Published:Updated:

நினை அவனை! - 26

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்

த்யேயம் ஶ்ரீபதி ரூபமஜஸ்ரம்

நேயம் ஸஜ்ஜனஸங்கே சித்தம்

தேயம் தீனஜனாய ச வித்தம்

கருத்து : கீதையும் சகஸ்ரநாமமும் பாராயணம் செய்யப்பட வேண்டும். ஶ்ரீபதியாகிய திருமாலின் வடிவத்தை இடைவிடாது தியானம் செய்ய வேண்டும். மனத்தை நல்லவர்களின் இணக்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும். பொருளை ஏழை மக்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

ஞானம் பெற்ற ஒருவனின் வாழ்வில் தொடர்ந்து இடம்பெற வேண்டிய நான்கைச் சுட்டிக்காட்டுகிறது மேற்காணும் பாடல். அவை... கீதை பாராயணம், திருமால் வழிபாடு, நல்லோரின் கூட்டுறவு, எளியோருக்கு தானம்.

நினை அவனை
நினை அவனை

அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார். அவருக்கு மலர்களைச் சமர்ப்பிப்பதற்காக அந்த ஊரிலுள்ள பூக்கடைக்குச் சென்று பலரும் மலர்களை வாங்கினர். பூக்கடைக் காரருக்கு நிறைய வியாபாரம் நடந்தது.

`நாம் ஏன் அந்தத் துறவி இருக்கும் இடத்துக்கு மிக அருகில் சென்று வியாபாரம் நடத்தக் கூடாது. அதிக விலைக்குப் பூக்களை விற்கலாமே’ என்று எண்ணினார் பூ வியாபாரி.

கடையிலிருந்த எல்லா பூக்களையும் ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு துறவி இருக்கும் இடத்தை அடைந்தார். துறவியை தரிசிக்க பலரும் வரிசையில் நின்றிருந்தார்கள். பூக்கடைக்காரரைத் தொலைவிலிருந்து பார்த்த துறவி புன்னகைத்தார்.

கடைக்காரர் வேகமாகத் துறவியிடம் வந்தார். எல்லா மலர்களையும் அவர் காலடியில் கொட்டினார். நமஸ்கரித்தார். உண்மையான செல்வம் எது என்பதை அவர் புரிந்துகொண்ட தருணம் அது. நல்லவர்களின் இணக்கத்தின் சிறப்பை அவர் உணர்ந்துகொண்ட நேரம் அது.

தீயவர்களின் தொடர்பினால் என்ன நேரும் என்பதையும் காண்போமே.

நினை அவனை
நினை அவனை

தவளை ஒன்று நிறைய குறும்புகள் செய்வதைப் பழக்கமாகக்கொண்டிருந்தது. அது ஓர் எலியைப் பார்த்து, ‘`நாம் ஒரு விளையாட்டு விளையாடலாம். கயிற்றின் ஒருமுனையை என் காலில் கட்டிக் கொள்கிறேன். மறுமுனையை உன் காலில் கட்டிக்கொள். இருவரும் கயிற்றை இழுக்கலாம். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்’’ என்றது. தவளையின் சூழ்ச்சியை அறியாத எலி சம்மதம் தெரிவித்தது.

இரண்டும் தங்கள் கால்களில் கயிற்றின் முனைகளைப் பிணைத்துக்கொண்டன. அடுத்த நொடியே தவளை வேகமாக அருகிலிருந்த குளத்தில் குதித்தது. கயிற்றின் எதிர்முனையில் கால்களைக் கட்டிக்கொண்டிருந்த எலியும் குளத்தில் விழுந்தது. தவளை அதைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தது. இரண்டும் குளத்தின் ஆழத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் நீர்ப்பரப்புக்கு மேலே வரும் நேரத்தில், வானில் பறந்துகொண்டிருந்த கழுகு ஒன்றின் பார்வையில் எலி பட்டது.

மறுகணம் தாழப்பறந்துவந்து எலியைத் தன் அலகில் கவ்வியபடி பறந்தது கழுகு. கயிற்றின் மறுமுனையில் கால்களைப் பிணைத்திருந்த தவளையும் மாட்டிக்கொண்டது. இரண்டையும் சாப்பிட்டது கழுகு.

தீயவர்களின் சேர்க்கை இப்படிப்பட்ட அபாயங்களுக்கே வழிவகுக்கும். இதனால்தான் நல்லவர்களின் சேர்க்கையை ஆதிசங்கரர் வலியுறுத்துகிறார்.

தானம் செய்ய வேண்டும் என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறது, அந்த ஸ்லோகம்.

அதிக செல்வம் அற்றவர்கள், `வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறோம்... செல்வம் இருந்தால்தானே தானம் அளிக்க முடியும்’ என்று கூறி, தானத்தைத் தட்டிக்கழிக்கக் கூடாது.அதிகம் செல்வம் படைத்தவர்கள்தான் தானம் செய்ய வேண்டும் என்பதில்லை.இருப்பதில் கொஞ்சமாக உதவினாலும் அதன் பலன் நிச்சயம் உண்டு.

ஸுகத: க்ரியதே ராமாபோக

பஸ்சாத் ஹந்த சரீரே ரோக:

யத்யபி லோகே மரணம் சரணம்

ததபி ந முஞ்சதி பாபாசரணம்

கருத்து : சுகமாக மாதர் போகத்தை ஒருவன் அனுபவிக்கிறான். முடிவில் உடலில் நோய்களை அனுபவிக்கிறான். அனைவருக்கும் முடிவு மரணம் தான் என்று தெரிந்திருந்தும் பாவம் செய்வதை அவன் விடுவதில்லை.

ஆயு, ஸ்வர்ப்பாவி ஆகிய தம்பதிக்கு நகுஷன் என்பவன் பிறந்தான். அவன் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்ததால், இந்திரலோகத்துக்கு அதிபதியானான். கூடவே பெண் மோகமும் உண்டாயிற்று. இந்திராணிமீது ஆசை கொண்டான். தடபுடலாகச் சென்று அவளை அணுகினால், தன் செல்வாக்கில் மயங்கி இந்திராணி தன்மீது ஆசை கொள்வாள் என்று நினைத்தான்.

அதையொட்டி விபரீத எண்ணம் ஒன்று அவனுக்குள் முளைத்தது... `சப்தரிஷிகளும் தான் அமர்ந்து செல்லும் பல்லக்கைச் சுமந்தால் எப்படி இருக்கும். இதைக்கண்டு இந்திராணி பிரமித்துவிடமாட்டாளா...' என்று!

தனது அதிகாரத்தால் அதற்கு ஏற்பாடு செய்தான் நகுஷன். பெரும் தவம் செய்தவன் என்பதால், ஒரு முறை அவனைச் சுமந்து செல்ல முனிவர்களும் சம்மதித்தனர்.

பல்லக்கு வேகமாகச் சென்றது. விரைவாக இந்திராணியைக் காண வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது நகுஷனுக்கு. உருவத்தில் குள்ளமான அகத்தியரால்தான் பல்லக்கு மெதுவாகச் செல்கிறது என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே அகத்தியரைப் பார்த்து ‘சர்ப்ப சர்ப்ப’ என்று விரட்டினான். சம்ஸ்கிருதத்தில் சர்ப்ப என்றால் ‘ஓடு’ என்று பொருள். அகத்தியருக்குக் கோபம் வந்தது. ‘`என்னை `சர்ப்ப' என்று கூறிய நீ சர்ப்பமாகக் கடவாய்’’ என்று சாபம் கொடுத்தார். இதன் விளைவாக நகுஷன் பாம்பானான்.

நினை அவனை
நினை அவனை

பெண் மோகம் ஒருவனை - அதுவும் 100 அஸ்வமேத யாகங்கள் செய்து பலன் பெற்ற வனை - ஒரு நொடியில் குழியில் தள்ளிவிட்டது.எனவே மிதமிஞ்சிய போகமும், கட்டுப் பாடற்ற வாழ்க்கையும் ஒருபோதும் கூடாது.

வானம்பாடியும் கழுகும் உயரமான குன்று ஒன்றின்மீது சந்தித்துக்கொண்டன. கழுகுக்கு வணக்கம் கூறியது வானம்பாடி. கழுகு அலட்சியத்துடன் பதில் வணக்கம் கூறியது. பிறகு ‘`நாங்கள் பறவைகளின் அரசர்கள். எனவே நாங்கள் கேட்பதற்குத்தான் நீ பதிலளிக்க வேண்டும். நீயாகவே எங்களிடம் எதையும் பேசக் கூடாது’’ என்றது.

