Published:Updated:

யோகினியர் வழிபடும் சிவாலயம்!

உழவாரத் திருப்பணி
பிரீமியம் ஸ்டோரி
உழவாரத் திருப்பணி

உழவாரத் திருப்பணி நீங்களும் பங்கேற்கலாம்!

யோகினியர் வழிபடும் சிவாலயம்!

உழவாரத் திருப்பணி நீங்களும் பங்கேற்கலாம்!

Published:Updated:
உழவாரத் திருப்பணி
பிரீமியம் ஸ்டோரி
உழவாரத் திருப்பணி

இதயம் முழுவதும் இன்பம் நிரம்பி வழியச் செய்யும் அற்புதத் திருப் பணி எது தெரியுமா? உழவாரம்! உழவாரப் பணி செய்து தொழும் அடியார்களை முற்பிறவி கர்மா வருத்தாது; இப்பிறவியின் கர்மங்களும் நல்வினைகளாக மாறும்.

சித்தஞ்சி சிவாலயம்
சித்தஞ்சி சிவாலயம்


சகலத்தையும் நமக்களித்து நம் வாழ்வையே வரமாக்க வல்ல பரம் பொருளுக்கு நம்மால் எதைக் கொடுக்க இயலும்? எதைக் கொடுத்தாலும் அது அவன் படைப்பே அல்லவா? எனில் என்ன செய்வது? ஞானநூல்கள் அற்புதமாய் ஒரு வழியைச் சொல்கின்றன. இறைவனிடம் நம்மையே சமர்ப்பிக்க வேண்டுமாம். அதற்கு உகந்தது உழவாரம்.

பிறப்பிலாப் பெருமை அளிக்கும் அற்புதத் தொண்டு உழவாரம். ஆலயத்தைச் சுத்தம் செய்தால், ஆண்டவன் ஆன்மாவைச் சுத்தம் செய்வான் என்பது ஆன்றோர்கள் வாக்கு. எண்ணற்ற ஆலயங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் பல ஆலயங்கள் பராமரிப்பின்றி பாழ்பட்டுக் கிடக்கின்றன. அவற்றைப் பராமரித்து புனரமைத்து மீட்டெடுப்பது மிகப்பெரும் புண்ணிய பணியல்லவா?!

அவ்வகையில், அற்புத மகிமைகள் கொண்ட ஓர் ஆலயத்தில், வாசகர்களுடன் இணைந்து உழவாரத் திருப்பணி செய்யவுள்ளோம்.

பல்லவர்கள், சோழர்கள், கங்கர்கள், சம்புவரையர்கள், விஜயநகரப் பேரரசர்களும் போற்றிக் கொண்டாடிய - சித்தஞ்சி எனும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரேஸ்வர சுவாமி திருக்கோயில்தான் அது. காஞ்சியிலிருந்து தாமல் தாண்டி சுமார் 28 கி.மீ தூரத்தில் உள்ளது சித்தஞ்சி கிராமம். திருப்பணிக்குக் காத்திருக்கும் இந்தத் தலம் குறித்த கட்டுரை, ஏற்கெனவே 5.10.2021 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் ஆலயம் தேடுவோம் பகுதியில் வெளியாகியிருந்தது. வாசகர்கள் மற்றும் அடியார்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இங்குதான் வரும் 10.4.22 ஞாயிற்றுக்கிழமை அன்று உழவாரப் பணி நடைபெறவுள்ளது.

சிவாலயம்
சிவாலயம்
போகசக்தி
போகசக்தி
பிரம்மா
பிரம்மா


மூன்றாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டக் கோயில் என்றும், முதலாம் ஆதித்தச் சோழன் காலத்தில் தொண்டை மண்டலத்தில் அவன் எழுப்பிய பல ஆலயங்களில் இதுவும் ஒன்று என்றும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. அம்பிகையர் இருவரின் சந்நிதிகளோடு திகழ்கிறது ஆலயம். கல்யாண வரம் தரும் நாயகியாக போகசக்தியும், மனஅமைதியையும் நிம்மதியையும் அருளும் தேவியாக யோகசக்தியும் அருள்பாலிக்கிறார்கள்.

இறைவன் சங்கரேஸ்வரரோ பிணி தீர்க்கும் பெருமானாக அருள்கிறார். இங்கு வந்து வணங்கி வழிபட்டால் தீராத பிணிகளும் விரைவில் தீரும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அடியார்கள். அதுமட்டுமா? ஈசன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் ஆலயம் இது. ஆகவே, 1000 கிழக்கு நோக்கிய ஆலயங்களை வழிபட்ட புண்ணியம் இங்கு கிடைக் கும் என்கிறார்கள். மேலும், இந்த இறைவனை 999 ருத்ரர்களும் 999 யோகினிகளும் வழிபட்டார்கள்; இன்றும் அவர்கள் அரூபமாக வந்து வழிபடுகிறார்கள் என்பது தேவ ப்ரச்னத்தில் வெளிப்பட்ட திருவாக்கு.

இத்தகு மகிமைகள் நிறைந்த சிவாலயத்தில்தான் உழவாரத் திருப்பணி நடைபெறவுள்ளது.

தமிழகமெங்கும் எத்தனையோ திருக்கோயில்களில் திருப்பணிகளும் உழவாரப் பணிகளும் செய்து வருகிறார்கள் அடியார் பெருமக்கள். அவர்களின் பக்தியும் தொண்டும்தான் நம் தர்மத்துக்கு உரமாகின்றன. நாமும் அவர்களோடு இணைந்து ஒருநாள் சித்தஞ்சி சிவாலயத்தில் உழவாரத் திருப்பணியில் பங்கேற்போம்.

பிரார்த்தனையை விட தொண்டு சாலச் சிறந்தது என்பது ஆன்றோர் திருவாக்கு. உழவாரம் செய்யும் அடியார்கள் நாயன்மார்களுக்கு இணை யானவர்கள் என்பது சைவர்களின் நம்பிக்கை. யோகினியரும் ருத்ரர்களும் போற்றி வழிபடும் ஆலயத்தில் அடியார்களுடன் இணைந்து நாம் செய்யும் இந்தத் தொண்டு நம்மைக் கடைத்தேற்றும்; நம் சந்ததியை வாழ்வாங்கு வாழவைக்கும்!

எப்படிச் செல்வது?: சென்னை - பெங்களூரு சாலையில் ஓச்சேரிக்கு முன்பாக, காஞ்சியிலிருந்து தாமல் தாண்டி சுமார் 28 கி.மீ தூரத்தில் சித்தஞ்சி கிராமம் உள்ளது. காஞ்சியிலிருந்து தனியார் பேருந்தில் வந்து சித்தஞ்சி இறங்கி 1 கி.மீ நடந்தால் இங்கு வரலாம். சென்னையில் இருந்து வருபவர்கள் ஓச்சேரியில் இறங்கி (3 கி.மீ தூரம்) ஆட்டோவில் பயணித்தும் செல்லலாம். பயணச் சிரமம் மற்றும் கோடை வெயிலைக் கவனத்தில் கொண்டு, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வருவதைத் தவிர்ப்பது நலம்.

உழவாரத் திருப்பணி முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 73974 30999

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism