திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

காகபுசுண்டர் வணங்கிய ஷோடச லிங்கம்!

ஷோடச லிங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷோடச லிங்கம்!

ஷோடச லிங்கம்!

காகபுசுண்டரும் அவர் மனைவி ஶ்ரீபகுளாதேவியும் ஜீவசமாதி அடைந்த இடம், கள்ளக்குறிச்சி வட்டம் தென் பொன்பரப்பு கிராமத்தில் ஶ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலின் ஈசானியத்தில் அமைந்துள்ளது.

இந்தத் திருக்கோயிலில் இருக்கும் ஷோடசலிங்கம் தனிச் சிறப்பு பெற்றது. சித்தர்களுக்கெல்லாம் தலைமை குருவாகக் கருதப்படும் ஶ்ரீகாகபுசுண்டர் 16 ஆண்டுகளுக்கு மேலாகக் கடும் தவமிருந்து, 16 முகங்களுடன் கூடிய சிவதரிசனம் பெற்றாராம். அதுபோல் உலக மக்களும் சிவதரிசனம் பெற்றுச் சிறப்படையும் வகையில், இந்த லிங்கம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.

லிங்கம்
லிங்கம்
ஷோடச லிங்கம்
ஷோடச லிங்கம்


ஏறக் குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன் தென் பொன்பரப்பை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன், 16 முகங்கள் கொண்ட இந்த ஷோடச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, மற்ற சிவாலயங்களில் இல்லாத தனிச் சிறப்புகள் பலவற்றை உள்ளடக்கியதாக இந்தக் கோயிலை உருவாக்கினார் என்பது வரலாறு.

இந்த ஷோடச லிங்கம் நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்தத் தன்மையுடன், சுமார் ஐந்தரை அடி உயரத்துக்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது ஒரே கல்லால் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவடிவைக் கைகளால் தட்டிப் பார்த்தால் வெண்கலச் சத்தம் எழுவது கூடுதல் சிறப்பு.

எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவதரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு நந்தியெம்பெருமான் பால நந்தியாக வீற்றிருப்பதால், பிரதோஷத்தின்போது கொம்புகளுக்கிடையே தரிசனம் செய்யும் அவசியம் இன்றி, நேரடியாகவே சிவ தரிசனம் செய்யலாம். இது ஒரு சிறப்பம்சம்.

விவசாயம் செழிக்க, கடன் தொல்லை நீங்க, திருமணம் நடைபெற, ஜாதகத்தில் உள்ள ராகு-கேது பாதிப்புகள் நீங்க, களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக - பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று ராகு கால வேளையில் பால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்து பலனடையலாம். இங்கு பால், சந்தனம், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது அவை நீல நிறமாக மாறுவதைக் காணலாம்.

இந்தக் கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஆதி கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துகள் உள்ளன. ‘கங்கைக் கரை போன்ற புண்ணிய இடங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வணங்குவதால் கிடைக்கும் பலனை, இந்தக் கோயில் ஈசனின் ஆத்ம தரிசனத்தின் மூலம் பெறலாம்’ என்பது போன்ற தகவல்கள் அவற்றில் அடங்கியுள்ளன.

‘இந்தக் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு இணையாக இருப்பதால் கருவறை மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இங்கு ஏற்றப்படும் தீபமானது துடித்துக் கொண்டே இருக்கும்’ என்று ஶ்ரீகாகபுஜண்டர் நாடிச்சுவடியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச் சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புனித நீர் போன்ற 16 வகைப் பொருட்களை சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் செய்ய ஆரம்பித் ததும் அவை தானாகவே சிறிதும் பிசிறு இல்லாமல் தனித் தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிப்பகுதி வரை வந்து பீடத்தில் ஐக்கியமாவதை தரிசிக்கலாம். ராகு கால வேளையில் இங்குள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதால், நமது அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகம்.

- சி.வேல்முருகன், திருச்சி-5

கவியரசர் கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசன்


`கசப்பே இனிப்பாகட்டும்’

வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட்டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள்; நஷ்டத்தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள்.

எது நேர்ந்தாலும் கவலைப் படாதீர்கள். விதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடைத்துவிடுங்கள். எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது உங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கருதுங்கள்.

வருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை!’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.


- கவியரசர் கண்ணதாசன்