Published:Updated:

சிவமகுடம் - 67

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

சிவம் தந்த மாயக் காட்சிகள்!

சிவமகுடம் - 67

சிவம் தந்த மாயக் காட்சிகள்!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

னம் எனும் சூட்சுமம் நமக்குள் நிகழ்த்தும் அரசாட்சி வரையறை இல்லாதது. வர்ணனைகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது. பேரண்டத்தின் சிறு வடிவப் பொரியாய்த் திகழும் பிண்டமாகிய நம் தேகத்தில், ஓர் உருவமற்றதாய், இயற்கையாகிய இறை பொதிந்து வைத்திருக்கும் ரகசியப் பொக்கிஷம் அது.

முன்வினையைச் செயல்படுத்த ஏதுவாய் சிந்தையை நமக்குள் விதைக்கும் இறைவனின் அந்தக் கருவி, மிகவும் அமானுஷ்யமானது. அதன் திறனறிந்து அடக்கியாள்பவன் புண்ணிய புருஷனாகிறான். ஆனால், அவ்வளவு எளிதில் மனம் கட்டுக்குள் வருவதில்லை!

காத்திருந்து கயமைகள் புரிந்தால் கயற்கொடியைத் தாழச் செய்யலாம் என்று அடிகளாரை நினைக்கவைத்ததும், மங்கையர்க்கரசியாரையே துரோகியாகக் கருதுகிறார் மாமன்னர் என்று பேரமைச்சருக்குள் ஓர் எண்ணத்தை விதைத்ததும், `மாமன்னரின் திட்டம் இதுதான்’ என்று உள்ளதை உள்ளபடியே யூகித்து அறியும் நுட்பத்தைப் பாண்டிமா தேவியாரிடம் வளரச் செய்ததும் அவரவர் மனமே அல்லவா!

சில தருணங்களில் நம்மைப் பித்தனாக்கியும் வேடிக்கைப் பார்க்கும் மனம், பழையாறை அரண்மனையில் மணிமுடிச் சோழரைத் தன்னளவில் ஒரு குழந்தையாக்கிவிட்டிருந்தது. காரணம், அவர்தம் மகளின் பொருட்டு எழுந்த பெருமிதமே!

வில்வப்பொடியும் பச்சிலையும் கலந்த திருநீற்றைச் செஞ்சந்தனத்தில் சேர்த்துக் குழைத்து மேனியெங்கும் பூசிக்கொள்வது மங்கையர்க்கரசியாரின் வழக்கமாகிவிட்டது. ஆம்! அவர், நாதன் நாமம் சொல்லி நெற்றியில் விபூதி அணியாத நாளே இல்லை. ஆனால், திருமணத்துக்குப் பின் புக்ககம் புகுந்தபின் அதற்குத் தடை ஏற்படுமோ என்று கலங்கினார்.

அவரின் நாயகனும் பாண்டிய மாமன்னருமான மாறவர்மன் அரிகேசரி, சமணம் சார்ந்திருந்தார். விபூதி அணிவோரைக் கண்டால் `கண்டு முட்டு’ என்பது அவர் தரப்பின் கோட்பாடு.

இந்நிலையில், மாமன்னருக்கும் பழுதில்லாமல், சிவச்செல்வமாம் விபூதி அணிவதையும் கைவிடாமல் இருக்க பேரரசியார் மேற்கொண்ட உபாயம்தான் இது. சந்தனத்துடன் விபூதியைச் சேர்த்துக் குழைத்து மார்பிலும் மேனியிலும் பூசிக்கொள்வார்.

மரிக்கொழுந்தும் ஜவ்வாதும் பச்சிலையும் கலந்து எழும் நறுமணமே அவரின் வருகையை அறிவித்துவிடும். ஆக, தன் திருமகளின் அருகில் இருக்கும் தருணத்திலும் அவருடன் உரையாடும் பொழுதுகளிலும் சாட்சாத் உமையம்மையின் அருகில் இருப்பதாகவே உணர்வார் மணிமுடிச் சோழர்.

இப்போதும் அப்படித்தான்... ரகசியச் சூட்சுமங் களை உடைத்துச் சொல்லிவிட்டு, சிவபூஜையில் திளைத்திருக்கும் மகளை மகேஸ்வரியாகவே கண்டு, ஒரு குழந்தைபோல் உள்ளத்தில் குதூகலித்துக்கொண்டிருந்தார் சோழர்பிரான்.

சிவமகுடம்
சிவமகுடம்தடமயில் மடமென் சாயல் திகழ, செந்துவர் வாயினால்... பண்ணின் நேர்மொழியாளாய்ப் பதிகம் பாடி, சேயிழை திருநுதல் செல்வியாம் தன் மகள், கருங்குழல் கற்றை மேல் கரம் குவித்துச் சிவனடியை வணங்கும் காட்சியைக் கண்டு மெய்யுருகிக்கொண்டிருந்தார் சோழர்.

`இக்குலமகளைப் பெற்றதால் பெரும் பெருமை பெற்றுவிட்டது இந்தப் பழையாறை’ என்றும் பேருவகைக் கொண்டு கண்ணீர் சொரிந்தார்.

பாண்டிமாதேவியாரோ பூசனைகளை முடித்துச் சிவதியானத்தில் லயித்துவிட்டிருந்தார்.

தாரு லிங்கங்கள், சுரங்க ரகசியம், மாமன்னர் இட்டிருந்த ஓலைச்சுருள் கட்டளை ஆகிய ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றுடனும் பிணைத்து, தாம் பாண்டிய தேசத்தின் பொருட்டு யூகித்து வைத்திருக்கும் வியூகத் திட்டங்களைச் சிவப்பரம்பொருளிடம் மனதாரச் சமர்ப்பித்து, அந்த இறைவனின் பதிலுக்காகக் கண்மூடிக் காத்திருந்தார். திட்டங்கள் யாவும் சரியே என்பது போல் அவரின் மனக்கண்ணில் சில காட்சிகளை விரித்தது இறை!

பேரரசியார், திருமாலிருஞ்சோலை அடிவாரத் தில் நிற்கும் பெரும் சேனையைக் கண்டார். மனிதர்கள் சிலரின் வெள்ளாடைகள் தீப்பற்றி எரிய, ஆகிருதியான அவர்களின் தேகத்தைக் கறுநிறக் கவசங்கள் மூடிக் கொண்டன. கனலைக் கக்கும் வெறிப் பார்வையுடன் கூடிய அவர்களின் சிவந்த கண்களும் முகக் கவசத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டன.

வேறுவிதமான விநோதக் காட்சிகளும் தோன்றின. புலி இலச்சினை கொண்ட வீர மார்பில் குறுவாள் ஒன்றின் கூர்முனை பதிவதைக் கண்டார். பெண்களும் வாள் வீசிப் போரிடக் கண்டார். புஜத்தில் கயல் இலச்சினை கொண்ட பரதவர்கள் வலை வீச, அவர்களின் வலைகளுக் குள்ளே மீன்களுக்குப் பதில் சில மர்ம மனிதர்கள் அகப்படுவதை கண்டு வியந்தார்!

சட்டென இந்தக் களக் காட்சிகள் மறைந்துவிட, சிறைக்காட்சிகள் விரிந்தன. சிறைக்கொட்டடியில் பரிச்சயமான திருமுகங்களைக் கண்டார். அங்கே வதைபடுவதும் வதைப்பதும் தம்மால் அறியப்பட்டவர்களே என்பதையும் அவருக்கு உணர்த்தின அந்தக் காட்சிகள்.

சட்டென்று ஒரு புகைமூட்டம். அந்தப் புகைத் திரை விலகினால், மாமன்னர் அரியணையில் இருக்கிறார். அவரின் திருமுடியை அலங்கரித் துக் கொண்டிருந்தது சிவமகுடம்; அருகில் ஒரு பாலகன்!

சட்டென்று வீசிய காற்றினால் ஆடிய சாளர மணிகள் தேவியாரைக் கண்விழிக்கச் செய்தன. அவர் விழித்த நேரம், லிங்கத் திருமேனியிலிருந்து சரக்கொன்றை மலர் ஒன்று சட்டென்று உதிர்ந்து விழுந்தது. மனம் மகிழ்ந்தார் பாண்டிமாதேவியார்.

ஆம்! நடக்கும் - நடக்கப்போகும் சம்பவங் களைக் கோத்துப் பார்த்து, அவர் என்னென்ன திட்டங்கள் தீட்டியிருந்தாரோ, யூக - வியூகங்கள் கொண்டிருந்தாரோ, அவை அத்தனையும் சரிதான் என உணர்த்துவது போன்ற மனக் காட்சியைக் கொடுத்ததுடன், `நிறைவு சுபமே’ என்று பூ வாக்கும் தந்துவிட்டார் சிவபிரான்!

இப்படியான சுப சகுனத்தைப் பாண்டிமாதேவியாருக்குப் பழையாறை எனும் அந்தப் பண்டைய நகரம் தந்துகொண்டிருக்க, மறைக்காடு எனும் திருநகரமோ தன் மக்களின் மத்தியில் அடியார் மூலம் பேரதிசயம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தது!

அதிசயம் நிகழ்ந்தது!

திருமறைக்காட்டு ஈசனின் திருவுளப்படியே அந்த அருள்சம்பவம் நிகழ்ந்தது எனலாம்.

திருக்கயிலாய சிவகணங்கள் போன்று அடியார் பலரும், ஊர்மக்களும் திருக்கோயி லின் முன் திரண்டு நின்றிருந்தார்கள். அனைவரின் கண்களும் பன்னெடுங்காலம் மூடப்பட்டுக் கிடக்கும் பெருங்கதவு வாயிலையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.

கூட்டத்தைவிட்டு சற்று விலகி நின்றிருந்த இருவர் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்...

``இளங்குமரா! இந்த மக்களின் நம்பிக்கை பலிக்குமா, பொய்க்குமா?’’

``நிச்சயம் பலிக்கும்... இதில் தங்களுக்கென்ன சந்தேகம் கோச்செங்கணரே?’’

இளங்குமரன் இப்படிக் கேட்டதும் புருவத்தை நெரித்தபடி சில கணங் கள் அவனையே உற்று நோக்கிய சோழப் பெருஞ்சேனை நாயகனான கோசெங்கண், பின்னர் இதழ்களில் குறுநகை துலங்கச் சொன்னான்...

``சந்தேகம் இல்லை இளங்குமரா... சஞ்சலம்! நெடுங்காலம் பூட்டிக்கிடக்கும் கதவைத் திறந்தால்... எங்கே, கோபுரம் இடிந்துவிழுமோ என்ற அச்சத்தில் மன்னர்களும் வல்லோர்களும் இம்முயற்சியைக் கையில் எடுக்காமலேயே விட்டு விட்டார்கள்.

புராணங்கள் சொல்வோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்... மறைகளே பூட்டி வைத்தக் கதவு இது என்று. ஆக, இந்த எளியவர்கள் பதிகம் பாடி திறக்கமுடியுமா? ஒருவேளை அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால்... பரமனின் மீதும் பதிகங்களின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சரியும் அல்லவா... ஆகவேதான் மனம் சஞ்சலப்படுகிறது!’’

``எவ்வித சஞ்சலமும் தேவையில்லை. இந்த அடியவர்கள் உருவத்தில்தான் எளியோர்...’’

``வல்லமையில் பெரியோர் எனச் சொல்ல வருகிறாயா...?’’

இளங்குமரன் மெள்ள சிரித்துவிட்டுச் சொன்னான்...

``இல்லை தளபதியாரே... உள்ளத்தால் பெரியவர்கள் - உள்ளத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையால் சிறந்தவர்கள் எனச் சொல்ல வந்தேன்!’’

``புரியும்படி சொல்.’’

``உலக மாதாவிடமே ஞானப்பால் உண்டவர் இங்கு நின்று கொண்டிருக்கும் சிவக் கொழுந்து. பொற்றாளமும் முத்துச் சிவிகையும் சிவப் பரிசாகப் பெற்றவர். சாட்சாத் குமரவேளின் அம்சம் என்பார்கள் அவரை.0

அதோ, பழுத்தப் பழமாக திருமேனியைக் குறுக்கி தளர்நடையுடன் வருகிறாரே... வாகீசர்... அவர் நம் பரமனுக்கு மிகப் பிரியமானவர். பகை வர்களால் அவர் அனுபவித்த கொடுமைகள் பல. அனைத்தையும் சிவனருளால் கடந்தவர்.

வாகீசரின் சிவத் திருப்பணியை அடக்க நினைத்தவர்கள் இவரைக் கற்பலகையில் பிணைத்துக் கடலில் வீசினார்கள். அப்போதும் `கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசி வாயவே’ எனப் பாடி பரமனருள் பெற்றுக் கரைசேர்ந்தவர்...’’

இவர்கள் இங்ஙனம் பேசிக்கொண்டிருந்த போதே வாகீசரின் தெய்வக் குரலில் எழுந்த பதிகம், கணீரென ஒலித்தது அங்கே. தொடர்ந்து அந்தப் பேரதிசயமும் நிகழ்ந்தது!

- மகுடம் சூடுவோம்...