மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவ மகுடம் - 70

சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவ மகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

ழையாறை நகரத்து மாளிகையின் மகாமண்டபத்துச் சாளரத்தில் சாய்ந்து நின்றிருந்த பாண்டிமாதேவியார், அங்கிருந்து விலகி நிலா மாடத்துக்கு நகர்ந்திருந்தார்.

`இன்னும் சீர்காழிப் பிள்ளை நிகழ்த்திய அற்புதத்தைச் சொல்லவில்லையே...’ என்று அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதத்தை விவரிக்கத் தொடங்கியிருந்தான் இளங்குமரன்.

முன்னதாக, மறைக்காடரை தரிசித்த அனுபவத்தையும் அணு அணுவாய் விவரித்த இளங்குமரன், அதனால் உண்டான சிலிர்ப்பில் மெள்ள மெள்ள நிகழ் காலத்திலிருந்து விலகி சிந்தனைக் கலத்தில் பயணித்து, மறைக்காட்டில் ஞானப்பிள்ளை அற்புதம் நிகழ்த்திய நாளுக்கு வந்து சேர்ந்திருந்தான்.

வாருங்கள் அவனுடன் சென்று நாமும் மறைக்காடரை தரிசிப்போம். அத்துடன், ஞானப்பிள்ளை ஞானசம்பந்தர் பதிகம் பாடி கதவு மூடும்படிச் செய்த அற்புதத்தையும் கண்டு வருவோம்!

`கதவுகள் மூடிக்கொள்ளட்டும்'

எங்கும் ஐந்தெழுத்து முழக்கம்; சிவநாமப் போற்றி என்று ஊரே பரவசத்தில் திளைக்க, நாவுக்கரசரும் இறைவன் தனக்கு அருள்புரிந்ததைக் கண்டு சிலிர்த்தார்; மேனி நடுநடுங்க உடல் தளர்ந்தார். அதனால் தரையில் சாய்ந்துவிட இருந்த பூப்போன்ற அவரின் மேனியை இறுகப் பற்றி, தன் தளிர்க் கரத்தால் அணைத்துக்கொண்டார் திருஞானசம்பந்தர்.

தொடர்ந்து மக்கள் கூட்டம் வழிவிட, அடியார்கள் சூழ... தாரகைகள் சூழ்ந்து வரும் சந்திர மூர்த்திகளாய் இருவரும் ஆலயத்துக்குள் பிரவேசித்தார்கள். மக்களோடு மக்களாக இளங்குமரனும் கோசெங்கணும் பின்தொடர்ந்தார்கள்.

கருவறையில் லிங்கத் திருமேனியராக - தீபங்களின் ஒளியில் பொன் ஆபரணங்கள் மின்ன தகதகத்தார் திருமறைக்காட்டுப் பெருமான்!

அவரின் திருமேனியில் துலங்கும் வில்வமும், மலர் ஆரங்களும், குங்கிலியப் புகையும் இணைந்து புதுவித மணத்தை ஆலயம் எங்கும் பரப்ப, களிப்பில் கண்ணீர் உகுத்தன இளங்குமரனின் கண்கள்.

திருநாவுக்கரசர் பாடியது எத்தகைய சத்திய வாக்கு! ஐம்பூதங்களாகவும், சூரிய சந்திரரா கவும், ஆன்மாக்களாகவும் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் அட்டமூர்த்தியான சிவப் பரம்பொருள், அங்கே அந்த ஆலயத்தில் குழுமியிருந்த ஒவ்வொருவரின் அகத்திலும் முகத்திலும் ஆனந்தமாய் ஒளிர்வதைக் கண்டான்.

ஆம்! ஆண்டவன் ஓர் உருவினன் அல்ல. அவன் ஏகன்; அவனே அநேகனும் ஆவான். சிலையாய்க் காண்போருக்குச் சிற்பத்தின் அழகு அவன்; ஒளியாய்க் காண்போரின் உள்ளொளியாய்த் திகழ்பவன் அவன். உணர்ந்து சிலிர்ப்போருக்கு ஆனந்த அனுபவம் அவன்.

அந்த ஆனந்தத்தை இளங்குமரனும் கோச்செங்கணும் ஒருங்கே அனுபவித்தார்கள். கயிலை முழவென ஆலய மத்தளங்கள் முழங்க, மங்கல ஆசியாய் சங்குகள் ஒலிக்க, மகா ஆராதனை செய்யப்பட்டது மறைக்காடருக்கு.

`நான்மறைகள் போற்றும் நாயகா, திரிபுரம் எரித்த சிவமே, ஆட்கொள் எம்மை... ஆற்றுப் படுத்தும் எம் வாழ்வை...’ நெக்குருகப் பிரார்த்தித்தார்கள் நண்பர்கள் இருவரும்.

அப்பனை வணங்கியபிறகு, யாழைப் பழித்த மொழியம்மையையும் வணங்கி வழிபட்டு முடித்து, அனைவரும் ஆலயத்தைவிட்டு வெளியேறினார்கள்.

வாயிலைக் கடந்து வெளியே வந்த நாவரசர் சட்டென்று நின்றார். அதன் பொருட்டுப் பிள்ளையும் நிதானித்தார். திருநாவுக்கரசர் மெள்ளத் திரும்பி திருக்கோயிலை நோக்கினார். சிரம் மேல் கரம் குவித்து வணங்கித் தொழுதார். பிறகு, ஞானப் பிள்ளையின் பக்கம் திரும்பினார்.

``ஐயனே! நான் கதவு திறக்கப் பாடினேன். இறையருளால் கதவுகள் திறந்தன. அக்கதவங்கள் மீண்டும் தாமாக மூடிக்கொள்ளும்படி தாங்கள் பதிகம் பாடவேண்டும்.

மணிகள் பொருந்திய திருக்கதவுகள், முன்பு போல் ஒரு நிலையிலேயே நின்றுவிடாமல், இனி எப்போதும் திறக்கவும் மூடவும் உகந்தவாறு திகழும்படி... திருக்கதவுகள் மீண்டும் அடைத்துக் கொள்ள தாங்கள் பதிகம் அருளவேண்டும்’’ என்று குரல் தழுதழுக்க வேண்டினார்.

சிவ மகுடம்
சிவ மகுடம்


திருநாவுக்கரசரின் ஆணைக்கு மறுப்பேது?

பிள்ளை பாடத் தொடங்கியது. அதனால், மீண்டும் ஓர் அற்புதத்தைக் காணும் பேறு கிட்டியது, அங்கிருந்த கூட்டத்தாருக்கு.

சதுரம்மறை தான் துதி செய்து வணங்கும்

மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டுறை மைந்தா

இதுநன்கு இறை வைத்தருள் செய்க எனக்கு உன்

கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!

மாதுளைவண்ண இதழ் திறந்து, தேனொழுகும் தமிழால், கேட்பவர் சிந்தை மகிழும்படி சம்பந்தக் குழந்தை இந்தப் பதிகத்தைப் பாடியதுமே கோயிலின் திருக்கதவுகள் திருக்காப்பிட்டுக் கொண்டன. சிலிர்த்தது ஊர்!

இந்த இடத்தில் பரவசத்துடன் ஒலித்த பாண்டிமாதேவியாரின் குரல் இளங்குமரனின் விவரிப்பைத் தடுத்து நிறுத்தியது.

``அற்புதம்... மிக அற்புதம்!’’

பதிகத்தை வியந்த பாண்டிமாதேவியார் பரவசம் விலகாமல் தொடர்ந் தார்: ``பெருமைமிகு நான்மறைகளும் வழிபடும் ஈசனே, எழில் மிகு சோலைகள் சூழ்ந்த மறைக்காட்டில் எழுந்தருளும் நாதனே, கதவுகள் திருக்காப்பிடச் செய்ய வேண்டும் எனும் விண்ணப்பத்தை விரைவில் நிறைவேற்றி அருள்வீராக!

ஆஹா... எளிய பதிகத்தால் ஆழ்ந்த அன்பைப் பொழிந்து எந்தை ஈசனிடம் காரியம் சாதித்து விட்டதே தெய்வப் பிள்ளை!’’ என்றபடி, நீர்க் கசியும் விழிகளை மூடிச் சிலாகித்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

``இளங்குமரா! வாகீசர் பெருமையைக் கேட்டு என் சிந்தை மகிழ்கிறது. பிள்ளையின் பெருமையைக் கேட்டாலோ, என் உள்ளம் நெகிழ்கிறது. இங்கே, இப்போது, நீ அல்லவா அவரின் பதிகத்தைப் பாடினாய். ஆனால், என் செவிகளில் அந்தப் பாலகனில் குரலே ஒலித்தது. எனக்குள் தாய்மை உணர்வு பொங்கிப் பெருகுகிறது...’’

முதன்முறையாக அந்த வீரப் பெருமாட்டியின் குரல், உணர்ச்சியில் தழுதழுப்பதைக் கண்ட இளங்குமரனும் கோச்செங்கணும் நெகிழ்ந்தனர். சிரம் தாழ்ந்து அம்மையைப் பணிந்து சொன் னார்கள்: ``தாயே! விரைவில் அந்தப் பிள்ளை எங்கள் தாயைச் சந்திக்கும். எங்களுக்கு உத்தர விடுங்கள். இப்போதே புறப்படுகிறோம்!’’

சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்த மாதரசி, விழி நீரைத் துடைத்துக்கொண்டார். பிறகு இருவரிடமும் ஆணையை வெளிப்படுத்தினார்.

``வீர மைந்தர்களே! நீங்கள் இருவரும் முதற்கண் மாமதுரைக்குச் செல்ல வேண்டும். அங்கே பேரமைச்சர் குலச்சிறையார் உங்களைச் சந்திப்பார். அவரிடமிருந்து சில உத்தரவுகளும் ஞானப்பிள்ளைக்கு அழைப்பு விடுவதற்கான வழி காட்டலும் கிடைக்கும்... புறப்படுங்கள்!’’ என்றார்.

மீண்டும் சிரவணக்கம் செய்துவிட்டுப் புறப்பட முனைந்த இளங்குமரனிடம் அந்தப் பொக்கிஷத்தை ஒப்படைத்தார் பாண்டிமா தேவியார். தந்தத்தால் ஆன சிறு பேழை அது. `திறந்து பார்க்கலாமா?’ என்று பார்வையாலேயே பாண்டிமாதேவியாரிடம் அனுமதி வேண்டினான் இளங்குமரன். அவரும் பார்வையாலேயே அனுமதி கொடுத்தார். திறந்து பார்த்த இளங் குமரன், திகைப்பில் உறைந்தான்!

சேனைத் தலைவனின் பயணம்!

பாண்டியன் ஆபத்துதவியும், புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சூட்சும சேனையின் பெருந் தலைவனும் ஆன தென்னவன் திருமுகத் தானைச் சுமந்திருந்த அந்தப் புரவி, புயல் வேகத்தில் பாய்ந்துகொண்டிருந்தது.

தென்னவனுக்கு மட்டும் சித்துக்கலைகள் அத்துபடியாக இருந்திருந்தால், இந்தப் புரவியை நம்பியிருக்க மாட்டான். விண்ணில் ஏகி மனோ வேகத்தில் மாதுரையை அடைந்திருப்பான்.

புரவி புயல் வேகம் காட்டியும் திருப்தி இல்லாத வனாக மேலும் அதை வேகப்படுத்தும் விதம் உந்துதல் கொடுத்தான். அந்த அசகாயப் புரவியும் இயன்றவரை தன் வேகத்தை அதிகப்படுத்தியது. இங்ஙனம், தென்னவன் காட்டிய அவசரத்துக்குக் காரணம் இருக்கவே செய்தது.

`சக்கரவர்த்திகள், துரோகி என்று முழுமையாய் நம்பும் ஒரே நபர் பாண்டிமா தேவியார்தான்!’ என்று அவன் சிந்தை அதிர, செவிக்கருகே வந்து ரகசியம் சொன்ன குலச்சிறையார், மாமதுரையில் மிக அவசரமாய் செய்ய வேண்டிய காரியம் ஒன்றையும் அவனிடம் ஒப்படைத்திருந்தார்.

`தாமதித்தால் துரோகிகள் முந்திக்கொள் வார்கள்’ என்றும் அறிவுறுத்தியிருந்தார். அதன் பொருட்டே இவ்வளவு வேகம் தென்னவனிடம்.

ஆனாலும், காரியத்தை முடிப்பதில் துரோகி களே முந்திக்கொண்டார்கள்; தென்னவனோ விபத்தில் சிக்கி, படுபாதாளத்தில் விழ நேர்ந்தது. மரக்கிளை ஒன்றைப் பற்றிக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடும் நிலை வாய்த்தது!

- மகுடம் சூடுவோம்...