Published:Updated:

நினை அவனை! - 10 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

மூப்படைந்த பிறகு, காமச் செயல்கள் ஏது. தண்ணீர் வற்றிய பிறகு அது குளம் அல்லவே! செல்வம் தீர்ந்தபின் சுற்றங்கள் ஏது; தத்துவங்களை அறிந்தபின் உலக வாழ்க்கையில் பற்று ஏது!

வயஸிகதே க: காமவிகார

ஸுஷ்கே நீரே க: காஸார

க்ஷீணே வித்தே க: பரிவார

ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார:

கருத்து: மூப்படைந்த பிறகு, காமச் செயல்கள் ஏது. தண்ணீர் வற்றிய பிறகு அது குளம் அல்லவே! செல்வம் தீர்ந்தபின் சுற்றங்கள் ஏது; தத்துவங்களை அறிந்தபின் உலக வாழ்க்கையில் பற்று ஏது!

ஜகோவிந்தத்தின் இந்தப் பத்தாவது ஸ்லோகம், கேள்விகளைப் பட்டியலிடுகிறது.

மூப்பு, காமம் எனும் வார்த்தைகளைப் பற்றிப் பேசும்போது, மன்னன் யயாதி குறித்து மீண்டும் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

நினை அவனை! - 10 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

ஏற்கெனவே இரண்டு மனைவிகள், பல குழந்தைகளைக் கொண்டவன் யயாதி. இந்த நிலையில் அவனை ‘கிழவனாகப் போ’ என்று சுக்ராசார்யர் சபித்தபோது, அவன் அதை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் அவனோ பரிகாரம் கேட்டான்.

‘உன் கிழத்தன்மையை உன் மகன்களில் ஒருவனுக்கு அளித்துவிட்டு, அவன் இளமையை நீ அடையலாம்’ என்று சுக்ராசார்யர் கூறியதும், யயாதி நாணித் தலைகுனிந்திருக்க வேண்டும்; ‘அப்படிப்பட்ட ஓர் இளமை எனக்கு வேண்டாம்’ என்று முடிவெடுத்திருக்கவேண்டும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. முதலில், தன் முதல் மனைவியான தேவயானியின் மூத்த மகனிடம் வேண்டுகோள் வைக்கிறான். அவன் மறுத்ததும் மகனுக்கே சாபமிடுகிறான். இப்படியே தன் பிற மகன்களான துர்வசு, துருயு, அனு ஆகியோரிடமும் கேட்கிறான். அவர்களும் மறுத்துவிடுகிறார்கள். அப்போதும் தன் எண்ணத்தைக் கைவிடவில்லை யயாதி.இரண்டாம் மனைவியான சர்மிஷ்டையின் மகன்களிடம் கேட்கிறான். அவர்களில் புரு என்பவன் மட்டுமே யயாதியின் விருப்பத்தை ஏற்கிறான். இளமை பெற்ற யயாதி, விருப்பப்படி வாழ்வை அனுபவித்து மகிழ்கிறான்.

முதுமையில் காம நினைவுகள் குறைந்து இறை பற்றிய நினைவுகள் அதிகமாகவேண்டும். அதற்கேற்பவே மூப்படையும்போது தேகத்தில் தள்ளாமையைப் புகுத்துகிறது இயற்கை. அதையும் மீறி முதுமையை வெறுத்துக் காமத்தை வளர்த்துக் கொள்வது அற்பத்தனம் அல்லவா!

ஓர் ஊருக்குச் செல்ல இரண்டு வழிகள். ஒன்று பாலைவனம்; மற்றது சோலைவனம். இரண்டில் மக்கள் எதைத் தேர்ந்தெடுப்பார்கள். நிச்சயம் சோலைவனத்தையே தேர்ந்தெடுப்பார்கள். நல்லதையே தேர்வு செய்வோம்; நல்லதே நடக்கும்.

‘நீர் வற்றிப்போன தடாகத்துக்கு எவரும் வருவதில்லை. அப்படித்தான் நம்மைச் சுற்றியிருப் பவர்களும்' எனும் ஞானம் பிறக்கவேண்டும். அதற்காக நம் சொந்தங்களையும் நட்புகளையும் வெறுக்கவேண்டும் என்பதில்லை. ஞானம் என்பது உண்மையை அறிதல்; அது பகைமையை வளர்ப்பதல்ல.

நினை அவனை! - 10 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

ஸ்ரீசங்கர பகவத்பாதாளுக்கு சிஷ்யர்கள் பலர் உண்டு. அனைவரும் அன்றைய வகுப்புக்கு வந்துவிட, கிரி எனும் சீடன் மட்டும் வந்து சேரவில்லை. சங்கரர் அவனுக்காகக் காத்திருந்தார். அது, மற்ற சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களைப் பெரும் புத்திசாலிகளாகக் கருதிய அந்தச் சீடர்கள், `அவனுக்காக ஆசார்யர் ஏன் காத்திருக்கவேண்டும். அந்த அசட்டுக்கு என்ன புரிந்துவிடப் போகிறது' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். வித்யாகர்வம் அவர்களை அப்படிப் பேச வைத்தது. ஆசார்யர் புன்னகைத்துக் கொண்டார்.

கிரி எனும் அந்தச் சீடன், ஆசிரமத்தின் சகல வேலைகளை யும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வான். குருவுக்கானப் பணிவிடைகளிலும் குறை வைப்பதில்லை. மற்ற சீடர்கள், தங்களின் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தத் துடித்தபோது, கிரி மட்டும் மௌனமாக இருப்பான்.

கிரியைப் பிற சீடர்கள் அலட்சியமாகக் கருதியது, சங்கரருக்கு வருத்தத்தை அளித்தது. அவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை ஞானக் கண்ணால் நோக்கினார். துங்கபத்ரா நதியில் குருநாதரின் உடைகளை துவைத்துக் கொண்டிருந்தான். குருவருளால் அவன் ஞானம் விரிந்தது.

அவன் வாயிலிருந்து மிக அற்புதமான ஸ்லோகங்கள் வெளிப்பட்டன. அவற்றைப் பாடிக்கொண்டே வகுப்பறைக்குச் சென்று சங்கரரின் பாதம் பணிந்தான். அவன் பாடிய ஸ்லோகங்களைச் செவிமடுத்த மற்ற சீடர்கள் திகைத்துப் போனார்கள். ஆழமான பொருளுடன், மிகக் கடினமான தோடகச் சந்தத்தில் அமைந்திருந்தன அந்த ஸ்லோகங்கள்.

அப்போது ஆதிசங்கரர் கூறினார்: `சிரத்தை இருந்தால் மனம் ஒருமைப்படும். மனம் ஒருமைப்பட்டால் சஞ்சலங்கள் மறையும். சஞ்சலமற்ற மனம் தூய்மை அடையும். தூய்மையான மனத்தோடு எதைக் கற்றாலும் பலன் கிட்டும். மறதி, மயக்கம், சந்தேகம் ஆகியவை எழாது. சிரத்தையே ஞானத்துக்கு அடிப்படை’

ஆக, சிரத்தையும் தூய மனமும் வாழ்வு எனும் குளத்தில் நிறைந்திருக்கும் தண்ணீர். அந்தத் தண்ணீர் வற்றிப்போனால் குளம் தன் தகுதியை இழந்துபோகும். சிரத்தைமிக்கவராகவும் தூய மனத்தினராகவும் விளங்கியதால் ஞானம் பெற்ற கிரி, பிற்காலத்தில் தோடகாசார்யர் என்று திருநாமம் பெற்றார். சங்கரர், பத்ரிநாத்தில் தான் தொடங்கிவைத்த மடத்தின் பீடாதிபதியாக அவரை நியமித்தார் என்பது கூடுதல் தகவல்.

- நினைப்போம்...