மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவ மகுடம் - 76

சிவமகுடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்! ( ஓவியர் ஸ்யாம் )

மங்கையர்க்கரசியார் சரிதம்

பஃறுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன்


இங்ஙனம் பழம்பெரும் நூலான சிலம்பு போற்றும் மாமன்னன் நெடியோனின் காலத்தில் பஃறுளி நதி தீரத்தில் செழித்தும், பின்னர் இடைச் சங்க காலத்தில் குமரியாற்றின் அலைமுகமான கபாட புரத்தைத் தலைநகராகக் கொண்டும், கடைச் சங்க காலத்தில் வைகை நதிக்கரையில் நிலைத்துவிட்டதுமான பாண்டியனின் பேரரசு, முப்பிரிவு அரசியலுக்கு ஆட்பட்டிருந்தது.

சிவ மகுடம் - 76

பாண்டியப் பேரரசி மங்கையர்க் கரசியார், களப்பிரப்படை துணை கொண்ட அடிகளார், பாண்டியப் பேரரசர் மாறவர்மன் அரிகேசரியான கூன்பாண்டியர் ஆகிய மூவருமே மாமதுரை எனும் சதுரங்கப் பலகையில் தத்தமது ஆளுமையுடன் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.

துரோகிகளை இனம் காணத் துடித்தார் பாண்டியர். அவர் தங்கள் மீது காட்டும் அன்பையே ஆயுதமாக்கி அவரையே வீழ்த்தக் காத்திருந்தனர் அடிகளார் தலைமையிலான துரோகக் கூட்டத்தினர். இரண்டையும் அறிந்த பாண்டிமாதேவியாரோ, மன்னருக்கு உண்மையை உணர்த்தி அவரைத் தன் வழிக்கு மீட்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

இதன் பொருட்டு காய்களை நகர்த்தியது என்னவோ அவர்கள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் விளையாட்டில் வென்றது காலம்தான். எப்போது, எது நடக்கவேண்டுமோ, அதை அப்படியே நடத்திக் காட்டி மகிழ்ந்தது காலம். இப்போதும் அப்படியே... அடிகளாரின் புத்தியை எப்படிச் செயல்படுத்தினால் அவருக்குக் கெடுதல் விளையுமோ, அப்படியே அவரை ஆட்டுவித்தது எனலாம்.

இல்லையென்றால் மதியூகியான அடிகளார், தான் விரித்த பெரும் வலையில் தாமே விழுந்திருப்பாரா?!

சிவ மகுடம் - 76

குலச்சிறையார் விஜயம்!

மேற்கு மலைத்தொடர் காடுகளின் வழியே இருபது-முப்பதுபேர் கொண்ட சிறியளவிலான மெய்க்காவல் படையுடன், தன் இலக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார் கூன்பாண்டியர்.

``நமது திட்டப்படி அனைத்தும் சரியாக நடக்கும் அல்லவா?’’

அருகில் பயணித்துக்கொண்டிருந்த தளபதி யிடம் கேட்டார் மாமன்னர்.

``நிச்சயமாக! துரோகிகளுக்கு ஆசை காட்டும் விதம் தலைநகரில் நம் படையளவை வெகுவாகக் குறைத்துவிட்டோம். தகவலைப் பரதவர் கூட்டத்துக்கும் கசிய விட்டிருக்கிறோம். அவர்களின் படையெடுப்பும் நிச்சயம் நிகழும். இப்படியோர் அருமையான வாய்ப்பைத் துரோகிகள் தவறவிட மாட்டார்கள். எப்படியும் இன்று அந்திக்குள் நமக்குத் தகவல் வந்து சேரும்! துரோகிகள் யார் என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும்.’’

தளபதி சொன்னதும் சட்டென்று பதிலுரைத் தார் பாண்டியர்: ``அந்தி வரையிலும் காத்திருக்கத் தேவையில்லை தளபதியாரே... எனது யூகம் சரியானால், இன்னும் அரை காத தூரத்திலேயே துரோகிகளை நாம் காண்போம். பெரும்படை ஒன்று நம்மை மடக்கும்!’’

தளபதி அதிர்ந்தார்! இதை அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே பெரும் பதற்றத்துக்கு ஆளானார்!

``சக்ரவர்த்திகளே என்ன சொல்கிறீர்கள்... எனில், மேற்கொண்டு நகர வேண்டாம்... இங்கேயே மறைந்திருப்போம்...’’ என்றதுடன், உடைவாளினை உருவி, கேடயத்தில் ஒருமுறை ஓங்கி அறைந்து விநோதச் சத்தத்தை உண்டாக் கவும் செய்தான். அது ஒருவகை எச்சரிக்கை ஒலி போலும்!

அதுவரையிலும், மாமன்னருக்கு முன்னும் பின்னுமாகவும் பக்க வாட்டிலுமாக சற்று விலகிப் பயணித்த வீரர்கள், தலைவன் ஓசை எழுப்பிய மறுகணம், அவரது புரவியை நெருங்கிச் சூழ்ந்துக்கொண்டர்கள்.

மாமன்னர் புன்னகையுடன் கேட்டார்: ``என்ன... மெய்க்காவல் படைத் தலைவருக்கு அச்சம் தொற்றிக்கொண்டதோ?’’

மாமன்னரின் இந்தக் கேலிப்பேச்சு, அந்த வீரரைச் சீண்டிவிட்டது போலும்; ஆவேசத்துடன் சொன்னார்:

``அச்சம் துச்சமும் இல்லை ஐயனே! பதுங்கிப் பாய்வோம் என்கிறேன்...’’ என்றார், சுற்றுமுற்றும் பார்த்தபடியே.

ஆனாலும் அவர் பேச்சுக்கு, மாமன்னரிட மிருந்து பெரும் சிரிப்பொன்றே பதிலாகக் கிடைத்தது. தொடர்ந்து அவர் `நகரலாம்’ என்பது போல் விழியசைக்க, மந்திரத்துக்குக் கட்டுண்ட பதுமை போலானார் தளபதி. ஏதோ திட்டம் இல்லாமல் மாமன்னர் இப்படி நடந்துகொள்ள மாட்டார் என்பதையும் புரிந்துகொண்டார். படை மீண்டும் பழைய நிலைக்கு வந்தது; நகரவும் தொடங்கியது.

மாமன்னரின் யூகம் மிகச் சரியாகப் பலித்தது. அந்தப் படை அரைக் காதம் தூரத்தைக் கடந்த நிலையில், பெரும் மேடு ஒன்று எதிர்ப்பட்டது. காட்டாற்றின் நீரைச் சேகரிக்கும் விதமாக, அருகிலுள்ள குடிகளால் மலைப்பாதையில் அமைக்கப்பட்ட வாவியின் கரை அது என்பது தெரிந்தது. அதையொட்டி பெரும்புதர்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன.

மேட்டுக் கரையையொட்டித் திரும்பும் பாதையில் அவர்கள் செல்ல யத்தனித்தபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

புதருக்குள்ளிருந்து சட்டென்று உயர்ந்தது புலிக்கொடி ஒன்று. அடுத்து சிறு பேரிகை முழங்கிட `சோழம்... சோழம்...’ என்று ஏக காலத்தில் குரல்களும் எழும்பின. தொடர்ந்து புதருக்குள் இருந்தும் மேட்டுக்கரையின் மறுபுறம் இருந்தும் தோன்றிய வீரர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் பாண்டியரின் மெய்க்காவல் படைமீது பாய்ந்தனர்.

புலிக்கொடியைக் கண்ட மாமன்னரின் முகம் மாறியது. வீரர்களின் முழக்கத்தைக் கேட்டு புருவம் நெறித்தார் மாமன்னர்.

``இவர்களா... உடனிருந்தே உயிரைக் குடிக்க முனைந்துவிட்டார்களே...’’ மனம் குமுறியது; அவரின் திடக்கரங்களோ வீரவாளின் கைப்பிடியை இறுகப் பற்றின. இந்த இடத்தில் துரோகிகளை அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை அவர் கணித்திருக்கவில்லை.

ஆனாலும், அந்த அசாதராணச் சூழலை எதிர்கொள்ளத் துணிந்தார். துரோகக் கூட்டம் அவரை நெருங்கவும் புயல்வேகத்தில் சீற்றம் கொண்டது மாமன்னரின் வாள்வீச்சு!

அந்த நேரத்தில் `டண்... டணால்...’ என்று வாளோடு வாள் மோதும் களேபரச் சத்தத்தையும் மீறி ஒரு பேரொலி கேட்டது. `தம்தம்... தமதம்... தம்தம்... தமதம்...’ என முரசங்களால் எழுந்த அந்தத் தாளம் வருவது யாரென்பதை கணப்பொழுதில் மாமன்னருக்கு உணர்த்தியும் விட்டது.

ஆம்! இவர்கள் திரும்பிச் செல்ல யத்தனித்த வளைவில் இருந்து மூர்க்கமாகப் பாய்ந்து வந்தது, குலச்சிறையாரின் தலைமையிலான பஞ்சாட்சரப் படை; வந்த வேகத்தில் துரோகக் கூட்டத்தின்மீது மூர்க்கத்துடன் பாயவும் செய்தது!

குலச்சிறையார் இங்கிருக்கிறார் எனில், அவரைத் தேடி மணற்மேற் குடிக்குச் சென்ற அடிகளாரின் நிலை? பாவம்... பரிதாபத்துக்குரிய அந்த மனிதர், காலகாலனுக்கு ஒப்பான ஒருவனின் பிடிக்குள் வசமாக சிக்கிக்கொண்டிருந்தார்.

ஒரு பெருங்கூட்டத்தின் ஆட்டத்துக்கு இவ்வாறு முடிவுரை எழுதிக் கொண்டிருந்த காலம், திருமறைக்காட்டில் இந்த உலகுக்கே `மிக நல்ல நல்ல’தான அருள்பொக்கிஷம் உருவாக வித்திட்டுக் கொண்டிருந்தது!

சிவ மகுடம் - 76
shyams131

'மாமதுரைக்கு எழுந்தருள்க!'

திருநீலகண்டரும் களங்கமற்ற பிறையையும் கங்கையையும் திருமுடி மேல் சுமந்தவருமாகிய சிவபெருமான், அவராகவே அவரின் திருவருளை முன்னிட்டு அடியார்தம் உள்ளதில் புகுந்துவிடுவார்.அப்படியான பேறுபெற்ற அடியார்களுக்கு எல்லா நாள்களும் இனிய நாள்கள்தான்!

நாதன் உள்ளிருக்கும்போது நவகிரகங்களும் அவர்களுக்கு நன்மை யையே அளிக்குமே தவிர, கெடுதியை விளைவிக்காது.

பாண்டிமாதேவியாரின் ஆணைக்கு ஏற்ப, பேரமைச்சர் குலச்சிறை யாரின் வழிகாட்டுதலுடன், அவர்கள் இருவருடைய விண்ணப்பம் அடங்கிய ஓலையோடு திருமறைக்காட்டுக்கு வந்து சேர்ந்த தூதர்களும் சித்தத்தில் சிவம் நிறைந்தவர்களே. அதனாலன்றோ இந்த அரும்பணி அவர்களுக்கு வாய்த்தது!

அவர்கள் சீர்காழிப் பிள்ளையைச் சந்திக்க வந்திருக்கும் தகவலை அணுக்கர்கள் தெரிவித்ததும், உள்ளே வரும்படி பணித்தார் திருஞான சம்பந்தர். தூதர்கள் இருவரும் சென்று ஞானப்பிள்ளையை தரிசித்து, பணிவுடன் வணங்கித் தொழுதனர்.

தாங்கள் கொண்டுவந்த திருவோலையை பிள்ளையிடம் சமர்ப்பித்தார்கள். திருஞானசம்பந்தப் பெருமான் மாமதுரைக்கு எழுந்தருள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்தது, அந்த ஓலை!

- மகுடம் சூடுவோம்...