மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவ மகுடம்-77

சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவ மகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

`மாமதுரைக்கு எழுந்தருள வேண்டும்’ எனும் பாண்டிமா தேவியார் மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளைச் சுமந்திருந்த அழைப்போலையுடன் திருஞானசம்பந்தர் திருமடத்தின் பூஜா மண்டபத்துக்குள் நுழைந்தபோது, சிவப் பூசைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அப்பர் பெருமான்.

சிவ மகுடம்-77

நாளும் கோளும்!

ப்பரின் அணுக்கர்களால் இடப்பட்டிருந்த குங்கிலிய தூபப் புகை மண்டபமெங்கும் சூழ்ந்திருந்தது. தரிசிக்க வந்த அடியார்கள் சிலர் ஐந்தெழுத்து ஓதிக்கொண்டிருந்தார்கள். பூஜைக்கான பூக்கள் பலவித வண்ணங்களோடு குடலைகளிலும் மூங்கில் தட்டுகளிலும் நிரம்பியிருந்தன.

பூக்களால் இறைவனை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நேரம்தான் அது. ஆம் பூக்களால் பூஜிக்க உகந்த காலம் வைகல் (அதிகாலை) என்கின்றன ஞானநூல்கள். `கைகளால் தொழுது, தூய மலர்களைத் தூவி, அன்பு மிகுதியால் மனம் குழைந்து அழும் அன்பர்களுக்குச் சிவபெருமான் நண்பனாகி விடுகிறார்’ என்று அடிக்கடிச் சொல்வார் அப்பர் பெருமான். `கைகாள் கூப்பித் தொழீர் கடிமா மலர்தூவி நின்று’ என்பதும் அவரின் திருவாக்கு அல்லவா? ஆம், கைகளைப் பெற்றிருப்பதன் பயனே இறைவனைப் பூக்கள் தூவி வழிபடுவதற்காகத்தான் என்பது அணுக்கர்களுக்கு அவர் சொல்லும் பாடம். அதற்கேற்ப, அணுக்கர்களும் உள்ளூர் அடியார்களும் பலவகைப் பூக்களைப் பறித்துச் சேகரித்து வந்திருக்கிறார்கள் போலும்.

அகத்தி, அலர், கமலம், கரந்தை, கனகி, குரா, கூவிளம், கைதை, கோங்கு, கோடல், செண்பகம், தும்பை, முல்லை, மகிழ், மல்லிகை நாகலிங்கம் முதலானவை நிறைந்து திகழ்ந்தன.

`ஓங்காரப் பூ’ எனும் சிறப்புப் பெற்ற - சிவபெருமானுக்குப் பிரியமான கொன்றையும் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. சடையில் சூட, சரங்களுக்காக, தொடையலுக்காக என அவற்றை மூன்றாக வகைப் பிரித்து வைத் திருந்தார்கள். சில குடலைகள் மறைக் காடர் வழிபாட்டுக்காக ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மலர்ச்சியில் மலர்களைப் பழிக்கும் திரு முகத்தினரான சம்பந்தக் குழந்தை அப்பரைத் தேடினார். மலர் வரிசையின் மத்தியில் ஒரு பூக்குவியல் போன்று அமர்ந்திருந்தார் வாகீசர்.

வழிபாட்டு ஞானநூல்கள் சிவபெருமானின் எட்டுவிதத் திருப் பெயர்களைக் கூறி எட்டுவித மலர்களால் அவரைப் பூஜிக்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றன. சித்தம் சிவமான நிலையில் திகழும் சில யோகிகளோ அகிம்சை, புலன் அடக்கம், சாந்தி, தயை, ஞானம், சத்தியம், தவம், பாவனை ஆகியவற்றையே எண்மலர்களாகக் கொண்டு நிறைவில் தம்மையே சமர்ப்பித்துப் பூசிப்பார்கள். வாகீசரும் இந்த எண் மலர்களும் ஒன்றிணைந்த தண்மலர்தான்!

அந்த மலர், திருஞானசம்பந்தரைக் கண்டதும் மலர்ந்து சிரித்தது. `நமசிவாய... நமசிவாய...’ என்றபடி எழவும் முயன்றது. அவர் எழுவதற்குள் சம்பந்தர் விரைந்து அருகில் சென்றார். மதுரையின் தூதுவர்கள் தன்னிடம் கொடுத்த ஓலையைக் காட்டி திருநாவுக்கரசரிடம் விவரம் பகிர்ந்தார்.

மாமதுரையின் சூழல் என்னவென்பதை நன்கு அறிந்தவர் ஆதலால், சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்தார் திருநாவுக்கரசர். பின்னர் `என்ன செய்வதாக உத்தேசம்’ என்பது போன்று பிள்ளையின் திருமுகத்தைப் பார்த்தார்.

``வாகீசரே! இதை ஆலவாயரின் அருள் கட்டளையாகவே கருதுகிறேன். அழைப்பது மங்கையர்க்கரசியார் அல்ல; மாமதுரையின் அங்கையற்கண்ணியே என்றும் எண்ணம் எழுகிறது என் மனதில்...’’ என்றவர், ``வழிபாடு முடியட்டும் வழிகாட்டுங்கள்...’’ எனக் கேட்டுக் கொண்டார்.

`எது நடப்பினும் சிவ சித்தமே’ என்ற எண்ணமும், நடப்பவை நல்லனவாகட்டும்’ என்ற வேண்டுதலும் அப்பரின் மனதில் நிறைந்திருக்க இனிதே நிறைவுற்றது வழிபாடு!

இந்த வழிபாடும் அடியார்களின் தரிசன மும் மதுரையின் தூதர்களுக்கு நல்ல சகுனங் களாகவே பட்டன. ஆகவே வந்த காரியம் வெற்றியாக ஈடேறும் என்று திடமாக நம்பினர். அப்பரின் முகத்திலோ மலர்ச்சி இல்லை.

``அப்பர் பெருமானே... என்ற சிந்தனை? யாம் மதுரைக்குச் செல்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லையோ?’’

``பிள்ளாய்! நாட்களும் கோள்களும் தீயனவாகவுள்ளனவே...’’ என்றார் அப்பர்.

சீர்காழிப் பிள்ளை புன்னகைத்தது. பின்னர் தீர்க்கமாக பதில் உரைத்தது... ``நம்பன் அடியவர்க்கு இறையருளால் தீயநாள்களும் கோள்களும்கூட நன்மையே செய்யும்!’’ என்றது.

அதுமட்டுமா? `வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்...' எனத் தொடங்கி மிக அற்புதமான பதிகத்தையும் பாடி, அந்தப் பொக்கிஷத்தை இந்த அகிலத்துக்குப் பரிசளிக்கவும் செய்தது!

சிவ மகுடம்-77

வனப்புறத் தாண்டவம்!

மே
ற்கு மலைத் தொடரின் வனப்பகுதியில் அந்த வாவிக் கரைப் பிராந்தியத்தில் கால் நாழிகைப் பொழுது ருத்ரதாண்டவமே ஆடித் தீர்த்திருந்தது, குலச்சிறையாரின் பஞ்சாட்சரப் படை!

மாமன்னரின் மெய்க்காவல் படை, குலச் சிறையாரின் பஞ்சாட்சரப் படை இரண்டுக்கும் இடையே சிக்கித் தவித்த துரோகக் கூட்டத்தில் பாதி பேர், அந்த கால்நாழிகைப் பொழுதுக்குள் உயிர்க் கூட்டிலிருந்து விடுபெற்றிருந்தனர். மீதியுள்ளோரும் அங்கஹீனம் அடைந்து தவித்து முனகிக் கொண்டிருந்தனர்.

அப்போதும் ஆவேசம் தணிந்தபாடில்லை மன்னர்பிரானின் மெய்க்காவல் படைத் தளபதிக்கு; ``ஆணையிடுங்கள் அரசே... உறையூரைத் தீக்கிரையாக்கி விடுகிறோம். இனி, புலிக்கொடி எங்கும் பறக்காதபடி, சோழர்க் கூட்டத்தையே நிர்மூலமாக்கிவிடுகிறோம்...’’ என்றான் பற்களைக் கடித்தபடி!

அவன் தோளைத் தொட்டு அமைதிப்படுத்தினார் அமைச்சர். பஞ்சாட்சரப் படையால் கை-கால்கள் கட்டப் பட்டு, தன் முன் மண்டியிட வைக்கப்பட்டிருந்த நபர்களையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த மாமன்னர், தளபதியின் பக்கம் பார்வையைத் திருப்பினார். ``வீரனே! இவர்கள் சோழர்கள் அல்ல...’’ என்றார்.

சற்று உரத்தக் குரலில் அவர் சொன்னது, தளபதியை மட்டுமல்ல அங்கிருந்த பாண்டியர் தரப்பு வீரர்கள் அனைவரையும் கவனிக்க வைத்தது. எல்லோருக்கும் பெரும் திகைப்பு.

அவர்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதம் தளபதியே கேட்டான்:

``எனில்... இவர்கள்..?!’’

அவன் எழுப்பிய கேள்விக்குக் குலச்சிறையார் பதில் சொன்னார்: ``பாண்டியப் பேரரசை மீண்டும் எழுச்சியுறச் செய்த நம் கடுங்கோன் மாமன்னர் மிச்சம் வைத்த பகைக்கூட்டம்!’’

அவர் இதைச் சொன்னதும் அனைவரின் திகைப்பும் பன்மடங்காக அதிகரித்தது. இன்னும் வேறு என்னென்ன ரகசியங்கள் உடைபடப் போகின்றனவோ எனும் ஆர்வத்தோடு குலச்சிறையாரின் பேச்சைக் கவனிக்க லானார்கள்.

``நம்மைக் குழப்பவும், திசைதிருப்பவும், சோழருக்கும் நமக்கும் இடையே பகை மூட்டவும்... ஏன் பாண்டிமாதேவியார் மீதே அரசருக்குக் கோபம் ஏற்படுத்தவும்... இப்படியான சதித் திட்டங்களால் மீண்டும் மதுரையைத் தங்கள் வயப்படுத்தவும் இவர்களின் தலைவன் போட்டுக் கொடுத்த திட்டமே அனைத்தும்! ஆனால் அவற்றைச் செயல்படுத்துவதில் பெரும் தோல்வி அடைந்து விட்டார்கள்...''

``இவர்களின் தலைவன்..?’’

தளபதியின் இந்தக் கேள்விக்குச் சட்டென்று பதில் சொல்லாமல் மாமன்னரை நோக்கினார் பேரமைச்சர்.

``கூறுங்கள் அமைச்சரே... அந்தப் பெருந்துரோகி யாரென்று நம் வீரர்கள் எல்லோருமே தெரிந்து கொள்ளட்டும்...’’

மன்னரின் அனுமதி கிடைத்ததும் பேரமைச்சர் உரக்கச் சொன்னார்...

``அடிகளார்!’’

சிவ மகுடம்-77

அடிகளாரும் ஆபத்தும்!

ங்ஙனம் `பெருந் துரோகி’ என்று அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவரான அடிகளார், இதுபற்றி எதுவும் அறியாதவராக மணமேற்குடி எனும் அந்த ஊரின் எல்லையை அடைந்திருந்தார். வயல்கள் சூழ அமைந்திருந்தது மணமேற்குடி.

யாத்திரிகனைப் போன்ற பாவனையுடன், எதிர்ப்படும் அன்பர்களிடம் வழி கேட்டபடி நடந்தவர், திடுமென பிரதான பாதையை விட்டு விலகி வயல்களின் நடுவே நடக்க ஆரம்பித்திருந்தார். வயற்காட்டின் ஒரு பகுதியில் அவரின் ஆயுதப் பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. எவரும் அறியாதவண்ணம் அவற்றைச் சேகரித்து எடுத்துச் செல்லவேண்டும்.

பின்னர், முன்னதாகவே இங்கு வந்து காத்திருக்கும் சகாக்களுடன் சேர்ந்துகொண்டு மாலை மயங்கும் வரை காத்திருக்க வேண்டும். உடல் நிலை சரியில்லாததால் ஓய்வெடுக்க இல்லம் வந்திருக்கும் குலச்சிறையாரைத் தாக்கி, அவரை அவரின் இல்லத்திலேயே சிறை வைக்க வேண்டும். அவரின் அணுக்கத்தையும் ஆலோசனையையும் உதவியையும் தடை செய்தாலே போதும் பாண்டியன் நிலை குலைந்து போவான்... பிறகு நம் வெற்றி எளிதாகிவிடும்!

இதுதான் அடிகளாரின் கணக்கு. ஆனால் பாவம்... அவரின் திட்டம் எதுவும் பலிக்காமல் போனதுடன், அவரும் மீளமுடியாத பேராபத் தைச் சந்தித்தார்; அவருக்கும் தெரியாமல் குலச்சிறையார் விரித்திருந்த வலையில் - பாண்டியர் தரப்பினரின் இரும்புப்பிடியில் சிக்கித் தவித்தார்!

- மகுடம் சூடுவோம்...