Published:Updated:

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - மருத்துவப் பெண்ணாக வந்தார்!

ஸ்ரீசூலுடைய  ஐயனார் சாஸ்தா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீசூலுடைய ஐயனார் சாஸ்தா

சேதுக்குவாய்த்தான் ஸ்ரீசூலுடைய ஐயனார் சாஸ்தா

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - மருத்துவப் பெண்ணாக வந்தார்!

சேதுக்குவாய்த்தான் ஸ்ரீசூலுடைய ஐயனார் சாஸ்தா

Published:Updated:
ஸ்ரீசூலுடைய  ஐயனார் சாஸ்தா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீசூலுடைய ஐயனார் சாஸ்தா

படங்கள்: வேப்பன்குளம் மு.நாராயணன்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து குரும்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது `சேதுக்கு வாய்த்தான்' எனும் அழகிய கிராமம்.

ராமகாவியத்தில் ஸ்ரீராமனும் வானரரும் `சேதுக்கு வாய்த்தான்' ஊரில் - தாமிர பரணிக் கரையில் அமர்ந்து, சேது அணை பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்றனர் என்று ஒரு தகவல் இங்கு சொல்லப் படுகிறது. அதனால் இந்தக் கிராமம் `ராம பூமி' என்றும் `சேது பூமி' என்றும் அழைக்கப்படுகிறது.

மண்மணக்கும் இந்த இவ்வூரில் மிக அற்புத மாகக் கோயில் கொண்டிருக்கிறார், சூலுகாத்த சூலுடைய ஐயனார் சாஸ்தா. கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதி நாதன் எனும் குறுநில மன்னன், சேதுக்கு வாய்த்தான் பகுதிகளைச் சிறப்பாக ஆட்சி செய்துவந்தான்.மக்கள் செழிப்புடன் வாழ்ந்தனர்.

தைப்பொங்கல்: மண் மணக்கும்
தரிசனம்! - மருத்துவப் பெண்ணாக வந்தார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதே காலகட்டத்தில்தான் தர்மசாஸ்தாவான ஐயனார் இங்கு தாமிர பரணியின் கரையில் ஓலைக் குடிசையில் கோயில் கொண்டார்.

அப்போது இந்தக் கிராமத்தில் நல்லதாயி என்ற ஏழைப் பெண் வாழ்ந்தாள். அவளும் அவளின் கணவன் சின்னத்துரையும் தினமும் தாமிரபரணி ஆற்றங் கரை வழியே குரங்கணி வரை சென்று விறகுகளைப் பொறுக்கி வருவார்கள். வழியில் இந்த ஐயனாரையும் வழிபடுவார்கள்.

இவர்களுக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தக் குறை விரைவில் தீரவேண்டும்; குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என்று தினமும் ஐயனாரை வேண்டிக் கொள்வாள் நல்லதாயி.

அவளின் வேண்டுதல் பலிக்கும் காலம் நெருங்கியது; ஐயனார் கண் திறந்தார். நல்ல தாய் கருவுற்றாள். சின்னத்துறை அவளை கண்ணை இமை காப்பதுபோல் பாதுகாத்தான்.

நாள்கள் நகர்ந்தன. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள் நல்லதாயி. திடுமென அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டால் யார் பார்த்துக் கொள்வது? ஆகவே, அவளை எப்போதும் தன் அருகில் வைத்துக் கொண்டான் சின்னத்துரை. தினமும் அவளையும் காட்டுக்கு அழைத்துச் சென்றான்.

ஒருநாள் விறகு சேகரித்துக்கொண்டு விறகுக் கட்டை தலையில் சுமையாக ஏற்றிக் கொண்டனர். சுமையைத் தலையில் ஏற்றிய துமே நல்லதாயிக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. எனினும் வலியைப் பொறுத்துக்கொண்டு வீடு வரை சென்றுவிடலாம் என்று எண்ணினாள் அவள். ஆகவே கணவனிடம் வலியைப் பற்றிக் கூறாமல் பின்தொடர்ந்தாள்.

தைப்பொங்கல்: மண் மணக்கும்
தரிசனம்! - மருத்துவப் பெண்ணாக வந்தார்!

ஆனால் அவளால் பாதி தூரத்தைக் கடக்க முடியவில்லை. வலியால் துடிதுடித்துப் போனாள். சின்னத்துரை திகைத்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவன், அவளை ஐயனார் கோயிலில் விட்டுவிட்டு, மருத்துவச்சியை அழைத்துவர ஓடினான்.

அவன் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் சூறைக்காற்றுடன் பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது. வெகுநேரமாகியும் சின்னத் துரையும், மருத்துவச்சியும் வரவில்லை.

நல்லதாயி வலி தாங்காமல் துடித்தாள். திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. அவளும் அந்த ஐயனாரையே துணைக்கு அழைத்தாள்.

``ஐயனாரே! என்னால் வலி தாங்க முடிய வில்லை. என் உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொள்; என் பிள்ளையைக் காப்பாற்று'' என்று கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டாள்.

அவளின் வேண்டுதல் குரலுக்குச் செவி சாய்க்காமல் இருப்பாரா ஐயனார். அவளுக்கு அருள்செய்ய திருவுளம் கொண்டார். அவரே அவளுக்குப் பிரசவம் பார்க்க, மருத்துவச்சியாய் மாறி வந்தார்.

தாயும் சேயும் பிரிய முடியாமல் வேதனையில் துடித்த வேளையில், ஐயனார் மருத்துவச்சியாய் வந்து பிரசவம் பார்த்தார். அழகாய் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்த நல்லதாயி மயங்கி விட்டாள். ஐயனாரோ சுயரூபம் கொண்டவராய் சந்நிதிக்குள் எழுந்தருளிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து மருத்துவச்சியை அழைத்துக் கொண்டு பதற்றத்தோடு வந்து சேர்ந்தான் சின்னத்துரை. அங்கு, நல்லதாயி அழகான ஆண் மகனைப் பெற்றெடுத்திருப்ப தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான்.

அதேநேரம் நல்லதாயி மயக்கம் தெளிந்து விழித்தாள். தக்க நேரத்தில் மருத்துவச்சி ஒருத்தி வந்து தனக்குப் பிரசவம் பார்த்து, தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிய கதையைக் கணவனிடம் விவரித்தாள் அவள்.

பெருமழை பொழிந்துகொண்டிருந்த அந்த நேரத்தில், அந்த இடத்துக்கு மருத்துவச்சி எப்படி வந்திருப்பாள் என்று மலைத்தான் சின்னத்துரை. வந்தது யார் என்று அவனுக்குப் புலப்படவில்லை.

தைப்பொங்கல்: மண் மணக்கும்
தரிசனம்! - மருத்துவப் பெண்ணாக வந்தார்!

நிறைவில் குழந்தைக்குப் போர்த்தப்பட்டிருந்த துணியைப் பார்த்தபோதுதான் உண்மை புரிந்தது. அந்தத் துணி ஐயனாருக்குச் சார்த்தப் பட்டிருந்த ஆடை. ஆக, மருத்துவச்சியாய் வந்து மனைவிக்கு பிரசவம் பார்த்து அனுக்கிரகம் செய்தது, சாட்சாத் ஐயனாரே என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொண்டார்கள். கண்ணீர்மல்க ஐயனாருக்கு நன்றி சொல்லி வழிபட்டான் சின்னத் துரை.

சூலிப் பெண்ணைக் காத்து நின்றதால், சூலு காத்த ஐயனார் என்றும் சூலுடைய ஐயனார் சாஸ்தா என்று இவ்வூர் ஐயனாருக்குத் திருப் பெயர் அமைந்தது.

இன்றைக்கும் தன்னை நாடி வந்து வேண்டும் பக்தர்களுக்கு குழந்தை வரம் அருள்கிறார் இந்த ஐயனார். அதேபோல், கர்ப்பிணிப் பெண் களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் சுகப் பிரசவம் நிகழவேண்டும் என்றும் இவர் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலில் சங்கிலிபூதத்தார், பேச்சியம்மன், சுடலைமாடசாமி, விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகன் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.

நெல்லைச் சீமைக்குச் செல்லும் அன்பர்கள், அவசியம் இந்த ஐயனாரையும் தரிசித்து வரம் பெற்று வாருங்கள். திருச்செந்தூரிலிருந்து ஏரல் செல்லும் பேருந்திலும், திருநெல்வேலியிலிருந்து ஏரல் வழியாக திருச்செந்தூருக்குச் செல்லும் பேருந்திலும் பயணித்தால் இந்த ஊரை அடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism