Published:Updated:

எனது ஆன்மிகம்: மனம்... உடல்... அறிவு!

ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிகம்

பட்டிமன்றப் பேச்சாளர் சிவக்குமார்

சிவக்குமார், கம்பன் கழகச் செயல் உறுப்பினர்.

உலக நாடுகளுக்கெல்லாம் பறந்து சென்று நற்றமிழால் ஆன்மிகப் பயிர் வளர்ப்பவர். பட்டிமன்ற மேடைகள் பலவற்றில் களம் கண்டவர். எளிய உதாரணங்கள் வழியாக ஆன்மிகச் செய்திகளை அழகாக உரைப்பவர். ‘எனது ஆன்மிகம்’ பகுதி வழியே அவருடைய ஆன்மிகச் சிந்தனைகள்...

மிருகங்கள் கொடூரமானவை என்று சொல்கிறோம். ஆனால் மிருகங்களை நெறிப்படுத்த, நல்வழிப்படுத்த இத்தனை ஞானிகள், மகான்கள், வேதங்கள், சித்தாந்தங்கள் தோன்றவில்லை. மனிதர்களுக்குத்தான் இவை அனைத்தும் தேவைப்படுகின்றன.

இதற்கு காரணம் என்ன?

நாம் பிறக்கும்போது இரண்டு விஷயங்களுடன் பிறக்கிறோம். ஒன்று உடம்பு, மற்றொன்று உயிர். இவை இரண்டும் சேர்ந்தால்தான் மனிதன். உடம்பு + உயிர் = மனிதன். உயிர் இல்லாவிட்டால் பிணம், உடம்பு இல்லாவிட்டால் பேய். இப்போது இதில் நமக்கு ஒரு ஈக்குவேஷன் கிடைக்கிறது பாருங்கள். பிணம் + பேய் = மனிதன்.

பட்டிமன்றப் பேச்சாளர் சிவக்குமார்
பட்டிமன்றப் பேச்சாளர் சிவக்குமார்

உயிர் வளர வளர... மனம், அறிவு என இரண்டாகப் பிரிந்து வளரத் தொடங்கும். மனமும் உடம்பு வழியாகத்தான் செயல்படும். அறிவும் உடம்பு வழியாகத்தான் செயல்படும். இந்த உடம்பு பழக்க வழக்கங்களுக்கு அடிமையானது. பிறக்கும்போது நம்மிடம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால், காலப்போக்கில் நமக்குச் சில பழக்கங்கள் வந்துவிடுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உதாரணமாக, நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை காபி குடிக்கிறேன். ஒருநாள் காலை காபி இல்லையென்றால், என்னவோபோல் ஆகிவிடுகிறது. பித்துப்பிடித்ததுபோல் இருக்கிறேன். இந்தக் குணம் எதனால் வந்தது? பழக்கத்தால் வந்தது. இது பல பிறவிகளாக எனக்கிருக்கும் பழக்கமில்லை. இந்தப் பிறவியில் பழக்கமானது. இவ்வாறு உடம்பு, பழக்கவழக்கங்களுக்கு அடிமையானது.

ஆனால் அறிவு, புதிய சாதனைகள், புதிய கண்டுபிடிப்புகள் என மேலும் மேலும் தேடிக்கொண்டே செல்லக்கூடியது. ஞானமும் இப்படிப்பட்ட ஒன்றுதான். நான் யார்... கடவுள் யார்... பரப்பிரம்மம் என்றால் என்ன... பரிபூரணம் என்றால் என்ன... இப்படி, அறிவு தேடிக்கொண்டே போகிறது.

ஆனால் மனம் இல்லாத ஆட்டங்கள் போடும். அதனால்தான் ‘மனமென்னும் அங்காடி நாய்’ என்கிறார் பட்டினத்தார். கடைத்தெருவில் சுற்றித் திரியும் நாய். அந்த நாய் இங்கும் வாய் வைக்கும், அங்கும் வாய் வைக்கும். இப்படி, மனம் நல்லவையும் தீயவையும் நிறைந்ததாகவே இருக்கிறது.

உடம்பு, பழக்கவழக்கங்களைத் தேடிச்செல்கிறது. மனம், சுகங்களையும் போகங்களையும் தேடிப்போகிறது. அறிவு, மிக உயர்ந்த லட்சியங்களையும் ஞானத்தையும் தேடிச்செல்கிறது. இவை மூன்றும் மூன்று திசைகளில் ஒவ்வொரு தளத்திலும் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. இவை மூன்றும் இணையும் நிலையிலான பயிற்சியே ஆன்மிகம். நம் முன்னோர்களும் பெரியோர்களும் இதை மிகச் சிறப்பாகக் கண்டுபிடித்து, நம் இந்து மதத்தில் அழகாக வடிவமைத்து வைத்திருக் கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனம் இறைவனை நோக்கிச் செல்ல, காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து நீராடுவது, திருநீறு அணிவது போன்றவற்றில் நம் உடலையும் மனத்தையும் செலுத்த வேண்டும். அவரவர் மதம் கூறும் வழிமுறைகளை அவரவர் கைகொள்ளலாம். கோயிலுக்குச் செல்லலாம், தீர்த்த யாத்திரை செல்லலாம். பதிகங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றைக் கேட்பது, தல வரலாறுகளைப் படிப்பதென மனத்தை ஒருமுகப்படுத்தலாம்.

மனத்துக்குச் சுவையான சம்பவங்கள் நிறைந்த இதிகாசங்களை நம் ஆசார்யர்கள் ஏற்கெனவே தந்திருக்கிறார்கள். அறிவுக்கு பிரம்ம சூத்திரம், வேதாந்தம், உபநிஷதங்கள் போன்ற விவாதத்துக்குரிய பொருள்களைத் தந்துள்ளனர். உபநிஷதங்களில் அறிவுபூர்வமான வாதங்களும் விவாதங்களும் நிரம்பி வழியும்.

உடம்பு, மனம், அறிவு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் தீர்த்த யாத்திரை, இதிகாசங்கள் வாசித்தல், சத்சங்க விவாதங்கள் ஆகியவை நிறைந்த பயிற்சியே ஆன்மிகம்.

எனது ஆன்மிகம்: மனம்... உடல்... அறிவு!

இவற்றுக்கு அடுத்து ‘உலகியல்’, ‘அருளியல்’ என்னும் இருவேறு கூறுகள் உள்ளன. உலகியலில் ஒரு விஷயத்தை நாம் அனுபவித்த பிறகுதான் நம்பிக்கை வரும்.

உதாரணமாக, ஒரு நண்பரிடம், ‘நீங்கள் ஜேசுதாஸ் பாடல்கள் கேட்டதில்லையா? இந்த சி.டியைக் கேட்டுப் பாருங்கள் நன்றாக இருக்கும்’ என்று கொடுக்கிறோம். அவரும் அதைக் கேட்டுப் பார்த்த பிறகு, ‘நன்றாக இருக்கிறதே’ என்று அதன் மீது நம்பிக்கை பெறுகிறார்.

‘மைசூர்பா’ சாப்பிட்டதில்லையா... இதோ சாப்பிட்டுப் பாருங்கள்’ என்று நாம் கொடுத்தால், ‘அட, ரொம்ப ருசியா இருக்கே’ என்ற அனுபவம் அவருக்குக் கிடைக்கிறது. உலகியலைப் பொறுத்தவரை அனுபவம் என்பது வந்த பிறகுதான் நம்பிக்கை என்ற ஒன்று நமக்கு வருகிறது.

ஆனால், அருளியலைப் பொறுத்தவரை நம்பிக்கை என்பது ஏற்பட்டால்தான், இறை அனுபவம் என்ற ஒன்றே கிடைக்கும்.

ஆன்மிக அனுபவம் என்பது புலன்களால் பெறக்கூடிய ஒன்று இல்லை. ஆன்மாவால் பெறக்கூடியது. மனம் அதில் லயிக்க வேண்டும். மனம் அதில் ஒன்றிப்போனால், மாற்றங்கள் தானாக நிகழும்.

நடராஜர் கோயிலுக்கு நாமும் செல்கிறோம். நாவுக்கரசரும் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலுக்குச் செல்கிறார்.

‘ஒன்றி இருந்து நினைமின்கள் உம்

தமக்கு ஊனம் இல்லை

கன்றிய காலனைக் காலால்

கடிந்தான் அடியவற்கா

சென்று தொழுமின்கள், தில்லையுள்

சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும்

எம்பெருமான் தன் திருக்குறிப்பே’

எனப் பாடுகிறார்.

நடராஜரின் இரண்டு கரங்களில் ஒன்று அவரை நோக்கி, ‘என்று வந்தாய், எப்போது வந்தாய், எப்படி இருக்கிறார்கள்’ என எல்லோரையும் விசாரிப்பதுபோல் இருக்கிறதாம்!

இதுவே நான் போகிறேன். எனக்கு எதுவுமே தெரியவில்லை. அங்கிருக்கும் குருக்கள்தான் தெரிகிறார். இல்லாவிட்டால், நடராஜர் சிலையின் உயரம் தெரிகிறது. அவருக்குச் செய்யப்பட்டிருக்கும் பூ அலங்காரம் கண்ணுக்குத் தெரிகிறது. மனம் எதில் லயிக்கிறதோ அதுதான் அதிலிருந்து வெளிப்படுகிறது.

