Published:Updated:

நினை அவனை! - 17

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 17

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

Published:Updated:
நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

குருதே கங்கா ஸாகர கமனம்

வ்ரதபரிபாலனம் அதவா தானம்

ஞானவிஹீந ஸர்வமதேன

முக்திம் ந பஜநி ஜன்மசதேன

கருத்து : கங்கை போன்ற புண்ணிய தீரங்களுக்குத் தீர்த்த யாத்திரை செல்கிறான். விரதங்கள் மேற்கொள்கிறான். கொடைகளை வழங்குகிறான். ஆனால், ஞானம் இல்லை என்றால் ஒருவனால் எப்படி முக்தி அடைய முடியும்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஆன்மிக வாழ்வில் நம் எதிரிகள், நம்மைப் பற்றிக்கொள்ள காத்திருக்கும் ஆசாபாசங்களே. அவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் அரண்தான் ஞானப்பாதை.

ஞானத்தை அடைவது எளிதல்ல எனும் எண்ணம் பலருக்கும் உண்டு. முனிவர்கள்தான் ஞானம் அடையமுடியும் என்றில்லை. எளிமையும் ஆழ்ந்த நம்பிக்கையும் ஞானத்துக்கு வழிவகுக்கும்.

கங்கையில் குளித்தால் பாவங்கள் கரையும் என்பார்கள். ஒருமுறை, இதுகுறித்த தன் ஐயத்தை சிவனாரிடம் முன்வைத்தாள் பார்வதிதேவி.

நினை அவனை
நினை அவனை

``கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தீரும் எனில், எவ்வளவு பாவங்கள் செய்தாலும் கங்கையில் மூழ்கி அவற்றைக் கரைத்துவிடலாம் என்ற எண்ணத்தில், மக்கள் தொடர்ந்து பாவங்கள் செய்வார்கள்தானே?'' என்று கேட்டாள்.

சிவபெருமான் புன்னகைத்தார். ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றத் தீர்மானித்தார். இருவரும் வயது முதிர்ந்த தம்பதியாக வேடம் பூண்டு கங்கைக் கரையில் நடந்து சென்றனர்.

திடீரென்று முதியவர் மார்பைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார். அவரின் மனைவி பதற்றம் அடைந்தவளாக தரையில் அமர்ந்து கணவனின் தலையைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டு கதறினாள்: ``பாவமே செய்யாத ஒருவர் கங்கை நீரைக் கொண்டுவந்து என் கணவர் வாயில் ஊற்றினால், அவர் பிழைத்துக்கொள்வார்... எவரேனும் உதவுங்களேன்..!''

அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அவளுக்கு உதவவேண்டும் என்ற தவிப்பு எழுந்தது. அதேநேரம், அவள் கூறிய நிபந்தனை அவர்களுக் குள் தயக்கத்தை ஏற்படுத்தியது. அனைவர் மனதிலும் அவரவர் செய்த பாவங்கள் நினைவுக்கு வந்தன. `நாம் கங்கை நீரைக் கிழவரின் வாயில் ஊற்றினால் அவர் கட்டாயம் இறந்துவிடுவார். நாம் பாவி என்பது அனைவருக்கும் தெரிந்து போகுமே’ என்ற எண்ணத்தில் தயங்கி நின்றனர்.

அவர்களில் ஒருவன் மட்டும் ஓடோ டிச் சென்று கங்கையில் மூழ்கினான். அத்துடன், தன்னிடமிருந்த குவளையில் கங்கை நீரைச் சேகரித்துக்கொண்டு அந்த வயதான தம்பதியை நெருங்கினான்.

அப்போது சுற்றிலும் இருந்தவர்கள், ``நீ என்ன பாவமே செய்யாதவனா’’ என்று கிண்டலாகக் கேட்டார்கள்.

அவன் சொன்னான்: ``நிறைய பாவங் களைச் செய்திருக்கிறேன். ஆனால், கங்கையில் குளித்ததன் மூலம் அவை அனைத்தும் நீங்கிவிட்டனவே!’’

அடுத்த கணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. முதிய தம்பதியாக வந்த சிவபெருமானும் பார்வதிதேவியும் மறைந்தனர்.

அனைவருக்கும் ஓர் உண்மை புரிந்தது. ‘தன் பாவங்கள் தீர்ந்துவிடும் என்ற முழு நம்பிக்கையோடு எவனொருவன் கங்கை யில் மூழ்கி எழுகிறானோ, அவனுடைய பாவங்கள் நிச்சயம் தீரும்' என்று.

இப்படியான முழு நம்பிக்கைதான் ஞானம்!

துறவி ஒருவர் களைப்பின் காரணமாக, மர நிழலில் படுத்துக்கொண்டிருந்தார். தன் கைகளைத் தலைக்கு அண்டக் கொடுத்தபடி அவர் படுத்திருந்தார்.

அப்போது, அவ்வழியே சென்ற இருவரில் ஒருவன், “பாவம் இந்தத் துறவி. களைப்பில் தூங்குகிறார்’’ என்றான்.

மற்றவனோ, “இவர் துறவியே இல்லை. கைகளை தலைக்குக் கீழே அண்டக் கொடுத்திருக்கிறார் என்றால், இன்னமும் இவர் உடல் சுகத்தைத் தவிர்க்கவில்லை என்றுதானே அர்த்தம்'' என்றான்.

இந்த உரையாடலைக் கேட்டு திடுக்கிட்ட துறவி, உடனே தலைக்கு அண்டக்கொடுத்திருந்த கைகளை விலக்கிக்கொண்டார்.

உடனே முதலாமவன், “இப்போதாவது இவர் துறவி என்பதை ஏற்றுக்கொள்வாயா’’ என்று கேட்டான். இரண்டாமவன் சொன்னான்: “நிஜத் துறவி எனில், மற்றவர்களின் புகழ்ச்சி யையோ இகழ்ச்சியையோ ஒரு பொருட்டாகக் கருதக்கூடாது. மற்றவர்களின் கருத்துக்காகத் தன்னை மாற்றிக்கொள்பவர்களைத் துறவியாக எப்படி ஏற்பது?''

ஆக, வெளியே மட்டுமல்ல உள்ளேயும் பக்குவம் வாய்க்கவேண்டும். அப்போதுதான் ஆத்ம ஞானம் கைகூடும். இன்னுமொரு கதை உண்டு.

டவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட பெண் ஒருத்தி விபத்தில் சிக்கினாள். தீவிர சிகிச்சை அளித்தும், அவளால் ஊன்றுகோல் இல்லாமல் நடக்கமுடியாத நிலை ஏற்படது.

‘இனி அவருக்குக் கடவுள் நம்பிக்கை அற்றுப் போய்விடும்' என்றே பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார் அந்தப் பெண். அந்த விருந்துக்கு வந்திருந்தவர்கள் கண்களில் அனுதாபம் பொங்கியது. `உங்களுக்கா இந்த நிலை... கடவுளுக்குக் கண்ணில்லை... உங்களை இந்தக் கோலத்தில் பார்த்தபிறகு கடவுள் மீதிருந்த நம்பிக்கையே போச்சு...' என்பதாக ஆளாளுக்குப் பேசினார்கள்.

அந்தப் பெண்ணோ புன்னகை யுடன், ``கடவுளுக்கு வந்தனம். என் ஒரு காலை மட்டும் எடுத்துக்கொண்டதற்கு’’ என்றவாறு பேச்சை ஆரம்பித்தார். அவரது முதல் வாக்கியத்திலேயே அனைவரும் திகைத்துப்போனார்கள். தொடர்ந்து அந்தப் பெண்மணி கேட்டார்: ``நண்பர்களே, நடக்கும்போது நீங்கள் வித்தியாசமாக எதையாவது உணர்ந்தது உண்டா?’’

விருந்தினர்கள் விழித்தார்கள். அந்தப் பெண் மணி புன்னகையுடன் தொடர்ந்தார்.

நினை அவனை
நினை அவனை

``நான் ஒவ்வோர் அடியை எடுத்து வைக்கும் போது என் ஊன்றுகோல் எழுப்பும் ஒலி, கடவுள் என் கூடவே நடந்துவருவதை எனக்கு உணர்த்துகிறது’’ என்றாள்.

அந்த பெரும் விபத்துக்குப் பிறகும் அவள் உற்சாகத்துடன் வளைய வருவதற்கான காரணம் அப்போதுதான் மற்றவர்களுக்குப் புரிந்தது!

னது சொத்து ஒன்றை விற்றுக் காசாக்கிக் கொண்டு, பயணத்துக்குக் கிளம்பினான் ஒருவன். இரவில் வழியிலிருந்த சத்திரம் ஒன்றில் தங்கினான்.

அவனருகில் படுத்துக்கிடந்தவனைப் பார்க்க திருடன் போலிருந்தது. பணத்தை அவன் களவாடிச் சென்றுவிடுவானோ என்று பயம் எழுந்தது இந்தத் தனவானுக்கு. அதேநேரம், இரவு முழுவதும் தூங்காமலும் இருக்கமுடியாது. நன்கு யோசித்தவன் ஒரு வழியைக் கண்டுபிடித்தான். அதைச் செயல்படுத்தவும் செய்தான். பிறகு நிம்மதியாகத் தூங்கி எழுந்தான்.

மறுநாள் காலையில் எழுந்ததும், அந்தத் திருடன் எரிச்சலுடன் கேட்டான்:

“நீ பணம் கொண்டுவந்ததை நான் பார்த்தேன். நீ தூங்கும்போது களவாடிச் செல்லலாம் என்று எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தேன். ஆனாலும் பணம் கிடைக்கவில்லை. அதை எங்குதான் வைத்துத்தொலைத்தாய்?”

உடனே தனவான், “உன் தலையணைக்கு அடியில்தான்” என்று சிரித்தபடியே பணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தான். திருடன் திகைத்துப் போனான்!

நமக்குள்ளே இருக்கும் இறைவனைக் கண்டு கொள்ளாமல் வேறு எங்கெங்கோ தேடும் நிலையை உணர்த்துகிறது இந்தக் கதை.

`தஞ்சம் என்றே உன்னைத் தேடி வந்தேன்,

திருத்தணிகை செந்தில் பழநி நாடி வந்தேன்,

எஞ்சிய மலையெல்லாம் ஏறிவந்தேன்,

நீ இருப்பது என் இதயத்தில் என்று உணர்ந்தேன்’

என்ற பாடல் வரிகளும் இதையே நமக்கு உணர்த்துகின்றன. கடவுள் நமக்குள் இருக்கிறார் என்பதை உணரும்போது ஆத்மஞானம் தானே வாய்க்கும்.

- நினைப்போம்...