திருக்கதைகள்
Published:Updated:

வரம் தா வரதா!

சித்தமல்லி
பிரீமியம் ஸ்டோரி
News
சித்தமல்லி

சித்தமல்லி தொடரும் அற்புதங்கள்

இந்த மண்ணுலகில் பிறந்த எந்த உயிருக்கும் வாழ்க்கை எளிமை யானது அல்ல; மனிதனுக்கும்தான். வாழ்வைப் பிறவிப்பெருங்கடல் என்பார்கள் ஞானிகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் கரை தெரியாத அந்தப் பெருஞ்சாகரத்தைக் கடக்க நிச்சயம் ஒரு தெப்பம் வேண்டும் அல்லவா?

மகான் ராகவேந்திரர்
மகான் ராகவேந்திரர்


எல்லாம்வல்ல பரம்பொருளின் பெருங்கருணையே தெப்பமாக நம்மைச் சுமந்து கரைசேர்க்கும். அந்தப் பரம்பொருளின் கருணையே இவ்வுலகில் ஆலயங்களாக உருவாகியிருக்கின்றன. அந்தக் கருணையின் வெளிப்பாடாக அவனே அர்ச்சாவதார ரூபமாக வந்து கோயில்கொள்கிறான். சுயம்பு லிங்கமாக எழுந்தருள்கிறான். தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் ஆகியோரின் கரங்களால் பிரதிஷ்டை செய்யப்படுகிறான். அகிலமெங்கும் ஆலயமெங்கும் இறைவனின் அருளாட்சி செழித் தோங்கித் திகழ்வது இப்படித்தான்.

அப்படியான ஆலயங்கள் நம் பாரத தேசமெங்கும் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக நம் தமிழ் மண்ணில் மகிமை நிறைந்த பல திருத் தலங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் சில காலப் போக்கில் சிதைவுண்டு போய்விட்டன; சில பராமரிக்க ஆள்கள் இன்றிப் புதர் மண்டிப்போயின. இன்னும் சில ஆலயங்களின் நிலையே கவலை கொள்ளச் செய்கிறது! இதனால் பெரும் நஷ்டம் ஆஸ்திகர்களுக்குத்தான். எவ்வாறு?

வறுமையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் நடந்து வரும் வழியில் பொக்கிஷம் ஒன்று கிடந்தது. அவன் மட்டும் அந்தப் பொக்கிஷத்தைக் கண்டு எடுத்துவிட்டால், அவனுடைய வறுமை நீங்கி வளமான வாழ்வு அமைந்துவிடும். பொக்கிஷம் கிடக்கும் இடத்துக்குச் சில அடி தூரம் முன்பாக வரும்போது அவன் மனதில், ‘இந்த உலகில் பார்வையிருக்கும் நாமே இவ்வளவு கஷ்டப்படுகிறோமே... பார்வை அற்றவர்கள் எவ்வளவு துன்பப்படுவார்கள்? பாவம்... சில நிமிடம் நாம் பார்வையில்லாமல் நடந்து, அவர்களின் சிரமத்தை அனுபவித்தால் என்ன?’ என்று எண்ணம் தோன்றியது. ஆகவே, கண்களை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

காஞ்சி மகா பெரியவர்
காஞ்சி மகா பெரியவர்
சித்தமல்லி வேங்கடநாத பெருமாள்
சித்தமல்லி வேங்கடநாத பெருமாள்

அதனால் பாதையில் கிடந்த பொக்கிஷத்தை அவனால் காண இயலவில்லை. அதைக் கடந்து கொஞ்சதூரம் சென்ற பிறகே, `அப்பப்பா... பார்வை இல்லாமல் இருப்பது எவ்வளவு சிரமம்’ என்றபடியே கண்ணைத் திறந்துகொண்டான்.

இந்த வறியவன் எப்படிப் பொக்கிஷத்தை எடுக்காமல் தவற விட்டானோ, அப்படித்தான் நாமும் நம் தேசத்தில் இருக்கும் பல தலங்களின் மகிமையை அறியாமல் அவற்றைக் கடந்துசெல்கிறோம். ஆனால், இறைவனின் கருணை நம்மைக் கைவிடுவதில்லை. மகான்களின் உருவில் வழிகாட்டுகிறது; நம் கைப்பற்றி சரியான இலக்கினைச் சுட்டிக்காட்டுகிறது!

மண்ணில் வாழ்ந்தபோதும், வாழ்க்கைக்குப் பிறகு சூட்சும ரூபமாகவும் இருந்து அருள்புரியும் மகான்கள் பலரும் நமக்குப் பல புண்ணியத் தலங்களைச் சுட்டிக்காட்டி வழிநடத்திய வண்ணம் இருக்கிறார்கள்.

திருப்பிடவூர் என்று ஞானநூல்கள் போற்றும் திருப்பட்டூரை, தலைவிதியை மாற்றும் தலம் என்பார்கள். அங்கு சென்று காசிவிஸ்வ நாதரை வழிபட்டுவிட்டு, தொடர்ந்து பிரம்மபுரீஸ் வரரையும் அவர் ஆலயத்தில் தனிச் சந்நிதியில் அருளும் பிரம்மதேவனையும் தரிசித்து வணங்கி வந்தால், பித்ரு தோஷம் நீங்கும்; நம் தலை யெழுத்து நல்லபடியாக மாறும் என்பது ஐதிகம்.

சித்தமல்லி வேங்கடநாத பெருமாள்
சித்தமல்லி வேங்கடநாத பெருமாள்
சித்தமல்லி ஆலயம்
சித்தமல்லி ஆலயம்

அப்படிப்பட்ட அற்புத மான அந்தத் தலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பக்தர்களின் கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆலயத்தில் மூன்று காலமும் விளக்கேற்றக்கூடப் போதிய எண்ணெய் இல்லா மல் தவித்த நாள்கள் அவை.

‘எல்லாம் என் தலைவிதி’ என்று எப்போதும் நொந்துகொள்ளும் மனிதர்கள், தலை எழுத்தையே நல்லவிதமாக மாற்றும் ஒரு தலம் இருப்பதை அறியாமல் இருந்தது எவ்வளவு பரிதாபமான நிலை?!

அப்போதுதான் மகான் ராகவேந்திரர், தன் பக்தையான பத்மா மாமியின் மனதோடு பேசினார். ‘மஞ்சள் அரைத்துப் பூசினால் தலையெழுத்தே மாறும். அங்கு செல்’ என்ற கட்டளையை அவரின் மனதில் பிறப்பித்தார். பக்தையோ திண்டாடினார்... ‘இந்தப் பரந்த உலகத்தில் எந்தத் திசையில் நான் அதைத் தேடிச்செல்ல வேண்டும்’ என்று.

ஆனால், காரணம் இல்லாமல் மந்திராலய மகான் ஒரு காட்சியைக் காட்டிக் கட்டளை இடுவாரா என்ன? அவர் பக்தை பத்மா மாமியின் மனக்கண்களுக்கு திருவரங்கம் கோயில் கோபுரத்தைக் காட்டினார்; மலைக் கோட்டைக் கோயிலைக் காட்டினார். அங்கிருந்து செல்லும் ஒரு பாதையைக் காட்டினார். ஆனால், எந்த இடம் என்பதை மட்டும் காட்டவேயில்லை.பக்தை திருவரங்கத்துச் சென்றார். அங்கே உள்ள ஆன்மிக அன்பர்களிடம் விசாரித்தார்.

“தலை எழுத்தை மாற்றும் தலம் என்று ஏதேனும் இருக்கிறதா... அங்கே மஞ்சள் பூசும் ஐதிகம் உண்டா?” என்று பலரிடம் விசாரித் தார். அவர்களில் ஒருவர் ஓர் அற்புதத் தலத்தைக் குறிப்பிட்டு அங்கே போகச் சொன்னார். அந்தத் தலம்தான் திருப்பட்டூர்.

