Published:Updated:

சிவ மகுடம்! - 88

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் ( ஓவியர் ஸ்யாம் )

மதுரையில் திருஞானசம்பந்தர்!

சிவ மகுடம்! - 88

மதுரையில் திருஞானசம்பந்தர்!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் ( ஓவியர் ஸ்யாம் )

அன்பின் ஆற்றல் - அருளின் ஆற்றல் அஸ்திரங்களின் ஆற்றலை விடவும் மிகப்பெரியது எனக்கொண்டு, அஸ்திரம் தொடுக்கும் ராவணனின் இருபது கரங்களையும் அருளால் நசித்த சிவபிரான் குடியிருக்கும் அற்புதமான நகரம் - மாமதுரை!

சிவ மகுடம்! - 88

தூய பளிங்கு உருகிப் பெரும் மலையாகவும் அதனுடன் இணைந்து பேரொளி வீசும் மரகதமானது குழம்பாகிப் பதிந்தும் திகழும் அற்புதத் தைக் காண வேண்டுமா... வேறெங்கும் தேடி அலையவேண்டாம்; இவ்வூருக்குச் சென்றால் போதும்; வெள்ளிப்பனி மலையானும் மரகதப் பதுமையாம் அன்னை மீனாளும் அவ்வண்ணமாய் அருளும் அற்புதத்தைத் தரிசிக்கலாம் என்று ஞானநூல்களில் பெரியோர்கள் சிலிர்ப்புடன் விவரிக்கும் திருநகரம் - ஆலவாய் ஆகிய மாமதுரை.

தொன்மையான அந்தப் பெருநகரத்தின் மையமாய்ச் சியாமள பீடமாய்த் திகழும் ஆலயக் கோபுரத்துக்கு நேர்மேற்கில், கீழ்வானத்தைச் சிவப்பாக்கியபடி, மலைச் சிகரங்களில் மறைந்துகொள்ள தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தான் மாலை நேரத்துச் சூரியன். அந்த நேரத்திலும் அவன் பொலிந்த அந்திவெயிலானது சற்று வெம்மையை அளிப்பதாகவே இருந்தது.

ஆதிமந்திரம்!

புறத்தே இப்படியென்றால்... மாமன்னர் மாறவர்மன் அரிகேசரியின் அகத்திலோ வெம்மை பன்மடங்கு அதிகம் இருந்தது; கொதித்துக்கொண்டிருந்தது அவரின் உள்ளம்.

அமிர்தத்துக்கு நிகரான பாலாக இருந்தாலும் துளி விஷம் சேர்ந்து விட்டால், பின்னர் மொத்த மும் விஷம்தான். அப்படியே, கபடமில்லாத நெஞ்சில் சிறிதளவு சந்தேகம் எனும் விஷம் நுழைந்துவிடின், நெஞ்சகம் வஞ்சகத்தால் நிறைந்துவிடும். அப்படி நிகழாத வண்ணம் தன் உள்ளத்தை ஆற்றுப்படுத்த அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார் மாமன்னர்.

ஆனால்... நிகழ்ந்த விஷயங்கள், தெரியவந்த தகவல்கள் அனைத்தும் அன்புக்கு உரியவர்களையும் பகைவராய் - துரோகிகளாய் பார்ப்பதற்கு அல்லவா தூண்டுகின்றன.

சூட்சுமங்களைத் தன்னுள் பொதிந்திருக்கும் பெருவிரல் அளவிலான இரண்டு தாரு லிங்கங்கள். சூட்சுமத்தின் திறவுகோலாக ஒரு நாகக் கணையாழி. பொங்கிதேவியிடம் கைப்பற்றிய இந்தப் பொருள்களே அவரின் சிந்தைக்குள் புகுந்து அலைக்கழித்துக்கொண்டிருந்தன.

விரலில் அணிவது போன்று கணையாழியை அந்த லிங்கங்கங்களின் பாணத்தில் பொருத் தினால், பார்ப்பதற்கு நாகாபரணக் கிரீடம் பொருத்தியது போலிருந்தது. ஆனால் மாமன்னர் அத்துடன் நிற்கவில்லை!

லிங்கம் ஒன்றின் சிரசில் பொருத்திய நாகக் கணையாழியை அவரையும் அறியாமல் சற்றே திருகிவிட, அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆவுடைப்பாகத்திலிருந்து மிக மெல்லியதான சிறு வெண்பட்டுத் துணுக்கொன்று நீண்டது. அதை வெளியெடுத்து விரித்தபோது, அந்தத் துணி இரண்டு விரற்கிடை அளவில் இருந்தது. ஆனால் சில சங்கேதக் குறிகள், அவற்றை இணைக்கும் கோடுகள் என அதில் திகழ்ந்தவை போர் வியூகத் திட்டங்களாகத் தென்பட்டன.

