Published:Updated:

சிவ மகுடம்

திருஞானசம்பந்தர்
பிரீமியம் ஸ்டோரி
திருஞானசம்பந்தர் ( ஓவியர் ஸ்யாம் )

மங்கையர்க்கரசியார் சரிதம்

சிவ மகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

Published:Updated:
திருஞானசம்பந்தர்
பிரீமியம் ஸ்டோரி
திருஞானசம்பந்தர் ( ஓவியர் ஸ்யாம் )

அதிசயங்கள் பல நிறைந்தது இந்த உலகம். பெரும் விருட்சத்தை சிறு விதைக்குள் பொதிந்தது எப்படி? ஒன்பது ஓட்டைகள் இருந்தும் உயிர்க்காற்று வெளியேறாமல் நம் தேகத்துள் உறைந்து ஒளிர்வது எப்படி? தெறித்துச் சிதறாமல் அண்டங்களில் கோளங்களும் அகிலத்துப் பொருள்களின் அணுக்களும் ஓர் ஒழுங்குமுறையில் இயங்குவது எப்படி?

இங்ஙனம், விடை சொல்ல இயலாத கேள்விகளும் ரகசியங்களும் நிறைந்ததுதான் உலகம். அபூர்வமாய்ச் சில தருணங்களில் சில ரகசியங்கள் உடைபடும்போது, பெரும் திகைப்புக்கு ஆளாகி விடுகிறான் மனிதன். இளங்குமரனின் நிலையும் அவ்வாறுதான் இருந்தது.

சிவ மகுடம்

`மகுடம் எங்கே?’

மாமதுரையின் அரண்மனை மாளிகையில், மந்திராலோசனை மண்டபத்தில் அணுக்கர்களுடன் மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி நடத்திய விவாதத்தில் அவனும் பங்கேற்றிருந்தான். மீண்டும் தென்னகத்தின் அரியாசனத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பழைய பகையாளிகளின் சங்கல்பம், அவர்களின் பிரதிநிதியான அடிகளார் சமணர் வேஷத்துடன் உட்புகுந்தது, சதி செய்தது ஒவ்வொன்றையும் விளக்கிக் கொண்டிருந்தார் மாமன்னர்.

இந்த விவரங்களை எல்லாம் ஏற்கெனவே இளங்குமரன் ஓரளவு அறிந்திருந்தான் ஆகையால், விவாதத்தின் தொடக்கத்தில் அவன் அவ்வளவு அக்கறை செலுத்தவில்லை. ஆனால், ``இந்த ரகசியங்கள் எல்லாம் எமக்குத் தெரியவந்தது மூன்று வஸ்துக்களால்’’ என்று கூன்பாண்டியர் அறிவித்தபோது... அதுவரையிலும் தனக்கான ஆசனத்தில் அசட்டையாய் அமர்ந்திருந்தவன், நிலையை மாற்றிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

மாமன்னர் வஸ்துக்கள் என்று குறிப்பிட்டாரே தவிர, அவை என்னென்ன என்று அவற்றின் பெயரை அவர் உச்சரிக்கவில்லை. ஆனால் மிகச் சரியாக அதுபற்றி அவர் சொன்ன தருணத்தில், வரைபடம் போன்ற பட்டோலை ஒன்றை விரித்தான் தண்டநாயகன் ஒருவன். அது வரைபடம் அல்ல; மாமன்னர் குறிப்பிட்ட வஸ்துக் களின் சித்திரங்களே அதில் எழுதப்பட்டிருந்தன.

ஆம்! சிறியளவிலான இரண்டு தாரு லிங்கங்கள் மற்றும் நாகக் கணையாழி உருவங்களும், மையமாக பெரியளவில் சிவ மகுடத்தின் சித்திரமும் இடம்பெற்றிருந்தன. இளங்குமரன் அதிர்ந்தான். அவனால் பறிகொடுக்கப்பட்ட நாகக் கணையாழி குறித்த விவரம் மாமன்னருக்கு எப்படித் தெரியவந்தது என்று உள்ளுக்குள் திகைத்தான். மட்டுமன்றி, பெயரைச் சொல்லாமல் `வஸ்துக்கள்’ என்று மாமன்னர் குறிப்பிட்டதன் காரணமும் அவனுக்குப் புரிந்தது.

சிவ மகுடம்

ஆம்! அவன் வரையிலும் உயிராகக் கருதும் அந்தப் பொக்கிஷங்களும் அவற்றின் பெயர்களும் சமணச் சார்புடைய மாமன்னரைப் பொறுத்தவரையிலும் அவரைக் கண்டுமுட்டு-கேட்டு முட்டுக்கு ஆளாக்கிவிடும் என்பதைப் புரிந்துகொண்டான். ஆகவேதான் அவர் அந்தச் சித்திரங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து, சாளரத்தின் பக்கம் நகர்ந்துவிட்டார் போலும். இப்படியான எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்க, அவை எல்லாவற்றையும் மீறி எழுந்த வினாவுக்கும் விடைதேட முனைந்தான்: `தாரு லிங்கங்கள், நாகக் கணையாழி, சிவமகுடம் குறித்து மாமன்னர் அறிந்தது எப்படி?’

பட்டோலையைச் சுருட்டிவைத்த தண்டநாயகன், தொடர்ந்து நிகழ்த்திய உரையே, இந்த வினாவுக்கான விடையைக் கொடுத்தது. எதிரிகளின் பெரும் ரகசியங்களை மன்னருக்குக் காட்டிக்கொடுத்த இந்த வஸ்துக்கள் பற்றிய விவரத்தை, பாண்டிமாதேவியாரின் தோழி பொங்கியின் மூலமாகவே தெரிந்துகொண்டோம் என்று அவன் அறிவித்தபோது, முன்பைவிடவும் பன்மடங்கு அதிக திகைப்புக்கு ஆளானான் இளங்குமரன்!

தண்டநாயகன் விவரத்தைக் கூறிமுடிக்கவும், மன்னர் இளங் குமரனைக் கேட்டார்: ``இளங்குமரா... இப்போது உனது முறை. நாங்கள் அறிந்த ரகசியத்தைக் கூறிவிட்டோம். அதேபோல், நீ விளக்கவேண்டிய ரகசியமும் ஒன்று உண்டு... அதுபற்றிச் சொல்கிறாயா?’’

மன்னர் இப்படிக் கேட்டதும், `ரகசியமா... என்னிடமா...?’ என்பதுபோல் விழித்தான் இளங்குமரன்.

மாமன்னர் அவனை நெருங்கினார். அவன் தோள்களில் கை வைத்து அழுத்தியபடி கேட்டார்: ``சொல்... அந்த விநோத மணி மகுடம் இப்போது எங்கே இருக்கிறது, யாரிடம் இருக்கிறது?’’

சிவமகுடம் குறித்து பாண்டிய மாமன்னர் மாறவர்மர் அரிகேசரி விசாரணையைத் தொடங்கியிருந்த அதேநேரம், அந்த மகுடத்தை அவரின் திருமுடியில் சூட்டிவிடும் சங்கல்பத்தை ஏற்றுக் கொண் டிருக்கும் பாண்டிமாதேவியார், திருஞானசம்பந்தரின் வருகையைப் பெரும் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டிருந்தார்!

சிவ மகுடம்

ஆலவாய் ஆலயத்தில்...

லவாய்க் கோயிலில் திருஞானசம்பந்தர் வழிபட்டுவிட்டுத் திரும்பும் வழியில், அவருக்காகக் காத்திருந்தார் பாண்டிமாதேவியார். பிள்ளையைக் காணப் போகும் பரவசம் அந்தத் தாய்மைக்கு. இது மதுரை மண்ணுக்கே உரிய சிறப்பு. பெண்ணுக்கு முதன்மை தரும் ஊர்; பெண்மையைப் போற்றும் ஊர்; தெய்வப் பெண்களால் போற்றப்படும் ஊர் திருஆலவாய் ஆகிய மாமதுரை.

ஆகவேதான் பிற்காலப் புலவர் ஒருவர் மதுரையை இப்படிப் போற்றுகிறார்...

திருமகட்கு ஒரு தாமரைக் கூடமே திருமால்
மருமகட்கு வெண்தாமரை மாடமே ஞானந்
தருமகட்கு யோகத் தனிப்பீடமே தரையாம்
பெருமகட்கு அணிதிலகமே ஆனதுஇப் பேரூர்!

ஆம் திருமகளுக்கு இவ்வூர் செந்தாமரை இல்லம். மாலின் மருமகளான கலைமகளுக்கு இவ்வூர் வெண் தாமரை இல்லம். ஞானம் தரும் மலைமகளுக்கு இவ்வூர் யோக பீடம். பூமகளுக்கோ இத்தலம் நறுந்திலகம் போன்றது என்று போற்றுகிறார். இப்படியான இந்தத் திருநகர், பாண்டிமாதேவியாராலும் பெரும் பேறு பெற்றது!

வழிபாடு நிறைவுற்று திருஞானசம்பந்தர் வருகை புரிந்தார். அவர் பாண்டிமாதேவியார் இருக்கும் இடத்தை நெருங்கியதும் பேரமைச்சர் குலச்சிறையார் பாண்டிமாதேவியாரை அறிமுகம் செய்துவைத்தார்.

திருஞானசம்பந்தப்பெருமானைப் பார்த்ததும் ஒருபுறம் அம்மைக்குள் தாய்மைப் பண்பு ஊற்றெடுத்தது என்றால், மறுபுறம் `அவர் சிவப்பிள்ளை ஆயிற்றே’ என்று பக்தியுணர்வும் பொங்கிப் பெருகியது. பிள்ளையை வரவேற்கும் விதமாக தேவியார் முன்னே சில அடிகள் எடுத்துவைக்க, சீர்காழிப் பிள்ளையும் முன் நகர்ந்து வந்தது. கூப்பிய கரங்களுடன் சென்ற மங்கையர்க்கரசியார் பிள்ளையின் திருவடியைப் பணிந்து வணங்கினார்.

திருஞானசம்பந்தர் தம் தளிர்க் கரங்களால் அன்னையைத் தொட்டுத் தூக்கினார். பிள்ளையின் மலர்முகத்தை நோக்கிய கணம் பாண்டிமாதேவியாருக்குக் கண்களில் நீர் திரையிட்டது. பேச்சு எழவில்லை. தட்டுத் தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தார்...

``நானும் என் கணவரும் என்ன தவம் செய்தோமோ?’'

இதைக் கேட்டதும் சீர்காழிப் பிள்ளை மலர்ந்து சிரித்தது.

அந்தச் சிரிப்பு, பாண்டிய தேசத்துக்கும் விரைவில் மலர்ச்சியைத் தரப் போகிறது எனும் நல்ல சகுனத்தைத் தெரிவிப்பதுபோல், எங்கிருந்தோ பறந்து வந்த கொன்றை மலரொன்று தேவியாரின் கரங்களில் சேர்ந்தது!

- மகுடம் சூடுவோம்...

சூலைக் கிணறு!

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை திருத்தலம் அட்ட வீரட்டான தலங்களில் ஒன்று. இங்கே சிவபிரானின் ஆடற்கோலத்தைச் சிறப்பித்து பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

`எண்ணார் எழில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி
மண்ணார் முழுவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறை பாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே’

என்பது அவரின் பாடல். திருநாவுக்கரசருக்குச் சூலை நோய் தீர்ந்ததும் இந்தத் தலத்தில்தான். இந்த ஆலயத்துக்குள் சூலைக்கிணறு உள்ளது. இதன் நீரைத் தெளித்து, திருநீறு பூசிக்கொண்டு திருவதிகை ஈசனை வழிபட்டால் பிணிகள் தீரும் என்பது நம்பிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism