Published:Updated:

குருவே சரணம்; கைமேல் பலன் கொடுக்கும் குருபூர்ணிமா வழிபாடு கடைப்பிடிப்பது எப்படி?

மகாபெரியவர் - குருவே சரணம்

குருநாதரை ஒருவன் கண்டடைந்துவிட்டால் பிறவிப் பெருங்கடலைக் கடப்பதோடு வாழும் வாழ்விலும் துன்பம் இன்றி இன்பமாக வாழலாம்.

குருவே சரணம்; கைமேல் பலன் கொடுக்கும் குருபூர்ணிமா வழிபாடு கடைப்பிடிப்பது எப்படி?

குருநாதரை ஒருவன் கண்டடைந்துவிட்டால் பிறவிப் பெருங்கடலைக் கடப்பதோடு வாழும் வாழ்விலும் துன்பம் இன்றி இன்பமாக வாழலாம்.

Published:Updated:
மகாபெரியவர் - குருவே சரணம்
ஆனி மாதப் பௌர்ணமி குருபூர்ணிமாவாக வழிபடப்படுகிறது. இந்த நாள் குருவழிபாட்டுக்கு ஏற்ற நாள். குருவருளே திருவருள் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவழிபாடு எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று குருவழிபாடும் முக்கியம். குருவே நம் துயர் நீக்குபவர். நம் குற்றங்களை அறிந்து மன்னித்து ஏற்று இறையருள் நோக்கி நடத்துபவர். தகுதியில்லாத நம்மைத் தகுதிப் படுத்துபவர்.

குழந்தையைத் தகப்பன் எப்படிக் கைபற்றி அழைத்துச் செல்வானோ அதேபோன்று கனிவோடு வழிநடத்துகிறவர். நல்லாசிரியனாக உடன் இருந்து பாடம் நடத்துபவர். அப்படிப் பட்ட குருநாதரை ஒருவன் கண்டடைந்துவிட்டால் பிறவிப் பெருங்கடலைக் கடப்பதோடு வாழும் வாழ்விலும் துன்பம் இன்றி இன்பமாக வாழலாம்.

ரமணர்
ரமணர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்வினை நீக்கும் குருநாதன் தரிசனம்

துன்பங்களுக்குக் காரணம் நம் முன்வினைப் பயன்களே என்பது நம்பிக்கை. துன்பங்கள் அனைத்தும் குருவருளால் விலகும் என்பார்கள். பொதுவாக வினைகளை அழிக்கமுடியாது. அதை அனுபவித்துதான் கடக்க வேண்டும் என்பது விதி. அப்படியிருக்க நம் முன்வினைகளை குருநாதன் அழித்துவிடுவாரா என்று கேட்பவர்கள் உண்டு. அவர்களுக்கு ஞானிகள் சொல்லும் பதில் அற்புதமானது.

ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான ஐந்து ரூபாய் நாணயங்களை மூட்டை கட்டிச் சுமந்து அலைகிறார் என்றால் அது நிச்சயம் சுமக்க சிரமமான விஷயம் தான். ஆனால் அவரே அந்த மூட்டையை ஒரு வங்கிக்குக் கொண்டு சென்று அந்த சில்லரைகளைக் கொடுத்துவிட்டு அதற்கு இணையாக இரண்டு இரண்டாயிரம் ரூபாய் தாள்களையும் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களையும் பெற்று வருகிறார் என்றால் அதைச் சுமப்பது கடினமா?

இப்போது என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது? கைவசமிருக்கும் பணத்தின் மதிப்பு குறையவில்லை. ஆனால் எடை குறைந்து சுமப்பது எளிதாகிவிட்டது. இந்த மாயத்தைச் செய்தது வங்கி. பொருள் சேர்ந்து கிடக்கும் வங்கிகளைப் போன்றவர்கள்தான் அருள் நிறைந்த குருபீடங்களும். அவர்கள் நம் வினைப்பயன்களை ஏற்றுக்கொண்டு எளிமையாக்கி நமக்கு அருளைத் திருப்பித் தருவார்கள். இப்படி வாழும்போதும் வாழ்க்கைக்குப் பின்னும் நமக்கு அருள் வழங்கும் குருமார்கள் இந்த மண்ணில் அநேகர். அவர்களின் சிலரை இந்த குருபூர்ணிமா நாளில் தியானிப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அருள்மழை பொழிந்த காஞ்சி மகான்

