Published:Updated:

நினை அவனை! - 20

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

பகவத்கீதா கிஞ்சித தீதா

கங்கா ஜலலவ கணிகா பீதா

ஸக்ருதபி யேந முராரி ஸமர்ச்சா

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

கருத்து : ஒருவன் பகவத்கீதையைச் சிறிதேனும் படித்தால், கங்கை நீரைச் சிறிதேனும் குடித்தால், திருமாலை ஒருமுறையாவது அர்ச்சனை செய்தால், அவனுக்கு எமதர்மனிடம் சச்சரவு இருப்பது இல்லை.

மகாபாரதப் போர் என்பது எங்கோ குருக்ஷேத்திரத்தில் நடந்த ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் நமக்குள் நடப்பது. நம் ஆன்மா அர்ஜுனன். நம் மனசாட்சி கிருஷ்ணன். உடல் தேர். கண், காது, வாய், மூக்கு, தோல் எனும் ஐம்புலன்களும் ஐந்து குதிரைகள். எதிரிகளாக இருப்பவை பொறாமை, பொருந்தாக் காமம், கர்வம் போன்ற குணங்கள்.

நினை அவனை
நினை அவனை

மனசாட்சி கூறுவதை நம் ஆன்மா கேட்டு அதன்படி நம் உடலை நடத்தி எதிரிகளை வெல்வதுதான் தூய வாழ்க்கையின் அடையாளம். பகவத்கீதையை ஓரளவாவது படித்திருந்தால், அதை மனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தால் இந்த ஞானம் சித்திக்கும்.

கங்கை நதியின் தொன்மை நமக்குத் தெரியும். பகீரதன் பெரும் முயற்சியெடுத்து உலகுக்கு கொண்டுவந்த நதி. சிவபெருமான் தன் தலையில் தாங்கிக்கொண்ட நதி. பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடி தன் இறுதிக் காலத்தில் கூறிய அறிவுரைகளில் கங்கையின் புகழும் உண்டு. ஒருவிதத்தில் பார்த்தால் இதில் வியக்க எதுவும் இல்லை. கங்கையின் புதல்வர்தானே பீஷ்மர். தாய்ப்பாசமும் இருந்திருக்கக் கூடும். எனினும் தீபாவளியின் போது உலகின் எந்த மூலையில் உள்ள இந்துக்களும் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பது கங்கை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டதன் பிரதிபலிப்புதானே?

கங்கையின் சிறப்பு அறிவியலிலும் தெரிகிறது. கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹாரிசன் என்பவர் ‘கங்கை நீரில் காலரா வியாதிக் கிருமிகள் விரைவில் இறந்து விடுகின்றன’ என்று கூறுகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞரான டாக்டர் ஹெல் என்பவர் ‘கங்கை நீரில் மிதந்துகொண்டிருந்த, பலவித நோய்களால் இறந்தவர்களின் பிரேதத்துக்குக் கீழே சில அடி தூரம் நோய்க்கிருமிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஒரு கிருமிகூட காணப்படாததைக் கண்டு வியந்தேன்’ என்கிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் நெல்சன் என்பவர் ‘ஹூக்ளி நதியில் இருந்து கங்கை நீரை எடுத்துச் சென்றபோது இங்கிலாந்து செல்லும் வரை அந்த நீர் கெடாமல் இருந்தது. மாறாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்களில் அங்கிருந்து கொண்டுவரப்படும் நீர், ஒரு வாரத்துக்கு முன்பே கெட்டுவிடுகிறது’ என்கிறார்.

இப்போதும்கூட, சாகக்கிடப்பவரின் வாயில் கங்கை நீரை ஊற்றுவது பலரது வழக்கம். இதற்காகவே கங்கை நீரை எடுத்துவந்து அதை பாதுகாப்பாக வைத்திருப்பதும் உண்டு.

நினை அவனை
நினை அவனை

இத்தனை பெருமைகள் வாய்ந்த கங்கை நீரின் மகத்துவத்தில் ஒரு பகுதியாவது அதை அருந்துபவருக்கு வராதா என்ன?

‘கங்கையில் இருப்பதும் தண்ணீர்தானே... பகவத் கீதையும் ஏதோ ஒரு நூல்தானே’ என்பவருக்கு இதுதான் பதில். நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரது புகைப்படத்தை அவமதித்துவிட்டு ‘இது வெறும் தாள்தானே!’ என்று கூறுவது சரியா... ‘ஏதோ மூன்று வண்ணங்களைக் கொண்ட துணி, அவ்வளவுதானே’ என்றபடி தேசியக்கொடிக்கு ஒருவர் அவமரியாதை செய்தால் ஏற்றுக்கொள்வோமா... இவை உணர்வு தொடர்பான விஷயங்களும்கூட.

அதேநேரம் ‘கீதையைப் படிப்பதும் இறைவனுக்கு அர்ச்சனை செய்வதும் போதுமா... தேவையானவை எது என்பதை உணர்ந்து அவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற வேண் டாமா...’ என்ற கேள்விகள் எழலாம்.

நியாயமான கேள்விகள் என்றுதான் மேலோட்டமாகப் பார்க்கும்போது தென்படும். ஆனால், நமக்கு என்ன தேவை என்பதில் தெளிவு இருக்கிறதா...

சிலர் இறைவனிடம், `உனக்கு அபிஷேகம் செய்கிறேன். என் குழந்தையைக் காப்பாற்று’, `உனக்கு லட்சார்ச்சனை செய்கிறேன், என்னை லட்சாதிபதியாக்கு’ என்று பேரம் பேசுவார்கள்..

‘நான் உனக்காக அதைச் செய்வேன். நீ எனக்காக இதைச் செய்’ என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பதுபோல இறைவனிடம் எதிர்பார்க்க முடியாது என்கிறார் ஸ்ரீபரமஹம்ச யோகாநந்தர்.

பராசக்தியை அவ்யாஜ கருணை மூர்த்தி என்பார்கள். அதாவது, காரணம் இல்லாமல் கருணை பொழிபவள். கருணைபொழிய வேண்டும் எனத் ​தீர்மானித்​துவிட்டால் இந்த ஒரு தீர்மானமே போதும் அவளுக்கு. வேறு எந்தக் காரணமும் வேண்டாம்.

நாம் கருணையுடன் யாசிக்கலாம் – எந்தவித பேரமும் இல்லாமல். நிலையாமையை உணர்ந்து பேரின்பப் பாதையை நாடும் வகையை நாடினால் அந்தக் கருணைமழை மேலும் அதிகமாகவே பொழியும். யாசிக்க வேண்டும் என்பது கூட இல்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய கதை இது...

ஒரு குழந்தைக்கு ஜாங்கிரி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு ஜாங்கிரியை அந்தக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு அதன் அப்பா விளையாட்டாக `எனக்குக் கொடு’ என்கிறார்.

குழந்தை இருகைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக்கொண்டு ‘மாட்டேன்’ என்று அப்பாவின் கையைக் கீழே தள்ளிவிட்டது.

`நான்தானே உனக்கு பொம்மை வாங்கித் தந்தேன். நான்தானே உனக்கு பு​துத்துணிகளை வாங்கித் தரப்போகிறேன். எனக்குக் கொடுக்க மாட்டாயா?' என்கிறார்.

குழந்தை அப்போதும் மறுத்து விடுகிறது.

அடுத்ததாக அம்மாவும் கையை நீட்டுகிறாள். அப்போதும் குழந்தை ஜாங்கிரியைத் தர மறுக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் வீட்டி​ல் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை தயங்கித் தயங்கி ஜாங்கிரி வைத்திருக்கும் குழந்தையைப் பார்க்கிறது. உடனே அந்தக் குழந்தை தன் கையில் இருக்கும் ஜாங்கிரியை ​பணிப்பெண்ணின் குழந்தையிடம். கொடுத்து விடுகிறது.

க​லீல் கிப்ரா​ன் இப்படி எழுதுகிறார்...

ஒருநாள் அழகும் அவலட்சணமும் கடற்கரையில் சந்தித்துக் கொண்டனர்.

`நாம் இருவரும் கடலில் நீராடுவோம்’ என்று இருவரும் கூ​றிக்கொண்டனர்.

இருவரும் தங்கள் உடைகளைக் களைந்து வி​ட்டுக் கடலில் நீச்சலடிக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில் அவலட்சணம் கரைக்கு வந்தது. அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்து கொண்டு வெளியேறிவிட்டது.

பின்னர் அழகு கரைக்கு வந்தது. ஆனால், அதன் உடைகளைக் காணவில்லை. நிர்வாணமாக வெளியேற முடியாதே... எனவே, அவலட்சணத்தின் உடைகளை அணிந்துகொண்டு வெளியேறியது.

இந்த ஆடைகளால் ​விளைந்த குழப்பத்தால் இன்றுவரை ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அழகை அவலட்சணமாகவும், அவலட்சணத்தை அழகாகவும் எண்ணுகிறார்கள். என்றாலும் சிலரால் மட்டும் இந்தக் குழப்பத்தில் சிக்கிக்கொள்ளாமல் முகங்களைக்கொண்டே ‘யார் அழகு, யார் அவலட்சணம்’ என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்கிறார்கள். உடைகள் அவர்களை ஏமாற்றுவதில்லை.

இந்தத் தெளிவு உள்ளவர்களுக்கு யமனிடம் ஏது சர்ச்சை? முக்தியை, எந்தவித ஐயமுமின்றி, இயல்பாகவே அடைய முடியுமே.

(நினைப்போம்)