Published:Updated:

நினை அவனை! - 12 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

காலை, மாலை, இரவு என்று ஒவ்வொரு தினமும் நகர்கிறது. குளிர்காலம், வசந்த காலம் என்று பருவங்கள் மாறி மாறி வருகின்றன.

தினயாமின் யௌ ஸாயம் ப்ராத

சிசிர வஸந்தௌ புனராயாத

கால க்ரீடதி கச்சத்யாயு

ததபி நமுந்சத் யாஸா வாயு

கருத்து : காலை, மாலை, இரவு என்று ஒவ்வொரு தினமும் நகர்கிறது. குளிர்காலம், வசந்த காலம் என்று பருவங்கள் மாறி மாறி வருகின்றன. காலச்சக்கரம் சுழல்கிறது. ஆயுள் தேய்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் ஆசைகள் அழியவில்லை.

ண்பது வயது முதியவர் ஒருவர், கையில் ஒரு சிறு பையோடு தெருவில் நடந்துகொண்டிருந்தார். உடல் தளர்ந்திருக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. `என்னதான் வாழ்க்கையோ... பேசாமல் போய்ச்சேர்ந்து விட்டால் நன்றாக இருக்கும்' என்று வாய்விட்டு அலுத்துக்கொண்டார்.

அக்கணமே எமதர்மன் அவர் முன் தோன்றினார். ``என்னவோ அலுத்துக்கொண்டீர்களே... என்ன விஷயம்?'' என்று கேட்டார்.

திடுக்கிட்டுப்போன பெரியவர் ``வேறொன்றும் இல்லை. இந்தப் பையைத் தூக்கக் கஷ்டமாக இருக்கிறது. யாராவது உதவிக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று முணுமுணுத்தேன்... அவ்வளவுதான்'' என்றாராம்!

நினை அவனை! - 12 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

‘ஈஸ்வரா, என்னை அழைத்துக்கொள்’ என்று கூறுபவர்களும், ‘இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதைவிட இறந்துவிடலாம்’ என்று அலுத்துக் கொள்பவர்களும் மனமாற அப்படிக் கூறுவதில்லை என்பதே உண்மை. அவை அப்போதைய வெறுப்பு அல்லது துக்க மனநிலையின் வெளிப்பாடு அவ்வளவுதான். அந்த அளவுக்கு நாம் உலக வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். என்னதான் பலவித அனுபவங்கள் நேர்ந்தாலும், ஆசாபாசங்கள் நம்மை விடுவதில்லை.

அரசர் ஒருவர் கனவு கண்டார். கனவில் அவர் பற்கள் ஒவ்வொன்றாக விழுகின்றன. கடைசியில் பொக்கை வாயுடன் காட்சி தந்தார்.

பதறி விழித்துக்கொண்டவர், தன் ஆஸ்தான ஜோதிடரை அழைத்தார். கனவுக்கான பலனைக் கேட்டார்.

``அரசே! உங்கள் நெருங்கிய உறவினர்கள் அனைவரும், உங்கள் கண் முன்னாலேயே ஒருவர் பின் ஒருவராக இறக்கப்போகிறார்கள். நீங்கள் அவர்கள் எல்லோரும் சாவதைப் பார்க்கப் போகிறீர்கள். அதைத்தான் உங்கள் கனவு உணர்த்துகிறது'' என்றார் ஜோதிடர்.

அரசருக்குக் கோபம் வந்துவிட்டது. ``என் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் போன்ற நெருங்கிய உறவினர்கள் இறப்பதைப் பார்த்த பின்பும் நான் உயிரோடு இருப்பேனா... உன் ஜோதிடம் தவறானது'' என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். என்ன செய்வதென்று அறியாமல் நடுங்கினார் ஜோதிடர்.

அப்போது அங்கிருந்த அமைச்சர், ``அரசே! எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும். உங்கள் கனவின் பலனை நான் சொல்கிறேன். உங்கள் மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்களைவிட நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இந்த நாட்டைச் சிறப்பாக ஆளப் போகிறீர்கள்'' என்றார்.

இதைக் கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார்.

உடனே அமைச்சர், ``அரசே! இந்த ஜோதிடருக்கு ஜோதிடம் தெரிந்திருக்கிறது. ஆனால், எப்படிப் பேசுவது என்ற கலைதான் தெரியவில்லை. இவர் சொன்னதைத்தான் நான் வேறு வகையில் சொன்னேன்'' என்றார்.

இது பேசும் கலை தொடர்பான கதை மட்டுமல்ல, உலகில் நீண்டநாள் வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பதை உணர்த்தும் கதையும்கூட.

காகம் ஒன்று வாயில் ஓர் இறைச்சித் துண்டுடன் பறந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில், அந்த இறைச்சியைப் பறித்துவிடும் நோக்கத்துடன் கழுகுகள் சில அந்தக் காகத்தைச் சூழ்ந்துகொண்டன. அதனால் அச்சமுற்ற காகம், தன் வாயிலிருந்த இறைச்சியைத் தவறவிட்டது. அந்த இறைச்சியை ஒரு கழுகு பிடித்துக்கொள்ள, இப்போது மற்ற கழுகுகள் அனைத்தும் காகத்தை விட்டுவிட்டு இறைச்சியைக் கைப்பற்றிய கழுகை விரட்டத் தொடங்கின. காகம் அச்சமின்றி பறக்கத் தொடங்கியது.

இங்கே, இறைச்சி என்பதை நம் ஆசைகளோடு ஒப்பிடலாம். ஆசைகளை நீக்கிவிட்டால் அமைதி தான், ஆனந்தம்தான். இறைவனைநோக்கி நாம் எவ்வளவுக்கெவ்வளவு அருகில் செல்லுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அமைதி கிடைக்கும்.

ருமுறை வியாசருக்கு, யமுனை நதியைக் கடந்து மறுகரைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது கோபியர்களும் அங்கு வந்தனர். அவர்களுக்கும் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. படகு எதுவும் கிடைக்கவில்லை.

வியாசர் கோபியரிடம், ``நான் உங்களை ஆற்றின் மறுகரைக்கு அழைத்துச் செல்கிறேன். இப்போது எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா'' என்று வினவினார். கோபியர் தங்களிடமிருந்த பால், பாலேடு, வெண்ணெய் ஆகியவற்றை அளித்தனர். வியாசரும் அவற்றை வாங்கி உண்டார்.

பிறகு யமுனைக்கரையில் நின்றபடி, ``யமுனை நதியே! நான் இன்று உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருப்பது உண்மையானால், நீர் இரண்டாகப் பிரிந்து எங்களுக்கு வழி விடட்டும்'' என்று கூறினார். மறுகணமே, யமுனை நதி விலகி வழிவிட்டது.

கோபியர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. `இப்போதுதானே இவர் வயிறு நிறைய உண்டார்! அப்படியிருக்க `இன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறேன்' என்று கூறுகிறார், அதை ஏற்று நதியும் வழிவிடுகிறதே' என்று எண்ணி வியப்படைந்தனர்.

ஆழ்ந்த நம்பிக்கை என்பது இதுதான். `உண்டவன் நான் அல்ல; அந்தராத்மாவாக என்னுள் இருக்கும் இறைவனே உட்கொண்டார்' என்ற ஆழ்ந்த நம்பிக்கை வியாசருக்கு இருந்தது. அந்தச் சத்தியத்தை உணர்ந்த யமுனையும் வழிவிட்டது.

அவா என்பது துன்பத்துள் துன்பம் என்கிறார் வள்ளுவர். அவா எனப்படும் ஆசை நமக்கு இல்லையென்றாலோ, மிகக் குறைவாக இருந்தாலோ அது இம்மையில் இடையறாத இன்பத்தைத் தருவதோடு, துக்கமயமாகிய வாழ்க்கைச் சக்கரச் சுழற்சியிலிருந்தும் விடுதலையைத் தரும்.

இரண்டு நண்பர்கள் ஒரு தீவுக்குப் படகில் சென்றார்கள். அங்கே தாங்கள் எடுத்துச்சென்ற மதுவைப் பருகினார்கள். மது மயக்கம் பாதியளவு தெளிந்ததும், படகில் ஏறி சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் துடுப்பை வலித்தார்கள். ஆனால், படகு கரை வந்து சேரவில்லை.

`என்ன இது சரியான திசையில்தானே துடுப்பை வலிக்கிறோம். பிறகு ஏன், இன்னமும் கரை வந்து சேரவில்லை' என்று எண்ணி திகைத்தார்கள்.

காரணம், தீவிலுள்ள மரத்தோடு படகைப் பிணைத்திருந்த கயிற்றை அவர்கள் அவிழ்க்கவே இல்லை! அதனால் அவர்கள் என்ன முயன்றும் படகு அதே இடத்தில்தான் நின்று கொண்டிருந்தது. இது புரியாமல் அவர்கள் தொடர்ந்து குழப்பத்துடன் படகு ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

நினை அவனை! - 12 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

இப்படித்தான் சிலர், தங்களைப் பிணைத் திருக்கும் பந்தம் எதுவென்று அறியாமலேயே வாழ்க்கைப்படகைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடைசிவரை அவர்கள் தங்களின் தவற்றைத் தெரிந்துகொள்ளாமலேயே இருந்து விடுகிறார்கள். அவர்களுக்கு, சேரும் கரை எப்போதும் தூரமாகவே இருந்துவிடுகிறது.

பிறப்பு, இறப்பு என்பது உடலுக்கு இல்லை. ஏனென்றால், இறந்த பின்பும் உடலைக் காண முடிகிறது. உடலைவிட்டு உயிர்தான் பிரிகிறது.

உயிர் எங்கிருந்தது, அது உடலில் எப்படி நுழைந்தது, அதன் வடிவம் என்ன... நமக்குத் தெரியவில்லை. ஒன்று நிச்சயம். எங்கெங்கும் நிறைந்திருக்கும் இறைவன், உயிரிலும் இருக்கிறான். அதனால்தான் `அஹம் பிரம்மாஸ்மி' என்றனர். அதாவது, இறைவன் உயிராக நம்முள் இருக்கிறார். உள்மனம் கடந்த நிலையில் இருப்பதால்தான் அவர் கடவுள். நம் உடல் கோயிலாக இருக்கும்போது உயிரும் மதிப்புப் பெறுகிறது. இதனால்தான் திருமந்திரம் ‘உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்’ என்கிறது.

‘பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறை. தென்னை இளநீருக்குள்ளே, தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப்போல் இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறை’ எனும் கருத்தோடு கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று, இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள பஜ கோவிந்தப் பாடல் சொல்லும் பாடத்தையே விளக்கும்.

ஆலிலையைப் போல ஒரு ​நூலிழையில் உனது உயிர்

ஆடுவதில் என்ன பயனே !

அஞ்சுதலை வென்றவனை ஆதிமறை மூலவனை

அனுதினமும் பாடு மனமே !

(மேலும் நினைப்போம்)

அம்பிகையின் திருக்கோலங்கள்

சிவாலயங்கள் எல்லாவற்றிலும் அம்பிகை சந்நிதி ஒரே மாதிரி அமைவதில்லை.

திருக்கோயில்களில் அம்பிகை, சிவபெருமானுக்கு இணையாக இடப் பாகத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கோலம், அவள் தவம் புரிந்து ஈசனின் இடப் பாகம் பெற்று அவருடன் சேர்ந்து அன்பர்களுக்கு சகல நலன்களையும் அருளும் நிலையாகும்.

நினை அவனை! - 12 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

சிவபெருமானின் கருவறையை நோக்கியவாறு, அதாவது இருவரும் எதிரெதிரே சந்நிதி கொண்டு அருளும் நிலை- ‘உபதேசக் கோலம்’ என்று போற்றப்படுகிறது (திருக்காளத்தி, திருப்பனந்தாள் போன்றவை உபதேசத் தலங்கள்).

இறைவனின் வலப் பக்கத்தில் (பெரும்பாலும் கிழக்கு நோக்கி) அம்பிகை வீற்றிருக்கும் கோலம், கல்யாணத் திருக்கோலம் ஆகும்!

- கே. தங்கம், சென்னை-4