Published:Updated:

ஏகாதசி விரதம் மேற்கொள்ள வேண்டியது ஏன்... பவிஷ்ய புராணம் சொல்லும் தாத்பர்யம்!

புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது ஒருவகை என்றால் அதில் இருக்கும் மறைபொருளை, அது உணர்த்தும் தத்துவத்தை ஆராய்வது என்பது மற்றொரு வகை. அவ்வாறு உணரும்போது பல விஷயங்களை நம்மால் அறிந்துகொள்ளமுடியும்.

பகவான் கிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூதுபோனார். அப்போது துரியோதனன் கிருஷ்ணரைத் தன் இல்லத்துக்கு விருந்து உண்ண அழைத்தான். ஆனால் கிருஷ்ணரோ அதை மறுத்து குடிசையில் வாழ்ந்த விதுரரின் வீட்டுக்குச் சென்று எளிமையான உணவை ஏற்றார். துரியோதனன் அவையில் வைத்து ``கிருஷ்ணா உனக்கு இங்கு அறுசுவை விருந்து தயாராக இருக்க, நீயோ போயும் போயும் ஒரு குடிசையில் வாழும் ஏழையின் வீட்டுக்குச் சென்று உணவு உண்டாயே...” என்று கேலியாகப் பேசினான். அப்போது கிருஷ்ணன் வெகுண்டு கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொன்னார்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

சுத்தம் பாகவதஸ்யான்னம்

சுத்தம் பாகீரதி ஜலம்

சுத்தம் விஷ்ணுபத த்யானம்

சுத்தம் ஏகாதசி வ்ரதம்

இதன் பொருள், பாகவதர்கள் வீட்டில் உண்ணும் அன்னம், பாகீரதி தீர்த்தம், விஷ்ணுவின் திருவடிகளைச் சிந்தித்தல், ஏகாதசி விரதம் ஆகியன மிகவும் பவித்ரமானவை என்று சொல்லி இதுகுறித்து அவதூறு பேசாதே என்று கண்டித்தார். இந்த ஸ்லோகம் விதுரர் பரம பாகவதர் என்பதைச் சொல்வதோடு வேறு சில தகவல்களையும் நமக்குச் சொல்கிறது. தீர்த்தங்களில் பாகீரதியும், விஷ்ணுவின் திருவடிகளை தியானிப்பதும், ஏகாதசி விரதமும் மிகவும் உயர்ந்தவை என்பதை நமக்குச் சொல்கிறது.

ஏகாதசி விரதம் குறித்து பவிஷ்ய புராணம் விரிவாகச் சொல்கிறது. அர்ஜூனன் அந்த விரதத்தின் மகிமைகள்குறித்துக் கேட்க அதற்கு கிருஷ்ணன் விளக்கம் அளிப்பதுபோல அந்தப் புராணம் அமைகிறது. முதலாவதாக ஏகாதசி என்கிற விரதம் எப்படித் தோன்றியது என்று கேட்டதற்கு பகவான் தந்த விளக்கமும் அதில் பொதிந்திருக்கும் தாத்பர்யங்களும் குறிப்பிடத்தக்கன.

ஏகாதசி உருவான புராணத்தின் தாத்பர்யம்

புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வது ஒருவகை என்றால் அதில் இருக்கும் மறைபொருளை, அது உணர்த்தும் தத்துவத்தை ஆராய்வது என்பது மற்றொரு வகை. அவ்வாறு உணரும்போது பல விஷயங்களை நம்மால் அறிந்துகொள்ளமுடியும். ஒரு காலத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தேவர்களோடு போரிட்டு அவர்களை அடிமைப்படுத்தினான். அவர்களுக்குப் பதிலாக இந்த உலகை ஆள புதிய அசுரர்களை நியமித்தான். ஏன் சந்திர சூரியர்களுக்குப் பதிலாகவும் வேறு நபர்களை நியமித்தான். தங்களின் பதவி, செல்வாக்கு, உரிமை அத்தனையும் இழந்த தேவர்கள் பகவான் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்து வேண்டினர்.

திருவல்லிக்கேணிப் பெருமாள்
திருவல்லிக்கேணிப் பெருமாள்

தேவர்கள் நல்ல நிலையில் இருந்தார்கள். சுக போகங்களை அனுபவித்தார்கள். அவர்களிடம் பதவியிருந்தது. அதை அவர்கள் நிரந்தரம் என்று நம்பினார்கள். ஒரு துன்பம் நேரும்போது தங்கள் சுய வலிமையால் வென்றுவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அது இயலவில்லை. பதவிமுதல் உரிமைகள் வரை அனைத்தையும் இழந்தபின்புதான் அவர்களுக்குப் பகவானின் நினைவு வருகிறது. அதுவே துன்பம் சூழும்போதே அதை பகவானிடம் முறையிட்டுத் தீர்வு தேடியிருந்தால் அவர்கள் நிலைமை வேறுமாதிரி ஆகியிருக்கும். பிரகலாதன் தனக்குத் துன்பம் நேர்கிற ஒவ்வொரு கணமும் பகவானையே ஸ்தோத்திரம் செய்தான். அதனால்தான் துன்பம் அவனைத் தீண்டாதபடிக்குப் பகவான் காப்பாற்றினார். ஆனால் தேவர்களோ அனைத்தையும் இழந்தபின்புதான் பகவானிடம் ஓடிவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பகவான், எப்போதும் யோகநித்திரையில் இருப்பவர். அவர் யோகநித்திரையில் இருந்த வண்ணமே தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வல்லவர். இதை உணராத தேவர்கள் அவர் சந்நிதிக்கு ஓடிவந்து வணங்கிப் புலம்பினர். பகவான் கருணாமூர்த்தி, அதே வேளை பிரபஞ்ச சிருஷ்டி ரகசியங்களை அறிந்த தேவர்களே இப்படி நடந்துகொண்டால் மாயையில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள் எப்படித் துன்பங்களால் துயருறுவார்கள் என்று நினைத்தார். அவர்களுக்கு உதவ நிரந்தரமான ஒரு ஏற்பாட்டைச் செய்ய விரும்பினார். அதற்காக அவர் செய்த திருவிளையாடலே முரன் என்னும் அசுரனுடனான போர்.

பெருமாள்
பெருமாள்

தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் முரனோடு போருக்குச் சென்றார். முரன் பெரும் வீரனாய் இருந்தான். பகவான் தோல்வியே காணாத தன் சக்கரம், கதை முதலான ஆயுதங்களை அவன் மேல் பிரயோகித்தார். அவை அவனைத் தீண்டாது திரும்பின. பின்பு அவனோடு மல்யுத்தம் செய்தார். பகவனோடு தோளோடு தோள் பொருத்திப் போர் புரியும் பாக்கியம் முரனுக்கு வாய்த்தது. அதிலும் வெற்றி தோல்வியே காண முடியவில்லை. பகவான் யுத்தம் மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதுமா... பிரபஞ்ச பரிபாலனமும் செய்ய வேண்டாமா... யுத்தத்திலிருந்து விலகி பகவான் பத்ரிகாஸ்ரமம் சென்று அங்கு யோக நித்திரையில் ஆழ்ந்தார்.

பக்தர்களுக்காக அவதரித்தவள் ஏகாதசி

இதுகாறும் இறைவனின் வலிமையோடு போர்புரிந்த அசுரன் இறைவன் தோற்றுவிட்டதாகக் கருதிப் பரிகாசம் செய்ய ஆரம்பித்தான். தீய சக்திகள் தங்களைப் பெரிதாக நினைத்துக்கொண்டு நல்லவற்றைப் பழிப்பது இந்த உலகில் இயல்பே. ஆனால் அந்தப் பழியும் பாவமும் நீண்ட நாள் நிலைக்காது. இந்த உலகைப் படைத்த பகவான் யோக நித்திரையில் இருக்க அவரின் மார்பிலிருக்கும் ஜகன் மாதாவான மகாலட்சுமிக்கோ இதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. தீயவற்றை அழித்து பகவானை சரணடைந்தவர்களைக் காக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். தன்னுள் இருந்து சகல ஆயுதங்களையும் ஏந்திய ஒரு சக்தியை உருவாக்கி அனுப்பினாள். அந்த தேவிக்குப் பெயரே ஏகாதசி.

கரிவரதராஜப் பெருமாள்
கரிவரதராஜப் பெருமாள்

பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் ஆவேசமாகக் களத்தில் இறங்குபவள் அன்னையே. அது வீட்டு அன்னையானாலும் சரி இந்த உலக அன்னையானாலும் சரி. அந்த அன்னையின் பரிபூரண கடாட்சத்தை நிரந்தரமாக்கவே பகவான் இவ்வாறான திருவிளையாடல்களைச் செய்கிறார். வெளியே வந்த ஏகாதசி முரனோடு யுத்தம் செய்து அவனை அழிக்கிறாள். பின்பு யோக நித்திரையில் இருந்து எழுந்தருளிய விஷ்ணு, ஏகாதசியை யார் என்று கேட்க தேவர்களும் ரிஷிகளும் அவள் செய்த பராக்கிரமத்தைக் கூறிப் போற்றினர். அப்போது ஏகாதசியைப் பாராட்டிய விஷ்ணு உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அப்போது ஏகாதசி, தான் ஒரு திதியாக இருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும். யார் யார் எல்லாம் விஷ்ணுவை தனக்குரிய திதி அன்று விரதமிருந்து வணங்குகிறார்களோ அவர்களின் துன்பங்களைத் தீர்ப்பவளாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். `ஏகாதசி து அகம் விஷ்ணு சர்வ சத்ரு விநாசினி’ - விஷ்ணுவின் அகத்திலிருந்து தோன்றிய ஏகாதசியாகிய நான் பக்தர்களுக்கு இருக்கும் சர்வ சத்ருக்களையும் அழிப்பவளாக விளங்க வேண்டும் என்று விண்ணப்பித்தாள். அதற்கு பகவான் மனம் மகிழ்ந்து அந்த வரம் அருளினார். அன்று முதல் ஏகாதசி மகிமை நிறைந்த விரதமாக விளங்குகிறது.

ஒவ்வொரு மாதமும் இருமுறை வரும் ஏகாதசி தினத்தில் விரதமிருந்தால் நம் துன்பங்கள் தீரும். இதுவரை நம் முயற்சியில் போராடித் தோற்ற சகல காரியங்களையும் ஏகாதசி விரதம் வெற்றியாக்கும். ஏகாதசி நாள் முழுவதும் உபவாசம் இருந்து, இரவு மகாவிஷ்ணுவின் பெருமைகளைப் போற்றி விஷ்ணுசகஸ்ர நாம பாராயணம் செய்து வந்தால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

பெருமாள்
பெருமாள்

குறிப்பாகச் செல்வ வளம் வேண்டுபவர்கள் இந்த நாளில் தானம் செய்ய வேண்டும். `தர்ம ஹீனே தனம் நாஸ்தி’ என்கிறது பவிஷ்ய புராணம். தர்மம் குறைந்தால் நம்மிடமிருக்கும் தனம் அழிந்துவிடும் என்பது அதன் பொருள். இந்தப் பிறவியில் செய்யும் தானம் ஏழேழு பிறவிகளுக்கும் நன்மைகளை அருளும். எனவே இந்த நாளில் தேவையிருப்போருக்கு உதவி நற்பயன்களை அடைவோம்.

ஏகாதசி : 18.5.2020

துவாதசி பாரணை நேரம் : காலை 6 முதல் 7 வரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு