திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சிவ மயம்!

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

`சைவத்தின் மேல் சமயம் வேறில்லை; அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லை!'

சிவ சிவ... சக்திவிகடன் வாசகர்களுக்கு என் வணக்கங்கள். இதுவரை ஊர் ஊராகச் சென்று சைவ சமயத்தின் பெருமைகள் பற்றியும் திருமுறைகளின் மகிமைகள் குறித்தும் பேசியும் பாடியும் வந்துள்ளேன். இப்போது உங்களுடன் புத்தகத்தின் வழியாக கலந்துரையாட இருக்கிறேன்.

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன்
ஐயா
திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

சைவத்தில் நான் கண்ட அனுபவங் கள், சந்தித்த நல்ல ஆன்மாக்கள், அற்புதமான ஆலயங்கள், திருமுறை களால் அடைந்த நன்மைகள், சைவ சமய ஆசார்யர்களின் பெருமைகள், திருவாசக முற்றோதுதல்களின் பயன்கள், திருவாசக விண்ணப்பத்தால் நடைபெற்ற அதிசயங்கள்... என பலவிதமான விஷயங்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். நீங்களும் என்னோடு உங்கள் அனுபவங்களையும் கேள்வி களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

சிந்திக்கும் எந்த ஆன்மாவுக்கும் கேள்விகள் எழும். அற்புதமான கேள்விகளால்தான் இந்த உலகம் வளர்ச்சியும் அடைந்து வந்துள்ளது. அதிலும் ஆன்மிகத்தில் மூழ்கித் திளைக்கும் பலருக்கும் பல கேள்வி கள் எழும். அந்தக் கேள்விகளுக்கு என்னால் இயன்ற அளவில் சிவத்தின் ஆசியோடு இங்கு பதில் அளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளால் பல அரிய தத்துவங் களும் தகவல்களும் பலருக்கும் சென்று சேரும். அதனால் உங்கள் கேள்விகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும் என நம்புகிறேன்.

திருச்சிற்றம்பலம்!

சிவ மயம்!

? திருமுறைகளை ஏன் ஓத வேண்டும்? சிவத்தை ஏன் ஆராதிக்க வேண்டும்?

நாம் ஆராதிக்கவேண்டும் என்ற தேவை சிவத்துக்கு இல்லவே இல்லை. அதைப் பாடினாலும் கொண்டாடினாலும் அதன் இயல்பிலிருந்து அது மாறப் போவது இல்லை. கருணையே அதன் இயல்பு.

சிவத்தை ஆராதிக்க வேண்டும், திருமுறைகளை ஓதவேண்டும் என்ற தேவை நமக்குத்தான் உள்ளது. இனி வரக்கூடிய பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் ஆன்மாக்களுக்கு பல்வேறு தேவைகள், கவலைகள் உண்டாகப் போகின்றன. அவற்றிலிருந்து சகலரையும் காக்கவேண்டிய அவசியம் உள்ளது என்பதை அறிந்த சிவம், 27 தேவாசிரியர்களை (இவர்களில் தாமும் ஒரு ஆசிரியராக இருந்து எழுதியவர் ஈசன்) வைத்து திருமுறைகளை எழுத வைத்தது; அவற்றை எப்படிப் பாட வேண்டும், எதற்காக பாட வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாக சொல்லியும் கொடுத்துள்ளது.

அந்த அற்புத பொக்கிஷத்தை; அட்சயப் பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, நாம் வேறு எங்கெங்கோ சென்று யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுதான் வேதனை.

இடது கண்ணில் பிரச்னையா, காசு வேண்டுமா, காய்ச் சல் வந்துவிட்டதா, கிரக தோஷங்கள் குறித்து அச்சமா, திருமணத் தடை உள்ளதா... இப்படி சகல பிரச்னைகளுக்கும் தீர்வைக் கொண்டுள்ளன திருமுறைகள். அவற்றில் இல்லாத தீர்வே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும்.

திருமுறைகள் ஈசனைத் துதிக்கும் வெறும் ஸ்தோத்திரப் பாடல்களை மட்டுமே கொண்டதில்லை. அவை வேதத் தின் சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சாஸ்திரப் பாடல்களாகவும் உள்ளன. வேதத்தின் மிகச் சுருக்கமான வடிவம் `ஓம்' எனும் பிரணவம். வேதத்தின் மிக விரிவான தமிழ் வடிவம் திருமுறைகள். ஆம், அவற்றில் ரிக் வேதம் சொல்லும் துதிப்பாடல்கள் உண்டு; யஜுர் வேதம் சொல்லும் வழிபாடுகள் உண்டு; சாம வேதம் சொல்லும் இசையும் பாடலும் உண்டு; அதர்வணம் சொல்லும் மந்திரங்களும் உண்டு.

அவ்வளவு ஏன் `தோடுடைய செவியன்...' எனத் `தோ' என்ற ஓ-காரத்தில் தொடங்கி, `உலகெலாம்' என ம்-காரத்தில்தான் திருமுறை முடிகிறது. இப்படி வேதமே விரிவாக விளங்கும் திருமுறைகளை நாள்தோறும் ஓதிவரும் ஆன்மாக்களுக்கு அச்சம் உண்டாவதே இல்லை.

அச்சம் இல்லாத இடத்தில் அமைதியும் தெளிவும் உண்டாகும். அதனால் அவர்கள் செய்யும் செயல் யாவும் வெற்றியாகும். இதுதான் திருமுறைகளின் பயன்பாடு. அதனால், திருமுறைகளைப் பாடுவது ஈசனுக்காக இல்லை. உங்களுக்காக என்று உணர்ந்துகொள்ளுங்கள். பிறகு பாடுவதும் பாடாததும் உங்கள் விருப்பம்.

ஆலயம்தோறும் சென்று தரிசிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், உடல் ஒத்துழைக்கவில்லை; அபிஷேகம் அலங்காரம் என்று செய்துவைத்து ஈசனைக் கொண்டாட வேண்டும் என்று ஆசை. ஆனால், வசதி இல்லை. இப்படி பலரின் ஆசைகள் நிறைவேறாமல் இருக்கலாம். இவற்றை விட அற்புதமான ஆராதனை ஒன்று உண்டு. அதுதான் திருமுறைகளை ஓதுதல். இருந்த இடத்திலேயே மனம் ஒன்றி திருமுறைகளைப் பாடினால், அதை விட வேறு பெரிய வழிபாடு இல்லவே இல்லை.

சிவ மயம்!

திருமுறைகளில் மிகவும் சிறப்பானது திருவாசகம். சிவனருளால் பாடப்பட்டு, சிவத்தாலேயே எழுதப்பட்டு, சிவமே அதன் பொருள் என்று உணர்த்தி வைக்கப்பட்ட மெய்ஞ்ஞான நூல் திருவாசகம். திருவாசகத்தில் சிறப்பான பகுதி சிவபுராணம். சிவபுராணம் பாடினால் ஆன்மாவை ஆட்டிப்படைக்கும் ஆணவம், கன்மம், மாயை விலகி விடும்.

அதற்கு உதாரணம் மாணிக்கவாசகர். முதன்முதலாக ஈசனைக் குருவாகக் கண்டார்; சிவபுராணம் பாடினார். அவ்வளவுதான் `தென்னவன் பிரம்மராயன்' எனும் வாதவூரார், பெரும் ஞானியாகி சமயம் கடந்தோரும் போற்றும் அருளாளர் என்றானார். திருவண்டப் பகுதி படித்தால், அவர் எவ்வளவு பெரிய விஞ்ஞானி என்று வியந்து போவோம். இந்த அண்டம் தோன்றிய விதத்தை இன்றைய நவீன அறிவியல் கூறுவதைப் போல அவ்வளவு துல்லியமாக விவரித்திருப்பார்.

`கடையூழி வருந்தனிமை கழிக்க அன்றோ உடையார் உன் வாசகத்தில் ஒருவிரதி கருதியதே' என்கிறது மனோன்மணீயம். ஊழிக் காலத்தில் தனித்திருக்கும் வேளையில் சிவனார் படித்து இன்புறவே திருவாசகம் எழுதப் பட்டதாம்.

சிவபுராணம் தொடங்கி அச்சோ பதிகம் வரை 51 தலைப்புகளில் உள்ள 658 பாடல்களும் ஓர் ஆன்மாவைக் கனிய வைத்து உள்ளொளிப் பெருக்க வைக்கும் மகிமைகொண்டவை. உருக்கத்தோடு இந்த பாடல்களைப் பாடி ஒரு விண்ணப்பம் வைத்தால், நிச்சயம் சிவம் அதை நிறைவேற்றித் தரும். இதை சத்திய சாட்சியாகவே பலரும் கண்டிருக்கலாம். `அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்' திருவாசகத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். இனியும் தொடர்ந்து பேசவும் இருக்கிறோம்.

அதனால் எப்போதும் நெற்றியில் நீறிடுங்கள், அநிச்சையாக மூச்சு விடுவதைப்போல சிவ நாமமும் சொல்லுங்கள். தினம் ஒருவேளையாவது சிறிது நேரம் ஒதுக்கி, பதிகம் பாடுங்கள். இவை எல்லாம் நம்முடைய நன்மைக்காக உருவானவை என்பதுதான் உண்மை!

சிவாயநம!

(பேசுவோம்...)