Published:Updated:

சிந்தையை அள்ளும் சிந்தாமணிக் குறவஞ்சி

மு.அரி - ஓவியம்: ம.செ

பிரீமியம் ஸ்டோரி
திகாலம் முதல் இன்று வரையிலும் ஆன்மிக உலகில் இறைவனின் இருப்பு, அண்டத்தின் படைப்பு, இறந்தபின் ஆன்மாவின் நிலை என்ன என்று பல்வேறு கேள்விகள் எழுந்தபடியே உள்ளன.
சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம்

ஆன்மிகம் என்பது அறிவால் உணரவேண்டிய விஷயம் அல்ல; அனுபவத்தால் அறிவது; ஆன்மாவால் உணரவேண்டிய மலர்ச்சி அது என்று எத்தனையோ மகான்களும் சித்தர்களும் கூறி வழிகாட்டியுள்ளனர். இதுகுறித்து திருமூலரும் மாணிக்கவாசகரும் அருளியுள்ள அற்புதமான பல நுண்ணிய விளக்கங்கள் யாவும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்!

இங்ஙனம் முன்னோர்கள் அருளிய ஞான படைப்புகளின் வரிசையில், தமிழ் இலக்கியத்தின் சிறப்பு வடிவமான குறவஞ்சி வகை நூல்களில் ஒன்று, ஆழமான ஆன்மிகத் தத்துவங்களை விளக்கும் சைவ சித்தாந்த நூலாக விளங்கி வருகிறது. இன்னும் சுவடி வடிவிலேயே திகழும் அந்த நூலின் திருப்பெயர் சிந்தாமணிக் குறவஞ்சி.

ஓலைச் சுவடி கிடைத்தது!

சமீபத்தில் ஆய்வு ஒன்றுக்காக காஞ்சி பகுதிக்குச் சென்றிருந்தபோது, அன்பர் ஒருவர் மூலம் ஓலைச்சுவடி ஒன்று கிடைத்தது. அதன் முதல் ஓலை தரும் தகவல் என்ன தெரியுமா?

`காஞ்சிபுரத்தை அடுத்துள்ள பிரம்மதேசத்தில் வாழ்ந்த சரவண முதலியார் என்பவர் பாமாலை வழங்கி பிரதியெடுக்கப்பட்ட சுவடி இது’ என்ற தகவலைச் சொல்கிறது.

இந்தச் சிந்தாமணிக் குறவஞ்சியின் ஆசிரியர் `தக்கலை பீர் முகம்மது’ என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி. இவருடைய காலம் 17-ம் நூற்றாண்டு என்றே பலராலும் நம்பப்படுகிறது. இவர் வாசி யோகம், அஷ்டமா சித்துகளில் தேர்ச்சி பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. சைவ சமயத்தின்பால் பெரும் பற்று கொண்டு, 14 சைவ சித்தாந்த நூல்களை எழுதியுள்ளார் இந்த ஞானி. அவற்றில் சிறப்பானது இந்தச் சிந்தாமணிக் குறவஞ்சி.

சிந்தாமணிக் குறவஞ்சி
சிந்தாமணிக் குறவஞ்சி

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, திருக்குற்றாலக் குறவஞ்சி, விராலிமலைக் குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி, நகுமலைக் குறவஞ்சி, நல்லைக் குறவஞ்சி, தமிழரசி குறவஞ்சி, துரோபதைக் குறவஞ்சி, நல்லைநகர்க் குறவஞ்சி, வண்ணைக் குறவஞ்சி, செந்தில் குறவஞ்சி, கும்பேசர் குறவஞ்சி, வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி, தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி எனக் குறவஞ்சி நூல்கள் பல உண்டு. இவற்றில் சிந்தாமணிக் குறவஞ்சி ஆழமானக் கருத்துக்களுடன் திகழ்கிறது.

தொல்காப்பியர் காலம் தொட்டே குறமகளிர் குறி சொல்லும் வழக்கம் இருந்ததை அறிய முடிகிறது. இருப்பினும் சிற்றிலக்கிய வகைகளில் மூத்ததான குறவஞ்சி வடிவத்திலான நூல்களின் தொடக்கம் எப்போது என்பதில் தெளிவில்லை. நம்மில் பெரும்பாலானோர் அறிந்த குறவஞ்சி நூல்களில், 18-ம் நூற்றாண்டில் தோன்றிய குற்றாலக் குறவஞ்சியே சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதேபோல், `மதுரை மீனாட்சியம்மை குறம்’ குமரகுருபரரால் 17-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதைவிடப் பழைமையானது சிந்தாமணிக் குறவஞ்சி எனும் ஞான ரத்தினக் குறவஞ்சி என்கிறது தமிழ் இலக்கிய உலகம்.

குறவஞ்சியின் அழகு!

குறமகள் எனும் குறிஞ்சி நிலத்து இளங்குமரி வஞ்சிக் கொடியைப்போல வளைந்து நெளிந்து ஒயிலாக ஆடியும் பாடியும் சொல்வது போன்ற வடிவம் என்பதால், குறவஞ்சி என்ற பெயர் கொண்டது என்பர் சிலர். `குறம்’ என்றால் சிற்றிலக்கியம். வஞ்சி போன்ற பெண்ணால் பாடப்படும் சிறிய பாடல்கள் என்பதால் இது குறவஞ்சி எனப்பட்டது எனச் சொல்வாரும் உண்டு. குறம் என்றால் குறி சொல்லுதல். அதனால் இவ்வகை நூல்கள் குறவஞ்சி எனப்பட்டன என்ற கருத்தும் ஒருசிலரால் முன்வைக்கப்படுகிறது.

குறவஞ்சியின் அழகே அதன் இசைக்கட்டும், சொல் நயங்களும்தான். இன்றுவரை பரத நாட்டிய மேடைகளில் திகழும் வெகு உற்சாகமான துள்ளாட்ட வகைகளில் குறவஞ்சியும் ஒன்று எனலாம்.

சித்தர் கலை ஆசான் 
மு.அரி
சித்தர் கலை ஆசான் மு.அரி

ஞானப் பொக்கிஷம்

பெரும்பாலும் குறவஞ்சி இலக்கியம், பாடப்படும் ஊரை தலைப்பாகக் கொண்டிருக்கும். சில மட்டுமே பாடும் பெண்ணின் பெயரைக் கொண்டும் தலைப்பைக் கொண்டிருக்கும். அதேபோல், பாட்டுடைத் தலைவன் உலா வருதல், உலாவைக் காணப் பெண்கள் வருதல், பாட்டுடைத் தலைவி பற்றிய வர்ணனை, தலைவனுக்குத் தலைவி தன் தோழியைத் தூது அனுப்புதல், குறமகள் வருகை, குறி சொல்லுதல், தலைவன் தலைவியைச் சேருவான் என்ற ஆறுதல், தலைவன் வருகை, வாழ்த்து அல்லது மங்களம் என்ற வரிசையில் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த இலக்கணத்துக்குள் அடங்காமல் தனித்து, ஞானக் கருத்துக்களை எளிமையாகச் சொல்வதாகத் திகழ்கிறது சிந்தாமணிக் குறவஞ்சி. வெறும் 62 பாடல்களில் (63-வது பாடல் எழுதிய ஆசிரியரைக் குறிப்பிடுகிறது) 124 வரிகளில் ஏராளமான தத்துவங்களை விளக்குகிறது இந்தக் குறவஞ்சி. இரண்டிரண்டு வரிகளில் கேள்வி பதிலாக அமைந்துள்ள இந்தக் குறவஞ்சி, சைவ சித்தாந்த உலகில் ஒரு ஞானப் பொக்கிஷம் என்றே கூறலாம்.

அறிவியலால் எளிதாக விளக்க முடியாத அண்டத்தின் தோற்றம், உயிரின் படைப்பு, ஆன்மாவின் தன்மை, தன்னை அறியும் ஆற்றல், ஐந்தெழுத்தின்; எட்டெழுத்தின் சிறப்புகள், முக்தி அடையும் விதம் என சைவ சித்தாந்தத்தின் அனைத்து விளக்கங்களையும் அளிக்கிறது இந்தக் குறவஞ்சி.

ஈசனும் சக்தியும்
ஈசனும் சக்தியும்

சிவனாரின் கேள்வி அம்மை அளிக்கும் பதில்கள்!

ஈசனும் சக்தியுமே சிங்கனும் சிங்கியுமாக மண்ணுலகில் தோன்றி, பின் வரும் காலத்தில் மானுட சமுதாயத்துக்கு உண்டாகப் போகும் பலாபலன்கள் குறித்து கேள்விகள் கேட்டு பதில் சொல்லும் வகையில் நூல் அமைந்துள்ளது. அதாவது சிங்கனான சிவனார் கேள்வி கேட்பார். அதற்கு ஆடலும் பாடலுமாக எளிய வகையில் விளக்கம் சொல்கிறாள் சிங்கியான சக்தி.

இருவருமே கைகளைக் கொட்டி சுழன்றாடும் விதமாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. வெறும் கேளிக்கையாக மட்டும் அமையாமல் பிறப்பு, இறப்பு, யோகம் குறித்த கேள்விகளையும் பதில்களையும் தருகிறது இந்த ஞான நூல்.

கேள்வி: `ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?’

பதில்: `அது - அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா!’


என்று தொடங்குகிறது இந்த இலக்கியம். வரிகளுக்கு முன்னதாக `கை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புக்கு `கைகளைத் தட்டி கேட்கிறார்’ என்று பொருள் கொள்ள வேண்டும்.

முதல் பாடலிலேயே அண்டத்தின் பிறப்பை விவரிக்கத் தொடங்குகிறது. அதிலிருந்து தொடங்கி, இறுதிப் பாடலாக ஆன்மாக்கள் எட்டு விதமான கர்மங்களை எப்படி அறிந்துகொள்வது என்ற கேள்விக்கு, ‘நமசிவாய’ எனும் உயர் மந்திரத்தை எட்டுவிதமாக மாற்றி அமைத்து நாளும் ஓதுவதால் அறிய இயலும் என்ற பதிலோடு முடிகிறது.

திருக்குறளைப் போல இந்தச் சிந்தாமணியும் இரண்டிரண்டு அடிகளில் விளக்கம் தருவது சிறப்பு. அறிவியல், ஆத்மஞானம், வாசி யோகம், சைவ சித்தாந்தம், வாழும் விதம் என அனைத்தையும் உள்ளடக்கித் திகழ்கிறது சிந்தாமணி குறவஞ்சி.

சிந்தாமணி குறவஞ்சி
சிந்தாமணி குறவஞ்சி

இந்தப் பொக்கிஷத்தின் மகிமையை அறியும்விதம் பாடல்களில் ஒன்றை மட்டும் விரிவாகப் பார்ப்போம்.

(கை) `மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடிசிங்கி?’

`அது - நாதத்தி லைம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா!’


``கபாலம் எனும் மூலக்குகையை ஆற்றலோடு வைத்திருக்கும் மூன்று சுடர்களும் தோன்றியது எப்படி சிங்கி!’’ என்று சுவாமி கேட்கிறார்.

`‘உடலின் ஐம்பூதங்களையும் அடக்கி, விந்து - நாதம் எனும் உயிர்-உடல் சக்திகளால் ஒளியாக உருவேற்றி, அதைக் கபாலம் எனும் மூலக்குகையில் ஏற்றினால், சந்திர - சூரிய - அக்னி கலைகளால் உருவாகும் முச்சுடராக அது பரிணமிக்கும். மூலக்குகையில் தோன்றும் முச்சுடரால் ஆன்மா பிரகாசம் பெற்று விழிப்பு உணர்வு கொள்ளும். அந்த விழிப்பு உணர்வில் ஆன்மா இறைவனை உணர்ந்து கொள்ளும்’’ என்று பொருள்பட ஒற்றை வரியில் பதில் சொல்கிறாள் அம்மை.

பஞ்சபூதங்களின் கலவையே இந்த உடலும் பிரபஞ்சமும். இப்படி ஐந்தாலும் உருவான உடலை இச்சையில் அழிக்காது அடக்கி, யோக முறைகளால் பாதுகாக்க வேண்டும். யோகத்தினால் உருவாகும் சக்தியால் விந்து - நாதம் எனும் சக்திகள் உறுதி பெறுகின்றன. இவை இரண்டும் உடலுக்கும் மனத்துக்கும் பெரும் ஆற்றலைத் தரும். அதனால் தேகத்தின் ஆதார சக்திகள் பிரகாசிக்கத் தொடங்கும். விளைவு, ஆதார சக்திகள் முச்சுடராக ஒளிர்ந்து ஆன்மாவையும் ஒளிர வைக்கும்; சீவன் சிவனாகும்.

அப்பப்பா... எவ்வளவு அற்புதமான விளக்கங்கள்? இரண்டு வரிகளுக்குள் எத்தனை சூட்சுமப் பொருள்கள்?!

இப்படி நம்மை வியக்கவைக்கும் தத்துவ ரகசியங்கள் ஏராளம் உண்டு இந்த ஞானநூலில். சிந்தாமணி குறவஞ்சி என்ற இந்த நூலைப் போல், விஞ்ஞானத்தையும் வியக்கவைக்கும் இன்னும் எவ்வளவோ ஞான நூல்கள் உண்டு நம் மண்ணில். அவற்றைத் தேடிக் கண்டடைந்தால், படித்துணர்ந்தால் உலகில் நம்மை மிஞ்ச எவரும் இல்லை எனலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு