ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

பௌத்தர்களும் வழிபடும் கதிர்காமன்

கதிர்காமம் முருகப்பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
கதிர்காமம் முருகப்பெருமான்

இலங்கைத் திருவுலா

இலங்கை உலாவில் பஞ்ச ஈஸ்வரத் தலங்களைத் தரிசித்து வருகிறோம். முதலில் ராமபிரான் வழிபட்ட முன்னேஸ்வரம் முன்னை நாத ஈஸ்வரரை வழிபட்டோம். தொடர்ந்து அடுத்தடுத்த ஈஸ்வரத் தலங்களை தரிசிக்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, கந்த சஷ்டிப் பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் கோயில் ஒன்றினை தரிசிப்பது சிறப்பல்லவா?

வாருங்கள்... இலங்கையின் புகழ்பெற்ற முருகப்பெருமானின் ஆலயமான கதிர்காமத்தைத் தரிசிக்கலாம்.

நம் ஊரில் தெரிந்தோ தெரியாமலோ கண்டிக் கதிர்காமக் கந்தன் என்று பலர் சொல்லி வருகிறார்கள். உண்மையில் கண்டிக்கும் கதிர்காமத்துக்கும் இடையே 200 கி.மீ தொலைவு. இரண்டுக்கும் இடையே முருகப்பெருமானைத் தொடர்புபடுத்தும் செய்திகள் ஏதும் இல்லை.

சிங்களவர்கள் இந்த ஊரை ‘கதரகாம’ என்று அழைக்கிறார்கள். இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகாவம்சம் நூலில், இந்தக் கிராமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இங்கு நடைபெற்ற மகாபோதித் திருவிழாவில் பங்கேற்க, பேரரசர் அசோகனின் மகள் சங்கமித்தை வந்ததாகக் குறிப்பு உள்ளது.

`இந்த ஊரின் ஆதிப் பெயர் கார்த்திகேயன் கிராமம்’ என்கிறார்கள். பாலி மொழியில் இதற்கு ‘கசரகாமம்’ என்று பொருள். அதுவே மருவிக் கதிர்காமம் ஆயிற்று என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இதை அனைத்து அறிஞர்களும் ஏற்கவில்லை. சிங்களத்தில் ‘கசரகாமம்’ என்பதற்குப் ‘பாலைவனத்திலுள்ள கிராமம்’ என்று பொருள். வறண்ட பகுதியாக இந்த இடம் திகழ்ந்தது என்பதால், அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

கதிர்காமம் முருகன் கோயில்
கதிர்காமம் முருகன் கோயில்ஆனால் உண்மையில் கதிர்காமத்தில் மணல்வெளிகள் காணப் படுகின்றனவே தவிர, அது வளம் குறைந்த பூமி என்று சொல்ல இயலாது. கதிர்காமத்தைச் சுற்றிலும் வனப்பகுதிகள் அடர்ந் துள்ளன. எனவே பாலைவனக் கிராமம் என்னும் பொருளில் அது அழைக்கப்பட்டிருக்குமா என்பது ஆய்வுக்குரியது.

தமிழில் ‘கதிர்’ என்றால் ‘ஒளி.’ ஒளிபொருந்திய கிராமமே கதிர்காமம். முருகப்பெருமான் கதிர் எனப்படும் தீப்பொறியில் இருந்து தோன்றியவன். என்றாலும் அவன் முகம் காமனின் திருமுகத்தைவிடப் பொலிவு வாய்ந்தது. எனவே இங்குள்ள முருகனுக்கு, ‘கதிர்காமன்’ என்னும் திருப்பெயர் ஏற்பட்டது. அதுவே கிராமத்தின் பெயராகவும் விளங்கியது என்கிறார்கள் பக்தர்கள்.

‘வனமுறை வேடர் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடை யோனே’ என்று பாடும் அருணகிரிநாதர், ஈழ நாட்டின் வளத்தையும் கதிர்காமத்தின் சிறப்பினையும் பாடுகிறார். இந்த ஊர் வயலூருக்கு இணையான திருத்தலம் என்கிறார்.

கதிர்காமம் முருகன் கோயில்
கதிர்காமம் முருகன் கோயில்`கரிய குரங்குக் கூட்டம், பலாமரத்தின் மீது தாவி, சுளைகளோடு கூடிய பழங்களைக் கிழித்து உண்டு, ஒன்றுடன் ஒன்று போர் புரிந்து, வாழை, மா ஆகிய சோலைகளில் நடமாடுகின்ற ஈழத்தினில் சிறப்புற்று விளங்கும், கதிர்காம கிரிப் பெருமாளே’ என்கிறார். இப்படிப் பல திருப்புகழ்களில் கதிர்காமத்தின் நிலவளத்தையும் நீர்வளத்தையும் போற்றுகிறார் அருணகிரிநாதர்!

இங்குள்ள மலையில் வாழும் வேடுவர்கள் குலத்தில்தான் வள்ளியம்மை அவதரித்தார் என்றும் அவரை முருகப்பெருமான் தேடிவந்து காதல் செய்து கைபிடித்தார் என்றும் இக்கோயிலின் தல புராணம் கூறுகிறது. இங்கே முருகன் வள்ளியைக் கண்ட இடம், கணநாதர் யானை வடிவாக வந்து வள்ளியைப் பயமுறுத்திய இடம், முருகப்பெருமானும் வள்ளியும் மலைமீது ஏகாந்தமாக இருந்த இடம் என்று பல இடங்களைச் சான்று காட்டுகிறார்கள் இலங்கை வாழ் மக்கள்.

பிற வழிபாட்டுத் தலங்களுக்கும் கதிர்காமத்துக்கும் ஒரு வேற்றுமை உண்டு. அது பேதம் இன்றி அனைத்து மதத்தினரும் வந்து முருகனை வழிபடுவது. இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் இருந்து கதிர்காமம் முருகன் கோயிலுக்கு பௌத்தர்கள் வருகிறார்கள். முருகப்பெருமானிடம் தம் வேண்டுதலை வைத்துச் செல்கிறார்கள். அது நிறைவேறியதும் மீண்டும் வந்து காணிக்கைகள் செலுத்தி வழிபாடு செய்கிறார்கள். திருவிழாக் காலங்களில் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வரும் பக்தர்களில் பலர் பௌத்தர்களாக இருப்பார்கள் என்பதுதான் சிறப்பு.

கதிர்காமம் முருகன் கோயில்
கதிர்காமம் முருகன் கோயில்ஆதியில் இந்தப் பகுதி பெரும் வனமாக இருந்தது. அங்கு வசித்த வேடர்களே முருகப் பெருமானுக்குச் சிறு கோயில் எழுப்பி வழிபாடும் செய்தனர். வேடர்கள் இந்த இறைவனை, ‘ஓ வேதா’ அல்லது ‘ஓய வேதா’ என்று சொல்லிப் போற்றினர்.

பின்னர் இந்தத் தலத்தின் மகிமைகள் அறிந்து ஞானியரும் சித்தர்களும் இன்னும் பலரும் வந்து தொழத் தொடங்கினர்.

‘துட்டகமுனு’ என்ற சிங்கள மன்னனுக்கும் ‘எல்லாளன்’ என்ற வலிமை மிகுந்த தமிழ் மன்னனுக்கும் இடையே போர் நடந்தது. அந்தப் போரில் ஈடுபடுவதற்கு முன்பாக துட்டகமுனு இந்த ஆலயம் வந்து முருகப்பெருமானை வணங்கிச் சென்றான். முருகப்பெருமானின் அருளால் எல்லாளனை வென்றான். அந்த வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தத் தலத்துக்கு மீண்டும் வந்து துட்டகமுனு வழிபாடு செய்து முருகப் பெருமானுக்கு ஒரு கோயிலையும் கட்டினான். அந்தக் கோயிலில் பூஜை செய்யும் உரிமை இன்றுவரை வேடுவர்களுக்கு மட்டுமே. இன்றும் அவர் களின் சந்ததியினரே கோயிலில் பூஜைகள் செய்கிறார்கள்.

இலங்கைக் கோயில்களைப் பற்றிப் பேசும்போது போர்ச்சுக் கீசிர்யர்களின் படையெடுப்பையும் அவர்கள் ஆலயங்களை அழித்து அவற்றின் செல்வத்தைக் கொள்ளையிட்டதையும் நினைக்காமல் இருக்க முடியாது. அப்படி அவர்கள் வந்த காலத்தில் கதிர்காமம் பெரும் புகழோடு விளங்கியது.

ஆனால் அவர்களால் கதிர்காமத்தை நெருங்க முடியவில்லை. காரணம் கதிர்காமத் துக்குள் செல்ல அந்தக் காலத்தில் பெரும் காட்டைக் கடக்க வேண்டும்.

கதிர்காமம் முருகன் கோயில்
கதிர்காமம் முருகன் கோயில்இங்ஙனம் கொடிய மிருகங்களும் விஷப் பாம்புகளும் வாழ்ந்த காட்டைக் கடப்பதை அவர்கள் வெறுத்தார்கள். மேலும் அதற்கு உரிய வழியைக்காட்ட உள்ளூரில் யாரும் தயாராக இல்லை. எனவே அவர்கள் கதிர்காமத்தை ஆக்கிரமிக்கும் எண்ணைத் தைக் கைவிட்டனர்.

அந்தப் பகுதியை ஆண்ட மன்னர்களில் தெலுங்கு பேசும் வம்சத்தவரும் இருந்தனர். அவர்களின் கடைசி மன்னன், ‘கண்ணுசாமி’ என்ற ‘விக்கிரம ராஜசிங்க.’ அவர் இந்தப் பகுதி தமிழர்கள் பண்பாட்டோடு நெருங்கி விளங்கியமையைக் கண்டு அவர்களுக்கு என்று அதைக் கொடுத்தார் என்கிறார்கள்.

அந்தக் காலத்தில் கதிர்காமம் தமிழர்களின் நிலமாக விளங்கியது. ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. என்றாலும் கதிர்காம முருகன் மட்டும் பழம்பெருமையோடும் பக்தர்களுக்கருளும் கருணையோடும் அங்கே கோயில்கொண்டிருக்கிறார். அதனால்தான் அனைத்து மக்களும் அங்கே நாடி வந்து வழிபாடு செய்கிறார்கள்.

இந்தக் கோயிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒன்று அருவ வழிபாடு. சிதம்பர ரகசியம் போலவே ஆச்சர்ய மூட்டுவது கதிர்காம ரகசியம்.

இந்தத் தலத் தில் கருவறையில் மூலவருக்கு விக்ரகமும் இல்லை வேலும் இல்லை. மாறாக ஒரு திரையே காணப்படுகிறது. அந்தத் திரையில் முருகப்பெருமான் மயிலோடு எழுந்த ருளியிருக்கும் திருக்கோலம் காணப் படுகிறது.

இந்தத் திரைக்குப் பின்னே என்ன இருக்கிறது? கதிர்காமம் முருகன் கோயில் தரிசனம் எப்படிப்பட்டது? கதிர்காமத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் பாதையாத்திரையின் சிறப்பு என்ன... அடுத்த அத்தியாயத்தில் காண்போம்!

- உலா தொடரும்...