ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

அண்ணாமலையே போற்றி!

அண்ணாமலையே போற்றி
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலையே போற்றி

தீபத் திருநாளில் பாடவேண்டிய போற்றிப் பாடல்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ளது ‘போற்றித் திருஅகவல்’. இதைச் சொல்லி, ஒவ்வொரு ‘போற்றி’க்கும் மலர் தூவி, சிவபெருமானை வழிபடலாம். கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் செய்யும்போதோ பிரதோஷ வழிபாட்டின் போதோ இந்த போற்றித் திரு அகவலைச் சொல்லி, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம்!

அண்ணாமலையே போற்றி!

திருநாளன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும்போதும் வீட்டில் வழிபடும்போதும் துதிக்கும் வகையில் போற்றித் திருஅகவலில் உள்ள நாமப் போற்றிகள் தொகுப்பு உங்களுக்காக!

‘போற்றித் திருஅகவல்’

தாயே யாகி வளர்த்தனை போற்றி

மெய்தரு வேதிய னாகி வினைகெடக்

கைதர வல்ல கடவுள் போற்றி

ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக் காரமு தானாய் போற்றி

மூவா நான்மறை முதல்வா போற்றி

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

மின்ஆர் உருவ விகிர்தா போற்றி

கல்நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி

ஆவா என்றனக் கருளாய் போற்றி

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி

இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி இறைவ போற்றி

தேசப் பளிங்கின் திரளே போற்றி

அரைசே போற்றி அமுதே போற்றி

விரைசேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி

ஆதி போற்றி அறிவே போற்றி

கதியே போற்றி கனியே போற்றி

நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி

உடையாய் போற்றி உணர்வே போற்றி

கடையேன் அடிமை கண்டாய் போற்றி

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி

நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க் கரிய மருந்தே போற்றி

ஏனோர்க் கெளிய இறைவா போற்றி

மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை

ஆழா மேயரு ளரசே போற்றி

தோழா போற்றி துணைவா போற்றி

வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி

முத்தா போற்றி முதல்வா போற்றி

அத்தா போற்றி அரனே போற்றி

உரையுணர் விறந்த வொருவ போற்றி

விரிகட லுலகின் விளைவே போற்றி

அருமையி லெளிய அழகே போற்றி

கருமுகி லாகிய கண்ணே போற்றி

மன்னிய திருவருள் மலையே போற்றி

என்னையு மொருவ னாக்கி யிருங்கழற்

சென்னியில் வைத்த சேவக போற்றி

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி

அழிவிலா ஆனந்த வாரி போற்றி

அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி

முழுவதும் இறந்த முதல்வா போற்றி

மானேர் நோக்கி மணாளா போற்றி

வானகத் தமரர் தாயே போற்றி

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை யன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவ ருள்ளத் தமுதே போற்றி

கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி

நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி

இடைமரு(து) உரையு மெந்தாய் போற்றி

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீறார் திருவை யாறா போற்றி

அண்ணாமலையே போற்றி!

அண்ணா மலையெம் மண்ணல் போற்றி

கண்ணார் அமுதக் கடலே போற்றி

ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி

பாகம் பெண்ணுரு வானாய் போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி

குற்றா லத்தெம் கூத்தா போற்றி

கோகழி மேவிய கோவே போற்றி

ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி

பாங்கார் பழனத் தழகா போற்றி

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

அடைந்தவர்க் கருளு மப்பா போற்றி

இத்தி தன்னின் கீழிரு மூவர்க்

கத்திக் கருளிய வரசே போற்றி

தென்னா டுடைய சிவனே போற்றி

எந்நாட் டவர்க்கு மிறைவா போற்றி

ஏனக் குருளைக் கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி

இருள்கெட அருளு மிறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

களங்கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சேல் என்றிங் கருளாய் போற்றி

நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி

நித்தா போற்றி நிமலா போற்றி

பத்தா போற்றி பவனே போற்றி

பெரியாய் போற்றி பிரானே போற்றி

அரியாய் போற்றி அமலா போற்றி

மறையோர் கோல நெறியே போற்றி

முறையோ தரியேன் முதல்வா போற்றி

உறவே போற்றி உயிரே போற்றி

சிறவே போற்றி சிவமே போற்றி

மஞ்சா போற்றி மணாளா போற்றி

பஞ்சே ரடியாள் பங்கா போற்றி

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

இலங்கு சுடர்எம் மீசா போற்றி

கவைத்தலை மேவிய கண்ணே போற்றி

குவைப்பதி மலிந்த கோவே போற்றி

மலைநா டுடைய மன்னே போற்றி

கலையார் அரிகே சரியாய் போற்றி

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி

பொருப்பமர் பூவணத் தரனே போற்றி

அருவமும் உருவமு மானாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

துரியமு மிறந்த சுடரே போற்றி

தெரிவரி தாகிய தெளிவே போற்றி

தோளா முத்தச் சுடரே போற்றி

ஆளா னவர்கட் கன்பா போற்றி

ஆரா அமுதே அருளே போற்றி

பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி

தாளி அறுகின் தாராய் போற்றி

நீளளி யாகிய நிருத்தா போற்றி

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

சிந்தனைக் கரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி

அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி

கருங்குரு விக்கன் றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

படியுறப் பயின்ற பாவக போற்றி

அடியடு நடுஈ றானாய் போற்றி

நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்

பரகதி பாண்டியற் கருளினை போற்றி

ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி

செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி

கழுநீர் மாலைக் கடவுள் போற்றி

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி

பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்

குழைத்த சொன்மாலை

கொண்டருள் போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி

பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சயசய போற்றி

திருச்சிற்றம்பலம்