இன்றைக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வரும் கோயில் திருப்பட்டூர். ஆனால் அன்று அந்த ஆலயம் வெறிச்சோடிக் கிடந்தது. அர்ச்சகர் ஆவலோடு வரவேற்று வழிபட உதவினார். வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் சூட்சுமமாய் அருளும் தலம் என்பதை விளக்கினார்.

தலையெழுத்தை மாற்றும் பரிகாரம் குறித்து விளக்கினார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட பத்மா மாமி, அமைதியாக ஊர் திரும்பினார். மீண்டும் மகான் மனதோடு பேச ஆரம்பித்தார். “உடனே அந்தத் தலத்தின் மகிமைகளை உலகறியச் செய்” என்றார்.

‘தனியொருத்தியாக எப்படிச் செய்ய முடியும்’ என்று பக்தை தயங்கியபோது, சக்தி விகடனை அடையாளம் காட்டினார் மகான். பத்மா மாமியும் சக்திவிகடனைத் தொடர்புகொண்டு திருப்பட்டூர் குறித்த தகவல்களைச் சொன்னார்.

சக்திவிகடனில், ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ தொடர் வெளியாகத் தொடங்கியது. உலகெங்கும் இருக்கும் பக்த ஜனங்களுக்கு திருப்பட்டூரின் மகிமைகள் தெரியத்தொடங்கின. ஆலயத்துக்குப் பக்தர்கள் வருகையும் அதிகரித்தது. இன்று திருப்பட்டூர் பிரசித்திபெற்ற தலமாகத் திகழ்கிறது. மகான் எதிர்பார்த்தது இதைத்தான். துன்பத்தில் அல்லாடிக் கொண்டிருப்பவர்களை நல்வழிப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி இது. அதற்கு பக்தையான பத்மா மாமி ஒரு கருவி.

அப்படித்தான் மந்த்ராலய மகான் மூலம் தேனம்பாக்கம் தலமும் சுட்டிக்காட்டப்பட்டது. பிரம்மதேவரின் பிரார்த்தனையின்படி சிவபெருமான் தம்முடைய யதாஸ்தானமாகக் கொண்ட புனித பூமி தேனம்பாக்கம். ஈசன் பிரம்மபுரீஸ்வரராக அருளும் அந்தத் தலம், காஞ்சி மகா பெரியவர் நீண்ட நெடிய தவ வாழ்க்கை மேற்கொண்ட தவ பூமியும்கூட!

மந்தராலய மகானின் அருளாணைப்படி இத்தலம் குறித்தும் பத்மா மாமி எடுத்துச்சொல்ல, தேனம்பாக்கம் மகிமையும் கட்டுரை வடிவில் சக்திவிகடனில் வெளியானது. இன்றைக்கு இறையருளும் குருவருளும் வேண்டி அடியார்கள் பலரும் நாள்தோறும் தேடி வரும் புண்ணிய க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.

இப்படித்தான் சித்தமல்லி எனும் தலம் குறித்தும் ஒரு திரு விளையாடலை நிகழ்த்தினார் மகான் ராகவேந்திரர். பிரசித்திபெற்ற வைத்தீஸ்வரன்கோவில்-மணல்மேடு சாலையில், பட்டவர்த்தி என்ற இடத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தமல்லி கிராமம்.

தமிழகம் ராகவேந்திரர் அவதாரம் செய்து நடமாடிய புண்ணிய பூமி. அப்படி அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வழிபட்ட ஆலயங்கள் ஏராளம். அப்படி ஓர் ஆலயம் சித்தமல்லியில் இருந்தது. சித்தமல்லி என்றால் `சித்தர்கள் மலிந்த பூமி’ என்று பொருள். அங்கு வாழ்ந்த மகான்களும் சித்தர்களும் ஏராளம். இந்தத் தலத்தில்தான் ராகவேந்திர சுவாமிகள் வழிபட்ட அருள்மிகு வேங்கடநாதனின் திருக்கோயில் இருந்திருக்கிறது. ஆனால் காலப் போக்கில் சிதைவுக்கு உள்ளானது கோயில். வேங்கடநாதன் மற்றும் திருத்தாயார் திருமேனிகள் மறைந்திருந்தன.

அந்த அற்புதமான தலத்தின் மகிமையை வெளிப்படுத்த ராகவேந்திர சுவாமிகள் தீர்மானம் செய்தார். இறைத் திருமேனிகள் புதைந்திருந்த இடத்தின் உரிமையாளர் ஒரு நாஸ்திகர். அருகிலேயே அவர் வீடு.

அந்த நாஸ்திக அன்பரே வியக்கும்வண்ணம் அங்கே இறையின் அருளாடல்கள் நடந் தேறின என்றே சொல்லவேண்டும். ஆம், ஒரு சுபநாளில் திருவேங்கடநாதரும் தாயாரும் தங்களின் திருமேனிகளை வெளிப்படுத் தினார்கள்.

‘தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்’ என்பதுதானே ஞானியர் வாக்கு. அந்த நாஸ்திகரைப் பொறுத்தவரையிலும் அவை வெறும் கற்சிலைகள்தானே?! ஆகவே, அவருக்கு அந்தத் திருமேனிகளின் மகத்துவம் தெரியவில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். ஆனால் அவரை அப்படி விட்டு விடுவாரா மகான் ராகவேந்திரர்... தன் பக்தை மூலமாக தெய்வ ரகசியங்களை வெளிப்படுத் தினார். அந்த நாஸ்திகரையும் பக்தை பத்மா மாமியை நோக்கி வரவைத்தார்.

அப்போது பத்மா மாமி, “விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேங்கடநாதனுக்கு நீங்கள்தான் கோயிலைக் கட்டிக் கும்பாபி ஷேகம் செய்வீர்கள். இது மகானின் வாக்கு” என்று சொல்லி அனுப்பினார்.

அதன்பின் அந்த நாஸ்திக அன்பரின் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. அவர் தெய்வ சாந்நித்தியத்தை உணர்ந்தார். தொடர்ந்து நாஸ்திக அன்பர் ஆஸ்திகத்தின் பக்கம் திரும்பினார்.

இந்த நிலையில் சக்திவிகடனில் `சித்தமெல்லாம் சித்தமல்லி’ அந்தத் தலம் குறித்த தொடரும் வெளியானது. விரைவில் அந்த அன்பரின் முன்னெடுப்பினால் வேங்கடநாத பெருமாளுக்கு அழகுற ஆலயம் எழும்பியது; கும்பாபிஷேகமும் நடந்தது. மகான் ராகவேந்திரரின் சித்தம் பரிபூரணமாக நிறைவேறியது.

எதையும் உரிய தருணத்தில் தன் பக்தையின் மூலம் வெளிப்படுத்துவதே சுவாமிகளின் வாடிக்கை. அப்படியே தற்போதும் அவர் மிகவும் முக்கியமான காட்சி ஒன்றை வெளிப் படுத்தியிருக்கிறார்.

அதே சித்தமல்லி தலத்தில் மகாபெரியவரின் அனுக்கிரகத்தோடு நிறைவேற்றப்பட வேண்டிய திருப்பணி ஒன்றையே இந்தமுறை சுட்டிக் காட்டியிருக் கிறார். அந்தத் திருப் பணியும் பூரணமாக நிறைவேறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. அப்படி அந்தப் பணி பூரணத்துவம் பெறும் வேளையில், சித்தமல்லி எனும் அந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தின் மகத்துவம் மேலும் பன்மடங்கு பெருகும்.

இந்தத் தலத்தைத் தேடிவரும் பக்தர்களுக்கு, வேங்கடநாத பெருமாள் தரிசனத்தோடு, அருள்மிகு வரதராஜப் பெருமாளின் அனுக்கிரஹமும் கிடைக்கும்!

இப்படியான மகத்துவப் பலன்களை அருளப்போகிறது எனில், அது என்ன திருப்பணி... எப்பேர்ப்பட்ட திருப்பணி?

அதன் பொருட்டு சுவாமி ராகவேந்திரர், தன் பக்தைக்கு வெளிப்படுத்திய திருக் காட்சிகள்தான் என்ன?

- தொடரும்...