ஒருமுறை மகா பெரியவர் ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு கிராமம். மழையின்றிக் கடுமையான வறட்சி. பெரியவர் என்ன நினைத்தாரோ, அன்றைக்கு அங்கேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்தார். உடன் வந்தவர்களுக்கோ பூஜைகளுக்கும் அனுஷ்டானத்துக்கும் கூடத் தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால் பெரியவா பேச்சுக்கு மறுபேச்சு ஏது?

அந்த ஊரில் குளிப்பதற்கு இருப்பதோ ஒரே குளம். அதுவும் கோடையில் வறண்டு குட்டைபோல் மாறிவிடும். ஊர்க்காரர்கள் ‘அந்தக் குளத்து நீர் உப்புக்கரிக்கும். வேண்டுமானால் பக்கத்து கிராமத்திலிருந்து நீர் கொண்டுவந்து தருகிறோம்’ என்று வேண்டினார்கள். ஆனால் பெரியவா புன்னகையோடு மறுத்துவிட்டு அந்த உப்பு நீரிலேயே நீராடி அனுஷ்டானங்களை முடித்தார். அந்த நாளுக்கான பூஜைகள் முடிந்ததும் அந்தக் கிராமத்திலிருந்து புறப்பட்டார் மகாபெரியவர்.

சில தினங்கள் கழித்து அந்த கிராமத்திலிருந்து சிலர் பெரியவரை தரிசனம் செய்ய வந்தனர். அவர் பாதங்களைப் பணிந்துகொண்ட பின் அந்த அற்புதச் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். மகாபெரியவர் நீராடிச் சென்ற ஓரிரு நாள்களில் பெரும் மழை பெய்து ஏரி குளங்கள் எல்லாம் நிரம்பிவிட்டன என்றும் அதுநாள்வரை உப்புக்கரித்த குளத்து நீரின் சுவை முற்றிலும் மாறி கல்கண்டுபோல் மாறிவிட்டது என்று சொல்லி கண்ணீர் மல்க அவரை வணங்கினர்.

உப்பான நீர் மட்டுமல்ல உவர்ப்பான வாழ்க்கையும் குருவின் அருள் இருந்தால் இனிப்பாக மாறிவிடும்.

சாயிபாபா
சாயிபாபா

ரமணர்

`நான் என்பது உடல் அல்ல' என்பதை சிறுவயதிலேயே உணர்ந்த மகான் ரமணர், வாழும் காலத்தில் எளிமையையே தன் வாழ்வாகக் கொண்டு வாழ்ந்த மகான். இவரின் நயன தீட்சையால் அருளுபதேசம் பெற்றவர்கள் அநேகர். அவர் தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம்.

ஒருமுறை ரமணர் விருபாஷிக் குகையில் தங்கியிருந்தபோது பக்தர்கள் அநேகர் ரமணரை தரிசிக்க வந்திருந்தனர். அப்போது திடீரென மழை பிடித்துக்கொண்டது. மழை விடாமல் பெய்ய பக்தர்கள் மலையிலிருந்து இறங்கிச் செல்ல வழியின்றித் தவித்தனர். இருட்டிவிட்டது. அனைவருக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு அங்கே இல்லை. பகவானின் அடியவர்களுக்கு தர்மசங்கடமான நிலை. அப்போது பகவான் ரமணர், அனைவருக்கும் உணவு தருமாறு கூறுகிறார்.

வேறு வழியின்றி அடியவர் இருந்த உணவை சிறு சிறு உருண்டையாக உருட்டி பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்போல வழங்கினார். என்ன அதிசயம்... சற்று நேரத்தில் அனைவருக்கும் பெரு விருந்து உண்டு வயிறு நிறைந்து விட்ட உணர்வு. மழை விட்டதும் அனைவருக்கும் அதிகாலையில் மலையிலிருந்து இறங்கி வீடுபோய்ச் சேரும்வரை பசி ஏற்படவில்லை. இது அந்த மகானின் அற்புதம் அன்றி வேறு என்ன?

சாயி சரணம்

பாபா புரிந்த அற்புதங்கள் ஏராளம். அப்படி ஒரு அற்புதம் தான் அவர் மலன்பாயைக் காப்பாற்றியது. மலன்பாய், பாபாவின் பக்தரான ஜோஷி தேவ்காங்கரின் மகள். காச நோய்கண்ட அவளுக்கு எத்தனையோ மருத்துவம் செய்தும் பலனில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளை, பாபாவிடம் அழைத்து வந்தனர்.

பாபா , ''கவலை வேண்டாம்.அவளுக்கு ஒன்றும் நேராது. அவளை வாடாவுக்கு (பக்தர்கள் தங்கும் இடம்) அழைத்துச் சென்று, ஒரு கம்பளியின்மேல் படுக்க வையுங்கள். தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுங்கள்'' என்று கூறினார் பாபா. பாபாவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு, அவர்களும் அப்படியே செய்தனர். ஒருவாரம் சென்றது. அந்தப் பெண் நோய் முற்றி உயிர் துறந்தார்.

அன்றைக்கு, காலை 8 மணி ஆகியும் பாபா சாவடியில் இருந்து திரும்பவில்லை. சாவடிக்கு வெளியில் நின்றுகொண்டு, தன் கையில் இருந்த தடியால் தரையை அடித்துக் கொண்டும், கடுமையான சொற்களால் திட்டிக்கொண்டும் இருந்தார்.

அதேநேரம், வாடாவில் இறந்து விட்ட மலன்பாய் மூச்சு விட்டபடி, மெள்ளக் கண் விழித்தாள். அப்போதுதான் சாவடியில் இருந்து புறப்பட்ட பாபா, தடியைத் தரையில் தட்டிக் கொண்டும் கடுமையாகத் திட்டிக் கொண்டும், வாடா வழியாக துவாரகா மாயிக்குத் திரும்பினார்.

கண் விழித்த மலன்பாய், ''நான் கறுத்த மனிதன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டேன். பயந்து போன நான் பாபாவிடம், 'என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினேன். உடனே, கையில் தடியுடன் வந்த பாபா, அந்த மனிதனின் பிடியில் இருந்து என்னைக் காப்பாற்றி, சாவடிக்குத் தூக்கிச் சென்றார்” என்றாள்.

பாபா மலன்பாயை யமனிடமிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இப்படி சாயி இன்றும் தம் பக்தர்கள் வாழ்வில் அருள் செய்துகொண்டிருக்கிறார்.

குறைகள் தீர்க்கும் குருபூர்ணிமா

குருபூர்ணிமா குருவருளை நமக்குப் பெற்றுத்தரும் அற்புதமான தினம். இந்த நாளில் வியாசபூஜை செய்தால் குருவருளைப் பெறலாம் என்பார்கள் ஆன்றோர்கள். வியாஸர் அந்த ஸ்ரீமந் நாராயணனின் அவதாரம் என்பதால் அவரே வேதங்களையும் புராணங்களையும் நமக்குத் தொகுத்துத் தந்தவர்.

எனவே வியாஸ பகவானை இன்று வணங்கினால் சகல விதமான ஞானமும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் நாம் நம் மனதை ஆட்கொண்ட குருவை நினைத்து வழிபட வேண்டியதும் அவசியம்.

இன்று நம்மை ஆட்கொண்ட குருவின் படம் அல்லது விக்ரகத்துக்கு மலர் சாத்தி வழிபட வேண்டும். குரு ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து இருக்கும் உணவை நிவேதனம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

வாய்ப்பிருப்பவர்கள் அருகில் இருக்கும் சித்தர் பீடங்கள் அல்லது ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. இன்று ஜீவசமாதிகளை வழிபாடு செய்தால் வாழ்வில் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

குருவின் நாமத்தைச் சொல்லி இன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மிகவும் விசேஷம். அவ்வாறு செய்தால் நம் பாவங்கள் தீர்ந்து புண்ணிய பலன்கள் உண்டாகும்.

மறக்காமல் இன்றைய நாள் முழுவதும் குருவின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள். உங்கள் வாழ்வை குருவருள் மாற்றும்.