Published:Updated:

நினை அவனை! - 24

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

த்வயி மயி ஸர்வத்ர ஏகோ விஷ்ணு

வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு

பவ ஸமசித்த ஸர்வத்ர த்வம்

வாஞ்சஸ்யசிராத்யதி விஷ்ணுத்வம்

கருத்து: உன்னிடமும் என்னிடமும் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது திருமால்தான். இதை அறியாமல் ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்த்துக்கொள்வது வேண்டாத வேலை. அனைவரிடமும் ஆத்மாவையே காண வேண்டும். வேற்றுமை எண்ணத்தை விட்டுவிட வேண்டும். சமமான மனநிலையை அடைய வேண்டும்.

‘நான் யார்’ என்பது போன்ற கேள்விகளை நமக்குள் எழுப்பிக்கொண்டால் கிடைக்கக்கூடிய விடை இது. நம் அனைவரிடமும் இறைவனே வியாபித்திருக்கிறான். இந்த ஞானத்தை அடைவது சுலபமல்ல. அதுவும் மேற்படித் தத்துவத்தை முறையாகப் புரிந்துகொள்வது இன்னும் கடினம்.

நினை அவனை
நினை அவனை

பரதன் என்ற சக்கரவர்த்தி பெரும் உத்தமர். மன்னனாக இருந்தாலும் பற்றுகள் அற்று வாழ்ந்தார். பரந்தாமனின் திருநாமத்தையே உச்சரித்துக்கொண்டு யோக தவம் செய்து வந்தார். ஒருநாள் அவர் மகாநதியில் நீராடிக் கொண்டிருந்தபோது அவர் இருக்கும் இடத்துக்கு அருகிலே கர்ப்பமடைந்திருந்த பெண் மான் ஒன்று நீர் அருந்த வந்தது.

அது நீர் அருந்திக்கொண்டிருக்கும்போது ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. பயந்துபோன மான் விரைவாகக் கரையின் மீது ஏறியது. அப்போது அதன் கர்ப்பமானது அதன் வயிற்றினின்றும் விடுபட்டு, கீழே இருந்த நதிநீரில் விழுந்து அலைகளிலே மிதந்தது. அந்த மான் குட்டிமீது இரக்கம் கொண்டு பரதர் அதைத் தம் கைகளில் எடுத்துக்கொண்டார். இதற்குள் அந்தத் தாய் மான் அதிர்ச்சியில் இறந்திருந்தது.

மான் குட்டியை எடுத்துக்கொண்டு பரதர் தம்முடைய ஆசிரமம் சேர்ந்தார். அதை வெகு அன்புடனே வளர்த்து வந்தார். ராஜ்ய பாரத்தையும், மக்களையும் சகல பந்த பாசங்களையும் விட்டு யோக தவம் செய்துகொண்டிருந்த பரதர் அந்த மான் குட்டியின் மீது அபிமானம் கொண்டிருந்தார். நாளடைவில் அவரது மரண காலம் நெருங்கியது. கண்களில் நீர் ததும்ப அந்த மான் குட்டியைப் பார்த்தவாறே உயிர்விட்டார்.

நினை அவனை
நினை அவனை

அதன் காரணமாக பரத முனிவர் மறுபிறவி யில் கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆனால், அவருடைய யோகச் சிறப்பினால் பூர்வ ஜன்மம் குறித்து அறிந்திருந்தார். ஆதலால் கங்கைக் கரையை விட்டு நீங்கி சாளக்கிராம க்ஷேத்திரத்தை அடைந்து தியானங்கள் செய்தபடி அங்கேயே மரணமடைந்தார்.

பிறகு, அந்த ஊரிலேயே நல்ல ஒழுக்கம் கொண்ட அந்தணர் குடும்பம் ஒன்றில் மகனாகப் பிறந்தார். அப்போதும் அவருக்கு முந்தைய பிறவிகள் குறித்துத் தெரிந்திருந்தது. வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார். எனினும் இந்த உலகின் நிலையாமை குறித்து அறிந்ததால் அவர் மூடனைப்போலவும், பித்தனைப்போலவும் திரிந்துகொண்டிருந்தார். இதனால் அவருக்கு ‘ஜடபரதர்’ என்ற பெயர் வழங்கலாயிற்று.

கானகத்தில் அவர் திரிந்து கொண்டிருந்த போது அரச சேவகன் ஒருவன் அவரை இழுத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்றான். மன்னன் ரகுகுணனின் பல்லக்கைச் சுமக்க வேண்டிய பணியை அவரிடம் ஒப்படைத்தான். ஜடபரதர் இதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஒருநாள் அவர் பல்லக்கைச் சுமந்துகொண்டு மெதுவாக நடந்தார். பல்லக்கு மெதுவாகச் செல்வதைக்கண்ட அரசன் சிவிகையாள்களிடம் கோபித்துக்கொண்டான். அதற்கு அவர்கள் ஜடபரதரைச் சுட்டிக்காட்டி அவரால்தான் பல்லக்கு மெதுவாக நகர்கிறது என்பதைக் கூறினார்கள்.

நினை அவனை
நினை அவனை

அரசன் கோபமடைந்து ஜடபரதரைப் பார்த்து, ‘நீ யார்? ஏன் பல்லக்கை மெதுவாகச் சுமந்து செல்கிறாய்?’ என்று கேட்டான்.

அதற்கு ஜடபரதர், ‘`அரசே! நீயும், நானும், தேகங்களாய் மாறி நிற்கிற மற்றவர்களும், மண் முதலிய பஞ்சபூதங்களாலே சுமக்கப்படுகிறோம். இந்த பஞ்ச பூதங்கள் குணங்களுடன் சம்பந்தப் பட்டவை. இந்த குணங்கள் கருமங்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. ஆன்மாவானது அழிவற்றதாய் சகல ஜந்துகளிலும் ஒரே அம்சமாக உள்ளது. அது வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை. இந்தப் பல்லக்கு எந்தப் பொருளால் ஆனதோ அந்தப் பொருளால் ஆனதுதான் இந்த உடம்புமாகும்’’ என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன் அரசன் திடுக்கிட்டான். பல்லக்கிலிருந்து கீழே இறங்கி ஜடபரதரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். எல்லாப் பொருள்களுமே அந்தப் பரந்தாமனுடைய சொரூபம் என்பதையும், அந்தப் பரம்பொருளுக்கு வேறானதும், மேலானதும் எதுவும் இல்லை என்றும் ஜடபரதர் உபதேசித்தார். இதைக் கேட்டு அரசன் ஞானம் பெற்றான்.

சிலர் தமது பக்தியைப் பெரிதாக விளம்பரப்படுத்திக்கொள்வார்கள்.

‘எனக்கு ஒரு நாளைக்கு 12 முறையாவது முருகனின் பெயரைச் சொல்லாவிட்டால் உறக்கம் வராது. அறுபடை வீடுகளுக்கு வருடத்துக்கு இருமுறையாவது சென்று வருவேன். என் பக்தியின் வெளிப்பாடாக அந்தக் கோயில்களில் அன்னதானம் செய்வேன்’ என்றெல்லாம் கூறுவர். இறைவன் அவருக்கு எதிரே தோன்றி, ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டிருந்தால் அவர் எவற்றைக் கேட்டிருப்பார் என்பதை உங்களாலேயே யூகிக்க முடியும்.

ஆனால், அனுமன் வேறு மாதிரியானவன். ராமபிரானிடம் அவன் கேட்ட வரம் இதுதான். ‘உங்கள் புகழ் எங்கே பேசப்பட்டாலும் எனக்கு அதைக் கேட்டு மகிழும் பாக்கியம் இருக்க வேண்டும். எனக்கு அதுவே போதும்’ என்றான்.

என்ன ஒரு மனநிலை? ராமர் குறித்த சொற்பொழிவுகளும், உபன்யாசங்களும் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் அனுமனும் இருப்பார் என்பது நம்பிக்கை.

திசங்கரரிடம் ஒரு பிராமணர் வந்து கண் கலங்கினார். `எனக்கு உங்கள் அருள் தேவை. என் குழந்தைக்குப் பிறப்பிலிருந்தே பேச்சு இல்லை. நீங்கள்தான் அருள் செய்து அவனைப் பேச வைக்க வேண்டும்’ என்று சங்கரரின் காலில் விழுந்தார்.

அந்தப் பிள்ளையைக் கனிவுடன் பார்த்த ஆதிசங்கரர், `நீ யார்?’ என்று ஞானப் புன்னகை யுடன் கேட்டார். உடனே அந்தக் குழந்தை, `நான் பூமியில்லை, வானமில்லை, பெண் இல்லை, ஆண் இல்லை. அறிவுதான் நான்’ என்றது.

`இவன் என்னிட​மே இருக்கட்டும்’ என ஆதிசங்கரர் அவனைத் தன்னுடன் இருத்திக் கொண்டார். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் ‘ஹஸ்தாமலகர்’ என்று பெயர் பெற்றார். இவரது ஸ்லோகங்களுக்கு ஆதிசங்கரரே விளக்க உரை எழுதியிருக்கிறார் என்றால் இவர் பெருமையை வேறு என்னவென்று உரைப்பது?

- நினைப்போம்