Published:Updated:

சிவ மகுடம்

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

சிவ மகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

ஞானத்தில் மூவகை உண்டு. உலக உயிர்களையும் பொருள்களையும் பற்றிய அறிவு `பாச ஞானம்’ ஆகும். ஆன்மாவைப் பற்றிய அறிவை `பசு ஞானம்’ என்பார்கள். மூன்றாவதான ஒரு ஞானம் உண்டு. இறைவனைப் பற்றிய அந்த ஞானத்தையே `பதி ஞானம்’ எனப் போற்றுகின்றன புராணங்கள்.

சிவ மகுடம்

சேக்கிழார் பெருமான் இறைவனைக் குறித்த இந்த ஞானத்தைச் சிவஞானம் எனப் போற்றுகிறார்; `சிவன் அடியே சிந்திக்கும் திருப் பெருகு சிவஞானம்’ எனப் பாடுகிறார்.

சீர்காழிச் சிவக்கொழுந்தாம் திருஞானசம்பந்தரோ இதுபோன்ற சகல ஞானங்களும் பெற்றவர். எல்லா பொருள்களையும் ஆக்குபவரும் இயக்குபவரும் ஈசனே என்று உணர்ந்து சிந்தையில் சிவத்தையே ஏற்றிப் போற்றும் தூயவர். அவர் மதுரையை நோக்கிப் புறப்பட்டதும் மங்கையர்க்கரசியாருக்கு நல்ல நிமித்தங்கள் தோன்றின; கனவில் நல்ல காட்சிகள் தோன்றின.

கனவு குறித்து சொப்பன சாஸ்திரமும் இன்னும்பல ஞானநூல்களும் பலவகையான தகவல்களை விவரிக்கின்றன. அஷ்டமங்கலப் பொருள்களும், ஆலயமும், அதனுள் இருக்கும் துவஜஸ்தம்பமும் கனவில் வந்தால் மிகவும் நன்மை உண்டாகுமாம்.

அதேபோல், கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்யத் துணியும் காரியம் வெற்றிபெறும்; மென்மேலும் அபிவிருத்தி அடையும் என்று பொருள். வயதில் மூத்தவர்களும் மகான்களும் ஆசிபுரிவது போல் கனவு கண்டால், நல்லோர் சேர்க்கையும் அவர்களால் உதவியும் வாய்க்கும். வானில் சந்திரன் பிரகாசிப்பதுபோல கனவு வந்தால் நினைத்தது நடக்கும்; எண்ணங்கள் சிறக்க, செயல்கள் வெற்றிபெறும்.

இப்படியான சகல காட்சிகளையும் பாண்டிமாதேவியார் கனவில் கண்டார். அதனால் அவரின் முகம் மலர, மாமதுரையின் எதிர்காலமும் மலரும் விதமாக, அந்த நகரை நோக்கிய திருஞானசம்பந்தரின் யாத்திரையும் தொடங்கியது.

சிவ மகுடம்

ஞ்செழுத்தினை ஓதி தென்னாடுடைய சிவனாரை வணங்கியபடி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டார் திருஞானசம்பந்தர். மங்கல வாழ்த்துகளும் பஞ்சாட்சரமும் ஒலிக்க, சங்கபடகம், பேரிதாரை, காளந்தாளம் பேரொளி செய்ய, அடியார்களுடன் தொடங்கியது, பாண்டிய தேசத்தை நோக்கிய சீர்காழிச் சிவக்கொழுந்தின் புண்ணிய யாத்திரை.

அகத்தியான்பள்ளி, திருக்கோடிக்குழகர் கோவில், திருக்கடிக்குளம், திருஇடும்பாவனம், திரு உசாத்தானம் முதலான தலங்களைத் தரிசித்து, பின்னர் பாண்டிநாட்டில் புகுந்து, திருக்கொடுங்குன்றத்தில் வழிபாடு செய்துவிட்டு, மதுரையின் எல்லையை அடைந்தார் ஞானசம்பந்தர் என்று அவரின் யாத்திரை வழியை விவரிக்கின்றன ஞானநூல்கள்.

