Published:Updated:

நினை அவனை! - 25

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ

மா குரு யத்னம் விக்ரஹ ஸந்தௌ

ஸர்வஸ்மிந்நபி பச்யாத்மானம்

ஸர்வத்ரோத் ஸ்ருஜ பேதாஜ்ஞானம்

கருத்து: பகைவனிடத்தும், நண்பனிடத்தும், புத்திரனிடத்தும், உறவினரிடத்தும் சண்டைக்கோ, சமாதானத்துக்கோ முயற்சி செய்யாதே. நீ விஷ்ணுவின் பத மலரை விரும்பினால், விரைவில் சம சித்தமுடையவனாக மாற வேண்டும். உன் ஆத்மாவையே எங்கும் பார்க்க வேண்டும்.

கைவன் யார், நண்பன் யார்... என்பது குறித்தே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். தவிர, ஒரே நபரை வெவ்வேறு சூழல்களில் பகைவனாகவும் நண்பனாகவும் கருதுவதும் உண்டு.

இந்த நிலையில் அவரோடு சண்டைக்கோ, சமாதானத்துக்கோ முயற்சி செய்ய வேண்டாம் என்கிறது இந்த ஸ்லோகம். இரண்டும் செய்யாமல் இருப்பதே சமசித்தம்.

நினை அவனை
நினை அவனை

இறைவனின் திருவுளம்தான் உலகம் எங்கும் விதியாக இயங்குகிறது. புவி ஈர்ப்பு, மின்சக்தி, ரசாயனச் சேர்க்கை என்று அறிவியலில் திகழும் ஒவ்வொரு விதியும் இறைவனின் எண்ணம்தான். இதை வேறு விதத்தில் கூறுவதானால், நம் உலகின் ஒவ்வோர் இயக்கத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் எனலாம்.

‘அதெப்படி அனைவரிடமும் ஒரே ஆத்மா. என்னால் இப்படிக் காணமுடியவில்லையே’ என்கிறீர்களா... அஞ்ஞானம் காரணமாக நம்மால் இதைக் காணமுடியாமல் போகலாம். ஆனால், காணமுடியாததை இல்லை என்று கூறக்கூடாது.

பகல் நேரங்களில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியுமா... முடியாது! அதற்காக நட்சத்திரங்களே இல்லை என்று கூறலாமா. அன்னமாச்சார்யர் வேங்கடவன் குறித்துப் பல பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் துள்ளல் நடையுடன் அமைந்த, பலரையும் ஈர்த்த ஒரு பாடல்... ‘பிரம்மம் ஒகடே’.

அதன் கருத்து... ‘உலகின் மிகவும் பணக்கார மன்னனும் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த வேலைக்காரனும் அடிப்படையில் இந்த (ஒரே) நிலத்தின் மீதுதான் படுத்து உறங்குகிறார்கள். மிக உயர்ந்த குலத்தில் பிறந்ததாகக் கருதப்படுபவனும் மிகத் தாழ்வான குலத்தில் பிறந்தவனாகக் கருதப் படுபவனும் நடப்பது ஒரே நிலத்தில்தான்.

நினை அவனை
நினை அவனை

ஐம்புலன்களால் அடையும் இன்பம் என்பவை தேவர்கள், மனிதர்கள் ஏன் சிறிய பூச்சிகளுக்கும்கூட ஒன்றேதான். பகல், இரவு என்பது கோடீஸ்வரர்களுக்கும் மிக வறியவர்களுக்கும் ஒன்றேதான். பெரும் ​புண்ணியாத்மாவாக இருந்தாலும் மகா பாவியாக இருந்தாலும் கடைத்தேற்றுவது ‘ஶ்ரீவேங்கடேஸ்வரா' என்கிற திருநாமம் மட்டுமே’.

‘நான் யாருக்கும் கெடுதல் செய்வதில்லை’ என்று சிலர் கூறுவது உண்டு. நல்ல விஷயம். ஆனால், இது போதாது. மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு வருவது ஒருகட்டம் என்றால், மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்வது அடுத்த கட்டம். இந்த நிலைக்கு உயர நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

இரண்டு முனிவர்கள் உணவு உட்கொள்ள அமர்ந்தனர். அப்போது வாசலில் ஒருவன் பிச்சை கேட்டான்.

அதற்கு முனிவர்கள் உள்ளே இருந்து கொண்டே ‘`இப்போது இங்கே உனக்கு உணவு கிடைக்காது’’ என்றனர்.

பிச்சை கேட்டு வந்தவன் விடவில்லை. ‘`நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கு கிறீர்கள்... யாருக்காக உங்கள் உணவை அர்ப்பணிக்கி றீர்கள்’’ என்று கேட்டான்.

முனிவர்கள், ‘`நாங்கள் வாயு தேவனை வணங்குகிறோம். அவருக்கு நிவேதனம் செய்துவிட்டே இந்த உணவை உட்கொள்ளப் போகிறோம்’’ என்றனர். பிச்சை கேட்டவன், ‘`வாயுதேவன் உங்களிடமும் இருக்கிறான். எனக்குள்ளும் இருக்கிறான். அப்படியிருக்க, நீங்கள் எனக்கு உணவளிக்க மறுத்தால் எனக்குள் இருக்கும் வாயுதேவனை நீங்கள் அவமதிப்பதாக ஆகாதா?’’ என்றான்.

இதைக் கேட்டதும் ஞானம் பெற்ற முனிவர்கள் சமசித்தம் பெற்றனர். மிகவும் மரியாதையுடன் அவனை உள்ளே அழைத்துச் சென்று உணவு படைத்தனர்.

பண்டரிபுரத்திலுள்ள பாண்டுரங்கர் தன் அணுக்கமான பக்தர்களுக்கு நேரடியாகவே காட்சி தந்து நட்பு பாராட்டியவர். அவர்களில் ஒருவர் நாமதேவர். தான் விட்டலனுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் ‘தனக்கு பக்தி குறைவுதான்’ என்ற உணர்வு நாமதேவருக்கு இருந்தது. இதற்கு தீர்வு என்ன என்று சிந்தித்தவர், அதுகுறித்து விட்டலனையே வினவினார்.

“அனுதா நாஹநாத் என்ற இடத்தில் விடோபா என்பவர் இருக்கிறார். அவரை உன் குருவாக ஏற்றுக்கொள்’’ என்றார் விட்டலன்.

நினை அவனை
நினை அவனை

அதன்படி அனுதா நாஹநாத்தை அடைந்த நாமதேவர், அங்குள்ள சிவாலயத்தில் வயதானவர் ஒருவர் தூங்குவதைக் கண்டார். `பாவம் அசதியாக இருக்கும், அதனால்தான் ஆலயத்துக்குள்ளேயே உறங்குகிறார்’ என்று எண்ணிய நாமதேவரின் பார்வையில் மற்றொரு காட்சி தென்பட்டது. அவர் அதிர்ச்சிக்குள் ளானார். அந்த முதியவரின் ஒரு பாதம் சிறிய சிவலிங்கத்தின்மீது இருந்தது.

“பெரியவரே, உங்கள் காலை லிங்கத்திலிருந்து நீக்குங்கள்’’ என்று கத்தினார் நாமதேவர். இந்த உரத்த குரலில் முதியவர் எழுந்து கொண்டார். “எனக்கு உடலில் சக்தியே இல்லை. என் காலைக் கொஞ்சம் நீதான் நகர்த்திவிடேன்’’ என்றார். உடனே நாமதேவர், காலை அந்த லிங்கத்திலிருந்து தூக்கி வேறோர் இடத்தில் வைத்தார். ஆனால், அந்தக் காலின்கீழ் புதிதாக ஒரு லிங்கம் முளைத்திருந்தது!

திகைத்துப்போனார் நாமதேவர், ‘நாம்தான் வேறொரு லிங்கம் இருப்பதை அறியாமல் அதன்மீது இவர் காலை வைத்துவிட்டோமோ?’ என்ற சந்தேகத்துடன் முதியவரின் காலை வேறோர் இடத்துக்கு மாற்றினார். இப்போது அந்த இடத்தில் மற்றொரு புதியதொரு லிங்கம் அவர் பாதத்துக்குக் கீழே காட்சி தந்தது.

நாமதேவர் உண்மையை உணர்ந்தார். தான் எங்கும் பரவியிருப்பதையே இறைவன் தனக்கு இப்படி உணர்த்தியிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டார். அதன்பிறகு எல்லா உயிர் களையும் சமமாக பாவித்தார்.

இறைவன் எங்கும் இருக்கிறான் எனும்போது அவன் நம் அனைவரிடமும் இருக்கிறான். அவன் உறைந்துள்ள ஆலயம் இந்த உடல் எனும்போது, அதை நாம் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிறரிடம் இறைவன் இருக்கிறான் எனும்போது, அவர்களை எவ்வளவு உயர்வாக நாம் மதிக்க வேண்டும்!

நண்பர்கள் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ஆனந்தன் என்பவனை வீரன் என்பவன் அடித்துவிட்டான். உடனே ஆனந்தன் அங்கிருந்த மணல் பகுதியில் `வீரன் என்னைத் துன்புறுத்திவிட்டான்’ என்று எழுதினான். பிறகு இருவரும் நதியில் படகில் சென்றனர். அப்போது ஒரு சுழலில் படகு சிக்கிக்கொண்டது. நீச்சல் தெரியாத ஆனந்தனை வீரன் காப்பாற்றினான். கரைக்கு வந்தவுடன் ​அங்கிருந்த பாறை ஒன்றில் அருகிலிருந்து ஆணியை எடுத்து `வீரன் என் உயிரைக் காப்பாற்றினான்’ என்று செதுக்கினான் ஆனந்தன்.

என்ன ஒரு பக்குவமான எண்ணம். நல்லது நிலைக்க​வேண்டும். கெட்டது மறைந்து விட வேண்டும். பாறையில் எழுதியது நிலைத்திருக்கும். மண்ணில் எழுதியது சில நொடிகளில் அழிந்துபோகும்.

ஆருணி என்ற முனிவனின் மகன் ஸ்வேதகேது, தன் ஆன்மா குறித்த எளிய விளக்கங்களை தந்தையிடமிருந்து பெற்றான். ‘`ஸ்வேதகேது, மண்ணிலிருந்து சட்டி செய்கிறார்கள். குதிரை, யானை போன்ற பொம்மைகள் செய்கிறார்கள். நாம் அவற்றைச் சட்டி, குதிரை, யானை என்று குறிப்பிடுகிறோம். ஆனால், அவையெல்லாமே மண்தான். அப்படித்தான் ஆன்மாவும். அதுவே உலகம் முழுவதும் பரவியுள்ளது’’ என்றார் அவர்.

ஆன்மா கண்ணுக்குப் புலப்படாது என்றாலும் அதன் மேன்மையை நம்மால் அறிய முடியும். பாத்திரத்தில் உள்ள நீரில் உப்பைக் கரைத்த சிறிது நேரத்தில் அந்த உப்பு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் அதில் உப்பு இருப்பதை மறுக்க முடியுமா. அந்த நீரின் ஒவ்வொரு துளியிலும் உப்பு இருக்கிறது. ஆம்! ஆன்மாவின் தன்மை புரிந்தவர்களுக்குப் பிறப்பு, இறப்பு குறித்த ஞானம் தெளிவாகவே புலப்படும்.

- நினைப்போம்...