Published:Updated:

நினை அவனை! - 14 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
News
நினை அவனை

சாமியார் ஒருவர் பெரிய வேள்வி நடத்தினார்.வேள்வி முடிந்ததும் இறைவன் தோன்றுவார் என்பது அவரின் நம்பிக்கை.

‘ஜடிலோ முண்டீ லுஞ்சித கேச

காஷா யாம்பர பஹுக்ருத வேஷ

பஸ்யந்நபி ச ந பஸ்யதி மூடோ

ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ’

கருத்து : சடை தரிப்பது, தலையை மழிப்பது, காவித்துணி அணிவது ஆகியவற்றால் மட்டும் பயனில்லை. வயிற்றுக்காகப் போடும் வேடங்களாக இவையிருந்தால், அவற்றால் எந்த நன்மையும் இல்லை.

சாமியார் ஒருவர் பெரிய வேள்வி நடத்தினார்.வேள்வி முடிந்ததும் இறைவன் தோன்றுவார் என்பது அவரின் நம்பிக்கை. ஆனால், அவ்வாறு இறைவன் தரிசனம் கொடுக்கவில்லை. மிகவும் மனம் நொந்துபோனார்.

“கடவுளே, இப்படி நீ என்னை ஏமாற்றலாமா” என்று புலம்பினார்.

மறுகணம், “நான் எங்கே ஏமாற்றினேன். நான்தான் வந்தேனே” என்று ஒரு குரல் கேட்டது.

சாமியாருக்கு உடல் சிலிர்த்தது. “கடவுளே, எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டார்.

நினை அவனை
நினை அவனை

‘‘ `போன ஆண்டைவிட இந்த ஆண்டு நம் சீடர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. இதனால் நம் புகழ் மேலும் பரவும்’ என்று நீ நினைத்தபோது, நான் உன் ஆசிரம வாயிலுக்கு வந்தேன்.

‘பழக்காரன் சமீபகாலமாக ஆசிரமத்துக்கு நல்ல பழங்களைத் தருவதில்லை. அவனை எச்சரிக்க வேண்டும்’ என்று நீ நினைத்தபோது, உன் ஆசிரமத்துக்குள் நுழைந்தேன்.

‘பணக்காரர் ஒருவர் இப்போதெல்லாம் அடிக்கடி நம் ஆசிரமத்துக்கு வருகிறார். அவரிடம் எனக்கு ஒரு வெள்ளி சிம்மாசனத்தை நன்கொடை யாகக் கேட்கவேண்டும்’ என்று நீ நினைத்தபோது, நான் உன் அறைக்குள் நுழைந்தேன். ஆனால், நீ லௌகீகமான சிந்தனையிலேயே இருந்ததால், என்னை தரிசனம் செய்ய இயலவில்லை. நானும் விலகிச் சென்றேன். இதில் என் பிழை என்ன?” என்றது கடவுளின் குரல். இதைக்கேட்ட சாமியார் தன் பிழையுணர்ந்து தலைகுனிந்தார்.

தோற்ற மாறுதல்களும் யாகம் போன்ற செயல்களும் மட்டுமே ஒருவரது மனப் பக்குவத்தை உணர்த்திவிடாது. ஆத்மார்த்தமான நியாயங்களே அதை உணர்த்தும். `நான்' என்கிற கர்வம் தோன்றிவிட்டால், அது பிரம்மம் அறிதலைச் சிக்கலாக்கிவிடும். இதையுணர்த்தும் சம்பவம் ஒன்று கேனோ உபநிஷதத்தில் உள்ளது.

ருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் மூண்டது. ஈஸ்வரன் கிருபையால் அதில் தேவர்கள் வெற்றிபெற்றனர். அதனால் அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டது. அவர்களின் கர்வத்தை நீக்க விரும்பிய பரப்பிரம்மம், ஒளி வடிவில் அவர்கள் முன் தோன்றியது.

‘இதென்ன ஒளி’ என்று தேவர்கள் அது குறித்து ஆராயத் தொடங்கினார்கள். தன் வலிமையின்மீது கர்வம்கொண்டிருந்த அக்னிதேவன், அந்த ஒளியின் முன் போய் நின்றார். அப்போது அந்த ஒளி ‘`நீ யார்?’’ என்று கேட்டது. அதற்கு அக்னி, `‘நான் அக்னிதேவன். வெப்பத்தின் உருவில் அனைத்தையும் ஆட்டிப் படைத்து வருகிறேன். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் என்னால் எரித்துச் சாம்பலாக்கி விட முடியும்'’ என்றான்.

அப்போது, ஒளி வடிவம் சிறு துரும்பு ஒன்றை அக்னியின் முன் போட்டு, `‘இதை எரித்துச் சாம்பலாக்கு பார்க்கலாம்'’ என்றது.

அக்னி, தன் சக்தி முழுவதையும் கொண்டு அந்தத் துரும்பை எரிக்க முயன்றும் அது சிறிதும் எரியவில்லை. அப்போது அங்கு வாயுதேவர் வந்தார்.

‘`நான் வாயுதேவன். ஆகாயத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பவன். இவ்வுலகிலுள்ள எந்தப் பொருளையும் என்னால் தகர்க்க முடி யும்; பெயர்த்தெறிய முடியும்’’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“அப்படியா! எங்கே, இந்தத் துரும்பைப் பறக்கச் செய் பார்க்கலாம்” என்றது ஒளி.

வாயு தன் பலம் முழுவதையும் பயன்படுத்தியும் கீழே கிடந்தத் துரும்பை அவனால் அசைக்கக்கூட முடியவில்லை.