அதற்கு வானம்பாடி ‘`நாமெல்லோரும் ஒரே குடும்பம் என்று நினைக்கிறேன்’’ என்றது.

கழுகு மிகவும் கோபத்துடன் அதைப் பார்த்து ‘`நீயும் நானும் ஒரே குடும்பம் என்று யார் சொன்னது?’’ என்று கேட்டது. இந்தக் கேள்வியால் சீற்றம்கொண்ட வானம்பாடி, ‘`ஒன்றை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களைப்போன்றே என்னாலும் உயரப் பறக்க முடியும். தவிர, என்னால் பாட முடியும். பிற உயிரினங்களுக்கு இன்பத்தை அளிக்க முடியும். நீங்கள் யாருக்கும் இன்பத்தையோ, சுகத்தையோ அளிப்பதில்லை’’ என்றது.

கழுகு உக்கிரத்துடன் ‘`இன்பம், சுகம்... என் அலகால் ஒருமுறை குத்தினால் நீ இறந்துவிடுவாய். என் கால் அளவுகூட உன் உருவம் இல்லை’’ என்றது. சட்டென்று அந்த வானம்பாடி பறந்து சென்று அந்தக் கழுகின் முதுகில் உட்கார்ந்துகொண்டு கழுகின் இறக்கைகளைக் கொத்தத் தொடங்கியது. உடனே, கழுகு பறந்தபடி இருபுறமும் தன் உடலை உதறியபடி வானம்பாடியைக் கீழே தள்ள முயன்றது. ஆனால், அதனால் முடியவில்லை. நெடுநேரத்துக்குப் பின் மீண்டும் பழைய குன்றின் மீதே வந்து உட்கார்ந்துகொண்டது. அப்போதும் வானம்பாடி அதன் முதுகிலிருந்து இறங்கவில்லை.

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஓர் ஆமை, கழுகைப் பார்த்துச் சிரித்தது.

இதனால் எரிச்சலடைந்த கழுகு, ‘`மிக மெதுவாக நடந்து செல்லும் அற்பப் பிறவியே, நீ எதற்கு என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு ஆமை, ‘`உன்னைப் பார்த்தால் குதிரை போலவும். உன்மீது உட்கார்ந்திருக்கும் வானம்பாடியைப் பார்த்தால் குதிரை யோட்டியைப் போலவும் தோன்றுகிறது. உன்னைவிட அந்தச் சிறிய பறவையே மேலானது என்று தோன்றுகிறது’’ என்றது. அதற்குக் கழுகு ‘`உன் வேலை யைப் பார்த்துக்கொண்டு போ. இது சகோதரர்களுக்கிடையே நடக்கும் விஷயம். நானும் வானம்பாடியும் ஒரே பறவைக் குடும்பம்’’ என்றது!

இந்த உண்மை கழுகுக்கு முதலிலேயே தெரியாதா என்ன... எனினும் பாவம் செய்வதை அது நிறுத்திக்கொள்ள வில்லை. வேறு வழியில்லாத நிலையில் ஆமையிடம் தர்க்கம் பேசி சமாளித்தது. இப்படி, வேறுவழியில்லாத நிலையில் பாவ காரியங்கள் செய்வதை நிறுத்திக் கொள்வதைவிட, ஆத்மசிந்தனை மூலம் பாவங்களற்ற வாழ்க்கையை வாழ்வதே சிறப்பான வழிமுறை.

ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல

உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல

பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும்

சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல

தேசத்திலே யாரும் சதமல்ல

நின்தாள் சதம் கச்சியேகம்பனே.

பட்டினத்தாரின் இந்த வரிகள் தெளிவாகவே உண்மையை உணர்த்து கின்றன. ஊர், பெற்றோர், மனைவி, மகன் உள்ளிட்ட உறவினர் எவரும் நிரந்தரம் அல்ல; இறைவன் மட்டுமே நித்தியமானவர்!

நினைப்போம்...