மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவ மகுடம்! - 63

சிவமகுடம் - சரித்திரக் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - சரித்திரக் கதை

சமயமும் சரித்திரமும் சங்கமிக்கும் திருக்கதை!

வணிகர் சொன்ன தகவல்!

இறைவருக்குச் சூட்டப்பட்டுப் பிரசாதமாகப் பெற்றுக் கொண் டிருந்த பவளமல்லிப் பூ ஒன்றை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தார் வாகீசப் பெருமான். எட்டு இதழ்களுடன் கூடிய அந்தக் கோட்டுப்பூ வகை மலர், அன்று ஏனோ அதிகம் மணப்பதாகத் தோன்றியது அந்தப் பெருமகனார்க்கு.

இறைவனின் திருமேனியைத் தொட்டதால் பூவுக்கும் மேன்மை கிடைத்துவிடுகிறது. இந்தப் பூவைப் போன்றதுதானே மனிதர்களின் ஆத்மாவும். புண்ணியம் சேர்த்தவையே இறைவனைச் சேர்கின்றன. மற்றவை வீணாக அல்லவா அழிந்து போகின்றன.

`ஆகாயப் பெருஞ்சுடராம் ஆதவனை அடைய விரும்பிய இளவரசி ஒருத்தி, தனது விருப்பம் நிறைவேறாமல் போனதால் தீயில் பாய்ந் தாளாம். அந்தச் சாம்பலிலிருந்து முளைத்தெழுந்ததாம் பாரிஜாதம் எனும் பவளமல்லிகை விருட்சம்’ என்று கதை சொல்லியிருக்கிறார், தமக்கை திலகவதியார்.

தீயில் புடம்போட்ட பொன் மேன்மையுறுவதுபோல, அந்தப் பெண்ணும் பேறுபெற்றாள் போலும். இதோ... அவளின் சாம்பலில் தோன்றியதாய்ச் சொல்லப்படும் பவளமல்லியின் மலர்கள் பொன்னார்மேனியை அல்லவா அலங்கரித்து மகிழ்கின்றன.

மரிக்கொழுந்து, ஜவ்வாது, புனுகு சேர்ந்த விபூதியின் மணமும் இணைந்திருந்த அந்தச் சிவப்பிரசாத மலர்... பாண்டியநாட்டு எட்டி வணிகர் சொன்ன தகவலால் புண்பட்டுப் போயிருந்த வாகீசரின் மனத்துக்கு மருந்திட்டது என்றே சொல்லலாம்.

ஓரிரு நாள்களுக்கு முன்னதாக திருத்தண்டலையில் அவர்கள் தங்கியிருந்தபோது, குதிரையில் வந்துசேர்ந்த எட்டி வணிகர் மதுரை யில் நிகழும் அவலத்தைப் பகிர்ந்தது நினைவுக்கு வந்தது.

``ஆலவாயிலில் அமணர்களின் ஆதிக்கம் மிகுந்துவிட்டது பெருமானே. அங்கே ஆலய அணுக்கத்தில் ஒரு சம்பவம். மேனியில் வெண்ணீறு பூசி வந்த அடியவர் ஒருவரை நையப் புடைத்துவிட்டார்களாம். கேட் டால்... `கண்முட்டு’ என்றார்களாம். அடாத செயலைக் கண்டு `சிவ சிவா’ என்று பதறிய பக்தர்களையும் `கேட்டுமுட்டு’ என்று சொல்லி அடிக்கப் பாய்கிறார்களாம்’’

``எந்தையே... எம்பிரானே! என்ன சோதனை இது? சிவத்தால் தமிழும் தமிழால் சைவமும் தழைத்த மதுரை மண்ணுக்கா இந்தச் சோதனை?’’

``ஆம் ஐயனே! மன்னர்பிரானும் தலைநகரில் இல்லை. அதிகாரம் அமண அடிகளார் ஒருவரின் கையில் இருக்கிறது. அவர் சொல்வதே ஆணையாக உள்ளது...’’

``உறுதியாய்ச் சொல்கிறேன்... அவர் அமணராய் இருக்க முடியாது. வேறு எவரோ...’’

``இதற்கெல்லாம் தீர்வு பிறக்குமா சுவாமி?’’

