மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 65

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

ஆலவாய் ஆதிரையான்

சமுத்திரக் கரை சத்திரத்தில்...

நிறைமறைக்காடு என்று வாகீசப் பெருமானால் சிறப்பிக்கப்பட்ட திருமறைக்காட்டின் சமுத்திரக் கரை, பிறைச் சந்திரன் பொலியும் அந்த முன்னிரவுப் பொழுதில் மிக ரம்மியமாகக் காட்சி தந்தது.

புராணங்களின் கூற்றுப்படி, அயோத்தி ராமன் தென்னகத்தில் சேதுக்கரையில் பாலம் அமைக்குமுன் இங்குதான் அந்த முயற்சியில் இறங்கினானாம். இந்தக் கதையையொட்டி மக்களின் வழக்கில் `ஆதி சேது’ என்று சிறப்புப்பெற்றுவிட்ட மறைக்காட்டு கடல் தீரம், அன்று தன் அலைகளின் ஆர்ப்பரிப்பை வெகுவாய் அடக்கிக்கொண்டிருந்தது.

காரணம் என்னவாக இருக்கும்?


பழையாறை மண்ணில்...
பழையாறை மண்ணில்...

வானில் தவழும் வெண்பிறையே வியக்கும் வண்ணம், திருமுகத்தில் பூரணப் பொலிவும் தண்ணருளும் துலங்கும் சீர்காழிப்பிள்ளையின் சிவத் தியானத்துக்குத் தன்னுடைய அலையோசை தடங்கலாகிவிடக் கூடாது என்பதலா, அல்லது நாவரசரின் பதிகச் சிந்தையைத் தன்னுடைய ஆர்ப்பரிப்பு கெடுத்துவிடக்கூடாது என்பதாலா?

கட்டளையிட்டுக் கடலரசனை நேரில் அழைத்து விசாரிக்கும் வல்லமை மட்டும் நமக்கு இருந்திருந்தால், நிச்சயம் அவனிடமே கேட்டிருப்போம். அவனும் சொல்லியிருப்பான் அந்தக் காரணத்தை;அடுத்து வரும் பொழுது களில் திருமறைக்காட்டில் நிகழப்போகும் அற்புதத்தை; அதற்காகவே சத்தமின்றி ஆவலுடன் தான் காத்திருக்கும் ரகசியத்தை!

அன்றொரு நாள் மறைக்காடர் சந்நிதியில் சுடர் மங்கி - தூண்டிவிட எலியொன்று தேவைப்பட்ட தீபம் போல் அல்லாது, அந்தச் சத்திரத் தின் மாட விளக்கு, தூண்டுதல் காரணி எதுவும் தேவையில்லாதபடி சுடர்விட்டுப் பிரகாசித்தது.

அதன் பொன்னொளியில் திளைத்தபடி அடியார்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந் தனர். சீர்காழிப் பிள்ளை கேட்டார்...

``அப்பர் பெருமானே! ஆலயத்தின் மணிக் கதவுகளைக் கவனித்தீர்களா? வெகுநாள்களாக பூட்டியே கிடக்கின்றனவாமே?’’

``ஆம் பிள்ளாய்! ஆலயத்தின் அபிமுக வாயில் நீண்ட நெடுங்காலம் அடைப்பட்டுக் கிடப்பதில், எனக்கும் மிக வருத்தமே.’’

``ஊர் மக்கள் கதவுகளைத் திறக்க முயலவில்லையா?’’

``அவர்களுக்கு அச்சம்! எங்கே... நெடுங் காலமாகப் பூட்டப்பட்டிருக்கும் கதவுகளைத் திறக்க முயன்றால் கோபுரம் இடிந்து விழுமோ என்று பேரச்சம்!’’

``அதுசரி ஐயனே... ஆலயக் கதவுகள் பூட்டப்பட காரணம் என்னவாம்?’’

``இங்குள்ள அன்பர்களிடம் விசாரித்தேன். அவர்களுக்குத் தீர்க்கமானதொரு காரணம் தெரியவில்லை. ஆனால், கேள்விப்பட்ட கதைகளைச் சொல்கிறார்கள்!’’

``கதைகளா?’’

``ஆம்! இறைவனிடம் தான் வைத்த கோரிக்கை நிறைவேறாத கோபத்தில், முடியரசன் ஒருவன் ஆலயக் கதவுகளைத் தாழிட்டுவிட்டானாம்! இதுபோக, வேறொன்றும் சொல்கிறார்கள்...’’

`அது என்ன?’ என்பதுபோல் சீர்காழிப் பிள்ளை, திருநாவுக்கரசரின் திருமுகத்தைப் பார்க்க, திருநாவுக்கரசர் பதில் சொன்னார்.

``நான்மறைகளும் வழிபட்ட நாதன் அல்லவா இவ்வூர் பிரான். அவ்வாறு உள்ளம் உருக சுவாமியைப் பூசித்து வழிபட்ட மறைகள், உள்ளடைந்து கதவுகளைத் தாழிட்டுக் கொண்டனவாம். அதுமுதலாக கதவுகளைத் திறக்க இயலாது, வேறொரு வழி வைத்து அதன் வழியே உட்புகுந்து சுவாமியைக் கண்டும் வழிபட்டும் வருகிறார்களாம் இவ்வூர் மக்கள்!’’

``கதவுகளைத் திறக்க வேறு வழியே இல்லையா?’’

``சிவ சித்தம் கூடி வந்தால் வழி பிறக்க வாய்ப்பு உண்டு. மாயையால் மயக்கத்தால் மரத்துப்போன மானுடர்களின் மனக்கதவு களையே திறந்து ஆட்கொண்டுவிடும் நம் பரமன், ஆலயக் கதவுகளைத் திறக்கவா அருள் செய்யமாட்டார்?!’’

``அற்புதமாகக் கூறினீர்கள் அப்பர் பெருமானே! நான் உளமாரத் தீர்மானித்து விட்டேன். நாம் நம் அப்பனிடம் முறையிடு வோம்... அவர் அருளால் ஆலயக்கதவுகளைத் திறந்திடுவோம்!’’

``நன்று... மிக நன்று பிள்ளைபெருமானே. இந்தப் பிள்ளையின் அன்புக்கு அந்தத் தந்தை அடிமை அல்லவா? நீங்கள் பிரார்த்தித்தால் மறைக்காடர் நிச்சயம் மனது வைப்பார்; பழுதின்றி கதவுகள் திறக்க அருள் செய்வார்!’’

``ஐயனே! என் அன்புக்கு மட்டுமா... அகிலம் போற்றும் நாவுக்கரசரின் வாக்குக்கும் அந்தப் பரமன் அடிமை அல்லவா...’’

திருநாவுக்கரசர் மனம் நெகிழ்ந்தார். அருகில் நெருங்கி பிள்ளையை ஆரத் தழுவிக்கொண்டார். பின்னர் நா தழுதழுக்கக் கூறினார்...

``பிள்ளையே... பெருமானே... என் அப்பனுக்கும் அப்பனான குமரனின் அம்சமே நீர். அப்படியிருக்க, எளியேனால் வாதில் உம்மை வெல்ல இயலுமா? வாக்குக்கு அரசன் என்று உலகம் என்னைச் சொல்லலாம். ஆனால், தாய்த் தமிழுக்கே அழகு தாங்கள் அல்லவா!’’

அவரின் அன்புப் பிடியிலிருந்து மெள்ள தன்னை விடுவித்துக் கொண்ட சீர்காழிப் பிள்ளையார், உணர்ச்சிக்கு ஆட்பட்டிருந்த வாகீசப் பெருமானை வணங்கி, அவரை அந்நிலையிலிருந்து வெளிக் கொண்டுவர முனைந்தார்.

``வாகீசரே! நாளையே நாம் இறைவனிடம் விண்ணப்பிப்போம். பதிகம் பாடி வழிபடுவோம். திருக்கதவுகள் திறக்க நாதனின் ஆனை வேண்டி அவரின் தாள் பணிந்து வேண்டுவோம்!’’

``அப்படியே ஆகட்டும் பெருமானே... திருச்சிற்றம்பலம்!’’

``திருச்சிற்றம்பலம்’’

அவர்களின் இந்த முடிவு பேரின்பத்தை அளிக்க, சட்டென்று ஓர் ஆரவார இறைச்சலோடு பெருங்காற்றை வீசச் செய்தது இயற்கை. அப்போதும் அணைந்துவிடாமல், அந்த அடியார்களின் உள்ளத்தில் துலங்கும் சத்தியம் போல் சுடர்விட்டுக் கொண்டிருந்தது சத்திரத்துத் தீபம்!

மாமன்னரின் ஆலோசனை!
மாமன்னரின் ஆலோசனை!

யுத்தமும் திட்டமும்!

``சக்கரவர்த்திகளே! ஏன் இந்த விபரீத விளையாட்டு?’’

பேரமைச்சர் குலச்சிறையாரிடம் தோற்றுப்போன புறமலை அரையன், திருமல்லித் திணைக்களத்தான். தென்னவன் திருமுகத்தான் மூவரும் அவரைப் பணிந்து வணங்கிட, பேரமைச்சரோ மாமன்னரை நோக்கி மேற்காணும் கேள்வியைக் கேட்டார்.

அதற்குத் தென்னவன் கூன்பாண்டியர் சிறு புன்னகையோடு கூறிய பதில், பேரமைச்சரின் இதயத்தைக் குத்திக் கிழித்துவிடும் கூர்மையுடன் வந்து விழுந்தது.

``எம்முடைய ஆபத்துதவிகளான இந்த மூவருக்கும் தங்களுடைய ராஜ்ஜியப் பணியில் சிறு ஐயப்பாடு. அதைத் தீர்த்துக்கொள்ளவே இப்படியொரு நாடகம்...’’

``அரசே! அவர்களுக்கு மட்டும்தானா... இல்லை...’’

பேரமைச்சர் கேட்டு முடிப்பதற்குள் அவசர அவசரமாக இடை மறித்தார் மாமன்னர்.

``பேரமைச்சரே... தங்களைச் சந்தேகிப்பது என்னையே நான் சந்தேகிப்பதற்குச் சமம் அல்லவா...’’ என்றவர் தொடர்ந்து, தன் நிலையை விரிவாக விளக்கினார்.

``அமைச்சர்பிரானே! நீங்கள் உங்கள் உயிரைவிடவும் இந்தத் தென்னவனையும் பாண்டிய தேசத்தையும் நேசிப்பது எனக்குத் தெரியும். அதை இவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா?

தொண்டர்களுக்குத் தங்கள் தலைவன் பொருட்டுச் சிறிதளவும் நெருடல் எழுந்துவிடக் கூடாது. அப்போதுதான் அவன் தலைமையின் கீழ் அவர்கள் கையில் எடுக்கும் காரியமும் சிறிதும் பிசகின்றி நிறைவேறும்.’’

மாமன்னரின் விளக்கத்தால் நிம்மதி வாய்த்தது பேரமைச்சருக்கு. அதேநேரம் சில வினாக்களும் அவருள் எழுந்தன. அதை அப்படியே வெளிப்படுத்தினார்.

``என்ன சொல்கிறீர்கள் மன்னா? என் தூய்மையை விளக்க நாடகம் நடத்தியது சரி... ஆனால், இவர்கள் உங்களின் அணுக்கர்கள் அல்லவா?’’

``இன்று முதல்... இந்தக் கணம் தொட்டு... இவர்கள் மூவரும் உங்கள் சேனையின் தண்டநாயகர்கள்...’’

``எனில், பெரும்போருக்குத் தயாராகிறோமா...?’’

``ஆம், அமைச்சர்பிரானே... தங்களின் யூகம் மிகச் சரிதான்!’’

பேரமைச்சர் சற்றே திகைத்தார். அவரின் மனம் குழம்பியது. மாமன்னரின் பேச்சும் செயலும் அதற்குக் காரணமாயின!

`சமீபத்தில் வாங்கிய அடியிலிருந்து மீள சேரனுக்குக் காலம் பிடிக்கும். ஆக அவன் வம்பிழுக் கவோ, அவனைத் தாக்கவோ வாய்ப் பில்லை. ஒருவேளை, மாமன்னரின் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக நெடுநாள் கனன்று கொண்டிருக்கிறதே ஒரு திட்டம்... அதற்குச் செயல் வடிவம் கொடுக்கப் போகிறாரா? பாண்டிய சேனை சாளுக்கியம் நோக்கி நகரப் போகிறதா... பல்லவன் ஒத்துழைப்பானா...’

ஓரிரு கணங்கள் சிந்தனையில் மூழ்கிவிட்ட குலச்சிறையாரை மாமன்னரின் குரல் உசுப்பியது.

``என்ன சிந்தனை... அமைச்சர்பிரானே?’’

``போர் குறித்துதான்... சாளுக்கியத்தை ஒடுக்க திட்டங்கள் தயாரா?’’

இதைக்கேட்டதும் பெரிதாகக் குரலெடுத் துச் சிரித்தார் மாமன்னர். பிறகு ஒருவாறு தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கூறினார்...

``சாளுக்கிய லட்சியம் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும். ஆனால் இப்போது நம் இலக்கு சாளுக்கிய வாதாபி அல்ல!’’

``பிறகு?’’

``திரு ஆலவாய்!’’

கூன்பாண்டியரின் பதில் குலைநடுங்க வைத்தது குலச்சிறையாரை!

இவ்வாறு குலச்சிறையாரை நிலைகுலையவைத்த அதே நாளில் - அதே நேரத்தில், முடிகொண்டசோழபுரம் என்று பிற்காலத்தில் பெரும் புகழ் பெறப்போகும் `பழையாறை’ எனும் சோழர்குல மாநகரில் கரும் புரவி ஒன்று புயல்வேகத்தில் பிரவேசித்தது.

போர்க்கவச ஆடைகளைத் தரித்தபடியும் ஆயுதபாணியாகவும் அந்தப் புரவியின் மீது அமர்ந்தபடி அதைச் செலுத்திவந்தவர், மாளிகைப்புறத்தை நெருங்கியதும் ஏதோ சைகை செய்தார்.

மறுகணம் காவல்மதிலின் மேலிருந்து விசையுடன் ஏவப்பட்ட வேல்கள், மிகச் சரியாக கரும்புரவிக்கு முன்னால் தரையில் பாய்ந்து, வந்தவருக்கு வீரவணக்கம் செலுத்தின!

- மகுடம் சூடுவோம்...

அபிஷேகப் பலன்கள்!

அபிஷேகப் பிரியரான ஈசனுக்குச் சந்தனாதித் தைலத்தால் அபிஷேகம் செய்து வந்தால், மழலை பாக்கியம் கிட்டும்.

சாம்பிராணித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், கர்மவினைகளை நீக்கும். ருத்ராட்ச அபிஷேகம் செய்ய ஞானமும் அமைதியும் கிட்டும்.

வில்வம் கலந்த நீரால் அபிஷேகிக்க விருப்பங்கள் யாவும் நிறைவேறும். மாப்பொடியால் அபிஷேகிக்க கடன் தொல்லைகள் நீங்கும்.

- சி.வேலு, கோவில்பட்டி