ஏன் இந்தத் திட்டம், இந்தத் திட்டத்துக்குக் கர்த்தாக்கள் யாரென அவர் யோசித்ததன் விளைவு... பேரமைச்சர், பாண்டிமாதேவியார், அவரைச் சார்ந்த பொங்கிதேவி, இளங்குமரன் ஆகிய அனைவரின் மீதும் மாமன்னருக்குச் சந்தேகம் எழுந்தது!

காரணம்... கடந்த நாள்களில் வைகை தீரத்தில் நடந்துமுடிந்த களேபரங்கள், அவ்வேளையில் பாண்டியர் படையின் அணுகு முறைகள், தொடர்ந்து வனப்புறத்தில் திடுமென தம்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல், குலச்சிறையார் மிகச் சரியாய் அந்தத் தருணத்தில் வந்து அந்தத் தாக்குதலை எதிர்கொண்டு முறியடித்த விதம் ஆகிய அனைத்தும் வெண்பட்டுத் துணியில் பொதிந்திருந்த சூட்சுமங்களோடு மிகத் துல்லியமாகப் பொருந்தின!

இந்த லிங்கங்களை மாமன்னர் கைப்பற்றியது பொங்கிதேவியிடம் இருந்து. அவளோ பாண்டிமாதேவியாரைச் சேர்ந்தவள். எனில், இந்தத் திட்டங்களுக்குக் கர்த்தா பாண்டிமா தேவியாரா? அவர்தான் எனில், அவரின் இந்தச் செயல்பாடுகளுக்குக் காரணம் என்ன?

சிவ மகுடம்! - 88

இக்கேள்விக்கும் இதுபோன்று தன்னுள் எழுந்த இன்னும்பல வினாக்களுக்கும் விடை தெரியவேண்டும் எனில், வெண்பட்டுத் துணுக்கின் மையத்தில் பிரதானமாகக் குறிப்பிடப்பட்டிருந்த அந்த விநோத மகுடம் வசப்பட வேண்டும்.

அப்படி அதை வசப்படுத்த - இளங்குமரன் சொன்ன விவரப்படி, அவன் குறிப்பிட்ட இடத்துக்குப் படையையும் ஏவியிருந்தார் மாமன்னர். இளங்குமரன் சொன்னது உண்மையெனில், இந்நேரம் தனது மெய்க்காவல் படை அந்த மகுடத்தைக் கைப்பற்றிக்கொண்டு அரண்மனை நோக்கி வந்துகொண்டிருக்கும்.

இப்படியான சிந்தனையோடு மெய்க்காவல் வீரர்களையும் அவர்கள் எடுத்து வரும் மகுடத்தையும் எதிர்பார்த்து மாமன்னர் காத்திருக்க, அவர் சற்றும் எதிர்பாராத நபர்கள் அரண்மனை மாளிகைக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

உலகின் தலைசிறந்த பேரரசின் அதிகார மையமாகவும், ஒருமுறை தரிசிப்பதற்கேனும் வாய்ப்பு கிட்டாதா என வடபுலத்து மன்னர்கள் பலரையும் ஏங்கவைத்திருக்கும் மாமதுரையின் மைய பீடமாகவும் திகழ்ந்த பாண்டியரின் அந்த அரண்மனை மாளிகையில் அவர்களுக்கு மட்டும் எவ்வித தடையோ சோதனைகளோ கிடையாது. அதேபோல், பேட்டி நேரம் குறித்த வரையறையும் இல்லை.

மாமன்னர் மந்திராலோசனையில் இருந்தாலும்கூட, அதை ஒத்தி வைத்துவிட்டு, இவர்களை வந்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்குப் படைத்தவர்கள்.

ஆம்! வெள்ளுடை தரித்த... தோற்றத்தில் துறவிகளாகத் தெரிந்த அந்த நபர்கள் ஒருவித அலட்சியப் பார்வையோடு காவல் கட்டுகளை யும், வீரர்களையும், பணிப்பெண்களையும், கடந்து மன்னர் இருக்கும் இடத்தை அடைந் தனர். மாமன்னர் அவர்களைப் பணிவுடன் வணங்கி வரவேற்றார். ஆனால் அவர்களோ, சம்பிரதாயம் கருதியும் பதில் வணக்கம் செலுத்தவில்லை; அவர்களில் எவரும் கரம் உயர்த்தி ஆசி வழங்கவும் வில்லை.

மட்டுமன்றி, மாமன்னரின் அனுமதி எதுவும் தேவையில்லை என்பதுபோல், மிக்க உரிமையோடு அங்கிருந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவர் தமது இயல்புப்படியே கரகரப்பான குரலில் பேசத் தொடங்கினார்.

சிவ மகுடம்! - 88

``மன்னர் மன்னா! சொல்லத் தகாத தீமை வந்துவிட்டது. சைவ வேதியர்கள் நம் மதுரமா நகரில் கூட்டமாகத் திரண்டுள்ளதை நாங்கள் கண்டோம். அந்தத் தீட்டு ஏற்பட்டதால் கண்டு முட்டுக்கு ஆளோனோம்’’ அவரின் குரலில் ஒருவித பதற்றம் தொனித்தது.

ஏற்கெனவே தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் குறித்து மிகுந்த ஆதங்கத்துடன் இருந்த மாமன்னருக்கு, வந்தவர்கள் சொன்ன விஷயம் மேலும் ஆற்றாமையை உண்டு பண்ணியது.

சீர்காழியைச் சேர்ந்த கூட்டம் ஒன்று மதுரையில் பிரவேசித்திருப்பது குறித்து அவருக்கும் ஏற்கெனவே தகவல் வந்து சேர்ந்திருந்தது. இப்போது இந்த வெள்ளுடைக் காரர்களும் அதையே கூறிட, `இதுவும் அந்தத் தாரு லிங்க வியூகத்தில் ஒன்றாக இருக்குமோ’ எனும் எண்ணம் எழுந்து, அவரை ரணப்படுத்தியது.

எனினும் தன் உணர்ச்சியை வெளிக்காட்டதவராக ``யானும் கேட்டுமுட்டுக்கு ஆளானேன்’’ என்று பதிலுரைத்த மாமன்னர், ``வந்திருப்பவர்கள் யார் யார் என்று அறிய முடிந்ததா?’’ என்றும் ஒரு கேள்வியை வந்தவர்களிடம் முன்வைத்தார்.

இந்தக் கேள்விக்கு மற்றொருவர் பதிலுரைத்தார்: ``அரசர் பெருமானே! ஆத்தி மாலையும் வெண்கொற்றக் குடையும் தவழும் சோழமண்டலத்தில் வளம் மிக்க ஓர் ஊர் சீர்காழி. அங்கு ஓர் அந்தணச் சிறுவன். சூலதாரியான சிவனிடத்து ஞானம் பெற்றவனாம். எங்களை வாதப் போர் புரிந்து வெல்வதாகச் சூளுரைத்து வந்துள்ளான். முத்துச் சிவிகையில் வந்துள்ள அவனுடன் அவனைச் சேர்ந்த மேலும் பல அடியார்களும் உள்ளார்கள்’’ என்றார்.

அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னது சீர்காழிப் பிள்ளையாம் நம் திருஞான சம்பந்தப் பெருமானையே. அவரையும் அவரின் அடி யார்களையும் கண்டதால் கண்டுமுட்டுக்கு ஆளாகி விட்டார்களாம்!

இதுபற்றிய விவரத்தை ஏற்கெனவே செவிமடுக்க நேர்ந்ததால் தானும் கேட்டு முட்டுக்கு ஆளானேன் என்று மன்னர் உரைத் ததும் அவர்களுக்குள் உள்ளூர சிறு மகிழ்ச்சி.

ஆம்! அவர்களைப் பொறுத்தவரையிலும் சிவனடியார்களைக் காண்பது தீட்டு - கண்டு முட்டு; சைவம் குறித்த விஷயங்களைச் செவிமடுப்பது தீட்டு - கேட்டுமுட்டு. இந்த வழக்கம் சமணத்தில் உண்டு. மன்னனைக் காண வந்தவர்கள் சமணம் சார்ந்தவர்கள்; மாமன்னரும் தங்களின் தத்துவதைச் சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொண்டவர்கள்.

மாமன்னர் அவர்களிடத்து மிகுந்த பக்திகொண்டிருந்தபடியால் மிக்கப் பணிவுடன் மீண்டும் கேட்டார்: ``இப்போது நாம் என்ன செய்யவேண்டும்?’’

``அரசே! அந்தச் சிறுவனுக்கு நாம் வன்முறையாக எந்தச் செயலும் செய்யவேண்டாம். அவன் தங்கியிருக்கும் மடத்தைச் சேருமாறு வித்தை செய்து மந்திரம் ஓதி, கொடிய நெருப்பை ஏவுவோம். அதற்கு அஞ்சி அவன் இந்த நகரத்தைவிட்டே போய் விடுவான்!’’

இங்ஙனம், படுபாதகமான எண்ணத்துடன் வந்து தங்களின் திட்டத் தைச் செயல்படுத்த மன்னவரையும் துணை சேர்க்கும் முனைப்பில் இவர்கள் ஈடுபட்டிருந்த வேளையில், அங்கே அடியார்கள் ஏற்றிவைத்த அகல் விளக்குகளால் மிகவும் பிரகாசமாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது திருமடம்!

மிக நிறைவாய் திருநெற்றியில் விபூதியைப் பெருமகிழ்வோடு அணிந்த ஞானப் பிள்ளையோ `ஓம் நமசிவாய!’ என்று பஞ்சாட்சரத்தைப் பரவசத்தோடு ஓதியது!

ஆம்... ஐந்தெழுத்தே ஆதி மந்திரம். அது ஒலிக்கப்படும் இடத்தில் வேறு எந்த மந்திரத்தின் ஆற்றலும் செயலற்றுப் போகும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?!

- மகுடம் சூடுவோம்...