திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

நினை அவனை! - 27

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

அர்த்த மனர்த்தம் பாவய நித்யம்

நாஸ்தி ததஸ் ஸுகலேசஸ் ஸத்யம்

புத்ராதபி தனபாஜாம் பீதி

ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி.

கருத்து: செல்வத்தால் சிறிதளவும் இன்பம் இல்லை என்பது உண்மை. எனவே, பொருளைப் பொருளாகக் கருதாமல் துன்பம் என்று எப்போதும் எண்ணுவாயாக. பொருளைச் சேமிப்பவர்களுக்குப் பிள்ளைகளிடமிருந்தும்கூட பயம் ஏற்படுகிறது. இதுவே எங்கும் இயல்பாக உள்ளது.

அதிகமான பணம் நிறைய சுகத்தைத் தரும் என்பது ஒரு கற்பனை, கனவு... அவ்வளவே.

தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவன் நான்கு அல்லது ஐந்து வீடுகளுக்கு அல்லது இன்னும் அதிகமான வீடுகளுக்குச் சொந்தக்காரன் ஆகி விட்டால் அவனது மனநிம்மதி அதிகமாகுமா?

சிவானந்தர் கூறியுள்ள ஓர் உதாரணம் இதைச் சுவைபட விளக்குகிறது.

நினை அவனை
நினை அவனை

சீனத் தத்துவஞானி சுவாங்க் ஷே, தான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருப்பது போல கனவு கண்டார். அவர் விழித்தெழுந்ததும், ``இப்போது நான் ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கனவில் காண்கிறேனா அல்லது நானே ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருந்துகொண்டு `நான் சுவாங்க் ஷே' என்று நினைக்கிறேனா'' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டாராம்.

நீங்கள் கனவு காணும்போது ஒரு மணி நேரத்தில் ஐம்பது ஆண்டுக்கால நிகழ்ச்சிகளைக் கண்டுவிடுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே ஐம்பது ஆண்டுக்காலம் கடந்துவிட்டதாக உணர்கிறீர்கள். எது சரியானது... ஒரு மணி நேர விழிப்புநிலை மன உணர்வு சரியானதா அல்லது ஐம்பது ஆண்டு கனவுநிலை மன உணர்வு சரியானதா... இரண்டும் சரியான வையே!

ஒவ்வோர் இரவும் அதே கனவு வந்து கொண்டிருக்குமானால் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளில் எவ்வளவு ஈடுபட்டுள்ளோமோ அதே அளவுக்குக் கனவு நிகழ்ச்சிகளிலும் நாம் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று பாஸ்கல் என்ற அறிவியலாளர் சொன்னது சரியே.

நினை அவனை
நினை அவனை

``ஒரு கலைஞர், ஒவ்வோர் இரவும் 12 மணி நேரத்துக்கு முழுமையாக அவர் ஓர் அரசர் என்று கனவு காண்பாரேயானால் அவர், `தான் ஒரு கலைஞர்' என்று ஓர் இரவில் 12 மணி நேரத்துக்குக் கனவு காணும் ஓர் அரசர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பாரோ அதே அளவுக்குத் தானும் மகிழ்ச்சியாக இருப்பார்'' என்று அவர் சொல்கிறார். தேவைக்கு அதிகமான பொருள்களை சேமித்து வைத்து யாருக்கும் அதைப் பகிர்வதில் நாட்டம் இல்லாதவர்களுக்கு இதோ ஒரு ‘கண் திறக்க வைக்கும்’ சம்பவம்.

தந்தை ஒருவர் இறக்கும்போது தன்னிடம் இருந்த நிலத்தை தன் இரு மகன்களுக்கும் சரி பாதியாகப் பிரித்துக்கொடுத்திருந்தார். அந்த இரண்டு மகன்களில் ஒருவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. மற்றொருவன் பிரம்மசாரி.

இரு சகோதரர்களும் பாசத்தோடு இருந்தார்கள். இருவர் நிலங்களிலும் விளையும் தானியங்களைச் சரிபாதியாகவே பகிர்ந்து கொண்டார்கள்.

ஒருநாள் திருமணமான சகோதரனுக்கு இப்படி ஒரு சிந்தனை வந்தது. ‘எனக்கு மனைவி இருக்கிறாள்; குழந்தைகள் இருக் கிறார்கள். வருங்காலத்தில் என் பிள்ளைகள் வளர்ந்து என்னை கவனித்துக் கொள்வார்கள். என் தம்பி தனக்குத் திருமண வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டான். அவன் ​மூப்படையும்போது அவனை யார் கவனித்துக்கொள்வார்கள்... எனவே, எதிர்கால சேமிப்பு என்பது அவனுக்குத்தானே அதிகம் வேண்டும்’ - இப்படி யோசித்த மூத்தவன் அன்றிரவே தன் களஞ்சியத்திலிருந்து இரண்டு மூட்டை தானியங்களை எடுத்து, தம்பியின் களஞ்சியத்தில் ரகசியமாக வைத்து விட்டான்.

சற்றுநேரம் கழித்து தம்பிக்கு விழிப்பு வந்து விட்டது. அவன் இப்படி சிந்தித்தான். ‘நானும், அண்ணனும் விளைச்சலை சரி சமமாகப் பங்கிட்டுக்கொள்கிறோம். நான் தனி ஒருவன். அண்ணனுக்கோ குடும்பம் பெரிது. எனவே செலவுகளும் அதிகம். அவனுக்கல்லவா அதிகமான தொகை தேவைப்படும்...’ - இப்படி யோசித்த தம்பி, தனது களஞ்சியத்திலிருந்த தானிய மூட்டைகளில் இரண்டை அன்றிரவே எடு​த்துக்கொண்டுபோய் அண்ணனின் களஞ்சியத்தில் ரகசியமாக வைத்துவிட்டு வந்தான்.

மறுநாள் காலையில் சகோதரர்கள் இருவரும் அவரவர் களஞ்சியத்துக்குச் சென்ற போது முன்தினம் இருந்த மூட்டைகளின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதைக் கண்டு திகைத்துப்போனார்கள். அதன் பின்னணி யையும் யூகித்து நெகிழ்ந்து போனார்கள்.இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர் களுக்குச் சேமித்து வைப்பதில் பயம் தோன்றாது.

எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் இரண்டு தளங்கள். அவர்கள் வீட்டில் சமையற்காரப் பெண்மணி, கார் ஓட்டுநர், வேலைக்காரப் பெண்மணி ஆகியோர் உ​ண்டு. மூவரும் வீட்டில் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று வந்தனர்.

`‘இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறாயே அவர்கள் உன் வீட்டுப் பொருள்களை எடுத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வீர்கள்? தவிர வீட்டில் இவ்வளவு பொருள்களை நிரப்பியும், பரப்பியும் வைத்திருக்கிறீர்கள். ஏ​தாவது பொருள் திருடு போய்விட்டால் அது உங்களுக் குத் தெரியுமா’' என்று கேட்டேன்.

கிடைத்த பதிலை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

‘அப்படி என்னுடைய பொருள் ஏதாவது திருடப்பட்டு அதை நான் உணரவில்லை என்றால், அது எனக்குத் தேவையற்ற பொருள் என்பதுதான் உண்மை. அது அதிகப்படியாக உள்ள பொருள் என்றுதான் அர்த்தம் அப்படிப் பட்ட ஒரு பொருள் என்னிடம் இருந்தால் என்ன... இல்லாமல் போனால் என்ன?’

நினை அவனை
நினை அவனை

பொட்டில் அடித்தாற்போல் இருந்தது அவர் சொன்னது. இது தொடர்பான மற்றொரு கோணத்தை எனக்கு உணர்த்தியது, வேறொரு நண்பர் என்னிடம் பகிர்ந்துகொண்ட ஒரு தகவல்.

`‘நா​ங்கள் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். எங்களுக்கிடையே சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுண்டு. ஆனால், மற்றபடி எங்களுக்கிடையே பெரிய சச்சரவு ஏற்பட்ட​தில்லை. பாசமாக இருக் கிறோம். இதற்கு முக்கியக் காரணமாக என் பெற்றோரைத்தான் குறிப்பிட வேண்டும்’' என்றார் நண்பர்.

அவர் பெற்றோர் நிறைய நல்லெண்ண நெறிகளை போதித்திருப்பார்களோ அல்லது தங்களுக்கிடையே சச்சரவு நேர்ந்தால் பெற்றோரின் ஆத்மா புண்படும் என்ற பயமோ அல்லது சமாதானமாகவே வாழ்ந்த பெற்றோரின் மரபணுக்கள்தான் காரணமோ...