``நிச்சயம் பிறக்கும்... மீனாள் தானாண்ட மண்ணை மாற்றார் ஆள விடமாட்டாள்; அந்தச் சொக்கேசரும் அடியாருக்குத் துணை இருப்பார்... விரைவில் நன்மை நடக்க நாதன் அருள்வார். கவலையை விடுத்துச் சென்று வாருங்கள்.’’

மணிமுடிச் சோழரையும், அவரின் மகள் சோழர்தம் குலக்கொழுந் தாம் மானியின் சிவபக்தியையும் நன்கறிவார் வாகீசர். உறையூரில் நிகழ்ந்த போரும், அதைத் தொடந்து மானி பாண்டியனின் கைப்பற்றி பாண்டியப் பேரரசியானதும் வாகீசருக்குத் தெரியும்.

சில நாள்களுக்குமுன் அந்தப் பேரரசி சோழ தேசத்தின் எல்லை வரையிலும் வந்து சென்றதையும், பேரரசியாரின் அணுக்கத் தொண்டர்கள் சிலர் தங்களைப் பின்தொடர்ந்து சேதி சேகரிக்கும் விஷயத்தையும் நாவுக்கரசப் பெருமான் அறியாமலில்லை. எல்லா வற்றுக்கும் மேலாக எட்டி வணிகர் சொன்ன தகவலும் சேர்ந்து கொள்ள... மதுரை மாநகரம் ஏதோ பெரும் அரசியல் கொந்தளிப்பில் சிக்கிக்கொண்டிருக்கிறது; அதை மீட்க பாண்டியப் பேரரசி பெரும் முனைப்பில் இருக்கிறார் என்பதை அவரால் உணர முடிந்தது.

பாண்டிய மண்ணுக்கு அரசியல் கொந்தளிப்புகளும் குழப்பங்களும் புதிதல்ல; பல தருணங்களில் பல்வேறு சூழல்களில் இவ்வாறு புதைந்து மீண்டிருக்கிறது அந்த மாநகரம். இப்போதும் மீளும் என்ற நம்பிக்கை அவருக்குள் எழுந்தாலும், குழப்பத்துக்குக் காரணமானவர்கள் எத்தகைய கொடூரர்கள் என்பதை அவர் அறிவார். ஆகவேதான் அவரின் மனம் மிகவும் பரிதவித்தது.

அவரைப் பொறுத்தவரையிலும் சிவக்குழந்தைகள் எங்கும் எதன் பொருட்டும் துயரப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாது. பெரும்பேறு தரும் திருநீறு அணிய முடியாது; சிந்தை மகிழ ஐந்தெழுத்தை ஓதமுடியாது எனில்... அது எவ்வளவு கொடும் நிலை. இதை எண்ணி மிகவும் கலங்கினார் அவர்.

இறையருளால் காஞ்சி மீண்டது. மதுரை மீளுமா..?

தன்னுடைய இந்தச் சிந்தனைகள் கருத்துகள் அனைத்தையும் உடனிருந்த சீர்காழிப் பிள்ளையிடமும் கொட்டித் தீர்த்துவிட்டார் வாகீசப் பெருமான். பதிலுக்கு ஞானப்பிள்ளை ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்தது!

அர்த்தசாமப் பூசைவேளை நெருங்கிக் கொண்டிருக்க, அதைத் தெரிவிக்கும் விதமாய் ஓங்கி ஒலித்தது ஆலயமணி. இருள் கொண்ட நெஞ்சங்களில் ஒளியேற்றும் விதமாய், பெருங்கவலை எனும் பிணி கொண்டிருக்கும் மாந்தர்களின் மருளகற்றும் விதமாய் முழங்கிய அந்த மணியோசையையும் மீறி ஒரு குரல் கேட்டது.

`திருக்களர்’ எனும் அந்தப் புண்ணியப்பதியில் தலவிருட்சமான பவளமல்லி மரத்தருகில் அமர்ந்திருந்த சிவப்பழம் மெள்ள எழுந்தது. காண்போரெல்லாம் சிலிர்ப்பில் கண்கசிந்து வணங்கித் தொழும் வாகீசர் எனும் அந்தப் புண்ணியர் தளர்நடையிட்டுக் கருவறையை நோக்கி நகர்ந்தார்.

நீருளார் கயல் வாவி சூழ்பொழில்
நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவனே
யொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே...


கருவறையில் தீபவொளியில் தகதகத்துக்கொண்டிருந்த லிங்கத் திருமேனியரை - களர்முலைநாத ஈசுவரரைக் கண்ணார தரிசித்து `சீகாமரம்’ பண் சேர்த்து, உளம் உருகப் பாடிக்கொண்டிருந்தார் சீர்காழிச் சிவக்கொழுந்து.

குளிர் நீரில் திகழும் கயல்கள் நிறைந்த வாவிகளையும், வயல்களை யும், நெருங்கிய மதிகளுடன் திகழும் மாளிகைகளையும், தேரோடும் வீதிகளையும் கொண்ட - பெருவிழாக்கள் பல நிகழும் திருக்களர் எனும் இவ்வூரில் குடியிருக்கும் ஈசனே, உன்னை நாடி வந்து சேர்வோ ருக்கு அருள்புரிவாய் என்ற கருத்துத் துலங்க, அந்த ஈஸ்வரனைப் பாடித் தொழுதார் திருஞானசம்பந்தப் பெருமான்.

அந்தப் பதிகம், ஒருவகையில் நம் வாகீசரின் கலக்கத்துக்குத் தீர்வும் மருந்தும் நல்குவதுபோல் இருந்தது; அவரின் மனம் குளிர்ந்தது!

உண்மைதானே! அனைத்துக்கும் கர்த்தாவாக சிவபிரான் திகழ, அவன் ஆட்டுவித்தபடி ஆடும் கருவிகளான நாம் கவலைகொள்வது வீண் அல்லவா?

ஆம்! இறை ஏற்கெனவே தன் ஆடலைத் தொடங்கிவிட்டிருந்தது. பாண்டிய மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி மீன் வலையில் சிக்கிக் கொண்டதும் அதன் விளைவுகளில் ஒன்றே எனலாம்!

சிவ மகுடம்! - 63

`திக்குப்பரி அட்ட பைரவர்’

மாலவன் ஏவிய சக்கரப்படை போல் திசையெங்கும் சுழன்றது பேரமைச்சரின் வீரவாள். அரை நாழிகைப் பொழுதுகூட அதன் தாக்கு தலைத் தாக்குப்பிடிக்க இயலவில்லை, அவரை எதிர்த்தவர்களால்.

கண்ணிமைக்கும் பொழுதில் வஞ்சகமாய் மறைந்து வந்து, மீன்வலையால் பேரரசரைச் சிறைபிடித்ததுடன், அவரைக் கொல்ல வும் துணிந்த அந்தக் கயவர்களைக் கொன்றுபோட்டுவிடத் துணிந்தார் பேரமைச்சர் குலச்சிறையார். இதுவரையிலும் எந்தவொரு சமர்க் களத்திலும் காட்டாத ஆவேசத்தைக் காட்டினார் அவர்.

திக்குப்பரி அட்டப் பைரவரும் ஓருருவில் வந்து சண்டமாருதம் செய்வதுபோல் தோன்றியது, அவரை எதிர்கொண்ட மறவர்களுக்கு. உள்ளத்தில் பற்றிக் கொண்ட பயம் உடலை வலுவிழக்கச் செய்ய, விரைவில் அவர்களின் ஆயுதங்கள் தெறித்துவிழுந்தன.

நிராயுதபாணியாய் மண்டியிட்டு வணங்கி விட்டுவிடும்படி வேண்டுவதுபோல் கைதொழுதார்கள். ஓரளவு சீற்றம் குறைந்த குலச்சிறையார் தன் வீரவாளின் நுனியால் அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திரையையும் விலக்கினார். முகத்திரை விலகி அவர்களின் திருமுகங்கள் வெளிப்படவும் அதிர்ந்துபோனார் அந்த மாவீரர்.

``ஆ... நீங்களா... துரோகிகளா...’’

அந்தப் பெருங்காடு அதிர சத்தமிட்டார் பேரமைச்சர்!

இங்கே இவ்வாறெனில் மாமதுரையில்... தனக்கு வந்துசேர்ந்த ரகசியக் கட்டளைக்கு உயிர்கொடுத்துக் கொண்டிருந்தார் பேரரசியார்.

ஆம்! அவர் ஆணைப்படி பாண்டியப் பேரரசரரின் `முனையெதிர் மோகர்’ சேனை துடித்தெழுந்து வியூகம் கண்டது!

- மகுடம் சூடுவோம்...