Published:Updated:

ஓம்கார வடிவில் 11 கணபதிகள்!

இவர்களில் மையமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகரே மூலவர்;

பிரீமியம் ஸ்டோரி

ந்நியர் ஆதிக்கத்தால் புகழ் மங்கியிருந்த நம் சனாதன தர்மத்துக்குப் புத்துயிர் ஊட்ட ஆதிசங்கரர் தன் திருப்பாதங்கள் பதித்து பாரத தேசமெங்கும் பயணித்தார். காணாபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம், சைவம், வைணவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நம் தர்மத்துக்குப் புத்தொளி பாய்ச்சினார்.

இறை சாந்நித்தியம் நிறைந்த புண்ணிய க்ஷேத் திரங்களைத் தேடிக் கண்டடைந்து, அங்கு ஆலயங்கள் எழுப்பி வழிபாடுகள் நடந்திட ஏற்பாடுகள் செய்தார். அப்படி அவர் நிர்மாணித்த ஆலயங்களில் ஒன்றுதான் ஏகாதச (11) விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும் சேண்பாக்கம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம்.

ஓம்கார வடிவில் 11 கணபதிகள்!

ஆதிசங்கரர் தன் ஞான திருஷ்டியில் ஏகாதச சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும் இந்தத் தலத்தை அடைந்தாராம். இங்கே 11 சுயம்பு மூர்த்தங்கள் இருப்பதைக் கண்டவர், அவை அனைத்தும் விநாயக ரூபங்கள் என்றும், அவையே லிங்க உருவில் எழுந்தருளியிருக்கின்றன என்றும் அறிந்தார். தொடர்ந்து, அங்கே விநாயகர் வழிபாடுகள் முறைப்படி நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.

ஆதியில் செண்பக மரங்கள் நிறைந்திருந்த இடம் என்பதால், செண்பகவனம் எனப்பட்டதாம் இந்தத் தலம். பின்னர், விநாயகர் சுயம்பு வடிவங் களாய் எழுந்தருளியதால் `ஸ்வயம்பாக்கம்' என்று பெயர்பெற்றது. இந்தப் பெயரே பிற்காலத்தில் `சேண்பாக்கம்' ஆனது என்கிறார்கள், ஆன்மிகப் பெரியோர்கள்.

1677-ம் ஆண்டு, வேலூர் கோட்டையை துக்கோஜிராவ் என்ற மராட்டிய மன்னர் ஆண்டு வந்தார். ஒருமுறை இந்த மன்னர் இந்தப் பகுதி வழியே தன் ரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். திடீரென ஓரிடத்தில் ரதம் நின்றுவிட்டது. மேற்கொண்டு நகரவில்லை. ரதத்தின் சக்கரத்திலும் தரையிலும் ரத்தக் கறை காணப்பட்டது.

‘என்ன இது...’ என்று பதறிப்போனார் மன்னர். தன்னையுமறியாமல் ஏதேனும் உயிரைக் கொன்று விட்டோமோ என்று கலக்கமுற்றார். மிகுந்த சஞ்சலத்துடன் அன்று இரவு உறங்கப்போன மன்னரின் கனவில் கணபதிப் பெருமான் தோன்றினார். “உன் தேர் நின்ற இடத்தில் என்னுடைய ஏகாதச ரூபங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்புவாயாக” என்று உத்தரவிட்டார்.

மறுநாள் அந்த இடத்துக்குச் சென்ற மன்னர், விநாயகர் ரூபங்களை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபாடுகள் செய்தார் என்ற தகவலும் உண்டு. இந்தத் தலத்துக்கு விஜயம் செய்த காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் இத்தலத்தின் மகிமைகளை எடுத்துரைத்துள்ளார்.

கணபதி
கணபதி

“வேலூருக்குப் போயிருந்தோம். அங்கே சேண்பாக்கம் என்ற இடத்தில் சக்திவாய்ந்த கணபதி மூர்த்திகள் இருக்கின்றனர். ஒன்றல்ல இரண்டல்ல... மொத்தம் பதினோரு பிள்ளையார்கள். அதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் அவை சிற்பி வடித்தவையல்ல;

அனைவருமே சுயம்பு மூர்த்திகள்; ஏகாதச ருத்ரர்கள். பதினோருபேரும் அமைந்திருக்கும் அமைப்பு ப்ரணவாகாரமாக இருக்கும்” என்று விரிவாக இந்தத் தலத்தின் மகிமையை விளக்கி யிருக்கிறார், காஞ்சி மகா பெரியவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆம்! இந்தத் தலத்தில் 11 விநாயகர்களையும் மூலவருக்கு எதிரே அமைந்திருக்கும் யானை வாகனத்தையும் சேர்த்து தரிசித்தால், அந்த அமைப்பு ஓம்கார வடிவில் அமைந்துள்ளது தெரியும். இந்த ஆலயத்துக்கு மேற்கூரை இல்லை. அதன் காரணம்... தேவர்களும் ரிஷிகளும் தினமும் ஆகாய மார்க்கமாக வந்து இந்த விநாயகரை வழிபாடு செய்வார்களாம். அதனாலேயே கூரை வேயப்படாமல் இருக்கிறது என்கின்றனர்.

ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீநடன விநாயகர், ஸ்ரீஓம்கார விநாயகர், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீசிந்தாமணி விநாயகர், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமயூர விநாயகர், ஸ்ரீமூஷிக விநாயகர், ஸ்ரீவல்லப விநாயகர், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீபஞ்சமுக விநாயகர் ஆகியோரே இங்கு எழுந்தருளியிருகிறார்கள்.

ஓம்கார வடிவில் 11 கணபதிகள்!

இவர்களில் மையமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகரே மூலவர்; பிரதானமானவர். இவருக்கே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக விநாயகருக்கு மூஷிக வாகனம் அமைந்திருக்கும். ஆனால், இந்தத் தலத்தில் மூலவருக்கு யானை வாகனம் அமைந்துள்ளது.

16 செல்வங்கள் மனித வாழ்வுக்குத் தேவை. அவற்றுள் மிகவும் முக்கியமான 11 செல்வங்களை நமக்கு அருளும் அற்புத மூர்த்தியராக இந்த விநாயகர்கள் திகழ்கிறார்கள். இந்தத் தலத்தை `விநாயக சபை' என்று சொல்லும் மரபும் உண்டு.

மூலவரான செல்வ விநாயகரின் சந்நிதிக்கு எதிரிலேயே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.கோயிலின் தல விருட்சம் வன்னிமரம். இந்த விநாயகருக்கு எதிரிலேயே நவகிரக சந்நிதி உள்ளது. குறிப்பாக சனி பகவான் விநாயகரை தரிசித்தபடி அமைந்துள்ளார். யாரெல்லாம் செல்வ விநாயகர் திருவடிகளைப் பணிந்து சரணடைகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மங்கலம் பொங்கவும், தன்னால் உண்டாகும் தோஷம் பீடிக்காமல் இருக்கவும் இந்தச் சனி பகவான் அருள்புரிகிறார் என்கின்றனர் பக்தர்கள்.

ஓம்கார வடிவில் 11 கணபதிகள்!

இந்தத் தலத்தில் 108 தேங்காய்கள் உடைப்பது விசேஷமான பிரார்த்தனை. 108 தேங்காய்கள் உடைத்து வழிபட்டால், நம் துன்பங்கள் யாவும் உடைந்து சிதறும் என்பது நம்பிக்கை. வேலூர் சுற்றுவட்டாரத்தில் புதிதாக வண்டி வாகனங்கள் வாங்குபவர்கள் முதன்முதலில் இங்குவந்து செல்வ விநாயகரை வேண்டிச் செல்கிறார்கள். மாணவர்களுக்கும் பிரியமானவர் இந்த விநாயகர். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற இந்த விநாயகரை வழிபாடு செய்து பலன்பெறுகின்றனர்.

பிள்ளை வரம் வேண்டுபவர்கள் இந்தப் பிள்ளையாருக்குப் பால் அபிஷேகம் செய்து குளிர்வித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்கிறார்கள் கைமேல் பலன்பெற்ற பக்தர்கள். ஆண்டுதோறும் இங்கு 10 நாள்கள் நடைபெறும் விநாயக சதுர்த்திப் பெருவிழா மிகவும் சிறப்புடையது. சித்ரா பௌர்ணமி அன்று பூப்பல்லக்கு உற்சவமும் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையில் லட்சதீபத் திருவிழாவும், புரட்டாசி மாதத்தில் சங்கடஹர சதுர்த்தியில் நடைபெறும் பவித்ரோத்சவமும் இங்கு நடைபெறும் முக்கியமான விசேஷங்களாகும்.

இந்த நாள்களில் விநாயகரை தரிசித்து வழிபடச் சகலவிதமான செல்வங்களும் சேரும் என்பது ஐதிகம்.

- கீதா வாசு, வேலூர்

கோயில் திறந்திருக்கும் நேரம் :

காலை: 6 முதல் 12.00 மணிவரை

மாலை: 4.30 முதல் 8 மணிவரை

எப்படிச் செல்வது?: வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில், சுமார் 1.5 கி.மீ தொலைவில் சேண்பாக்கம் அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு