Published:Updated:

சீர்காழி: பக்தரின் கனவால் செங்கல் சிலையானது - காலிமனை கோயிலானது!

சீர்காழி அம்மன்
சீர்காழி அம்மன்

பக்தரின் கனவால் கிராம மக்கள் கல்லாக வழிபட்டு வந்த காளியம்மன், தற்போது சிலையாகி கோயிலில் அருள்பாலித்து வருகிறார்.

சீர்காழி அருகே கோதண்டபுரம் கிராமத்தில் பக்தர் ஒருவரின் கனவில், "கல் வடிவில் வழிபட்டு வந்த மகாகாளியம்மனான என்னை, சிலையாக பிரதிஷ்டை செய்து கோயிலாக்கி வழிபட வேண்டும்" என்று அருளியதாகக் கூறிய செய்தியை ஏற்ற கிராம மக்கள், அதன்படி சிலை வடித்துக் கோயில்கட்டிக் கும்பாபிஷேகம் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி
சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோதண்டபுரம் கிராமத்தில் தெருவோரத்தில் 5 செங்கற்களை வரிசையாக வைத்து சுமார் 200 வருடங்களாக 'மகாகாளியம்மன்' என்ற பெயரில் கிராம மக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் காளியம்மனைத்  தீவிரமாக வழிபட்டு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் பழனியப்பன் கனவில், பெண் உருவில் தோன்றிய காளியம்மன் எனக்கு சிலை வைத்து வழிபடுமாறு கூறி மறைந்துவிட்டாளாம். அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்குப்  பிறகு மீண்டும் அதே பக்தரின் கனவில் இரண்டு முறை தோன்றி "ஏன் என்னை சிலை வைத்துக் கோயிலாக்கவில்லை?" என்று  ஆக்ரோஷமாய் கேள்விக் கேட்டாளாம்.

இந்தத்  தகவலை அந்த ஆட்டோ டிரைவர் கிராம மக்களிடம் எடுத்து கூறியதன் பேரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கோதண்டபுரம் தெருவில் புதியதாக 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மகாகாளியம்மன் சிலையை வடிவமைத்தனர். இதுபற்றி அக்கிராமத்தினரிடம் பேசினோம்.

"கோயிலின் மேற்கூரை அமைக்கப் போதிய நிதி இல்லாத  நிலையில்  ஊரில் மீன் விற்கும் பெண்மணி தானாக முன்வந்து, அச்செலவை ஏற்றுக்கொள்ளும்படி நேற்றிரவு கனவில் அம்மனே உத்திரவிட்டதாகக் கூறி முழு பணத்தையும் கொடுத்தார். இச்செயல் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அம்மன்
அம்மன்

அதைவிட கும்பாபிஷேகம் முன்தினம் அந்தக் காளியம்மன் சிலையின் கால் பகுதியில் காலை 9 மணி அளவில் ஒரு பெரிய நல்ல பாம்பு படமெடத்து காட்சித் தந்தது. அதனைக் கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து தரிசித்தனர். சில நிமிடத்தில்   படமெடுத்த நல்ல பாம்பு பக்கத்தில் ஓடி மறைந்துவிட்டது. மறுதினம் மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சம்பந்த குருக்கள் தலைமையில் எளிய முறையில் நடைபெற்றது. இது எங்கள் கிராமத்தைக் காப்பாற்ற வந்த அம்மனாகவே கருதுகிறோம்" என்றனர்.

பக்தரின் கனவால் கிராம மக்கள் கல்லாக வழிபட்டு வந்த காளியம்மன், தற்போது சிலையாகி கோயிலில் அருள்பாலித்து வருகிறார்.
அடுத்த கட்டுரைக்கு