Published:Updated:

சிவமகுடம்!

திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியார்
பிரீமியம் ஸ்டோரி
திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியார்

மங்கையர்க்கரசியாரின் சரிதம்

சிவமகுடம்!

மங்கையர்க்கரசியாரின் சரிதம்

Published:Updated:
திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியார்
பிரீமியம் ஸ்டோரி
திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியார்

`ஆலவாயாவதும் இதுவே!’

அகிலம் எனும் அகல்விளக்கின் சுடராய்த் தோன்றி இருள் விலக்கும் பகலவனைப் பலவாறு போற்றும் புராணங்கள், திங்களுக்கு ஒருவனாய் பன்னிரு ஆதவர்கள் உண்டு என்று விவரிக்கின்றன. அந்தப் பன்னிருவரின் திருப்பெயர்களையும்... அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சுவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், தோஷா, விஷ்ணு, பூஷா என்று ஞானநூல்கள் பலவும் பட்டியலிடுகின்றன!

சிவமகுடம்!

ஆனால், பாண்டிய பேரமைச்சர் குலச்சிறையாரைக் கேட்டிருந்தால் கூடுதலாய் சிவச்சூரியன் ஒன்றுண்டு எனக் கூறியிருப்பார்; அந்தச் சூரியனின் திருப்பெயர் திருஞானசம்பந்தன் என்றும் விவரித்திருப்பார்.

ஆம்! பொற்றாமரை மலர்ந்து சிரித்த மதுரையின் மண்ணில் நற்றாமரைப் பாதங்களைப் பதித்து நின்ற சீர்காழிச் சிவக்கொழுந்தை முதன்முதலாய் கண்ணார தரிசித்த கணத்தில், குலச்சிறையாருக்கு சிவச்சூரியனாகவே தோன்றினார் திருஞானசம்பந்தர்.

தோள்கள் தினவெடுக்க வாள் பயிற்சி எடுத்திருந்தாரே ஒழிய, நாகமழ சொற்பயிற்சி எடுத்திருந்தார் இல்லை பேரமைச்சர். அதற்காக இப்போது மனம் மருகினார். அவருக்கு மட்டும் பாடும் திறன் இருந்திருந்தால், பிற்காலப் புலவர் ஒருவர் பாடினாரே...

ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
எழில்தரும் அழகுடன் கழுமலத் துதித்தனை..
என்று!

அதுபோல இவரும் பாடித் துதித்திருப்பார் அந்த ஞானக் குழந்தையை.

மண்தோய வீழ்ந்து கிடந்த குலச்சிறையாரைத் தளிர்க்கரங்களால் தொட்டுத் தூக்கிய ஞானப் பிள்ளை, பேரமைச்சரின் முகம் நோக்கி புன்னகைத்தபோது, சிவப்பேறு கிடைத்ததாகவே சிலிர்த்தார் பேரமைச்சர். சில கணப் பொழுதுகள் கழியும் வரையிலும் அவர் பேசவில்லை; மெய்நடுங்க கரம்கூப்பியபடியே நின்றிருந்தார்.

அந்தத் தருணத்தில்தான் ஒளிரும் ஆதவனாய் தம்முன் நிற்கும் ஞானக் குழந்தையின் தரிசனத்தைக் கண்டு, அவரைப் போற்றிப் பாடும் திறன் தமக்கு இல்லையே என்று மனத்துக்குள் அரற்றினார்.

``குலச்சிறை பெருமானே...’’ என்று மற்றவர்கள் அழைத்து அவரை உசுப்பியதும்தான் ஓரளவு தன்னிலைக்கு வரப்பெற்றார் பேரமைச்சர். இப்போது, மேகக்கூட்டம் சூரியனை மறைப்பது போன்று, மங்கலாகத் தோன்றியது பிள்ளையின் திருவுருவம். காரணம், பேரமைச்சரின் விழிச்சுனையை நிறைத்து ததும்பி நின்ற நீர். அதுவும் கைந்நொடிப் பொழுதுதான்!

அதற்குமேலும் அமைச்சரின் கண்களுக்குத் திரையிட்டால், அவர் தாங்கமாட்டார் என்று கருதியதுபோல் சுரந்த வேகத்திலேயே விழிகளிடம் விடை பெற்று அவரின் கன்னங்களில் வழிந்தோடியது கண்ணீர்! மீண்டும் ஞானச்சூரியன் தகதகத்தது!

பேரமைச்சருக்குக் கவிபாட வரவில்லைதான் ஆயினும் மனதின் பரவசம் அவரைத் தட்டுத்தடுமாறி பேசவைத்தது; பிள்ளையைப் புகழவைத்தது.

``காழியர் தவமே... கவுணியர் தனமே... தாழிய கடலே... அதனிடை அமுதே... வாழிய! வந்திம்மண்மிசை வானோர் தனிநாதன் ஏழிசை மொழியாள் தன் திருவருள் பெற்றனை...’’ என்றெல்லாம் குரல்தழுதழுக்கப் போற்றிப் பரவினார் பேரமைச்சர்.

அவரை ஆற்றுப்படுத்திய ஞானக்கொழுந்து பவழவாய் திறந்து பேசியது.

``திருச்சிற்றம்பலம்! பெருந்தகையே... செம்பியர்பெருமான் திருமகளுக்கும், தங்களுக்கும் இறைவன் திருவருளால் நன்மைகள் நல்லபடியே கூடி வருகின்றன அல்லவா?’’

இந்தக் கேள்விக்கு பேரமைச்சரால் என்ன பதில் கூறமுடியும்? அவருக்குப் பேச்சு வரவில்லை. மாமன்னரும் அவரால் மக்கள் பலரும் மாற்றுமதம் சார்ந்திருக்க, அதனால் பாண்டிய தேசம் சந்தித்த இன்னல்களையும் அவற்றைச் சமாளிக்க இவர்கள் படும்பாட்டையும் சுருக்கமாகச் சொல்லிவிட முடியுமா?

முடியாதுதான். ஆயினும் தமக்கேயுரிய பேச்சுவல்லமையுடன் சொல்ல வேண்டியவற்றைச் சுருங்கச்சொல்லி விளக்கினார் குலச்சிறையார்.

``பாண்டியநாடு முன்புசெய்த தவத்தின் பயனாகவே தாங்கள் இங்கு எழுந்தருளியுள்ளீர்கள். தங்கள் வருகையால் பாண்டியதேசம் இனிவரும் காலத்தில் சிறப்புற்றுத் திகழும். விதிவசத்தால் அஞ்ஞான இருளில் மூழ்கிவிட்ட எங்கள் தேசம் இனி உய்வு பெறும். வெற்றி தரும் திருநீற்றின் மகிமை எங்களைக் காத்து நிற்கும்!’’ என்று கூறி மீண்டும் சீர்காழிப்பிள்ளையை வணங்கிப் பணிந்தார்.

அவ்வாறு பணிந்து எழுந்த பேரமைச்சரிடம் திருஞானசம்பந்தர் கேட்டார்: ``இங்கு நம் பெருமான் எழுந்தருளும் திருஆலவாய் கோயில் எங்குள்ளது?’’

பிள்ளை கேட்டதும் பேரமைச்சர் சொக்கேசர் கொலுவீற்றிருக்கும் திருஆலவாய் கோயிலின் கோபுரம் இருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினார்.

``ஐயனே! அதோ பாருங்கள்... என்பணி அணியார் இனிது அமர்ந்தருளும் திருவாலவாய்த் திருக்கோயில்!’’ என்றார். உடன், ஞானப்பிள்ளையோடு அவருடன் வந்த அணுக்கர்கள் அனைவரும் அந்தத் திசையை நோக்கினர்.

கோபுரதரிசனம் கண்டதும் ஏக காலத்தில் ``ஓம் நமசிவாய!’’ என்று ஐந்தெழுத்தை முழங்கி சிரமேற் கரம் குவித்து வணங்கினர். அதேவேளையில் இவர்களை வரவேற்று மகிழ்வதுபோல் மீண்டும் பெரிதாய் ஒலியெழுப்பி முழங்கியது ஆலவாய் ஆலயமணி! மணியோசை அடங்கவும் பிள்ளையிடம் புதுப்பதிகம் பிறந்தது.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைம்மட மானி

பங்கயச்செல்வி பாண்டிமாதேவி

பணிசெய்து நாள்தொறும் பரவப்

பொங்கழல் உருவன் பூதநாயகன்நால்

வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த

ஆலவாயாவதும் இதுவே!

சிவனருள்கொழுந்தாம் திருஞானசம்பந்தப் பிள்ளையின் திருவாயால் திருப்பதிகத்தில் பெயர்சொல்லிப் பாடப் பெறுவது எத்தகைய கொடுப்பினை! அந்தக் கொடுப்பினைக்குச் சொந்தக்காரரான பாண்டிமா தேவியாரோ, ஆலவாய்க் கோயிலில் - மீனாட்சியம்மை சந்நிதி மகா மண்டபத்தில், பொங்கிதேவிக்கு அற்புதமான ஒரு திருக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

சிவமகுடம்!

பதிகமும் திருக்கதையும்!

தோழி பொங்கிதேவிக்கு அருள் கதையைச் சொல்லத் தூண்டியது, முன்னதாக தேவியார் பாடிய பதிகம்தான். மரகத வல்லியை - மீனாட்சி அம்மையைத் தரிசித்து முடித்து, மகா மண்டபத்தில் வீற்றிருந்த பாண்டிமாதேவியார், சீர்காழிப் பிள்ளையின் வருகையின் பொருட்டு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார். அந்தத் தருணத்தில் வேறேதையும் சிந்திக்கத் தோன்றாததால், மனம் விட்டு உருக பதிகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். அதில் ஒன்று பொங்கிதேவியை மிகவும் ஈர்த்தது.

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தருமோ இவள் உள்மெலிவே

இந்தப் பதிகம் பொங்கிதேவிக்குள் எவ்வித ஈர்ப்பை உண்டாக்கியதோ, அதே ஈர்ப்பும் பரவசமும் பாண்டிமாதேவியாருக்குள்ளும் எழுந்திருக்கவேண்டும். ஆகவே, இந்தப் பதிகப் பாடலை அவர் பாடும்போது அவரையுமறியாமல் கண்கள் பனித்தன. பொங்கிதேவியும் அதைக் கவனிக்கத் தவறவில்லை. காரணம் அறிய முற்பட்டாள்.

``அம்மா!’’ என்றழைத்து அரசியாரின் கவனம் திருப்பினாள்.

கண்ணலர்ந்த பேரரசியார் ``என்ன?’’ என்பதுபோல் பொங்கியை நோக்கினார்.

``ஏனம்மா... கண்கலங்குகிறீர்கள்?’’

``பதிகத்தின் சிறப்பு அப்படி?’’

``யார் பாடியது... எங்கே பாடியது?’’

``இன்னும் சில நாழிகைகளில் இந்த ஆலவாய்க்கோயிலுக்கு விஜயம் செய்யப்போகிறதே ஒரு ஞானப்பிள்ளை... அந்தத் தெய்வக் குழந்தைப் பாடியது...’’

``எந்த ஊரில் இந்தப் பதிகம் பிறந்ததோ?’’

``பாடலே சொல்கிறதே கவனிக்கவில்லையா? திருமருகல் எனும் புண்ணியப்பதியில்தான்... சர்ப்ப விஷத்திலிருந்து இளைஞன் ஒருவனைக் காப்பாற்றும் பொருட்டு திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளியதாம். சில தினங்களுக்குமுன் நம் ஆலயம் வந்த அருளாளர்கள் படிப்பதைக் கேட்டு விசாரித்தறிந்தேன்’’

``விஷப் பாதிப்பிலிருந்து இளைஞன் மீண்டானா?’’

``உமைத்தாயிடம் பாலமுது அருந்திய தெய்வப்பிள்ளை பாடி னால் மீளாமல் இருப்பானா?’’ என்று பதில்கூறி நிறுத்தியவர், மீண்டும் அழுத்தம் திருத்தமாக ஒன்றைச் சொன்னார்...

``இந்தப் பாண்டிய தேசமும் அந்தப் பிள்ளையால்தான் மீளப் போகிறது!’’

- மகுடம் சூடுவோம்...

உறங்கும்போது ருத்ராட்சம் அணியலாமா? ருத்ராட்சங்களை தங்கம் அல்லது வெள்ளி மாலையாகத்தான் அணியவேண்டுமா?

ருத்ராட்சத்தின் தூய்மையைக் காப்பாற்ற... உறங்கும் வேளையிலும், மல-ஜலம் கழிக்கும் வேளையிலும் அதை கழற்றி வைக்கலாம். தங்களது பொருளாதாரத்துக்கு உகந்தவாறு ருத்ராட்சத்தை தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, நூல்- இவற்றில் ஏதாவது ஒன்றில் கோத்து மாலையாக அணியலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism