Published:Updated:

சிவமகுடம்-74

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்!

சிவமகுடம்-74

மங்கையர்க்கரசியார் சரிதம்!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

அடிகளாரின் எதிர் வியூகம்!

`புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்’ என்று பரிபாடலும் `மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்’ என்று மதுரைக்காஞ்சியும் சிறப்பித்துப் போற்றும் மதுரை மாநகரக் கோட்டையின் மகுட மாடங்களில், பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தன கயற்கொடிகள்.

எப்போதும் குஞ்சுகளைத் தன் பார்வையில் வைத்துப் பரிபாலனம் செய்யும் மீனைப் போன்று, நான்மாடக்கூடலையும் அதன் மக்களையும் தன் விழிக்குள் வைத்து ரட்சிக்கும் அன்னை மீனாளின் புகழை, இடைவிடாமல் பாடிக்கொண்டே இருக்கும் பாவனையுடன், காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன அந்தத் துவஜங்கள்!

சிவமகுடம்-74

ரண்மனை மாளிகையில், அப்படியான கொடி ஒன்றை உச்சியில் தாங்கித் திகழும் ஒரு மகுட விதானத்தின் கீழ் அமைந்த மண்டபத்தில், தன் சீடர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஆழ்ந்திருந்தார் அடிகளார். அறம் மழுங்கி, அதர்மத்தின் சினம் நிறைந்த அவரின் நெஞ்சத்தைப் போன்றே, ஒளி குறைந்து இருள் நிறைந்து திகழ்ந்தது அந்த மண்டபம்.

போனால் போகட்டும் என்று எரிய விடப்பட்டிருந்த சிறியதொரு பந்தம் தந்த மங்கிய வெளிச்சத்தில், அடிகளார் மற்றும் அவர் சீடர்கள் தங்களின் திருமுகத்தை மட்டும் ஓரளவு தெளிவாகப் பார்த்துக்கொள்ள முடிந்தது. தலைநகர நிர்வாகம் அடிகளாரின் வசம் என்பதால், அங்கு அவரது அனுமதியின்றி காற்றும் நுழையமுடியாது. என்றாலும், தங்கள் செவிகளுக்கு மட்டுமே கேட்கும் அளவில் ரகசியக் குரலிலேயே பேசினார் அடிகளார்.

``அடிமைகளே! நான் சொல்லப் போவதை நன்றாகக் கேட்டுக் கொள்ளுங் கள்...’’

வழக்கமாகத் தன் சீடர்களை அழைக் கும் செல்லப்பெயரை உச்சரித்தே பேச்சைத் தொடங்கினார் அடிகளார்.

``எனது யூகம் சரியாக இருந்தால்... இன்று நள்ளிரவு வைகைப் பரப்பில் தாக்குதல் படை தலைகாட்டும். கரையேறுவதற்குள் அவர்கள் மீது பாய கோட்டைக்கு வெளியே காத்திருக்கிறது மதுரையின் சேனை...’’

``அதாவது, கோட்டைக்காவல் பொறுப்பை ஏற்றிருக்கும் மகாராணியார் தலைமையில்... அப்படித்தானே?’’

``இல்லை... இந்தச் சமரில் மகா ராணியாரோ தலைநகர காவல் படை களோ நேரடியாக பங்களிப்புச் செய்யப் போவதில்லை.’’

``ஏன் அப்படி?’’

``ஏனெனில்... சொந்த மக்களை பலி கொடுக்கவோ, பலி எடுக்கவோ அவர் விரும்பமாட்டார்... ஆம்! மதுரையைத் தாக்க வருவதும் தடுக்கச் செல்வதும்... இரு தரப்பும் அவரைச் சார்ந்தவர்களே...’’

``புரியவில்லையே...’’

மீண்டும் செல்லப் பெயரைச் சொல்லிக் கடிந்துகொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு அடிகளாரை ஆளாக்கினான் சீடர்களில் ஒருவன்.

``மடையனே... காவியக் கதை போல் நெடிது பேசிப் புரியவைக்க இது தருணம் அல்ல. இருக்கும் புத்தியை இயன்றவரை கூர்தீட்டி, நான் சுருங்கச் சொல்வதைப் புரிந்துகொள்ள முயலுங்கள்... இல்லையேல்...’’ என்றபடி பற்களை நறநறவென கடித்து, ஏற்கெனவே கோரமாகத் திகழும் தன் திருமுகத்தை மேலும் அகோரமாக்கிக் காட்டினார் அடிகளார்.

சீடர்கள் இருவரும் இடைமறிக்காமல் அவர் சொல்வதைச் செவிமடுக்கத் தயாராயினர். அவர்களுக்குத் தெரியும்... தங்கள் மீதான அபிமானத்தாலோ, தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாலோ, அடிகளார் இந்த ரகசியத்தை விவரிக்கவில்லை.

மனதில், தான் வகுத்திருக்கும் செயல் திட்டங் களைத் தங்களிடம் சொல்வது போல் சொல்லி, அவை சரிதானா என்று சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கிறார் என்று!

அடிகளார் தொடர்ந்தார்...

``மதுரையின் மீது திடீர் தாக்குதலைத் தொடுக்கப் போவது தென்னாட்டுப் பரதவர் படை. அவர்களை முறியடிக்கும் கடமை பாண்டிய சேனைக்கு உண்டு. இருதரப்புமே பாண்டிமாதேவியாரின் பிள்ளைகளுக்குச் சமானம் அல்லவா? ஆகவே, பெருமளவில் உயிர்ச் சேதத்தைத் தடுக்கும் முனைப்பில் இருக்கிறார் பாண்டிமாதேவியார். இந்த இடத்தில் தலைநகரையே தாக்கும் துணிச்சல் பரதவர் படைக்கு எப்படி வந்தது என்று நீங்கள் கேட்க வேண்டும்...’’

அடிகளாரே அனுமதித்ததால், சீடர்களில் ஒருவன் கேட்டான்: ``ஆமாம் எப்படி வந்தது?’’

``அனைத்தும் கூன்பாண்டியனின் செயல் திட்டங்களே...’’

அடிகளார் இப்படிச் சொன்னதும், இயல் பாகவே ஆர்வம் தொற்றிக் கொண்டது... அவரின் அணுக்கத் தொண்டர்களும் களப்பிரர்க் கூட்டத்தின் தலைவர்களுமான அந்தச் சீடர்களுக்கு.

எவர் எவரோடு மோதினால் என்ன... மன்னன் இல்லாத தலைநகரில் கலகம் உண்டானால், அது தங்கள் தரப்புக்குச் சாதகம் அல்லவா? இப்படியான சூழலைப் பயன்படுத்திக்கொள்ள அடிகளார் ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் என்ற ஆவலுடன் செவிப்புலனைக் கூர்மை யாக்கிக் கொண்டார்கள் சீடர்கள்.

சிவமகுடம்-74

``சமீப காலமாகவே, தன் கவனத்தையும் மீறி பாண்டியதேசத்தில் அந்நியரின் ஆளுமையும் சதிராட்டமும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்ற சந்தேகம் கொண்டுவிட்டான் பாண்டியன். அதற்குக் காரணம் நமது ரகசிய நடவடிக்கைகள்.

மன்னன், பேரமைச்சர் ஆகியோரைக் குறிவைத்து அவ்வப்போது நாம் மேற்கொண்ட கொலை முயற்சிகள், சேரப் படையெடுப்பின்போது நம்மை மறைத்துக் கொண்டு பாண்டியசேனை மீது நாம் தொடுத்த திடீர் தாக்குதல்... இப்படி நாம் மேற்கொண்ட காரியங்கள், அவனை உசுப்பியிருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வது யார் என்று அறியாததால், எல்லோர் மீதும் சந்தேகப் பார்வையைப் பதித்துவிட்டான் கூன் பாண்டியன். என் பங்குக்கு நானும் சோழர் தரப்பின் மீதான அவனது சந்தேகத்தை அதிகப்படுத்திவிட்டேன். அதன் பொருட்டு சோழர்குலத் தோன்றலான பாண்டிமாதேவியாரின் ராஜ்ஜிய பாசத்திலும் இயல்பாகவே பெருத்த சந்தேகம் தோன்றிவிட்டது பாண்டியனுக்கு.

சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும் துரோகிகள் யாரென்று ஆதாரத்துடன் துல்லியமாக இனம் கண்டறியவும் சித்தம் கொண்டுவிட்டான் பாண்டியன். அதன் பொருட்டு காய் நகர்த்தல்களைத் தொடங்கினான்.

அதேவேளையில் எல்லைகளைத் தாண்டி சிந்தித்தோமானால்... சாளுக்கியம் எப்போது வேண்டுமானாலும் காஞ்சியின் மீது பாயும் நிலை. காஞ்சி வீழ்ந்தால் சாளுக்கியரின் அடுத்த இலக்கு மதுரைதான் என்பது பாண்டியனின் கணிப்பு.

ஒருவேளை சாளுக்கியர்கள் தெற்கே நகரத் தொடங்கினால், அவர்களைத் தடுக்கும் விதமாக பெரும் சேனை ஒன்றை பல்லவ எல்லைக்கு நகர்த்த வேண்டிய கட்டாயம் கூன்பாண்டியனுக்கு.

அப்படியே ஒட்டுமொத்த சேனையில் பாதியை அங்கே நகர்த்தியும் விட்டான். தன் ரகசிய துரோகிகளை இனம் காணும் தன் திட்டத்துக்கும் இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டான் என்றே சொல்லவேண்டும்.’’

``எப்படி..?’’ ஆர்வம் தாளாமல் இடை மறித்தான் சீடன் ஒருவன்.

அடிகளாரும் வியூகத் திட்ட விவரிப்பில் இருந்ததால், இடையில் குறிக்கிட்ட அவனது பிழையைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார்.

``படை நகர்வை முன்னிட்டுத் தலை நகரில் தன் இருப்பைக் குறைத்துக் கொண் டான். மதுரையின் படைபலம் - காவல் பலத்தையும் பெருமளவு குறைத்துவிட்டான். அதிகாரப் பொறுப்புகளைப் பலருக்கும் பிரித்தளித்து, எவரும் எதன்பொருட்டும் துல்லிய முடிவெடுக்க முடியாத நிலையை உண்டாக்கிவிட்டான்.

உதாரணம்... நகர நிர்வாக பரிபாலனம் என் கையில். காவல் பொறுப்பு மகாராணியார் கரங்களில். அதுமட்டுமா? இந்த நிலை குறித்து, தன் மீது மனக் கசப்பில் இருக்கும் பரதவர்படைக்குக் கசியவிட்டு, தன் உளவாளிகள் மூலம் மதுரைக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிட்டதும் பாண்டியனே!’’

``அதாவது, தலைநகரை மிகவும் பலவீனப்படுத்தி, அதைப் பகைவர்களுக்கும் தெரிவித்து, தன்னுடைய துரோகிகளுக்குச் சாதகமானதொரு சூழலை வேண்டுமென்றே ஏற்படுத்தியிருக்கிறான் பாண்டியன். அப்படித்தானே...’’

சீடன் ஒருவன் இப்படிக் கேட்டதும் உள்ளபடியே பெரிதும் மகிழ்ந்தார் அடிகளார். அவனைப் பாராட்டும் விதம் வழக்கத்துக்கு மாறாக அவன் தோளில் தட்டிக்கொடுக்கவும் செய்தார்.

``மிகச் சரியாகக் கணித்துவிட்டாய்... இந்தச் சூழலைப் பயன்படுத்த துரோகிகள் முயற்சி செய்யும் வேளையில், அவர்களை இனம் காண்பதும் சுற்றி வளைப்பதும் சுலபம் என்பது பாண்டியனின் கணக்கு.’’

``ஒருவேளை... இந்த முயற்சி பகைவர்களுக்கோ துரோகிகளுக்கோ சாதகமாகிவிட்டால்... மதுரையை அவர்கள் கைப்பற்றிவிட்டால்... ஏன், பரதவர்களோடு சேரர்கள் இணைந்தால் பாண்டி யனின் நிலை அதோகதி அல்லவா...?’’

``பரதவர் ஒருபோதும் சேரர் தரப்போடு கைகோக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பாண்டி யனின் சமணச் சார்பு நிலையே கசப்பைத் தருகிறதே ஒழிய, தேசத்தின் மீது விசுவாசம் கொண்டவர்கள் அவர்கள்.

மேலும், சமீபத்திய படையெடுப்பு சேரர்களுக்கு எளிதில் எழ முடியாத அடியைக் கொடுத்திருக்கிறது. அத்துடன், வேறொரு குள்ளநரியை முற்றிலும் நீங்கள் மறந்துவிட்டீர்கள்...’’ என்று பேச்சை ஒருகணம் நிறுத்தி, சீடர்களின் முகத்தைக் கூர்ந்து நோக்கி யவர், அந்தப் பெயரை உச்சரித்தார்.

``குலச்சிறை... அமைச்சன் குலச்சிறை எப்போது என்ன செய்வான் என்று எவராலும் யூகிக்க இயலாது...’’

``இப்போது நாம் என்ன செய்யப் போகி றோம். பாண்டியன் எதிர்பார்ப்பது போல் அவனது பொறிக்குள் விழாமல், மதுரையைக் கைப்பற்றுவது எப்படி?’’

``நாம் பதில் காணவேண்டிய வினா இதுதான். பாண்டியரும் பரதவரும் மோதும்போது துரோகிகளும் வெளிப்பட்டு காரியம் ஆற்று வார்கள்... தாக்குதல் தொடுப்பார்கள்... அவர்களை அதாவது நம்மை... அடையாளம் கண்டு துவம்சம் செய்வதுதான் பாண்டியனின் திட்டம். ஆனால், பாண்டியன் எதிர்பார்க்கும் களத்தில் நாம் வெளிப்படப் போவதில்லை.

பாண்டியனின் யூகப்படி, நம்மவர்கள் மதுரையில் களம் இறங்கினால் குலச்சிறை யாரிடம் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. தவிரவும் நம் தரப்பில் உயிர்ச்சேதமும் ஏற்படும். ஆகவே, எவ்வித இழப்பும் இன்றி மதுரையை எளிதில் கைப்பற்றப் போகிறோம்.

அதற்கேற்ப மாற்றுத் திட்டம் ஒன்றை வைத்திருக்கிறேன். அந்தத் திட்டம் வெற்றி பெற்றால் சோழர்களும் தேவியாரும் துரோகி களாவார்கள். விரைவில் நாம் மதுரையின் ஆட்சிப் பீடம் ஏறுவோம்!’’

எப்படியேனும் தென்பரதக் கண்டத்தில் மீண்டும் களப்பிரர் காலூன்றி விடவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்ட அந்த அசகாயச் சூரர், தன் சீடர்களிடம் தனது கொலைபாதகத் திட்டத்தை விரிவாக விவரிக்க ஆரம்பித்தார்.

அதேவேளையில், மதுரையிலிருந்து வெளியேறி திருமறைக்காட்டை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள் இளங்குமரனும் கோச்செங்கணும்!

`ஆடல் முழவம் அதிரக் கண்டேன்!’

திருவாய்மூர். திருமுகம் காட்டாது மறைந்தும் வெளிப்பட்டும் அருளாடல் நிகழ்த்திய ஈசன், திருநாவுக்கரசப் பெருமானை அழைத்து வந்து சேர்த்த இடம் திருவாய்மூர் திருக்கோயில்.

அங்கும் அப்பர் சுவாமிகளுக்கு இறைவனின் திருவுருவம் புலனாகவில்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறை இங்கு ஏதோ காரியத்துக்காகவே விளையாடல் நிகழ்த்துகிறது என்பது புரிந்தும் அப்பரின் மனம் ஏனோ சோர்ந்தது.

அதேவேளையில், அப்பர் பெருமான் மறைக்காட்டிலிருந்து இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து, ஞானப்பிள்ளையும் திருவாய்மூருக்கு வந்து சேர்ந்தது. அவரைப் பார்த்ததும் திருநாவுக்கரசப் பெருமானுக்கு ஓரளவு மலர்ச்சி ஏற்பட்டது. பிள்ளையைக் காட்டி பெருமானிடம் வேண்டினார்.

``என் இறைவா! நின் திருக்குறிப்பை அறியாமல் கதவைத் திறப்பித்த அடியேனுக்குத் திருவுருவை மறைக்கலாம். பதிகம் பாடி கதவை அடைப்பித்த சீர்காழிப் பிள்ளையார் வந்திருக்கிறார்... அவருக்கு உமது தரிசனத்தை மறைக்காலாமா?’’

இறைச் சந்நிதியில், மற்றவருக்காக செய்யும் பிரார்த்தனை சடுதியில் பலிக்கும் போலும். சீர்காழிச் சிவக்கொழுந்துக்கு சிவம் தரிசனம் காட்டியது. அந்தத் தரிசனக் காட்சியை திருநாவுக்கரசருக்குக் காட்டினார் திருஞானசம்பந்தர். மெய்யுருகினார் அப்பர் பெருமான். திருத்தாண்டகப் பாடல் பிறந்தது அவரிடம்.

பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே

- மகுடம் சூடுவோம்...