சிவலிங்க வடிவங்களில் தாரா லிங்கம் எனப்படும் பட்டை லிங்கங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. லிங்கத் திருமேனியின் பாணப்பகுதியில் முகங்களுக்குப் பதிலாக அழகிய பட்டைகள் அமைந்தவை தாரா லிங்கங்கள்.
பல்லவ அரசர்கள் அமைத்த தாரா லிங்கங்கள் குறித்து வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த வகை லிங்கங்களின் பாணப் பகுதியில் 4, 8, 16, 32, 64 ஆகிய எண்ணிக்கையில் ஐந்து வகையாக பட்டைகள் அமைந்திருக்கும். இந்தப் பட்டைகள் ‘தாரா’ எனப்படும்.
இதில் நான்கு பட்டைகள் கொண்டது ‘வேத லிங்கம்’. பாடல் பெற்ற திருத்தலமான சக்ரப்பள்ளியில் வேத லிங்கத்தைக் காணலாம். எண் பட்டை (அஷ்ட தாரா) லிங்கம் பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் அனைத்திலும் உள்ளன. காஞ்சிபுரம் கயிலாய நாதர் ஆலயம், திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயம் ஆகியவற்றில் இந்த வகையான லிங்கங்கள் இடம்பெற்றுள்ளன.


பதினாறு பட்டை (ஷோடச தாரா) லிங்கம், சந்திரனின் பதினாறு கலைகளையும் பதினாறு பட்டைகளாகக் கொண்டது. ஆகையால் ‘சந்திரகலா லிங்கம்’ என்றும் இதை அழைப்பர். சந்திரன் மனோ காரகன். ஆக இந்த லிங்கத்தை தரிசிக்க மனம் மலரும்; சந்தோஷம் பெருகும். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்தில் அமைந்த லிங்கம், காஞ்சி கயிலாயநாதர் ஆலயத்தின் சுற்றாலயத்தில் உள்ள லிங்கம் ஆகியவை இந்த வகையானதே.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் - அரசூர் தேசிய நெடுஞ்சாலையில், அரசூருக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமுண்டீஸ்வரம். இங்கு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு சீதப்பட்டீஸ்வரரின் லிங்கத் திருமேனியும் 16 பட்டைகளுடன் திகழ்வதே (படத்தில் நீங்கள் தரிசிப்பது).
முப்பத்திரண்டு பட்டை(தர்ம தாரா)லிங்கம், தர்மத்தின் 32 வகையைக் குறிப்பிடுவது. எனவே, இது ‘தர்ம லிங்கம்’ என்பர். அதேபோல் 64 பட்டை லிங்கத்தை சதுஷ் சஷ்டி லிங்கம் என்பர். இது சிவபெருமானின் 64 லீலா விநோதங்களைக் குறிக்கும் ஆதலால், ‘சிவலீலா சமர்த்த லிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தாரா லிங்கங்களை வணங்குவதால் இறைவனோடு இரண்டறக் கலக்கும் பெரும்பேற்றினைப் பெற்று மகிழலாம்.
- எம்.வேல்முருகன், கோவில்பட்டி