அப்போது தேவர்கள் எல்லோருமாக மனத்துள் உமாதேவியைப் பிரார்த்தனை செய்து ‘`ஒளியின் உருவில் வந்திருப்பது யார்’’ என்று கேட்டனர்.

அதற்கு உமாதேவி, ‘`அந்த ஒளிதான் பரப் பிரம்மம். அனாதிகாலம் தொட்டு அதன் ஆதிக்கத்திலேயே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இயங்கிவருகிறது. நீங்கள் அசுரர்களுடனான போரில் பெற்ற வெற்றியும் உங்களுடையதல்ல. பிரம்மத்தின் ஆற்றலே உங்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. இதைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் சுயம்புவாகவே வெற்றி பெற்றதாக எண்ணிக்கொண்டுவிட்டீர்கள். எல்லாவற்றையும் செய்வது பிரம்மமே; நாம் எல்லோரும் இருப்பது பெயருக்குத்தான்’’ என்று உண்மையை எடுத்துரைத்தாள்!

வேறொரு கதை...

குரு ஒருவர் தன் சீடர்கள் இருவருக்கு மந்திரம் ஒன்றை உபதேசித்தார்.

“இந்த மந்திரங்களை ஜபித்தால் அற்புதங்களைச் செய்ய முடியும். நதியின் ஒரு கரையில் நின்று கொண்டு, இந்த மந்திரங்களை ஜபித்தால் படகும், படகோட்டியும் தானாகவே வந்து சேர்வார்கள்’’ என்று கூறினார். அந்தக் குரலில் கர்வம் தொனித்தது.

உபதேசம் செய்ததுடன், இருவரையும் படகுத் துறைக்கு அழைத்துச் சென்றார். மந்திரத்தை ஒருமுறைச் சொன்னார். சிறிது நேரத்தில், படகும் படகோட்டியும் வந்து சேர்ந்தனர்.

அப்போது, ‘படகு தற்செயலாக வந்ததா, அல்லது தான் கூறிய மந்திரத்தால் வந்ததா’ என்ற சந்தேகம் குருவுக்குள் உண்டானது. சிந்தனையோடு படகில் ஏறிக்கொண்டார். சிறிது ​தொலைவு படகு நகர்ந்ததும், இரண்டு சீடர்களும் அவரை நோக்கி ஓடிவந்தார்கள்.

அவர்களில் ஒருவன், ``குருவே நீங்கள் கூறிய மந்திரம் எங்களுக்குச் சரியாக மனப்பாடம் ஆகவில்லை. அதை நாங்கள் கூறுகிறோம். தவறு இருந்தால் திருத்துங்கள்...’’ என்றவாறு, தப்பும் தவறுமாக அந்த மந்திரத்தைக் கூறியபடி ஓடிவந்தார்கள்.

குரு அதிர்ச்சி அடைந்தார். காரணம், அந்தச் சீடர்கள் அவர்களையும் அறியாமல் அந்த நதிப் பரப்பின்மீது ஓடிவந்து கொண்டிருந்தனர்!

ஆக கர்வமோ, வேடமோ ஒன்றைச் சூழும் போது உண்மை நம் மனத்தில் பதிவதில்லை. ஆத்மார்த்தமாக ஒன்றைச் செய்யும்போது, நம்மையறியாமலேயே அதற்குரிய பலன் நமக்குக் கிடைத்துவிடுகிறது. இந்த உண்மையை அந்தக் குரு புரிந்துகொண்டார்.

நினை அவனை
நினை அவனை

ர்வத முனிவரும் நாரதரும் ஒருமுறை மன்னன் ஒருவனின் அரண்மனைக்குச் சென்று தங்கினர். மன்னன், இருவருக்கும் பணிவிடை செய்யும்படி இளவரசி தமயந்தியை நியமித்தார்.

அறிவும் பணிவும்கொண்ட தமயந்தி, நாரதருக்கு அதிக பணிவிடைகள் செய்தாள். பர்வத முனிவருக்குக் கோபம் வந்தது. நாரதர் அழகாக இருப்பதால்தான் அவரிடம் இளவரசி விசேஷ கவனம் செலுத்துகிறாள் என்ற முடிவுக்கு வந்தவர், நாரதரின் முகம் குரங்கின் முகமாக மாறும்படி சபித்துவிட்டார். பிறகு அங்கிருந்து யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

நாரதரின் முகம் குரங்குமுகமாக மாறிவிட்டது. அப்போதும் தமயந்தி தன் ஆத்மார்த்தமான பணிவிடைகளை நிறுத்தவில்லை. அவள் புறத்தை நோக்காமல் அகத்தை நோக்கினாள். நாரதர் அவளின் குணத்தில் மகிழ்ந்து அவளைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்டார். மன்னர் தயங்கியபோது, தமயந்தி நாரதரின் பாகவத குணங்களை எடுத்துக்கூறி தயக்கம் வேண்டாம் என்றாள். மன்னரும் தமயந்தியை மகிழ்வோடு திருமணம் செய்துகொடுத்தார். திரும்பி வந்த பர்வத முனிவர், நடந்தவற்றை அறிந்து தன் தவற்றுக்கு வருந்தினார். நாரதருக்குச் சாப விமோசனமும் அளித்தார்.

‘புற வேடங்களில் மயங்காமல், அவற்றைப் புறம் தள்ளிவிட்டு ஆத்மஞானம் பெற வேண்டும்’ என்கிறார் ஆதிசங்கரர்.

- நினைப்போம்...