இப்படிப் பலவிதமாக நான் நினைக்க, மிகவும் எதிர்பாராத ஒரு கோணத்தை வெளிப்படுத்தினார் நண்பர். `‘என் பெற்றோர் எங்களுக்காக நிலம், வீடு போன்ற எதையும் வைத்துவிட்டுப் போகவில்லை'’.

யோசிக்க, யோசிக்க இது எவ்வளவு ஆழமான உண்மைகளை உணர்த்துகிறது என்பது புலப்பட்டது. ஒரு வீட்டின் உ​ரிமை யாளர் இறந்தால் அவர் மகன், மகள்களுக் கிடையே அந்தச் சொத்தை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதில் சச்சரவு ஏற்படுகிறது. இதில் அந்த வாரிசுகள் மட்டுமல்ல; வாரிசு களின் குடும்பங்களும் தங்கள் எதிர்மறைப் பங்களிப்புகளைச் செய்கின்றன. இப்படிப் பட்ட சூழலில் நீதிமன்றத்தை அணுகி ‘இரண்டு பூனைகளுக்கிடையே அப்பத்தைப் பிரித்துக் கொடுத்த குரங்கின் கதைபோல்’ வழக்கறிஞருக்கு ஏராளமான பணத்தைக் கொட்டிக்கொடுப்பவர்கள் உண்டு.

சொத்து சேர்ப்பவர்களுக்கு வேறு பல சஞ்சலங்களும் உள்ளன.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி கணவனை இழந்தவர். அரசுப் பணியில் ஓய்வு பெற்றபோது குறிப்பிடத்தக்க தொகை கைக்கு வந்தது. மகனும் மகளும் வீடு கட்டுவதற்கு அந்தத் தொகையைக் கடனாகக்கேட்க, அவர் திகைத்துப்போனார். காரணம், அந்தத் தொகையை வட்டிக்கு விட்டு யாரையும் எதிர் பார்க்காமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் யோசித்து வைத்திருந்தார். இந்த நிலையில் பணத்தைக் கொடுக்கவும் தயக்கம், கொடுக்காமல் இருந்தாலும் குழந்தைகளின் ஆதரவு தனக்கு வருங்காலத்தில் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்.

ஆக பணமும், சொத்தும் நன்மையைவிட தீமையைத்தான் அதிகம் செய்கின்றன.

கடும்நோயால் நீண்டநாள் அவதிப்படுபவர் கள் ‘என் வீட்டை நான் தானமாகக் ​கொடுத்து விடுகிறேன். அதற்குப் பதிலாக எனக்கு முழு ஆரோக்கியம் கிடைத்தால் போதும்’ என்று ஆதங்கத்துடன் சொல்ல வாய்ப்பு உண்டு.

ஒரு பண்டிதரும் அவரின் சீடரும் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது சில கொள்ளையர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். தங்களிடம் எந்தப் பணமும் இல்லை என்று பண்டிதர் கெஞ்சினார். என்றாலும் அவர் பணக்காரர் என்று கொள்ளையர்கள் நம்பினர். அவர்கள் அந்தச் சீடரைப் பார்த்து ‘இந்தப் பண்டிதரை நாங்கள் பணயக் கைதியாக வைத்துக்கொள்வோம். நீ ஊருக்குச் சென்று இவர் சேர்​த்துவைத்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு வா. நீ வராமல் போனால் இந்தப் பண்டிதரைக் கொன்றுவிடுவோம்’ என்றபடி அந்தப் பண்டிதரை ஒரு மரத்தில் கட்டி வைத்தார்கள்.

சீடன் பண்டிதரின் காதுகளில், ‘நான் முடிந்தவரை சீக்கிரமே பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன். அதுவரை வைதர்ப மந்திரம் குறித்து இவர்களிடம் எதுவும் கூறி விடாதீர்கள்’ என்று கூறிவிட்டு ஊருக்குச் சென்றான்.

வைதர்ப மந்திரம் என்பது தனி சக்தி கொண்டது. சரியான முகூர்த்த நேரத்தில் அதைப் பண்டிதர்கள் கூறினால் வானிலிருந்து அந்தப் பகுதியில் ரத்தினங்களாகக் கொட்டும். இதற்கான முகூர்த்தவேளை ஆயிரம் வருடங் களுக்கு ஒரு முறைதான் வரும்.

