தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

நினை அவனை! - 28

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

பிராணாயாமம் ப்ரத்யாஹராம்

நித்யாநித்ய விவேக விசாரம்

ஜாப்யஸமேதே ஸமாதி விதானம்

குர்வவதானம் மஹத் அவதானம்

கருத்து : பிராணாயாமம், வெளி நாட்டத்தினின்று புலன்களைத் திருப்புதல், எது அழிவது, எது அழியாதது என்று ஆராய்ந்து அறிதல், ஜபம் மற்றும் சமாதி நிலைக்கான நியமங்கள் ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் செய்வாயாக.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆற்றல் உண்டு. ஜாங்கிரி அல்லது ஐஸ்க்ரீம் என்று சொல்லும் போதே பலருக்கும் நாவில் நீர் ஊறும். பாகற்காயின் பெயரைக் கேட்டாலே சிலருக்கு முகம் சுருங்கும். `முட்டாளே' என்று யாராவது குறிப்பிட்டால் கோபம் வருகிறது.

உலகில் இப்படி சாதாரண வார்த்தைகளுக்கே ‘ஆற்றல்’ இருக்கும்போது, எல்லாம் வல்ல கடவுளின் பெயருக்கு எவ்வளவு அளப்பரிய ஆற்றல் இருக்கும்!

நினை அவனை
நினை அவனை

அஜாமிளன் என்ற அந்தணன் அநேக பாவங்களைச் செய்தான். மரணப்படுக்கையில் இருக்கும்போது, தன் மகனான நாராயணனைப் பெயர் சொல்லி அழைத்தான். உடனே திருமாலின் தூதர்கள் அங்கு வந்துவிட்டனர். அவனை பாவங்களிலிருந்து விடுவித்து மோட்சம் அளித்தனர். இறைவனின் நாமத்துக்கு அவ்வளவு பெருமை.

`வித்' என்றால் `அறிவது' என்று அர்த்தம். அதிலிருந்து வந்த சொல்தான் வேதம்.

வேதங்களை எந்த மனிதரும் உருவாக்க வில்லை. அந்த வேத மந்திரங்களைக் கண்டறிந்து சொன்னவர்கள் ரிஷிகள். எனவேதான் அவர்களை `மந்திரங்களைக் கண்டவர்கள்' (மந்த்ர த்ரஷ்டா) என்கிறோம்.

நாம் வேதத்தின் மகிமையை உணர மறுக்கிறோம். வேதங்கள் ஓதுவது, ஜபிப்பதை விடுத்து அழியக்கூடியதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தும் அசட்டுத்தனத்தைச் செய்துகொண்டிருக்கிறோம்.

உஜ்ஜயினி நகரத்தில் பர்த்ருஹரி என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். பல மனைவிகளுடன் ஆனந்த வாழ்வு நடத்தினான். மன்னனின் உபசரிப்பால் மகிழ்ந்த ஒரு முனிவர் ஓர் அற்புதப் பழத்தை அவருக்கு அளித்தார். அது பார்க்கவே மிக வித்தியாசமாக இருந்தது. “இதை உண்பவர் மிக நீண்டகாலம் உயிர் வாழ்வார்’’ என்றார் முனிவர்.

மன்னனுக்குத் தன் இளைய மனைவியான பிங்களாவின்மீதுதான் பெரும் காதல். பழத்தின் அருமையைக் கூறி அவளுக்கு அதை அளித்தான்.

“நான் நீண்டநாள் உயிர் வாழ்வதைவிட உங்களின் அன்பு கிடைத்ததுதான் பெரும் பாக்கியம்’’ என்று கூறினாலும் மறுக்காமல் அந்தப் பழத்தைப் பெற்றுக்கொண்டாள் பிங்களா. ஆனால், அதை அவள் உண்ண வில்லை. தன் அன்புக்கு உகந்தவனான காவல் அதிகாரி மகிபாலன் என்பவனுக்கு அளித்து விட்டாள். அவனோ தன் மற்றொரு காதலியான லாகா என்பவளுக்கு அதைக் கொடுத்தான்.

நினை அவனை
நினை அவனை

அந்தப் பெண்ணுக்கோ மன்னன்மீது தீராக் காதல். இந்தப் பழத்தை மன்னனுக்குக் கொடுப்பதன்மூலம் அவனுடைய பேரன்பைப் பெறலாம் என்று திட்டமிட்டாள். பழத்தின் மகிமையைக் கூறியபடியே அதை மன்னனுக்கு சமர்ப்பித்தாள்.

மன்னன் திகைத்தான்.

என்ன நடந்தது என்பதை உளவாளிகளின் மூலம் அறிந்தான். காமம் நிலையானது அல்ல என்பதோடு இந்த உடலும் நிரந்தரம் அல்ல என்ற ஞானம் பிறந்தது. தன் சகோதரன் விக்ரமாதித்யனிடம் ஆட்சிப் பொறுப்பை கொடுத்துவிட்டுத் துறவறம் பூண்டான்.

நாலடியார் பின்வருமாறு உரைக்கிறது.

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற

ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்

கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்

விலங்காது வீடு பெறும்.

உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்து வழிகளின் மூலம் நாம் பலவித ஆசைகளில் சிக்கிக்கொள்கிறோம். நிலை தடுமாறாமல் அவற்றைப் பாதுகாத்து ஒழுக்க நெறிகளைச் செலுத்தும், இறையருளை நாடும் வல்லமை கொண்டவர்தான் முக்தியடைவான். இதைத் தான் இடைக்காட்டு சித்தரும் கூறுகிறார்.

மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை

வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை

எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்

ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே.

ஜபம், நியமங்கள் போன்றவற்றை உடல் நிறைவேற்றிக் கொண்டிருந்தாலும் உள்ளத்தில் இறைசிந்தனை முழுமையாக இல்லை என்றால் அதனால் என்ன பயன்... ஆக, மிகவும் கவனத்துடன் இவற்றைச் செய்தல் வேண்டும்.

ஒருவர் நீண்ட நேரமாக பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டுக்குள் ஒரு துறவி வந்தார். பூஜை முடிந்த பிறகுதான் அந்தத் துறவி வந்ததைச் செல்வந்தர் கவனித்தார்.

“அடடா, நீங்கள் வந்ததையே நான் கவனிக்க வில்லையே... எப்போது வந்தீர்கள்?’’ என்று கேட்டார்.

“நீ பூஜை செய்து கொண்டே ‘கடன்காரன் இன்று வருவானே அவனிடம் என்ன பொய் கூறலாம்?’ என்று நினைத்துக்கொண்டிருந்த போது உன் வீட்டை அடைந்தேன். ‘நேற்று கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகிய இரண்டு காய்கறிகளையும் வாங்கி வந்தோமே இன்று வீட்டில் மனைவி எதைச் சமைத்திருப்பாள்?’ என்று நினைத்தபடியே மலர்களைத் தூவிய போது நான் இந்த பூஜை அறைக்கு அருகே நுழைந்துவிட்டேன். ‘நண்பர்களிடம் வசூல் செய்து பக்திப் பயணம் செய்வதாக இருக்கிறோமே, வசூலாகும் தொகையில் இருபது சதவிகிதமாவது நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தபடி இறைவனுக்குக் கற்பூரம் காண்பித்தாயே அப்போது நான் இங்குதான் நின்று கொண்டிருந்தேன்’’ என்றார்.

இதைக்கேட்ட செல்வந்தரின் தலை கவிழ்ந்தது. தெய்வ உணர்வு என்பதை அடைவதற்கு முதல்படி சுயநலத்தைக் களைவது. பிற உயிர்களிடத்தும் கருணை காட்டுவது அடுத்த படி.

சமாதிநிலையை அடையும்போது இறைவனை நெருங்குகிறோம். அந்த நிலையை அடைய வேண்டுமானால் புலன்களை அடக்குவதும், தான் தன் சுற்றம் என்ற வட்டத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பதை நீக்குவதும் அவசியமாகின்றன.

- நினைப்போம்...