விளக்குகளைப் பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. புளி, எலுமிச்சம்பழம், விபூதி ஆகியவற்றைத் தவிர, வேறுவகை ரசாயனங்களால் விளக்குகளை விலக்கக் கூடாது. பகவானின் பெயர் மற்றும் படம் பதிந்த வஸ்திரங்களை இடுப்புக்கு கீழே கட்டிக்கொள்ளக் கூடாது.

- ஹேமா, சென்னை - 28