இரவானது. குளிர் நடுக்கத் தொடங்கியது. சீடன் தன்னைக் கைவிட்டுவிட்டானோ என்ற சந்தேகம் பண்டிதருக்கு வந்தது. ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய அந்த முகூர்த்தவேளை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது பண்டிதர், ‘என்னை விட்டு விடுங்கள். நான் வைதர்ப மந்திரம் ​மூலம் இங்கு ரத்தினக் கற்களை வரவழைக்கிறேன்’ என்றார்.

பண்டித​ரைக் கட்டுகளிலிருந்து விடுவித்தனர் கொள்ளையர்கள். பண்டிதர் அந்த மந்திரத்தைக் கூற அந்தப் பகுதியில் மட்டும் மேலே மேகங்கள் குவிந்தன. ஒரு ரத்தினக்கல் விழுந்தது. இதற்கு அடுத்தடுத்து ரத்தினக்கற்கள் விழுந்தன. கொள்ளையர்களுக்குப் பெரும் ஆனந்தம். பண்டிதரை விடுவித்தனர். பண்டிதர் வேகமாகக் காட்டைவிட்டு ஓடத் தொடங்கினார்.

இந்தச் செய்தி வெகு வேகமாக பல்வேறு கொள்ளைக் குழுக்களுக்கிடையே பரவியது. வேறொரு கொள்ளைக்குழு, இன்னமும் காட்டை விட்டு முழுவதும் வெளியேறாத பண்டிதரைச் சிறை பிடித்தது. ‘எங்களுக்கு ரத்தினக் கற்களை கொட்டச் செய்’ என்றது. ஆனால், முகூர்த்த நேரம் கடந்துவிட்டதால் பண்டிதரின் மந்திரம் வீணானது. கோபத்தில் பண்டிதரை அவர்கள் கொன்றுவிட்டனர்.

பிறகு, ஏற்கெனவே முன்பு கொட்டிய ரத்தினங்களிலிருந்து ஒரு பகுதியைக் கைப்பற்ற அவர்கள் முயற்சி செய்ய, இரு கோஷ்டிகளுக் கிடையே கடும் சண்டை உண்டானது. இறுதி யில் இருவர் மட்டுமே உயிரோடு இருந்தனர்.

அவர்களில் ஒருவன் தான் கொண்டுவந்திருந்த உணவின் ஒரு பகுதியை சாப்பிட்டுவிட்டு மறுபகுதியில் விஷத்தைக் கலந்து இன்னொரு வனுக்குக் கொடுத்தான். பிறகு ​தூங்குவதுபோல் பாசாங்கு செய்தான்.

இன்னொருவன் அவனை வாளால் குத்திக் கொலை செய்தான். ‘இனி நான்தான் இத்தனை ரத்தினங்களுக்கும் சொந்தக்காரன்’ என்றபடி மிகுந்திருந்த உணவைச் சாப்பிட்டான். அவனும் இறந்தான். பண ஆசை இப்படித்தான். வேண்டாம் என்பதைத்தான் செய்யத் ​தூண்டும். ஆனால், மனத்துணிவோடு அதை மீற முடிந்தால், பல பெரும் அவலங்களைத் தவிர்க்க முடியும்.

- நினைப்போம்...

தெற்கு திசையைத் தவிர்க்கலாமா?

நினை அவனை! - 27

தெற்கு திசையை நோக்கி தட்சிணாமூர்த்தி பகவானே நிற்கிறார். தெற்கு திசை தப்பே இல்லை. பகவானுக்கு திசை என்பது இல்லை. திசையெல்லாம் நமக்குத்தான். சம்பிரதாயத்தில் நல்ல காரியம் செய்யும்போது தெற்கு வேண்டாம் என்று வைத்திருக்கிறோம். தெற்கு எமனின் திசை. அதனால் மற்ற மூன்று திசைகளையும் வேண்டும் என்று வைத்திருக்கிறோம். கங்கையில் மூழ்கி கடவுளை வழிபடுவோர், நான்கு திசைகளையும் சொல்லித்தான் வழிபடுவார்கள். தெற்கைத் தவிர்ப்பதில்லை. ஒரு பக்குவம் வாய்க்கும் வரையில், நாம் சாதாரண மனிதர்களாக இருக்கும் வரையில் தெற்கு திசையை விட்டுவிடலாம். ஆன்மிகத்தில் வளந்தபிறகு திசையெல்லாம் கிடையாது; தேவைப்படாது. சகலமும் ஒரே விதம்தான்!

(மகாமகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகளின் உரையிலிருந்து...)

- கே.குமரன், சென்னை-44