நாவுக்கரசருக்கு, உயிர்த்துடிப்போடு இருக்கும் தத்துவமாகத் தெரிகிறார். அதனால் அவருடன் பேசுகிறார். நம் மனம் லயிக்காததால் நமக்கு வெறும் சிலையாகத் தெரிகிறார். இந்த மனம் அதில் லயிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

இந்த உடம்பையும் மனத்தையும் அறிவையும் ஆன்மிகப் பாதையில் குருவின் துணையுடன் செலுத்த வேண்டும். குருவின் துணையுடன் பயணித்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

நான்கு வகை மனிதர்கள்!

னிதர்களை நான்கு வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகை சந்தனக்கட்டை. இது தேய்ந்து மற்றவர்களுக்கு மணம் கொடுக்கும். இவ்வகை மனிதர்களும் மற்றவர்களுக்காக தம்மை தியாகம் செய்யத் துணிவார்கள்.

இரண்டாவது பசு. தீனி எந்தளவு கொடுக்கிறோமோ, அந்த அளவுக்குப் பால் தரும். அதுபோல, தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கிறதோ அந்த அளவுக்கு உழைப்பவர்.

எனது ஆன்மிகம்: மனம்... உடல்... அறிவு!

மூன்றாவதாக மயில். தானாக மயில் இறகு போடாது. இழுத்துதான் பிடுங்க வேண்டும். அதுபோலவே இவ்வகை ஆசாமிகள்.

நான்காவது வகை தேள். நன்மை செய்யாவிட்டாலும் தேள் மனிதர்களைக் கொட்டும். அதுபோல, இந்த வகை மனிதர்கள் பிறருக்குத் தீமையைத்தான் எப்போதும் செய்து கொண்டிருப்பார்கள்.

(வாரியாரின் அருள்மொழியிலிருந்து....)

- க.முருகன், தேனி

காலம் கடந்தால்...

ந்தந்த வேளையில் தர்மங்கள் குறிப்பிடும் செயல்களைச் செய்துவிட வேண்டும். உரிய நேரத்தில் உன்னத விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதே நியதி. இதற்கு உதாரணமாக தென்கச்சி சுவாமிநாதன் கூறிய சிறுகதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

விலங்குகள் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து, `நமக்கும் நகைச்சுவை உணர்வு வேணும். அதுக்காக எல்லா மிருகங்களும் ஒரு நகைச்சுவை சொல்லணும். அதைக் கேட்டு மத்த எல்லா மிருகங்களும் சிரிக்கணும்’னு ஒரு போட்டி வெச்சது. ஒரு மிருகம் சொல்ற நகைச்சுவையைக் கேட்டவுடனே மத்த விலங்குகளெல்லாம் சிரிக்கணும். அப்படி சிரிக்கலைன்னா நகைச்சுவை சொல்ற மிருகத்துக்கு ஓர் அடி கொடுக்கணுங்கறது போட்டியோட விதி.

எனது ஆன்மிகம்: மனம்... உடல்... அறிவு!

குரங்கு முதலில் வந்து ஒரு நகைச்சுவை சொன்னது. அதைக் கேட்டதும் மற்ற எல்லா விலங்கு களும் சிரிச்சுது. ஆனா, ஆமை மட்டும் சிரிக்கலை. அதனால குரங்குக்கு ஓர் அடி விழுந்துச்சு. அப்புறமா ஒட்டகம் வந்து ஒரு நகைச்சுவை சொன்னது. அப்பவும் ஆமை சிரிக்கலை. அதனால ஒட்டகத்துக்கும் அடி. மூணாவதா நகைச்சுவை சொல்ல கரடி வந்தது. கரடி வந்து நின்னவுடனேயே ஆமை சிரிக்க ஆரம்பிச்சுது. ஆமை ஏன் சிரிக்குதுன்னு யாருக்கும் புரியல.

உடனே சிங்கம் ஆமையைக் கூப்பிட்டு, `கரடி இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே. அதுக்குள்ள ஏன் சிரிச்சே’ன்னு கேட்டது.

அதுக்கு ஆமை, `குரங்கு முதல்ல பேசிச்சு இல்லீங்களா... அதை நினைச்சுச் சிரிச்சேங்க’ன்னுச்சாம்.

இந்த மாதிரிதான் பல பேருங்க எதை எதை எப்ப எப்பச் செய்யணுமோ அதை அதை அப்பப்பச் செய்யாம பின்னாடி காலம்கடந்து செய்யறாங்க. அதனால அவங்களுக்கும் கஷ்டம். மத்தவங்களுக்கும் கஷ்டங்கறதை அவங்க புரிஞ்சுக்கணும்.”

- எஸ்.சௌபர்ணிகா, சேலம்