Published:Updated:

நினை அவனை! - 22

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

ரத்யா சர்ப்பட விரசித கந்த்த

புண்யா புண்ய விவர்ஜித பந்த்த

யோகீ யோகநியோஜித சித்த

ரமதே பாலோன்மத்தவதேவ

கருத்து: கந்தல் துணியையே உடுத்துபவன்... புண்ணியம், புண்ணியமற்றவை என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பாதையில் பயணம் செய்பவன் - இப்படிப்பட்ட யோகி தெய்வ உணர்வில் கரைகிறான்; ஒரு குழந்தையோ, மனநலமற்றவனோ துள்ளித்திளைப்பதுபோல மகிழ்ந்திருக்கிறான்.

வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பாதையை நாடச் சொல்கிறார் ஆதிசங்கரர். யோகி, தெய்வ உணர்வில் கரைபவர் என்றும் அவருக்கு ஆன்மிகப் பாதை புலப்படும் என்றும் கூறி நாமும் அதை நாட வேண்டும் என்கிறார் மறைமுகமாக.

அந்தப் பாதை எது என்பதைக் கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளது நன்கு அறிந்த கதை ஒன்று.

நினை அவனை
நினை அவனை

துறவி ஒருவர் தன் சீடர்களுக்குப் பெண்ணாசை யால் ஏற்படும் விபரீதங்களை விளக்கினார். துறவற தர்மத்துக்கு வந்தபின் பெண்களைப் பற்றிய மோக சிந்தனைகளைத் துறந்துவிட வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறினார்.

ஒருநாள், ஒரு சீடருடன் நதிக்குச் சென்று குளிக்கத் தொடங்கினார். அப்போது சற்று தள்ளி ஓர் அபயக் குரல் கேட்டது. குளித்துக் கொண்டிருந்த ஓர் அழகான இளம்பெண்ணை நதியின் சுழல் இழுத்துச்சென்று கொண்டிருந்தது. அந்தத் திசையில் பாய்ந்து துறவி அந்தப் பெண்ணைக் கரைக்குத் தூக்கிவந்து காப்பாற்றினார்.

`பெண்களைத் தவிர்க்கவேண்டும் என்று நம்மிடம் கூறிய துறவி எதற்காக அந்த இளம் பெண்ணைத் தூக்கவேண்டும்? அது தவறல்லவா...’ என்ற கேள்வி சீடன் மனத்தில் எழுந்தது.

பிறகு, துறவியிடம் தன் மனத்தில் இருந்ததைக் கேட்டான்.

அதற்கு அந்தத் துறவி புன்னகையுடன், “நான் அவளை எப்போதோ இறக்கிவிட்டுவிட்டேன். நீதான் இன்னமும் அவளைச் சுமந்து கொண்டிருக் கிறாய்'' என்றாராம். இதுதான் யோகிகளின் மனநிலை.

ஒருவேளை தவம் புரிந்தால்தான் இந்த மனநிலை வருமோ... அதற்கும் உத்தரவாதமில்லை. அதற்குச் சாட்சிதான் அடுத்த கதை.

முனிவர் ஒருவர் அடர்ந்த காட்டில் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார். கண்களை ​மூடி இறைவனையே தியானித்தார். பசி, தாகம் எதுவும் அவர் கவனத்தை மாற்றவில்லை.

வனத்துக்குள் சுள்ளிகளைப் பொறுக்கிச் செல்வதற்காக ஓர் இளம் பெண் வந்துசெல்வாள். அவள், முனிவரைக் கண்டு வியந்து சில கனிகளைத் தினமும் சேகரித்து அவருக்கு அருகில் வைத்து விட்டுச் செல்வாள். முனிவர் கண்விழிக்கும்போது தன் எதிரே காணப்படும் கனிகளை உட்கொண்டு மீண்டும் தன் தவத்தைத் தொடர்வார்.

முனிவரின் கடுமையான தவத்தால் தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணிய இந்திரன் அந்தப் பெண்ணைப் பேரழகியாக் கினான். அழகு தேவதையாக மாறிய அவள் தொடர்ந்து தனது சேவையைச் செய்துவந்தாள். ஒருநாள் தற்செயலாகக் கண்களைத் திறந்த முனிவர் அந்தப் ​பெண்ணைப் பார்த்தார். எனினும் மீண்டும் தன் கண்களை மூடியபடி தவத்தில் ஆழ்ந்தார்.

நினை அவனை
நினை அவனை

அன்றிரவு, அந்த இளம்பெண் முனிவரின் தியானம் கெடுவதற்கு தான் ஒரு காரணமாக அமைந்துவிடக் கூடாதே என்று கவலைகொண்டு அந்த ஊரைவிட்டே கிளம்பிச் சென்றுவிட்டாள்.

பல ஆண்டுகள் கழித்து இந்திரன் முனிவருக்குக் காட்சிகொடுத்து, “வாருங்கள் இந்திரலோகத்துக்குப் போகலாம்’’ என்றான். ஆனால், முனிவர் அதை ஏற்கவில்லை.

திகைப்படைந்த இந்திரன், “இந்திரலோகம் வேண்டாமென்றால், உங்களுக்கு முக்தி தேவையா?’’ என்றான்.

“முக்தியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வதாம்?’’ என்றார் முனிவர்.

‘அட, இதுவல்லவா தவத்தின் உச்சநிலை. ​பக்கு வத்தின் உயர்நிலை’ என எண்ணியபடி இந்திரன் அங்கிருந்து நகரத் தொடங்க, முனிவரின் குரல் அவனை நிறுத்தியது.

“இந்திரா, முக்தியைவிடச் சிறந்த ஒன்று உண்டு. அது எனக்கு வேண்டும்’’ என்றவர், கேள்விக் குறியுடன் தன்னை நோக்கிய இந்திரனிடம், “இந்தக் கா​ட்டில் சுள்ளி பொறுக்கிய பேரழகியான அந்த இளம்பெண் எனக்குத் தேவை’’ என்றார்.

சிரிக்காதீர்கள்! இதுதான் மனத்தின் பலவீனம். இது கதை மட்டுமல்ல; மனித மனத்தைச் சூழ்ந் திருக்கும் மாயையைக் குறித்த விளக்கமும்கூட. எல்லோருக்குமே மாற்று வழிகள் உள்ளன. எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதில்தான் நம் சிறப்பும் வெற்றியும் அடங்கியுள்ளன.

ஜென் கதையொன்று உண்டு. ஒரு யோகி, குழந்தை அல்லது மனநலமற்றவனின் நிலையில் துள்ளித் திரிவான் என்பதை நினைவுபடுத்தும் கதை இது.

​ஜென் குருவான செ​ங்கையிடம் பயிற்சி எடுத்துக்கொண்டான் ஒருவன். சிறுவயதில் பயிற்சிக்குச் சேர்ந்த அந்தச் சீடனுக்கு வயது 20 ஆனது.

‘பிற ஞானியரிடமும் சென்று பயின்று மேலும் பக்குவமடையலாமே’ என்று அவனுக்குத் தோன்றியது. இதைத் தன் குருவிடம் அவன் கூறிய போது, அவன் தலையில் குட்டினார் குரு. மற்றபடி வாயைத் திறந்து அனுமதி எதுவும் வழங்கவில்லை.

சில நாள்கள் கழிந்தன. மீண்டும் அனுமதி கோரினான். இப்போதும் குரு புன்னகைத்தபடியே ​அவனது தலையில் ஒரு குட்டு குட்டினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் சில முறை நடந்தேறின.

சீடனுக்குப் பெருங்குழப்பம். எதற்காகத் தான் தவறு செய்யாதபோதும் தன்னைக் குட்டுகிறார். ஒருவேளை பிற ஞானியரிடம் தான் பயிற்சி எடுத்துக் கொள்வது குருவுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்தான்.

இந்தச் சூழலில் அந்தச் சீடனின் அண்ணன் ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான். அவனும் அதே குருவிடம் முன்பு பயிற்சி எடுத்துக்கொண்டவன். அண்ணனிடம் குருவின் செய்கையைப் பற்றி முறையிட, அண்ணன் புன்னகைத்தான்.

“அவர் உனக்கு அனுமதி அளித்துவிட்டார். அதைத்தான் கு​ட்டுவதன் மூலம் உணர்த்துகிறார்’’ என்றான்.

அப்போதும் புரியாமல் விழித்த தம்பியிடம், “இங்கு கற்ற கல்வியுடன் ​வெளியில் சென்று பிற ஞானியரிடமும் பயிற்சி எடுத்துக்கொண்டு பின்னர் இங்கு வரும்போது நீயே ஒரு ஞானியாகி இருப்பாய். ஒரு ஞானியைக் குட்ட முடியுமா... எனவேதான், இப்போதே அவர் உன்னைக் குட்டுகிறார். இதைத்தான் அவரது செய்கை உணர்த்துகிறது’’ என்று விளக்கினான்.

குழந்தைத்தனமாகப்படுகிறதா?!

ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் மேலான நிலையை அடைந்தவர்கள். இந்த உலகம் நிரந்தரமல்ல என்பதை அறிந்தவர்கள். உலகை ஒரு விளையாட்டுப் பொருள்போலவே நினைப்பவர்கள். எனவே அவர்கள் தங்கள் எண்ணத்தை விளையாட்டாகவே வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு.

சேஷாத்ரி சுவாமிகள்கூட திருவண்ணாமலை யில் விளையாட்டுத்தனமாகத் தோன்றும் செய்கை களைச் செய்திருக்கிறார். தெருவில் நடந்து செல்வார். திடீரென ஒரு கடையில் நுழைவார். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைக் கீழே வாரி ​இறைப்பார். பின் வெளியேறுவார். அப்படி இறைக்கப்படும் கடையில் அன்று வியாபாரம் அமோகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை நிலவியது.

சுயநலம் நீக்கிப் பல படிகள் கடந்து தெய்வ நிலையை அடைவது எளிது என்று கருதிவிட முடியாது. இந்த ​இடத்தில் பத்ரகிரியாரின் புலம்பல் காதுகளில் ஒலிக்கிறது.

“ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்? வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?” என்கிறார் அவர்.

பக்த மீராவின் அர்ப்பணிப்பும் சில நாயன்மார் களின் செயல்பாடுகளும் `இவர்கள் மனநிலை பேதலித்தவர்களோ' என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

மன்னனாகிய கணவனை விட்டுவிட்டு கண்ணனையே முதன்மைப்படுத்துவதா... சிவன் சந்நிதியில் விளக்கேற்ற எண்ணெய் இல்லை என்பதற்காகத் தன் உதிரத்தையே எண்ணெயாக ஆக்குவதா... பாம்பு தீண்டி மகன் இறந்திருக்கையில் சிவனடியாருக்கு விருந்து படைப்பதா... இப்படியெல்லாம் நமக்குள் கேள்விகள் எழலாம்.

அறியாமையே இன்பம் என்பார்கள். Ignrance is bliss. தெய்வ உணர்வில் கரைபவன், பிறர் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிவான்.

அதேநேரம், நம்மில் பலரும் அறிவாற்றலோடு செயல்படுவதாக நினைத்துக்கொண்டு செய்யும் முட்டாள்தனங்கள் ஏராளம். இது தொடர்பாக முல்லா நசிருதீனின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

முல்லா நசிருதீனின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் தன் வீட்டுக் கூரைமேல் நின்று கொண்டு, “உதவி, உதவி’’ என்று கத்தினார்.

அவருடைய நண்பர்கள் ஓடிவந்தார்கள். ஒரு பெரிய போர்வையைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, “முல்லா இதில் குதித்து விடு’’ என்றார்கள்.

முல்லா மறுத்தார்.

“உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். நான் குதிக்கும்போது அந்தப் போர்வையை விலக்கிக் கொண்டுவிடுவீர்கள். என​வே இது என்னை முட்டாளாக்கும் முயற்சி’’ என்றார்.

நண்பர்கள் பதறினார்கள். “நீ பெரிய அபாயத் தில் இருக்கிறாய். உடனே குதித்துவிடு’’ என்று கத்தினார்கள்.

அதற்கு முல்லா, “முடியவே முடியாது. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. வேண்டுமானால் அந்தப் போர்வையைத் தரையில் விரியுங்கள். அதன் மீது குதிக்கிறேன்’’ என்றார்.

இப்படித்தான் நம் கடவுள் நம்பிக்கையும் அவ்வப்போது ஊசலாடுகிறது. தெரியாமலா ஞானிகள் இப்படி வேண்டுகிறார்கள்...

“ஆண்டவனே, மாற்ற வேண்டியவற்றை மாற்றும் சக்தியை எனக்குக் கொடு. மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை எனக்குக் கொடு. எவற்றை மாற்ற முடியும், எவற்றை மாற்ற முடியாது என்ற வித்தியாசத்தை அறிந்துகொள்ளும் ஞானத்தையும் கொடு.’’

- நினைப்போம்.

நினை அவனை! - 22

‘பரசுராம் குண்ட்'

ரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர்க்கும் வழி தெரியாமல், பாரதமெங்கும் அலைந்து திரிந்தபோது ரிஷிகள் அவரை புனித நீராடச் சொன்ன இடம் ‘பரசுராம் குண்ட்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இயற்கை எழில் ஓங்கிய மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது இந்த இடம். அசாம் மாநிலத்தின் தின்சுகியா நகரிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது. பரசுராமர் நீராட முற்பட்டபோது அவரது கோடரி கீழே மலைமீது விழுந்து, அந்த இடம் பிளவுபட்டு தண்ணீர் பெருக்கெடுத்து லோகித் நதியாக உருவானது. இதை மெய்ப்பிக்கும் விதமாக பரசுராம் குண்டில் நதியின் நடுவே கோடரி விழுந்த இடம் கோடரி போன்ற அமைப்பிலேயே சிறு குன்றாக காட்சியளிக்கிறது. இந்த நதியை ஒட்டி சற்றே உயரத்தில் பரசுராமர் கோயிலும் உள்ளது. இங்கு தொடங்கும் லோகித் நதி சற்று தூரப் பயணத்துக்குப் பிறகு, மற்ற சிறு நதிகளுடன் இணைந்து பிரமாண்டமான பிரம்மபுத்திரா நதியாக அசாமில் பாய்கிறது. மகர சங்கராந்தி திருநாளில் இங்கு பக்தர்கள் திரண்டு வந்து புனித நீராடுகிறார்கள்.

- எம். பகவதி, கவுஹாத்தி.