Published:Updated:

சித்தனாக வந்த சிவம்!

லதாராவ்
பிரீமியம் ஸ்டோரி
லதாராவ்

வி.ஐ.பி ஆன்மிகம்

சித்தனாக வந்த சிவம்!

வி.ஐ.பி ஆன்மிகம்

Published:Updated:
லதாராவ்
பிரீமியம் ஸ்டோரி
லதாராவ்

லதாராவ், திரைக்கலைஞர். சக்திவிகடனின் நீண்ட நாள் வாசகரும்கூட! அவர் தனக்கு நிகழ்ந்த ஒப்பற்ற இறை அனுபவம் ஒன்றை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

சித்தனாக வந்த சிவம்!

``இறைநம்பிக்கை என் வாழ்க்கையில் எப்போதும் நிறைந்தே இருந்திருக்கிறது. நான் ராகவேந்திரரின் தீவிர பக்தை. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்குப் பின் மண்டையில் தாங்கமுடியாத வலி ஏற்படும். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தும் வலி தீரவில்லை. காரணமும் தெரியவில்லை. வலியினால் நான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வைக்கூட எழுத முடியவில்லை.

ஒரு நாள் நான் ராகவேந்திரர் படத்துக்கு முன்பு அமர்ந்து கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டிருந்தவள், அப்படியே உறங்கியும்விட்டேன். அன்று இரவு ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அது கனவா அல்லது நினைவா என்று தெரியவில்லை. யாரோ என் தலை அருகே அமர்ந்து பின்னந்தலையை ஆதரவாகத் தடவிக் கொடுக்கிறார்கள். சிறிது நேரத்தில் எனக்கு நினைவு வந்து விழித்தபோது யாருமே அருகில் இல்லை. நம்பினால் நம்புங்கள்... அந்தத் தலைவலி என் வாழ்வில் மீண்டும் வரவேயில்லை. அப்படியானால் அந்த நாளில் வந்து என் தலையை வருடிக் கொடுத்தது அந்த ராகவேந்திரரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?!

சித்தனாக வந்த சிவம்!

எனக்குச் சிவபெருமான் மீது பக்தி அதிகம். கயிலாயம் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. ஒருமுறை கைலாஷ் யாத்திரை புறப்பட்டோம். இருபத்தி மூன்றாயிரம் அடி ஏறிவிட்டோம். கொஞ்ச தூரத்தில் பரிக்ரமா வலம் ஆரம்பம். ஆனால் எனக்கு இதயத்துடிப்பு (பல்ஸ் ரேட்) நூற்றி அறுபதைத் தாண்டிவிட்டது. நிச்சயம் அதற்கு மேல் பயணித்தால் இதயமே வெடித்துவிடும் என்னும் அளவுக்கு நிலைமை. நானும் நண்பர் நாதுராமும் மட்டுமே அங்கே, கௌரி குந்த் ஏரிக்கு அருகே இருந்தோம். என் இதயத்துடிப்பு என் காதுகளை அடைக்கும் அளவுக்கு வேகமாகத் துடித்து என்னை நடுங்கச் செய்தது.

நான் அந்த ஈசனையே தியானித்தேன்... `அப்பா! உன் தரிசனம் இல்லாமல் என்னை அனுப்பிவிடாதே' என்று மனதுக்குள் கதறி வேண்டிக்கொண்டு கண் திறந்தால், எதிரே ஒரு சித்தர். சடாமுடியோடு இடுப்பில் மட்டும் ஒரு வஸ்திரம் அணிந்தபடி நின்றிருந்தார். சட்டென்று என் நெற்றியில் கை வைத்து, `ம்' என்றார். அடுத்த கணம் உடலில் ஒரு புத்துணர்ச்சி தோன்றியதுபோல் இருந்தது.

நான் நண்பரிடம், `எங்களைப் புகைப்படம் எடு, புகைப்படம் எடு' என்று சொல்கிறேன். சித்தர் சிரிக்கிறார். நண்பர் மூன்று புகைப் படங்கள் எடுத்தார். நான் கேமராவை வாங்கிப் பார்த்தேன். அந்த மூன்று படங்களும் கறுப்பாகவே இருந்தன. திரும்பி அவரைப் பார்த்தால்... கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவர் இல்லை. அப்படி என்றால் வந்தவர் யார்...

அந்தப் பயணத்தில் அதற்குப்பின் எனக்கு சிறு உடற் தொந்தரவு கூட வரவில்லை. பல்ஸ் ரேட் ரொம்பவே நார்மலாகிவிட்டது. நல்ல ஆரோக்கியத்தோடு தரிசனம் முடித்துத் திரும்பினேன். என்னோடு வந்த சிலர்கூட சளித்தொந்தரவுகள், காய்ச்சல் ஆகியவற்றுக்கு ஆளாகினர். எனக்கோ எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த வைத்தீஸ்வரன் அல்லவா சித்தனாக வந்து என்னை ஆட்கொண்டிருக்கிறான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism