Published:Updated:

சிவ மகுடம்-79

சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவ மகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

சிவ மகுடம்-79

மங்கையர்க்கரசியார் சரிதம்

Published:Updated:
சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவ மகுடம்

எழிற்சங்கம் வைத்த பெருந்தமிழ் தென்னவர் தம் தலைநகரமாம் மாமதுரை, அன்று அந்த இரவுப்பொழுதிலும் வழக்கத்துக்கும் அதிகமாக அழகுபொலிந்து திகழ்ந்தது என்றே சொல்லவேண்டும். விண் தவழும் வெண்மதியின் கிரணங்கள் மகுடமாடங்களின் பொற்தகடுகளில் பட்டு எங்கும் பொன்மயமாய் எதிரொலிக்க, பார்ப்ப தற்கு இந்திரலோகம் போல் காட்சியளித்தது அந்தப் பெருநகரம்.

சிவ மகுடம்-79

முதல்நாள் இரவில் கோட்டைக்கு வெளியே வைகை தீரத்தில் யுத்தம் ஒன்று நடந்ததற்கான எவ்விதச் சுவடும் இல்லாதபடி உற்சாகத்தில் மூழ்கியிருந்தன அல்லங்காடி வீதிகள்.

அன்னை மீனாளுடன் சோமசுந்தரக் கடவுள் கொலுவிருக்கும் கோயிலுக்கு அடுத்தபடியாக நகரின் பிரதான மையமாய்த் திகழும் அரண்மனை மாளிகைக்குள்ளும் புதுவிதப் பொலிவு குடிபுகுந்திருந்தது. ஆங்காங்கே வழக்கத்துக்கும் அதிகமாக தீபங்களும், பந்தங் களும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் பொழுதிலும் அரசர்பிரான் ஆலோசனைக்கு வருவதாக இருந்தபடியால், அதற்கான முன்னேற்பாடுகள் துரிதகதியில் செய்யப்பட்டிருந்தன. அதன் ஒருபகுதியாகவே தீபவிளக்குகளை அதிகப்படுத்தி இருந்தார்கள் போலும்.

மந்திராலோசனை மண்டபத்தின் தூண்சிற்ப மாதர்களும் விளக்குச் சுடரின் வெளிச்சத்தில் புன்னகை பூப்பதுபோல் தோன்ற, அவர்களின் எழிலோவியத்தை ரசிக்கும் தோரணையில் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் பேரமைச்சர் குலச்சிறையார்.

வெளிக்காட்சிக்கு அப்படித் தோன்றினாலும், உண்மையில் அவரின் பார்வைதான் தூண் பாவைகளின்மீது இருந்ததே தவிர, சிந்தையோ வேறுதிசையில் இருந்தது. எண்ணப்படியே நடந்துமுடிந்துவிட்ட சம்பவங்களைக் கோத்து, அடுத்தடுத்து என்ன நடக்கவேண்டும் என்ற திட்ட முடிச்சுகளையும் ஒவ்வொன்றாய்ச் சேர்த்து, உள்ளுக்குள் விநோத மாலையைத் தொடுத்துக்கொண்டிருந்தது அவரின் மனது.

ஓரிருமுறை தன்வசமிருந்த திருநீற்றுப் பையைத் திறந்து பார்க்கவும் அவர் தவறவில்லை. அந்தப் பைக்குள் இருக்கும் பொக்கிஷங்கள் அல்லவா இத்தனை காரியவெற்றிகளுக்கும் காரணம்!

ஆனால்... மாமன்னர் மாறவர்மன் அரிகேசரியிடத்திலோ, பாண்டிமாதேவியார் மங்கையர்க்கரசியாரிடமோ கேட்டால், `எல்லா வெற்றிகளுக்கும் இவரே காரணம்’ என்று குலச்சிறையாரையே சுட்டிக் காட்டுவார்கள்.

ஆம்! குலச்சிறையார் உவக்கும் அந்தப் பொக்கிஷங்கள் வியூக வழிகளைச் சொல்லிக்கொடுத்தன என்றால், ஒவ்வொன்றையும் கனகச்சிதமாகச் செயல்படுத்தியது பேரமைச்சர்தானே!

தேவியாருக்கும், மாமன்னருக்கும்... ஏன் பாண்டியதேசத்துக்கே பெரும் வரமாகக் கிடைத்த பொக்கிஷம், மணமேற்குடியில் பிறந்த குலச்சிறையார்.

பிற்காலத்தில் சுந்தரரால் அருளப்பட்ட - அடியார்தம் புகழ்போற்றும் திருத்தொண்டத் தொகை, `பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்’ எனப் போற்றுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி எனும் நூல்... நம்பியாண்டார்நம்பி அருளியது.

சிவ மகுடம்-79

இந்நூல், குலச்சிறையாரை எப்படிப் பாடுகிறது தெரியுமா?

`அப்பதிக்கு முதல்வர் வன்தொண்டர் தாம்
ஒப்பு அரும்பெரு நம்பி என்று ஓதிய
செப்ப அரும் சீர்க்குலச்சிறையார் திண்மை
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர்’
என்கிறது.

தம்முடைய திண்ணிய தன்மையால் திருத் தொண்டின் திறத்தினின்று சிறிதும் வழுவாது இருந்தவராம் குலச்சிறையார்.

ஆம், பாண்டிமாதேவியாருக்கு உதவியாகவும் சைவம் தழைக்கவுமே தன் ஒவ்வொரு செயலையும் புரிந்துவந்தார் குலச்சிறையார் எனலாம். இந்த இலக்கை அனுசரித்தே அவரின் நிர்வாகக் காரியங்களும், வியூகம், படை, களம் சார்ந்த பணிகளும் அமைந்தன.

ஆம்! சிவம் அவரின் உயிர்மூச்சாய் இருந்தது. சிவப்பணியே அவரின் வாழ்க்கைத் தவமாய் இருந்தது. மந்திராலோசனை மண்டபத்தில் எல்லோருக்கும் முன்னதாக வந்தமர்ந்து, பெரும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்ட தற்போதைய அவரின் நிலையும் அத்தகையதுதான்!

உறையூர் போரில் தொடங்கி... பாண்டிமாதேவியார் - மாமன்னரின் மணவிழா, தேவியாரின் சிவப்பணி, இளங்குமரனின் வருகை, நாக முத்திரைகள், சோழர்பிரானின் நட்பு சேரருடனான மோதல், அடிகளாரின் சதித் திட்டங்கள், நம்பிதேவனின் நிலைப்பாடு, மாமன்னரின் லட்சியம், முன் தினம் நிகழ்ந்த சிறு யுத்தம் என நீண்ட தனது சிந்தனையைச் சற்றே தடுத்துநிறுத்திவிட்டு, மீண்டும் ஒருமுறை விபூதிப் பை பொக்கிஷத்தை தரிசிக்கத் தலைப்பட்டார் குலச்சிறையார்.

அதேவேளையில், மாமன்னரின் வருகையை அறிவிக்கும் விஜய பேரிகை பெரிதாக முழங்க, தனது செயல்பாட்டிலிருந்து மீண்டார் பேரமைச்சர். அவரைப் போன்றே மற்றவர்களும் வந்து காத்திருக்கும் சூழலை அப்போதுதான் உணர்ந்தார்.

பாண்டியப் பேரரசர் கனகம்பீரமாக வந்து ஆசனத்தில் அமர்ந்ததும், சம்பிரதாய வணக்க வாழ்த்துகளுடன் சபை ஆரம்பித்தது.

பேரரசரிடம் இருந்து வந்த முதல் கேள்வியே இதுதான்...

``அடிகளாரின் நிலை என்ன?’’

பேரமைச்சர் எழுந்தார்... ஒருமுறை சுற்றுமுற்றும் இருந்த சபை உறுப்பினர்களைப் பார்த்துவிட்டு, சில நொடிகள் மெளனம் காத்தவர், பின்னர் பெருமூச்செறிந்தபடி தன் பதிலைச் சொன்னார்:

``தண்டனைக் களத்தில் மரணத்தின் விளிம்பில் காத்திருக்கிறார்!’’

இந்தப் பதில் அவையில் இருந்த அனைவரையும் அதிரவைத்தது.

என்னதான் குற்றம் புரிந்திருந்தாலும்... ராஜ துரோகம் இழைத்தவராக இருந்தாலும்... எவ்வித விசாரணையும் இல்லாமல் அடிகளாரை நேரடியாகத் தண்டனைக் களத்துக்கே அமைச்சர் அனுப்பிவிட்டாரா என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுந்தது.

விசாரணை இல்லாமல், குற்றம் இருப்பின் குற்றத்துக்கான காரணத்தை அறியாமல், அவையின் பரிந்துரை இல்லாமல், மாமன்னரின் கட்டளை இல்லாமல் தன்னிசையாய் அமைச்சர் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்ற சீற்றமும் அவர்களின் முகத்தில் வெளிப்பட்டது.

ஆனால் அடிகளாரை விசாரணைக்கு அழைத்தால் என்ன நடக்கும் என்ற ரகசியத்தை அறிந்த மாமன்னரோ, தன் எண்ணப்படியே செயல்பட்ட பேரமைச்சரைப் பார்த்துப் புன்னகைத்தார்.

`நடவடிக்கை ஏன் என்பதற்கான காரணத்தை விளக்குக’ என்பது போல் முகக் குறிப்பால் அமைச்சருக்குக் கட்டளையிட்டார். பேரமைச்சர் விவரிக்க ஆரம்பித்தார் அந்தப் பேருண்மையை!

சிவ மகுடம்-79

ங்கு இப்படியான ஆலோசனை விவாதம் தொடங்கியிருக்க, தப்பிப் பிழைத்து பரங்குன்றத்து மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த ஒரு கூட்டம் `அடுத்து என்ன?’ என்பது குறித்த தங்களின் சதி ஆலோசனையை முடித்துவிட்டிருந்தது.

அவர்களில் சிலர் உறக்கம் வராமல் புலம்பிக் கொண்டிருக்க, வேறுசிலர் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தார்கள். வெள்ளாடை உடுத்தியவர்களாக, தோற்றத்தில் துறவிகள் போன்று திகழ்ந்த அந்த நபர்கள் பாறையிலேயே படுத்துக் கிடந்தார்கள்.

உறக்க நிலைதான் என்றபோதும், நிலவொளியில் அவர்களின் முகத் தோற்றம் விதவிதமான - விகாரமான பாவனைகளைக் காட்டியபடி இருந்தது. விழித்திருந்த ஒருவன், இவ்விதம் உறங்கிக்கொண்டிருந்த ஒருவனின் முகபாவனையைக் கவனித்து அவனை எழுப்ப முயன்றான். அவனோ, உறக்கத்தில் ஏதேதோ புலம்பினான்.

`காளைக் கன்று’ என்றான்... `ஆந்தை ஆந்தை’ என்று குழறினான்...

``என்ன ஆனது எழுந்திரும்...’’ என்று அதட்டி எழுப்பவும் உறக்கத்திலிருந்து விழித்தவன், திக்கித் திணறியபடி திகிலோடு கூறத் தொடங்கினான் தான் கண்ட கனவுக் காட்சிகளைப் பற்றி.

அடுத்தடுத்து மற்றவர்களும் விழித்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் தத்தமது கனவு பயங்கரங்களை விதவிதமாக விவரித்தார்கள். அந்தக் கனவுக் காட்சிகள் அனைத்தும் அவர்களின் எதிர்கால நிலையைச் சொல்லாமல் சொல்லின!

இங்கே இவர்களுக்கு இப்படியென்றால், அரண்மனை மாளிகையில்நீண்ட நெடுநாள்களுக்குப் பிறகு நிம்மதியான உறக்கத்தைத் தழுவியிருந்த பாண்டிமாதேவியாருக்கும் கனவு வந்தது!

அஷ்ட மங்கலப் பொருட்களைக் கனவில் கண்டார் தேவியார். ரிஷபக் கொடியைக் கண்டார், விடைஇளங் கன்றைக் கண்டார், பொற்றாளங்களைக் கண்டார், முத்துச் சிவிகையையும் கண்டார், சிவகணக் கூட்டத்தைக் கண்டார், நிறைவில் சிவத்தையும் கண்டார்!

இங்ஙனம் காட்சிகள் விரிய, அன்னையாரின் திருமுகமும் மலர்ந்தது!

மங்கையர்க்குத் தனியரசி
வளவர் திருக்குலக் கொழுந்து
வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை
கன்னிநாடாள்...
- என்றெல்லாம் பிற்கால ஞானநூல்கள் போற்றிச் சிறப்பித்த மங்கையர்க்கரசியாரின் அந்த முகமலர்ச்சி, பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பிய அந்தத் தெய்வப் பாவையின் அகமகிழ்ச்சி, தென்னகத்தின் எதிர்காலத்தையே அல்லவா மலரச் செய்யப்போகிறது!

அதற்கான முன்னோட்டமாய் அடுத்தசில நாள்களில், சீர்காழிச் சிவக்கொழுந்தும் திருஆலவாய் நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டிருந்தது!

- மகுடம் சூடுவோம்...

எண்திசை பாலகர்களை வணங்குவோம்!

நாம் செய்யும் எல்லா காரியங்களையும் சூரியனும் சந்திரனும் அஷ்டதிக் பாலகர்களும் கவனிக்கிறார்கள்; செயல்களுக்குச் சாட்சியாகவும் இருக்கிறார்கள் என்கிறது பாரதம். நம் செயல்கள் சிறக்கவும் வாழ்க்கைச் செழிக்கவும் அவர்களை வழிபடுவது அவசியம்.

இந்திரன்: ஐஸ்வர்யங்களை வாரிவழங்கி ஆரோக்கியம் அளிப்பவர்.
அக்னி: உடலுக்கு ஒளியையும் வனப்பையும் தருபவர்.
எமன்: தர்மவான். தீவினையால் வரும் துன்பத்தை அகற்றி நல்வினைப் பயன்களைக் கொடுப்பவர்.
நிருதி: எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை அகற்றி வீரத்தை ஊட்டுபவர்.
வருணன்: மழை தந்து பயிர்களையும் உயிர்களையும் காப்பவர்.
வாயு: வடிவம் இல்லாதவர். உயிருக்கு ஆதாரமானவர். ஆயுளை அதிகரிக்கச் செய்பவர்.
குபேரன்: சகல செல்வங்களையும் கொடுப்பதுடன் சுகபோக வாழ்வைத் தருபவர்.
ஈசானன்: மங்கல வடிவமானவர். ஞானத்தை அளிக்க வல்லவர்.
இத்தகைய பலன்களை வாரிவழங்கும் எண்திசை பாலகர்களையும் எண் திசைகளையும் நினைத்து தியானம் செய்வோருக்கு சகல செல்வங்களும் செழித்தோங்கும்.

- வே.சுப்பையா, சென்னை-66

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism