Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 62

சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவ மகுடம்

கனவில் விரிந்த காட்சி!

சிவமகுடம் - பாகம் 2 - 62

கனவில் விரிந்த காட்சி!

Published:Updated:
சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவ மகுடம்
இறைவன் ஒருவன். அவன் படைப்புகள் பற்பல. அவற்றைப் பரிபாலிக்க இறை கொண்ட உருவ பேதங்களோ அநேகம். அவற்றில் பெரியது இதுதான் என மானுடரால் வரையறுக்க இயலுமா?

ஆனால், மனிதர்களின் இயல்பு விசித்திரமானது. காரணம் புரியாமல் காரியம் ஆற்றும். சில தருணங்களில் அகந்தை மேலிட, கர்த்தாவை மறக்கும்; கர்மவினைகளில் சிக்கிக்கொள்ளும். வினைகள் விதியாகி விளையாடத் தொடங்கும்போது, அவற்றின் தீவிரத்தைத் தாங்க இயலா மல், `காரணம் கடவுள்’ எனப் புலம்பும்!

இப்படியான சில மனிதர்கள் ஆற்றிய காரியங்களால் மாமதுரையையும் பெரும் வினைகள் சூழத் தொடங்கின. அத்தீவினைகள் சதிராட ஆரம்பித்தால், அழகிய அந்தக் கூடல்மாநகரம் மீண்டுமொரு முறை சுட்டுப்பொசுங்கவும் வாய்ப்பு நேரலாம்!

கீழ்வானில் ஆதவனின் கிரணங்கள் ஒளி பாய்ச்சத் தொடங்கியிருந்தன. ஆங்காங்கே விலகியும் கூடியும் திகழ்ந்த மேகப்பொதிகள் செம்மைப் படர்ந்து திகழ, அவற்றுக்கு அவ்வண்ணம் இயற்கையாய் விளைந்ததா அல்லது இரவு முழுவதும் விழித்திருந்ததால் சிவந்துவிட்ட தன் கண்கள் அவற்றை அவ்வண்ணத்தில் காட்டுகின்றனவா என்பதைத் தீர்மானிக்க இயலவில்லை பேரரசியாருக்கு. விழிகளின் தகிப்பைவிடவும் அதிகம் தகித்துக் கொண்டிருந்தது அவரின் உள்ளம்.

சிவமகுடம் - பாகம் 2 - 62

தெற்கில் கடற்புரத்திலும், வட எல்லையில் பொன்னிதீரக் காடுகளிலும் தேசத்தின் உள்ளே பரங்குன்றத்துக் குகைகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகத் தகவல். அவர்கள் யார் தரப்பினர்?

கண்ணெதிரில் சிறைப்பிடிக்கப்பட்ட பேரமைச்சரை எவரோ வந்து சிறைமீட்டுச் சென்றிருக்கிறார்கள். சிறை மீட்டது யார்?

ஒருவேளை அது அடிகளாரின் வேளையாக இருக்குமோ? அவரே அமைச்சரைத் தப்பச் செய்வதாகக் காட்டி, அதையே காரணமாகக் கொண்டு குலச்சிறையாருக்கு ஆபத்து ஏதும் விளைவித்திருப்பாரோ?

மாமன்னர் இப்போது எங்கே... தனக்கு நிகரான அதிகாரத்தை அடிகளாருக்கு வழங்கிவிட்டு அவர் எங்கே உறைந்திருக்கிறார்? அடிக ளாரிடம் அதிகாரத்தை ஒப்படைக்கக் காரணம் என்ன?

இரவு, பகல் கணக்கின்றி புரவிகள் பல ஏதோ தகவல்களோடு கோட்டையைவிட்டு வெளியேறுகின்றன; உள் நுழைகின்றன. என்னென்ன தகவல்கள் யார் யாருக்கு அனுப்பப்படுகின்றன? எங்கிருந்து என்ன சேதிகள் வந்து சேர்கின்றன?

அடுத்தடுத்து முளைத்த வினாக்கள் எதற்கும் தெளிவானதொரு பதிலை அறியமுடியாமல், உள்ளுக்குள் பெரிதும் தவித்துக்கொண்டிருந்தார் அந்தப் பேரரசி. ஆயினும், அவை அனைத்துக்கும் பொருந்தும் தீர்க்கமான ஒரு பதில் விரைவில் வந்து சேரும் என்ற நம்பிக்கையும் அவருக்கு ஆழமாக இருந்தது. அந்த நம்பிக்கையே இதுவரையிலும் அவரைத் திடம் குலையாமல் இருக்கவும் செய்தது.

சிவமகுடம் - பாகம் 2 - 62

பொழுது நன்கு புலர ஆரம்பித்தது. மாளிகைச் சாளரத்தில் விழிகள் நிலைத்திருக்க அமர்ந்திருந்தார் அரசியார். `மீனாள்’ எந்நேரமும் விஜயம் செய்யலாம் என்பதால், கணப்பொழுதும் பார்வையையும் கவனத்தையும் வேறுபக்கம் திருப்பவில்லை அவர்.

அவ்வப்போது `க்கீ... க்கீ...’ எனும் சத்தம் வெளியே கேட்கும்போதெல்லாம் ஆர்வத்துடன் எழுவதும், சத்தத்துக்குக் காரணம் வேறு கிளிகள் என்று தெரிந்ததும் ஒருவிதச் சோர்வுடன் மீண்டும் ஆசனத்தில் அமர்வதுமாய் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார்.

நம் திருஞானசம்பந்தப் பெருமானின் பதிகப் பாடலொன்று உண்டு.

சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடு பால்
முறையாலே உணத்தருவன் மொய் பவளத் தொடுத்தரளம்
துறையாரும் கடல் தோணிபுரத்து ஈசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கு ஒருகால் பேசாயே


இதுதான் அந்தப் பதிகம். வளர்ப்புக்கிளியை அழைத்து அதனிடம் தன் தலைவனின் பெயரைச் சொல்லச் சொல்லிக் கேட்கும் தலைவியின் பாவனையில், தோணிபுரத்துச் சிவனாரின் திருப்பெயரைச் சொல்லுமாறு வேண்டும் பாடல் இது.

பாண்டிமாதேவியாருக்கும் அவ்விதமான விருப்பம் உண்டு. ஆனால் அவர் விரும்பியது ஒன்றல்ல... ஈசனின் திருநாமங்களில் ஒருநூறையாவது தன் வளர்ப்புக் கிளியான மீனாளின் கிள்ளைமொழியில் கேட்டுவிட வேண்டுமென்று பேராவல் அவருக்கு.

மீனாளோ, பேரரசியாரைப் போன்றே பிடிவாதமானவள். அவள் விரும்பினால் மட்டுமே எதையும் ஏற்றுக்கொள்வாள். ஆகவே, தேவியாரின் விருப்பம் பூரணமாக நிறைவேற அவள் வாய்ப்பளிக்கவில்லை. அவரின் மனம் வருத்தப்படுமே என்று ஒரு திருப்பெயரை மட்டும் தத்தை மொழி யில் சொல்வாள். `சோமா... சோமா’ என்று அவள் சொல்லும் அழகில் சொக்கிப்போவார் பாண்டிமாதேவியார்.

மதுரைவாழ் அடியவர்கள் `சொக்கநாதா சோமேசா’ என்று மதுரை ஈசனை வழிபடுவார்களே... அப்படித்தான்... பாண்டிமாதேவியார் `சொக்கநாதா...’ என்று ஆரம்பிப்பார். மீனாள் `சோமா சோமா’ என்று முடித்துவைக்கும்.

பச்சைக்கிளியின் மதுரநினைவுகள் மனத்துக் குச் சற்று ஆறுதலைத் தந்த அதே வேளையில், காலைக்கதிரொளியின் வெம்மை கலந்து வீசிய வைகை தீரத்துக் காற்றும் சேர்ந்துகொள்ள, அதீத களைப்பில் தன்னையுமறியாமல் கண்ணயர்ந்தார் தேவியார்.

பெருங்கனவு ஒன்று சூழ்ந்துகொண்டது அவரை. பகல் கனவு பலிக்காது என்பார்கள். ஆனால் விரைவில் பலிக்கப் போகும் சம்பவங்களையே அவர் கனவில் கண்டார்!

சிவமகுடம் - பாகம் 2 - 62

கனவில்...

வைகைக் கரையில் நின்றிருந்தார் பாண்டியப் பேரரசி மங்கையர்க் கரசியார். அருகில் படை பரிவாரங்களுடன் மிகக் கம்பீரமாக கூன்பாண்டியர்... இல்லையில்லை சற்று வளைந்து சிறிது புடைத்ததுபோல் தோன்றும் அவர் முதுகில் கூன் இல்லை; நின்றசீர் நெடுமாறனாய்த் திகழ்ந்தார். சற்றுத் தள்ளி பேரமைச்சர். இன்னும் ஆயிரமாயிரம் மக்கள்.

புதுவெள்ளம் கண்டிருந்த வைகையின் நீரோட்டத்தில் ஏடு ஒன்று மிதந்தது வந்தது. அந்நேரம் பாலகன் ஒருவன் தோன்றினான். மறுகணம் பெருங்காற்று வீச அந்த விநோதம் நிகழ்ந்தது. அதுவரையிலும் நீரோட்டத்தின் திசையில் மிதந்த ஏடு, சட்டென்று நீர்விசையை மீறி எதிர்த் திசையில் மிதக்கத் தொடங்கியது.

சட்டென்று புகைமூட்டமாய்க் காட்சிகள் மறைய வேறொரு காட்சி விரிந்தது. பற்றியெரியும் மாளிகை தெரிந்தது. விண்ணெழுந்த புகையில் அக்காட்சியும் மறையத் தொடங்க, தீப ஜோதியின் நடுவில் தகதகத்தது சிவ மகுடம்.

அந்த மகுடத்தைச் சிரத்தில் தாங்கியிருந்த மாமன்னர் முந்தைய காட்சியில் இருந்ததைவிடவும் பொலிவுடன் திகழ்ந்தார்.

கனவிலும் தேவியார் நம்ப மறுத்துத் திகைத்த காட்சி... மேனியிலும் நெற்றியிலும் திருநீறு துலங்க தரிசனம் தந்தார் மாமன்னர்!

சட்டென்று படபடத்த இறக்கைகள் இரண்டு அந்தக் காட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது; காட்சியை மட்டுமல்ல தேவியாரின் கனவையும்தான்.

ஆம்! ஈரப்பதத்தைச் சுமந்து கனத்த மீனாளின் இறக்கை களே அவ்விதம் தேவியாரின் தூக்கத்தைக் கலைத்தன. விழித்தெழுந்த பாண்டிமா தேவியாருக்கு, அவர் எதிர்பார்த்த செய்தியைக் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் மீனாள்!

சிறைப்பிடித்த மீன்வலை!


``க்ரவர்த்தி அவர்களே! தென்பரதக் கண்டத்தில் தங்களைவிடவும் அறச் சீலர் வேறு எவர் உள்ளனர். எங்கள் தென்னவன், மக்களின் தெய்வம் அல்லவா?’’

பேரமைச்சரின் இந்த வார்த்தைகள் மாமன்னர் கூன்பாண்டியரை மிகவும் நெகிழச் செய்தன. நெகிழ்ச்சியையும் மீறி நடப்புச் சூழலை நினைத்து விரக்திக்கும் ஆளானார் மாமன்னர். அதன் விளைவாகவே அவர் அந்த வார்த்தைகளை உதிர்த்தார்.

``பேரமைச்சரே! நீங்கள் என்னை தெய்வம் என்கிறீர்கள்... ஆனால், உங்கள் தென்னவனைத் தென்னாட்டிலிருந்தே அகற்றிவிட சதி நடக்கிறது தெரியுமா?’’

கூன்பாண்டியர் இப்படிச்சொன்னதும் தலைமீது இடி விழுந்தவர் போலானார் பேரமைச்சர். நிலைகுலைந்து போனவருக்கு எளிதில் பேச்சு எழவில்லை. திக்கித் திணறியபடி கேட்டார்.

``மன்னர்பிரானே! என்ன சொல்கிறீர்கள்...’’

``ஆம்! குலச்சிறையாரே... எண்ணற்ற காரியங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. அதற்கான கர்த்தாக்களைக் கண்டறிய நானும் சில பணிகளை ஆரம்பித்து விட்டேன். வெகுவிரைவில் அவர்கள் வீழ்வார்கள்; அல்லது நான்...’’

மேற்கொண்டு அரசரைப் பேசவிடாமல்... வகிக்கும் பதவியின் நிமித்தம் வழக்கமாக தான் காட்டும் பணிவையும் மரியாதைச் செய்கைகளையும் கைவிட்டவராக, மாமன்னரின் வாயைப் பொத்திய அமைச்சர், குரல் தழுதழுக்கக் கூறினார்:

``என் உடற்கூட்டில் உயிர் இருக்கும் வரையிலும் உங்களுக்கும் நம் மாமதுரைக் கும் வீழ்ச்சி என்பதே இல்லை. விரைவில் பார்ப்பீர்கள்... தென்னகமெங்கும் நம் கயற் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கும்...’’

பேரமைச்சர் இப்படியொரு சங்கல்பத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. சட்டென்று வீசப்பட்ட மீன் வலையொன்று மாமன்னரை நகரவிடாமல் சிறைப்பிடித்தது!

வலைக்கு ஊடே பாய்ந்து வெளியேறின சில கோர வாள்கள்!

- மகுடம் சூடுவோம்...