மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவ மகுடம் - 64

சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவ மகுடம்

மங்கையர்க்கரசியார் திருக்கதை!

கட்டளை ரகசியம்!

சிறு விதைக்குள் பெரும் விருட்சத்தைப் பொதிந்துவைத்த பரமன், பேரண்டத்தில் சிறுத் துகள்களாக்கி அல்லவா உயிர்களை விளையாட விட்டு ரசிக்கிறான். பெரிதினும் பெரிதானவனும், அணுவிலும் சிறுத்த பரமாணு ஆனவனும் அவனே அல்லவா.

இந்தப் பேருண்மையை அறியாமல் இப்பூவலகில் நிகழும் சதிராட்டங்கள்தான் எத்தனை எத்தனை?!

இறை, சித்தம் கொள்ளும் ஒரு கணத்தில் அவை அத்தனையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்பதை அறியாத பேதை மனிதர்களே எண்ணிக்கையில் அதிகம் இந்தப் பூதளத்தில். அப்படியானவர்களின் பிடியில் மாமதுரையும் சிக்கிக்கொண்டதுதான் காலத்தின் கோலம்.


ஆனால், அதன் விதியை மாற்றி எழுதசித்தம்கொண்டது சிவம். விளைவாய்ப் பல சரித்திரச் சம்பவங்கள் நிகழத் தொடங்கின, வைகை நதி தீரத்தில். கிள்ளை மீனாள் கொண்டு வந்த மாமன்னரின் கட்டளைத் தகவல் செயல்படுத்தப்படும் எனில், அந்தச் சம்பவங்கள் யாவும் ஆலவாய் மாநகரம் அதுவரையிலும் கண்டிராத விசித்திரங்களாகவே தொடரக் கூடும்!

பாண்டிமாதேவியாரே, அந்தக் கட்டளைத் தகவலைக் கண்ட முதல் கணத்தில் உள்ளூர அதிர்ந்துதான் போனார்!

அப்படியென்ன அரசக் கட்டளையைத் தாங்கி வந்திருந்தாள் மீனாள்?! இரண்டே வார்த்தைகள்தான்...

`மச்சம் வீழ்த்துக!’

சில கணங்கள் வரையிலும் மீண்டும் மீண்டும் வாசித்தும் யோசித்துப் பார்த்தும் கட்டளையின் சூட்சுமம் புரியாது கலங்கவே செய்தார் தேவியார். பின்னர் சூட்சுமம் உடைபட்டதும் பெரிதும் வியந்தார்.

அந்தச் சூட்சும ரகசியம் அவருக்குப் புலப்பட, ஒருவகையில் மீனாளே உதவி செய்தாள் எனலாம். ஆம்! தகவலைக் கொடுத்துவிட்டு சாளரக் கதவில் போய் தொற்றிக்கொண்டு, உண்பதற்குக் கனி வேண்டி கீச்கீச்சென்று கதறிக் கொண்டிருந் தாள் சில கணங்கள்.

தேவியார் தகவல் சூட்சுமம் புரியாமல் தவித்தபடி, அதுகுறித்த ஆராய்ச்சியில் மூழ்கி விட்டிருந்தார். அவரின் கவனத்தைத் தன்பால் திருப்பும் முயற்சியாக, வேகமாக அவர் அருகில் பறந்துவந்து படபடவென சிறகடித்தாள் மீனாள். சிறகின் விசையால் அருகிலிருந்த நீர்க் குவளை கவிழ்ந்து, பீடத்தின் மீதிருந்த சிறிய தகவல் சுருளை நனைத்தது. அப்போதுதான் அந்த ரகசியம் வெளிப்பட்டது.

நீரில் நனைந்ததும் சுருளின் வண்ணம் மாறியது. தேவியாரின் முகம் மலர்ந்தது. சட்டென்று தகவல் சுருளைக் கையிலெடுத்தவர் நாசிக்கு அருகில் கொண்டு சென்றார். மூலிகை வாசம் கமழ்ந்தது.

இப்போது சகலமும் புரிந்தது தேவியாருக்கு. தன் நாயகனின் சாதுர்யத்தை எண்ணி வியந்த வராய்... `அற்புதம் அற்புதம்’ என்று மனத்துக்குள் அவரைப் பாராட்டவும் செய்தார்.

ஆம்! அந்தத் தகவல் சுருளின் ரகசியம் எளிதில் வேறு எவருக்கும் புலப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மூலிகைப் பாடம் செய்திருந் தார் பாண்டியர். இப்போது, மீனாள் நீர்க்குவளையைத் தட்டிவிட்டதால் நீரில் நனைந்ததும், நிறம் தொலைத்து யாருக்கு ரகசியத்தை வெளிப் படுத்தவேண்டுமோ, அவருக்கு அதை வெளிப்படுத்தியது சுருள்.

சிவ மகுடம் - 64

பாண்டிமாதேவியார் மிக உன்னிப்பாகக் கவனித்தார். சுருளின் பரப்பில் இப்போது அட்சரங்கள் மங்கிப்போக, அதன் மீது சில கோடுகளும் புள்ளிகளும் தெளிவாய்த் தோன்றியிருந்தன. பெரிய கோடு வைகை என்பதும் புள்ளிகள் நான்கும் ஆலவாய் நகரின் நாற்புறங்கள் என்பதும் புரிந்தது தேவியாருக்கு. அந்தப் புள்ளிகளின் நடுவே ஓர் ஒழுங்கில்லாத வடிவமும் திகழ்ந்தது.

கண்களால் அவ்வடிவை ஒற்றி உள்வாங்கிய தேவியார், பின்னர் விழிகளை மூடிக்கொண்டு, தன் மனத்திரையில் அதைப் பெரிதாக்கிப் பார்த்தார். ஒழுங்கற்ற வடிவை ஒழுங்காக்கினார். அவ்வடிவம் இரட்டைக் கயல்களாய் விரிந்தன. குறுக்கே முள்போன்று தைத்திருந்தது ஒரு கோடு.

எனில்... மாமன்னர் கட்டளையிட்டுப் பணித்திருப்பது... அந்தக் காரியத்தைச் செய்யச் சொல்லியா?!

பெரிதும் அதிர்ந்துபோனார் பாண்டிமா தேவியார். அதனால் உண்டான அயர்ச்சியால் ஆசனத்தில் அப்படியே சாய்ந்துவிட்டார்.

ஆம்! மாமதுரையைத் தாக்கும்படி பேரரசியாருக்குக் கட்டளை இட்டிருந்தார் கூன்பாண்டியர். விநோதத்திலும் விநோதம் அல்லவா இது. மாமன்னன் ஒருவர் தன் தலைநகரையே தாக்கச் சொல்லி உத்தரவிடு கிறாரே ஏன்? அதுவும் அந்த உத்தரவைப் பேரரசியாரிடமே வழங்கியுள்ளாரே எதற்காக?

இப்படி, தனக்குள் விழுந்த கேள்வி முடிச்சு களை அவிழ்க்க முயன்று சோர்வுற்ற தேவியார், பின்னர் மாமன்னரின் நிலைப்பாட்டில் இருந்து அவரின் சிந்தனைக்கேற்ப விடை தேட முனைந்தார். விளைவு முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ்ந்தன.

நிறைவாய் ஒரு பதில் கிடைத்தபோது பெரிதும் வியந்தார் பாண்டியப் பேரரசி. அந்த உற்சாகத்தில் தன்னையுமறியாமல் முணுமுணுத்தார்...

``கயவர்கள் வசமாகச் சிக்கப் போகிறார்கள்!’’

அதேநேரம், அவர் உறைந்திருந்த அந்தப் பாண்டியர் மாளிகையின் வேறோர் அறையில்... அவரால் `கயவர்கள்’ என்று குறிப்பிடப்பட்ட அந்த நபர்கள், வேறொரு விளைவுக்கு மாமதுரையை ஆட்படுத்தும் சதி ஆலோசனையில் மூழ்கியிருந்தார்கள்!

சிவ மகுடம் - 64

வனத்தில் மூவர்!

புலியெனப் பாய்ந்தவர்கள் சண்டமாருத மாகச் சுழன்றடித்த பேரமைச்சரின் தாக்கு தலுக்குத் தாக்குப்பிடிக்க இயலாமல், அந்தப் பெருங்காற்றில் உதிர்ந்த சருகுகளாய்த் தரையில் மண்டியிட்டு வணங்கினார்கள், அந்த மாவீரரை.

வலையிலிருந்து விடுபட்ட பிறகும், வனப் புறத்தில் நிகழ்ந்த அந்தச் சிறு யுத்தத்தில் கலந்து கொள்ளாமல், நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாறவர்மன் அரிகேசரியான கூன்பாண்டியர், மறவர்கள் மண்டியிட்டதும் மெள்ள புன்னகைத்தார்.

ஓரளவு சீற்றம் குறைந்த குலச்சிறையார் தன் வீரவாளின் நுனியால் அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திரையையும் விலக்கியதும், அந்த மர்ம மனிதர்கள் யாரென்பதை அறிந்து அதிர்ந்தார்.

ஆவேசத்துடன் ``ஆ... நீங்களா... துரோகிகளா...’’ அந்தப் பெருங்காடு அதிர சத்தமிட்டார்!

பதிலுக்கு, ``ஆம்... அவர்களேதான்...’’ என்று கூறிவிட்டு, இடியென பெருங்குரலெடுத்து சிரித்தார் மாமன்னர்.

மர்ம மனிதர்களைச் சுட்டெரிப்பது போல் பார்த்துக்கொண்டிருந்த பேரமைச்சர், மன்னர் நகைத்ததும் வீரவாளை உறையில் இட்டுவிட்டு அவர் பக்கம் திரும்பினார். மாமன்னரைப் பார்த்த அவரின் பார்வை... `என்ன இது விபரீத விளையாட்டு’ என்பதுபோல் இருந்தது.

அதே தருணத்தில், தங்கள் நிலையை விடுத்து எழுந்துகொண்ட அந்த மனிதர்கள், ஒவ்வொருவராய் பேரமைச்சரின் திருமுன் வந்து, சிர வணக்கம் செய்து கொண்டார்கள்.

அவர்களில் ஒருவன் புறமலை அரையன். மற்றொருவன் திருமல்லித் திணைக்களத்தான். மூன்றாமவன் தென்னவன் திருமுகத்தான். உடனிருக்கும் வேறுசிலரோ இவர்களின் அணுக்கர்கள் என்பதையும் பேரமைச்சர் அறிந்துகொண்டார்.

மூவரும் வேறு வேறு பணிக்கு அமர்த்தப் பட்டவர்கள். புறமலைக் குறுநாட்டின் தலைவன் புறமலை அரையன். திணைக்களத்தான் அரண்மனைக் களஞ்சியப் பணியில் இருப்பவன். தென்னவன் திருமுகத்தான் பேரமைச்சரின் மாளிகையில் ஓலை எழுதும் பணியில் இருந்தவன். இப்போது மாமன்னரின் ஆபத்துதவியாய் திகழ்கிறான்.

மூவருமே போர்க்கலையில் வல்லவர்கள் தான். ஆயினும் பேரமைச்சரிடம் தோற்றுப் போனதால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் தேகம் குறுக நின்றிருந்தார்கள்.

அவர்களின் நிலையைக் கண்டு உண்டான பரிதாப உணர்ச்சியால் மனம் கனிந்த பேரமைச்சர் குலச்சிறையார், அவர்களின் அருகில் சென்று, ஒவ்வொருவரின் முதுகிலும் கன்னத்திலுமாக உரிமையுடன் அறைந்தார். பின்னர் வாஞ்சையுடன் மூவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டு சிரித்தார்.

சூழல் கனியவே மாமன்னரும் அவர்களின் அருகில் வந்தார். அனைவரும் அந்தப் பேரரசனுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

மாமன்னரோ பேரமைச்சரிடம் கேட்டார்:

``அமைச்சர்பிரானுக்கு விழுப்புண் குணமாகி விட்டதோ... எழுந்து நிற்கவே சற்றுச் சிரமப்பட்டவர், வாளேந்தி பாய்கிறீர் எனில், அந்த விநோதத்தை என்னவென்பது?’’

மாமன்னர் இப்படிக் கேட்டதும்தான் பேரமைச்சருக்கு, தன் காலின் காயம் நினைவுக்கு வந்தது. இப்போது கால் சற்று நோகவும் செய்தது.

ஆனால், மூலிகை வைத்தியத் தில் சிறந்த மாமன்னரின் சிகிச்சை ஏதோ மாயம் செய்திருக்க வேண்டும். முன்பிருந்த அளவுக்கு வலி இல்லை.

அதனால் உண்டான நன்றிப்பெருக்கோடு மாமன்னர் கூன்பாண்டியரை நோக்கினார்.

``சக்கரவர்த்திகளே! ஏன் இந்த விபரீத விளையாட்டு?’’

சிறிது நேரத்துக்குமுன் விழிகளால் கேட்ட வினாவை வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

மாமன்னரும் பதில் சொன்னார்.

அவர் சொன்ன பதில், பேரமைச்சரின் இதயத்தைக் குத்திக் கிழித்து விடும் கூர்மையுடன் வந்து விழுந்தது!

இங்கு இப்படி இவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த விதி, சீர்காழிப் பிள்ளையையும் வாகீசரையும் திருமறைக்காடு சிவாலயத்தின் பெருங் கதவுகளுக்கு முன்னே நிறுத்தியிருந்தது!

அந்தக் கதவுகள் நெடுங்காலம் மூடப்பட்டுக் கிடப்பதன் காரணக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அணுக்கர்கள் சிலர்!

- மகுடம் சூடுவோம்...