Published:Updated:

ஆடல் அற்புதங்கள்!

நடராஜப் பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
நடராஜப் பெருமான்

நடராஜ திருத்தலங்கள்

ஓவியங்கள்: ம.செ

டராஜப் பெருமானின் திருக்கூத்தால் இந்தப் பேரண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் ஓயாது அசைவு இருந்து கொண்டே இருக்கிறது. ஆம்... அவன் ஆடி அசைவதால்தான் அண்டம் தடையின்றி இயங்குகிறது. இதையே திருமூலர் இப்படிப் பாடுகிறார்.

எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி

எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்

எங்கும் சிவனருள் அருள் விளையாட்டு.

அண்டபகிரண்டத்தின் ஒவ்வொரு துகளிலும் ஆனந்தக்கூத்தனின் நடனம் நடந்து கொண்டே இருக்கிறது. ஆகவே, அவை அனைத்தும் சிதம்பரமே. எனவேதான் எங்கும் சிதம்பரம் எனப்போற்றுகிறார் திருமூலர்.

சிதம்பரத்துக்கும் ஆடல்வல்லானுக்கும் மிக உகந்த நாள்களில் ஒன்று ஆனி உத்திர தரிசனம். வரும் 28.6.2020 அன்று ஆனி உத்திர தரிசனத் திருநாள். இந்த வைபவத்தை முன்னிட்டு ஆடல்வல்லான் குறித்த சில அற்புதங்களைத் தெரிந்துகொள்வோமா.

ஆடல் அற்புதங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`கோயில்’ என்று சைவர்களால் போற்றப் படும் தலம்; தில்லைமூதூர் என்று ஞானநூல்கள் சிறப்பிக்கும் பதி சிதம்பரம். சிவப்பரம்பொருள் தன் இதய ஸ்தானமாக சிதம்பரத்தைத் தோற்று வித்ததாம். இத்தலத்தை தரிசித்தாலே முக்தி என்கின்றன புராணங்கள்.

அற்புதமான இந்தத் தலத்தில் நடராஜர் தரிசனமும், சிதம்பர ரகசிய ஸ்தான தரிசனமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேபோல் பக்தர்கள் அறியவேண்டிய வேறு சில சிறப்புகளும் உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அழகிய திருச்சிற்றம்பலம் உடையார்!

நடராஜப் பெருமானின் பீடத்தில் இரண்டு சிறிய பெட்டகங்கள் உள்ளன. ஒன்றில் ஸ்படிக லிங்கத் திருமேனியரும் மற்றதில் மாணிக்கக் கூத்தரான ரத்தின சபாபதியும் அருள்கிறார்கள்.

தில்லை சிற்றம்பலவாணருக்குரிய அபிஷேக விடங்கராகத் திகழ்வது, ஸ்படிக லிங்க மூர்த்தி. இவருக்கு அழகிய திருச்சிற்றம்பலம் உடையார் என்று திருப்பெயர்.

நாள்தோறும் கனக சபையில் அமைந்துள்ள வெள்ளியாலான வேதிகையில் வைத்து ஆறு காலத்திலும் இவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நிகழும்.

பூஜையில் அன்னாபிஷேகமும் உண்டு. அபிஷேகம் முடிந்ததும் தங்கக் கவசம் சார்த்தி பெட்டகத்தில் வைத்து, நடராஜர் எழுந்தருளும் பிரணவ பீடத்தில் வைக்கின்றனர்.

தில்லைவாழ் தீட்சிதர்கள், தமக்கு ஆத்மார்த்த மூர்த்தியை அருளும்படி வேண்டியபோது, நடராஜப் பெருமான் தன் சடாமண்டலத்தில் இருக்கும் பிறைச்சந்திரனின் அமுதத் துளிகளையும் கங்கை நீரையும் திரட்டி லிங்கமாக்கிக் கொடுத்தாராம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணிக்கக் கூத்தர் எழுந்தருளிய திருக்கதை!

ஆதியில் தில்லைச் சிற்றம்பலம் வெளிப்படுவதற்கு முன்னதாக, ஆலமரத்தின் கீழிருந்த மூலட்டானரையும், ரகசிய ஸ்தானத்தையும் தில்லை மூவாயிரவர்கள் பூஜித்து வந்தனர்.

அப்போது, வடக்கே அந்தர்வேதி என்னுமிடத்தில் பிரம்மா ஒரு யாகம் செய்ய முற்பட்டார். அதன் அவிர்பாகம் பெற்றுக் கொள்வதற்காக தேவர்களையும், யாகத்தைச் செய்விக்க தில்லைவாழ் அந்தணர்களையும் அழைக்க விரும்பினார்.

ஆனால் தீட்சிதர்கள், ‘`நடராஜரை பூஜிப்பதை விட்டு நாங்கள் வர முடியாது. தவிர, தாங்கள் யாகம் செய்யும் இடம் வெகுதொலைவில் உள்ளது’’ என்றார்கள்.

உடனே வியாக்ரபாதரையும் பதஞ்சலியையும் அணுகிய பிரம்மா, ‘`இந்த யாகத்துக்கு தீட்சிதர்களையும் அவசியம் வரவழைக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

எனவே, அவர்கள் இருவரும் தீட்சிதர்களிடம் சென்று, ‘`நீங்கள் யாகத்துக்குப் போய்த் திரும்பி வரும்வரையில், நாங்கள் பெருமானை பூஜிக்கிறோம்’’ என்று உறுதியளித்தனர்.

அதற்குச் சம்மதித்த தீட்சிதர்கள் யாகத்துக்குச் சென்றார்கள். எனினும், ‘நடராஜ மூர்த்தியை தரிசிக்க முடியவில்லையே’ என்று அவர்கள் மனம் வருந்தினர். அவர்களது வருத்தத்தைப் போக்க எண்ணிய ஶ்ரீநடராஜர், யாக குண்டத்தில் ஒளி வடிவில் தோன்றினார். தங்கள் மனம் விரும்பி எண்ணிய வடிவத்தை யாக குண்டத்தில் தரிசித்த தீட்சிதர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

யாகத்தையும் குறைவின்றி முடித்தனர். சிதம்பரம் திரும்பும்போது யாகத்தின் மூலம் கிடைத்த நடராஜப் பெருமானுடன் வந்து சேர்ந்தனர்.

அந்த நடராஜ மூர்த்திதான் மாணிக்கக் கூத்தர். தினமும் காலையில் நடைபெறும் இரண்டாம்கால பூஜையின்போது இவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

இனி, நடராஜரின் ஆடல் கோல அழகையும் தத்துவத்தையும் தரிசிப்போம்.

ஆடல்கோல அற்புதங்கள்!

நடராஜரின் திருமுகம் : இறைவனின் தலைமை நிலையையும், எல்லையில்லா அழகையும் உணர்த்துகிறது.

சிவந்த சடை: சிவ நெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பைக் குறிக்கிறது.

தலையில் இருக்கும் கங்கை: இறைவனின் பேராற்றலையும், ஆணவத்தை அழித்து ஆளும் வித்தகத்தையும் விளக்குகிறது.

தலையில் சூடிய பிறை: தன்னைச் சரண் அடைந்தவர் களைத் தாங்கிப் பாதுகாக்கும் வள்ளல் என்று அறிவிக்கிறது.

வளைந்த புருவம்: தன்னிடம் வந்து குறை சொல்லி முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தைக் காட்டுகிறது.

குமிண் சிரிப்பு: தன்னிடம் அடைக்கலம் கேட்டு வருபவர்களை அருளுடன் வரவேற்று, அவர்களது பிழைகளை மன்னித்து, வாழ்வளித்து மகிழ்ச்சி உண்டாக்குகிறது.

பவழ மேனி: நெருப்பு போன்றவன். நெருப்பு, தன்னிடம் வரும் பொருள்களை எல்லாம் தூய்மைப்படுத்தி புனிதமாக்கும். அதேபோல் தன்னிடம் அன்பு செய்பவர்களின் மாசுகளை அகற்றித் தூய்மையாக்கி இறைவன் அருள்புரிவான்.

பால் வெண் நீறு: எல்லாப் பொருள்களும் அழிந்து, இறுதியில் நீறு ஆகும். நீறு மற்றொன்றாக மாறி அழியாது. அதனால் திருநீறு அழிவிலாத் தன்மையும், தூய இயல்பையும் காட்டும்.

நெற்றிக்கண்: பெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.

நீலகண்டம் (கழுத்து): தான் நஞ்சு உண்டு விண்ணோர்க்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த பெருந்தகையாவார் சிவனார்.

உடுக்கை: படைக்கும் தொழிலை உணர்த்துகிறது.

நெருப்பு: உலக உயிர்களைப் படைத்த இறைவன், அவை பிறந்தும், இறந்தும் வரும் துயரைப் போக்கும் பொருட்டு நிகழ்த்தும் `அழித்தல்’ தொழிலுக்கு அடையாளம்.

அபய கரம்: ‘நீவிர் அஞ்சற்க. யாம் உம்மைக் காக்கிறோம்’ எனத் தன் அடியவர்களைத் தேற்றும் நிலை. காத்தல் தொழிலைக் காட்டும்.

வீசிய கரம்: இந்த இடக்கை யானையின் துதிக்கை போல் நீண்டு திகழ்வதால் ‘கஜஹஸ்தம்’ எனப்படும். இந்தக் கையின் ஒரு விரல் தூக்கிய திருவடியைக் காட்டிக்கொண்டிருக்கும்.

எடுத்த திருவடி: பிறவிக் கடலில் விழுந்து தத்தளிக்கும் உயிர்களை மீட்டுக் காப்பாற்றும் இது, `அருளல்’ தொழிலைக் குறிக்கும்.

ஊன்றிய திருவடி: இறைவனின் வலக்கால். முயலகனை மிதித்து, அடக்கி, அவன்மீது ஊன்றிய நிலையில் அமைந்திருக்கும்.

இது, ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவிதமான தீமைகளை முழுவதாக அழித்துவிடாமலும், அவற்றால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகரச் செய்ய, இறைவன் இயற்றும் `மறைத்தல்’ தொழிலைக் குறிக்கும்.

முயலகன்: முயலகன் ஆணவத்துக்கு அறிகுறி. ஆணவம் என்றும் அழிவதில்லை. அது போலவே முயலகனும், இறைவன் திருவடிக் கீழ் என்றும் விளங்குகிறான். முக்தி நிலையில் உயிர்களின்பால் ஆணவம் அடங்கிக் கிடப்பது போல, முயலகன் கிடக்கிறான்.

தெற்கு நோக்குதல்: எல்லாத் திருக்கோயில் களிலும் நடராஜப் பெருமான் தெற்கு நோக்கியே அமைக்கப்பட்டிருப்பார்.

வழி படும் அடியவர்கட்குத் தெற்கே இருந்து வரும் யமராஜனால் யாதொரு துன்பமும் நேராமல் காத்தற் பொருட்டே தெற்கு நோக்கி ஆடுகிறான் என்பார்கள்.

இப்படியான ஆடல் கோலத்தைத் தரிசிக்கும் பேறு கிடைத்தால், `மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று பாடுகிறார், வாகீசர். நாமும் ஆடல்வல்லானின் பாதம் பணிந்து போற்றுவோம்!

தொகுப்பு: என். மணிமேகலை

பேரூர்

ஆடல் அற்புதங்கள்!

கோயம்புத்தூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் (சிறுவாணி பிரதான சாலையில்) உள்ளது பேரூர். இங்குள்ள ஶ்ரீபட்டீஸ்வரர் ஆலயம் பிரசித்திபெற்றது. இங்கே, கோயிலுக்கு தெற்குப் பகுதியில் (தென் கயிலாயம்) மகாவிஷ்ணுவும், வடக்குப் பகுதியில் (வட கயிலாயம்) பிரம்மனும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தைக் காணும் பேறு பெற்றனராம்.

திருவாசி

ஆடல் அற்புதங்கள்!

திருச்சி - குணசீலம் சாலையில் நொச்சியத்தை அடுத்துள்ளது திருவாசி. சிவனார், மண்ணை பொன்னாக்கி சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அருளிய தலம் இது. இங்கே அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் ஆலயத்தில் திருவடியில் சர்ப்பத்துடன், தனிச் சந்நிதியில் அருள்கிறார் ஶ்ரீநடராஜர்.

செப்பறை

ஆடல் அற்புதங்கள்!

திருநெல்வேலியிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ளது ராஜவல்லிபுரம். இங்கே தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோயில். கருவறையில் முக்கண், நான்கு கரங்களுடன், பிறைசூடிய பெருமானாகக் காட்சி தருகிறார் அழகிய கூத்தர். இங்கே, தவிடு மற்றும் கருப்பட்டியைச் சமர்ப்பித்து, ‘இனி இது உன் குழந்தை’ என்று பிரார்த்தித்தால், குழந்தைகளுக்கு தோஷம் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.

மதுரை

ஆடல் அற்புதங்கள்!

நடராஜ பெருமானின் ஐந்து சபைகளில் ரஜத சபையாக... அதாவது, வெள்ளி அம்பலமாகத் திகழ்வது மதுரை- ஶ்ரீமீனாட்சியம்மன் திருக்கோயில். இங்கே அருள்புரியும் அம்பலவாணன் கால் மாற்றி ஆடுவது, இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம். பாண்டிய மன்னன் ராஜசேகரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவனார் இங்கே இடக்காலை ஊன்றி; வலக்காலை உயர்த்தி, கால் மாற்றி நடனக்கோலம் காட்டினாராம்!