முன்னதாக மாமதுரையில்... நடந்துமுடிந்த சிறு யுத்தத்தின் விளைவுகள், அடிகளாரின் தண்டனைக் காரியங்கள், அடுத்து நிகழவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் நடந்துமுடிந்திருக்க, அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிக் காத்திருந்தது அந்தத் தலைநகரம்.

நாம் அதுபற்றிய விவரங்களை அறியுமுன் திருஞானசம்பந்தரின் யாத்திரையில் கலந்துகொள்வோம். அதோ... அற்புதத்திலும் அற்புதமான அகத்தியான்பள்ளி எனும் தலத்துக்குள் நுழைகிறது அடியார்க் கூட்டம். வாருங்கள், நாமும் இணைந்து கொள்வோம்.

அங்கே இன்னும் சற்றுப் பொழுதில் எல்லாம் தம்முடைய இனிய குரலில் காந்தாரப் பண்ணில் பதிகம் பாடப் போகிறது நம் சீர்காழிப் பிள்ளை. நாமும் நம் சிந்தை மகிழ செவிகுளிர பதிகப்பாடல்களை அனுபவிப்போம். கூடவே அகத்தியான் பள்ளி எனும் அந்தத் தலத்தின் மகிமையையும் அறிந்துகொள்வோம்.

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் 126-வது தலம் இது. பழைமையான ஆலயம் இது. பிற்காலச் சோழர்களாலும் பாண்டியர்களாலும் திருப்பணிகளும் நிவந்த சேவைகளும் கண்டது என்கின்றன சரித்திரச் சான்றுகள். இந்தத் தலத்தில் உறையும் சுவாமியின் திருப்பெயர் அகத்தீஸ்வரர். அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள். மங்கை நாயகி எனவும் போற்றுவர். வன்னி மரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. எமதருமனுக்கு ஈசன் அருள்பாலித்த திருத்தலம் இது. பிற்காலத்தில் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானும் இந்தக் கோயிலைப் பொற்றியுள்ளார்.

திருக்கயிலையில் வீற்றிருக்கும் பரம்பொருளான சிவபெருமானின் திருமணக்கோலக் காட்சியைக் காணும்பொருட்டு அகத்தியர் தங்கித் தவம் செய்த ஊர் ஆதலால், அகத்தியான்பள்ளி என்று பெயர் பெற்றதாம். தற்போது மக்கள் பேச்சுவழக்கில் இந்த ஆலயத்தை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர்.

சிவ மகுடம்

மாபெரும் தவமுனியான அகத்தியர் எல்லாம் வல்ல சித்தர்; `சிவன் அனைய திருமுனி’ என்று புகழப்படுபவர். இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற அகத்திய முனிவரின் தோற்றத்தைப் புராணங்கள் பலவிதமாகக் கூறுகின்றன.

ஒருமுறை, பிரம்மன் ஒரு பெரிய வேள்வியைச் செய்தான். அந்த வேள்விச் சாலையிலிருந்த கும்பத்தில் சிவபெருமானின் ஓர் அம்சம் ஒளிவடிவமாக இறங்கியது. வேள்வியின் முடிவில் அது முனிவனாக உருப்பெற்றது. அட்சமாலை, கமண்டலம், யோக தண்டம், ஞானமுத்திரை ஆகியவற்றைத் தாங்கியவராக வெளிப்பட்ட அவரைக் கும்பமுனி என்றும் குடமுனி என்றும் தேவர்கள் போற்றித் துதித்தனர்.

பிறக்கும்போதே ஞானஒளியைத் தன்னகத்தே கொண்டிருந்ததால் அவரை அகஸ்தியன் என்றனர். அவர் குள்ளமான உருவமுடையவராக இருந்ததால் குறுமுனி என்றும் அழைக்கப்பெற்றார். அவர் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் செய்தார். சிவபெருமான் அவர் முன்னே தோன்றி, அவரை முனிவர்களில் சிறந்தவராகவும் நட்சத்திரமாக ஒளிரவும் அருள்புரிந்தார் என்கின்றன புராணங்கள்.

முனிவர்களுக்குத் தீங்குசெய்து அவர்களைக் கொன்றுவந்த வில்லவன் வாதாபியை அடக்கியது; சூரியனின் போக்கைத் தடுமாற வைத்த விந்திய மலையை அடக்கியது; இந்திரனுக்கு எதிராகப் போரிட் டுக் கடலில் ஒளிந்துகொண்ட விருத்திராசூரனைக் கண்டுபிடிக்க கடலை ஒருமுறை உள்ளங்கையில் அடக்கிக் குடித்து முடித்தது என அகத்திய மாமுனிவர் செய்த அருஞ்செயல்கள் நிறைய உண்டு.

இத்தகு மகத்துவமான மாமுனிவருக்கு எம்பெருமான் தம்முடைய மணக்கோலத்தைக் காட்டிய தலங்களில் அகத்தியான்பள்ளியும் ஒன்று. ஆகவே, இங்கு வந்து வழிபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் கல்யாண வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அற்புதமான இந்தக் கோயிலுக்கு திருஞானசம்பந்தப் பெருமான் விஜயம் செய்ததும், `வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்...’ எனத் தொடங்கி பதிகங்கள் பாடியதும், அவை நமக்குக் கிடைத் ததும் நாம் செய்த பாக்கியமே. இதற்கெல்லாம் பாண்டிமா தேவியாருக்குத்தான் நாம் நன்றி நவில வேண்டும்.

ஆஹா... எத்தகைய அற்புதமான பாடல்கள்?!

துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண்ணீற்றினான்
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான் மாநகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே...

தைத்த உடையை அணிந்தவரும் வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவரும் கொன்றையும் ஊமத்தை மலர்களையும் சூடியவருமான எம்பெருமான் எழுந்தருளும் ஊர் - அன்னங்கள் வாழும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளி. அற்புதமான இவ்வூரை நினைத்திருக்கும் அன்பர்களுக்கு வினைகள் யாவும் நீங்கும் என்கிறார் திருஞான சம்பந்தர்.

இந்தத் தலம் மட்டுமா? அடுத்தடுத்து ஞானசம்பந்தர் தரிசித்த தலங்களும் மிக அற்புதமானவை. அவருடனேயே நாமும் பயணிப் போம் ஆலவாய் வரையிலும்!

- மகுடம் சூடுவோம்...

சிவ மகுடம்

நினைத்தது நிறைவேறும்!

ரக்கோணம்- சோளிங்கர் பாதையில், சுமார் 21 கி.மீ. தூரத்தில் உள்ளது கரிக்கல் கிராமம். இங்கே மலையின் மீது கோயில் கொண்டிருக்கிறார் குன்றை சரித்த குமரமுருகன்!

அடிவாரத்தில் சுயம்பு விநாயகரை வழிபட்டு, 325 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலைக் கோயிலில் தேவியர் இல்லாமல் தனித்து அருளும் மூலவர் குமரமுருகன் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். குழந்தை இல்லாதவர்கள், தொடர்ந்து 5 செவ்வாய்க் கிழமைகள் இங்கு வந்து, ராகு கால பூஜையை தரிசித்து அருள் பெற்றுச் செல்கின்றனர். தொடர்ந்து 6 மாதங்கள்... கிருத்திகை தினத்தில் விரதம் கடைப்பிடித்து, குமரமுருகனை வழிபட்டுச் செல்ல, நினைத்த காரியம் நிறைவேறுமாம்.

தொழில் நஷ்டம், மனக்குழப்பம், குடும்பப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் நீங்கி நலம்பெற வேண்டுவோர், எலுமிச்சைபழம் வாங்கி வர வேண்டும். அதை முருகனின் பாதத்தில் வைத்து பூஜித்து தருவார்கள். இந்தப் பிரசாதப் பழத்தை வீட்டிலோ, வியாபார இடங்களிலோ வைத்துக் கொள்ள அபிவிருத்தி ஏற்படுமாம்!

- கே.முருகானந்தம், செங்கல்பட்டு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism