Published:Updated:

நினை அவனை! - 29

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 29

குருசரணாம்புஜ நிர்பர பக்த

ஸம்ஸாராத் அசிராத் பவ முக்த

ஸேந்திரிய மானஸ நியமாத்ஏவம்

திரக்ஷ்யஸிநிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

பொருள்: குருவின் திருவடித் தாமரைகளில் திடமான பக்தி உடையவனாகிப் பிறவித்தளையினின்று விரைவில் விடுபடுவாயாக. புலன்களுடன் மனத்தையும் அடக்கி உன்னுடைய ஹ்ருதயத்தில் உறையும் தெய்வத்தைக் காண்பாய்.

பெரும் கொடிய கானகம் ஒன்றில் ஒரு விநோதமான மனிதனைக் கண்டதாக ராமனிடம் கூறினார் வசிஷ்டர்.

‘`குருவே, அவன் எப்படி இருந்தான்?’’ என்று ராமர் கேட்டார்.

நினை அவனை
நினை அவனை

‘`அவன் வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்து பருத்திருந்தான். பல்லாயிரம் கண்களும் கைகளும் கொண்டிருந்தான். சித்தசுவாதீனம் அற்றவனைப் போல் நடந்தான். நிழலுக்காக மரங்கள் செடிகள் அடர்ந்த ஓரிடத்தை நாடிச் சென்றான். செடிகளி லுள்ள முட்கள் அவன் உடலைக் கீறின. வலி அதிகமாகிவிடவே ‘இன்ன செய்கிறோம்’ என்பதே புரியாமல் அருகிலிருந்த கிணற்றில் குதித்தான். அந்தக் கிணற்றில் பாம்புகளும் தேள்களும் இருந்தன. அதிலிருந்து எப்படியோ கரையேறி வெளியே வந்தான். பிறகும் அமைதியாக இல்லாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.

இவ்வளவு நடந்தபோதும் அவன் என்பக்கம் தன் பார்வையைச் செலுத்தவேயில்லை. நான்தான் அவனருகில் சென்று அவனை ஓரிடத்தில் அமர்த்தி, அவன்மீது என் பார்வையைச் செலுத்தினேன். என் பார்வை பட்டதும் அவனின் பல்லாயிரம் கைகளும் கண்களும் மறைந்தன. சிறிது நேரத்துக்குள் உடல் முழுவதும் தீய்ந்து போனது. அவன் என் உள்ளத்தில் அடங்கி அமைதியுற்றான்.’’

ராமனுக்குத் தன் குரு உருவகமாக எதையோ கூறுகிறார் என்பது புரிந்தது. ‘`குருவே, நீங்கள் வர்ணித்த அந்த மனிதன் யார்? காடு என்று சொன்னீர்களே, அது யாது?’' என்று கேட்டார்.

‘`ராமா! இந்த உலகமும் சம்சாரமுமே அந்தக் காடு. தன் நிலையை மறந்த அந்த மனிதன், இந்த மனம். பல்லாயிரம் வாசனைகளே அவனுக்கிருந்த கண்களும் கைகளும். அந்த இருண்ட கிணறே இல்வாழ்க்கை. முட்செடிகள் நிறைந்த புதரே நரகம். நானே விவேகம் அல்லது நல்லறிவு. அதன் மூலம் மனத்தின் சஞ்சல குணம் ஒழிந்து போனது’’ என்றார்.

ராமருக்கே தன் குருவினால் ஞானம் கிடைத்ததென்றால், நமக்குக் குருமார்களால் கிடைக்கும் ஞானம் எவ்வளவு முக்கியம்... இன்றைய உலகில் நேரடியாக ஒரு குருவை தினமும் சந்திப்பதும் அவரின் நல்வார்த்தைகளைக் கேட்பதும் இயலாததாக இருக்கலாம். ஆனால், அவர்கள் உரை நிகழ்த்தும் போது கேட்கலாம் அல்லது அவர்கள் எழுதிய நூல்களைப் படித்துப் பலன்பெறலாம்.

நினை அவனை
நினை அவனை

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதையின் மூலம் பெரும் ஞானத்தை உணர்த்துகிறார். அது:

ஒரு பருந்து, அலகில் ஒரு மீனைக் கவ்விக்கொண்டிருந்தது. அதைப் பிடுங்கிக்கொள்வதற்காகச் சில காக்கைகளும் பருந்துகளும் அப்பருந்தைப் பின்தொடர்ந்து கொத்தி ஆரவாரித்தன. அது எந்தத் திசையில் சென்றாலும் அவை கூடவே வந்தன. இந்தத் தொந்தரவைப் பொறுக்க முடியாமல் அந்தப் பருந்து மீனைக் கீழே போட்டு விட்டது.

புலன்களை அடக்கினால்தானே மனம் இறைவனை நாடும். ஆனால், மாயை நம் மனத்தை மறைக்கிறதே.

உடனே அந்த மீனை வேறொரு பருந்து கவ்விக் கொண்டது. இப்போது காகங்களும் மற்ற பருந்துகளும் புதிய பருந்தைத் தொந்தரவு செய்யத் தொடங்கின. தொந்தரவிலிருந்து நீங்கிய முதல் பருந்து சாந்தமாக ஒரு மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. இப்படிச் சாந்தமாக இருந்த அந்தப் பறவையிடம் ஓர் அவதூதர், “பருந்தே, நீ எனக்கு குருவாகிறாய். உலகப் பற்றுகளாகிய சுமையை மனிதன் கீழே போடாத வரையில் அவனால் உலக சஞ்சலத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும், அவனுக்கு மனசமாதானம் இருக்காது என்பதையும் நீ எனக்குக் கற்பித்தாய்’’ என்றார்.

புலன்களை அடக்கினால்தானே மனம் இறைவனை நாடும். ஆனால், மாயை நம் மனத்தை மறைக்கிறதே. உண்மையைப் பொய் யென்றும் பொய்யை உண்மையென்றும் நினைக்கவைக்கிறதே.

ரு நாட்டில் பேரறிஞர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தபோது எதிரில் ஒரு சிறுவன் வந்தான்.

‘`இங்கிருந்து சூரியன் அதிக தூரத்தில் இருக்கிறதா அல்லது பக்கத்து ஊர் அதிக தூரத்தில் இருக்கிறதா...’’ என்று அந்தச் சிறுவன் கேட்டான்.

“சூரியன்தான்’’ என்றார் அறிஞர்.

“அது எப்படி? இங்கிருந்து சூரியனைப் பார்க்க முடிகிறது. ஆனால், பக்கத்து ஊரைப் பார்க்க முடியவில்லை. எனவே சூரியன்தானே அருகில் உள்ளது’’ என்றான்.

நினை அவனை
நினை அவனை

அறிஞர் பலவிதமாக விளக்கினார். ஆனால், சிறுவன் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் அந்த அறிஞர், “நீ சொன்னதுதான் சரி. பக்கத்து ஊரைவிடச் சூரியன்தான் அருகில் இருக்கிறது’’ என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

இதைக்கண்ட ஊர் மக்கள் “இந்தச் சிறுவன் அறிஞரைவிட புத்திசாலி’’ என்று கூறத் தொடங்கினர். மாயைக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

ம் நம்பிக்கைகளை மிகச் சரியானதாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்கு நான்காவது படியை அடைய வேண்டும் என்கிறது நிர்வாகத்துறை.

முதல்படி என்பது அறிந்திராத குறைபாடுகள் (Unconscious Incompetence) அதாவது நம் குறைபாடுகள் என்ன என்பதையே அறிந்து வைத்திராத நிலை. எனவே, நாம் செய்வது எல்லாமே சரிதான் என்னும் மூடத்தனம் இதில் உண்டு. அடுத்தடுத்த கட்டம் என்பது நம் குறைபாடுகளை அறிந்திருந்தும் அவற்றிலிருந்து மீளாத திறமைக் குறைவு (Conscious Incompetence), முனைப்புடன் திறமைகளை வளர்த்தல் (Conscious Competency), முனைப்பின்றியே திறமைகளோடு விளங்குதல் (Unconscious Competence) ஆகியவை அடுத்தடுத்த படிகள்.

இந்த அடிப்படையைத்தான் பேரின்ப நிலையை அடைவதற்கும் எடுத்துக்கூறுகிறார் ஆதிசங்கரர். மாயையில் சிக்குவது, அதிலிருந்து மீள்வதற்கு உறுதுணையாக ஒரு குருவை நாடுவது, பிறவித் தளைகளை நீக்க முயற்சிகள் எடுத்துக்கொள்வது, பேரின்ப நிலையை எட்டுவது.

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மையிருட்களம் போயின யாவும்

எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி

எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி.

- என்கிறார் பாரதியார்.

அப்படி இருள் நீக்கி ஒளி காணவே பஜ கோவிந்தம் வலியுறுத்துகிறது. மாய இருள் நீக்கி ஞான ஒளி பெற அவன் பதம் பணிவோம். உய்வோம்.

(நிறைவுற்றது)

குரு தட்சணையும் பூரண பலன்னும்!

குருநாதருக்கு தட்சணை தருவது விசேஷம். இதை நம் திருப்திக்காகவே வழங்குகிறோம். தட்சணையை வெற்றிலை பாக்குடன் சேர்த்துத்தான் வழங்கவேண்டும். `என்னால் இயன்ற அளவு தட்சணை வழங்கு கிறேன்' என்று சொல்லிக்கொண்டு, குருவின் காலில் விழுந்து வணங்கி அவரின் ஆசியைப் பெறும்போது, செய்த கர்மங்களின் பலன் பூரணமாகக் கிடைக்கும்.

- சி.ராமு, சேலம்