Published:Updated:

அம்பாள் சந்நிதியில் விபூதிப் பிரசாதம்!

சிவலோகநாதர்
பிரீமியம் ஸ்டோரி
சிவலோகநாதர்

நல்லூர்ப்பெருமணம் சிவலோகநாதர் கோயில்

அம்பாள் சந்நிதியில் விபூதிப் பிரசாதம்!

நல்லூர்ப்பெருமணம் சிவலோகநாதர் கோயில்

Published:Updated:
சிவலோகநாதர்
பிரீமியம் ஸ்டோரி
சிவலோகநாதர்

`காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது 

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமசிவாயவே’


திருஞானசம்பந்தர் மேற்காணும் பதிகத்தை மனமுருகப் பாடியபடி ஜோதியில் கலந்த அற்புதமான தலம், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள ஆச்சாள்புரம்.

இவ்வூரில் சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயத்தில் ஸ்ரீவெண்ணீற்றுமை அம்மை சமேதராக அருள்கிறார் ஸ்ரீசிவலோக நாதர். சைவ சமய ஆசார்யரான திருஞானசம்பந்தரின் பெயரால். `ஆச்சார்யாள்புரம்' என்று வழங்கப்பட்ட இத்தலம், பின்னாளில் `ஆச்சாள்புரம்'  என்று மருவியிருக்கலாம் என்கிறார்கள்.

மேலும், திருஞானசம்பந்தருக்கு இங்கே திருமணம் ஆயிற்று. அவர் மனைவியின் பெயரால் `ஆச்சாள்புரம்' என்று அழைக்கப் பட்டிருக்கலாம் அல்லது உலகுக்கே மாதாவாக விளங்கும் அம்பிகையின் பெயரால் ஆத்தாள் புரம் என்று வழங்கப்பட்டபெயர், ஆச்சாள்புரம் என மருவி நிலைத்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஆயினும் தேவாரத் தமிழில் இத்தலத்தின் பெயர் `நல்லூர்ப் பெருமணம்' என்பதாகும்.  ஆம்! இவ்வூர் நல்லூர்,  பெருமணம்,  நல்லூர்ப் பெருமணம்,  பெருமண நல்லூர் என நால்வகைப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது . மட்டுமன்றி இவ்வூருக்கு வேறொரு திருப் பெயரும் உண்டு. அந்தப் பெயர் சிவலோகம். இதையொட்டியே இவ்வூர் ஈசனும் சிவலோக நாதர் என்று சிறப்பிக்கப்பெறுகிறார். 

நடராஜர் - சிவகாமி
நடராஜர் - சிவகாமிசாசனங்களில் இந்த ஈஸ்வரன் `பெருமண முடைய மகாதேவர்' என்று குறிப்பிடப் பட்டுள்ளார். இங்கு வழிபட்ட பிரம்மா, முருகன் முதலான கடவுளருக்கும், பிருகு, வசிஷ்டர், அகத்தியர், வியாசர், மிருகண்டு, ஜமதக்னி ஆகிய முனி சிரேஷ்டர்களுக்கும் சிவலோகத்தினை ஈசன் காட்டியருளினாராம். ஆகவே, சிவலோகத் தியாகர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு மாமரமே தலவிருட்சம். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய 533 விருத்தங்கள் அடங்கிய புராணம் ஒன்று இத்தலத்திற்கு உரியது. 

சிவலோகநாதன்
சிவலோகநாதன்
ரிணவிமோசனர்
ரிணவிமோசனர்
சிவசக்தி
சிவசக்தி
நந்தியெம்பெருமான்
நந்தியெம்பெருமான்
திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்
நால்வர் பெருமக்கள்
நால்வர் பெருமக்கள்திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்

திருஞானசம்பந்தப் பெருமானுக்கு 16 வயது பூர்த்தியானதும் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால் அவரோ இந்த ஏற்பாட்டினை மறுத்தார். பின்னர், `மறை ஓதும் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களைச் செய்வதற்குத் திருமணம் அவசியம்’ என்று பெரியோர்கள் கூற, திருமணத்துக்கு இசைந்தார். சீர்காழிக்கு அருகிலிருந்த நல்லூர் நம்பியாண்டார்நம்பியின் பெண்ணைத் தேர்வு செய்தனர்.  வைகாசி மூலத்தன்று திருமணம். அடியார்கள் புடைசூழ திருமணம் ஆயிற்று. அடுத்து, வேள்வித் தீயை வலம்வர வேண்டும். 

``ஞானாக்னியாக இருப்பவர் இறைவன்தானே. அவரையே வலம் செய்வோம்’’ எனச் சொல்லி, சிவலோகநாதரின் சந்நிதியை நோக்கி மனைவியின் கரம் பற்றியபடி நடந்தார் சம்பந்தப் பெருமான். திருமணத் திற்கு வந்திருந்த கூட்டமும் பின்தொடர்ந்தது. திருஞானசம்பந்தர் தம் மனத்தில், இல்லாளோடு சிவனாரின் திருவடிகளைப் பற்றிடத் தீர்மானம் செய்தவராக `கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்’ என்ற திருப்பதிகத்தைப் பாடித் தொழுதார். மறுகணம் சிவலோகநாதரின் லிங்கத் திருமேனி பிளக்க, அதிலிருந்து பிரகாசமான ஜோதியொன்று தோன்றியது. `இருவருடனும் இந்த மணத்திற்கு வந்திருக்கும் யாவரும் ஜோதியுள் புகுந்திடுக’ என்ற பெருமானின் வாக்கு அசரீரியாக ஒலித்தது. `காதலாகிக் கசிந்து கணணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக்குய்ப்பது' என்று தொடங் கும் திருப்பதிகத்தினைப் பெருமான் பாடத் தொடங்கியதும் ஒவ்வொருவராய்  ஜோதிக்குள் புகுந்திட, நிறைவில் சம்பந்தப் பெருமானும் தம் பெருமாட்டியுடன்  ஜோதியில் புகுந்து எழுந்தருளினார் என்கிறது தலவரலாறு.

அம்பாள் சந்நிதியில் விபூதிப் பிரசாதம்!

இங்ஙனம் அனைவரும் ஜோதியுள் புகுமுன், இங்குள்ள தீர்த்தக் கரையில் எழுதருளிய அம்பிகை, அனைவருக்கும் வெண்ணீறு அளித்து அருளினாளாம். அதனால் இங்கு அருளும் அம்மைக்கு 'வெண்ணீற்றுமையம்மை' (விபூதிக் கல்யாணி) என்று திருப்பெயர். இவள் சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீற்றுப் பிரசாதமே வழங்கப்படுகிறது.

சம்பந்தரின் அவதாரத் தலமான சீர்காழி  சட்டைநாதர் கோயிலும், முக்தித் தலமான ஆச்சாள்புரம் சிவலோகநாதர் கோயிலும் தருமை ஆதீனத்தின் பரிபாலனத்தில் உள்ளவை. இவ்விரு ஆலயங்களிலுமே சம்பந்தருக்கு அர்ச்சனை செய்வது மரபாக உள்ளது. 

சைவர்களின் இன்றியமையாத உரிமை களான பஞ்சாட்சரம், திருநீறு ஆகிய  இரண்டா லும் மகிமைபெற்ற தலம் இது. சிவனார் இங்கே தன் சூலத்தால் குளம் உண்டாக்கி, அதில் தன் திருமுடியில் திகழும் கங்கையின் நீரை நிரப்பி, பஞ்சாட்சர சாந்நித்தியம் நிறைந்திருக்கும்படி அருள்புரிந்தாராம். ஆகவே, இங்குள்ள தீர்த்தம் `பஞ்சாட்சரத் தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது.

கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் கல்யாணக் கோலத்தில் தம் தேவியுடன் கல்யாண சம்பந்தர் தரிசனம் தருகிறார். மேலும் இக்கோயிலில் திகழும்… கையில் பாற் கிண்ணத் துடன் குழந்தை வடிவில் அருளும் சம்பந்தரின் விக்கிரகமும், திரிபுர சம்ஹாரர் திருமேனியும் சிற்பக் கலையின் உச்சம் ஆகும். 

தலைகீழ் தோற்றத்தில் காகபுஜண்டர்!

காகபுஜண்டர் (காகமா முனிவர்) சிவனாரின் உத்தரவுப்படி, திருஞானசம்பந்தப் பெருமானின் திருமணத்தில் முக்தி பெறும் எண்ணத்துடன், நெடுங்காலம் முன்பாகவே  இத்தலத்திற்கு வந்து தவமியற்றிக் காத்திருந்தார். இத்தலத்தின் மகிமையை உணர்ந்த இவர், இங்கு தலைகீழாகவே நடந்து வந்து , தலைகீழாகவே தவம் இயற்றி, சம்பந்தர் திருமணத்தன்று ஜோதியில் ஐக்கியம் ஆனார். 

இன்றைக்கும், தலைகீழ் தோற்றத்துடன் திகழும் காகபுஜண்ட முனிவரைத் திருக்கோயில் கோபுரத்தில் காணலாம். இம்முனிவரால் வழிபடப்பட்ட ஈசன் 'யோகீசர்' என்ற திருப்பெயருடன் கோயிலில் அருள்கிறார்.

கோயிலின் கணக்கர் கருப்பையாவிடம் பேசினோம்.

`ரணங்களைப் போக்கியருளும் ரணவிமோசகராக அருள்கிறார் இவ்வூர் ஈசன். இங்கே, பிரம்மோற்சவம் நிறைவுற்ற மூன்றாம் தினம் வைகாசி மூலத்தன்று திருஞான சம்பந்தர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.

காலையில் சம்பந்தருக்கு உபநயனம், மாலையில் திருமுறை வீதி வலம், மாலை மாற்றும் வைபவம்,  இரவு திருக்கல்யாணம், தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சம்பந்தர் ஜோதியில் ஐக்கியம் ஆகும் ஐதீக விழா ஆகியவற்றைக் காண்போருக்கு, அந்தத் தருணத்தில் சிவலோகமாகவே தெரியும் இவ்வூர்!’’ என்றார்.

இங்ஙனம் மகிமைகள் பல நிறைந்த தலத்தை ஒருமுறையேனும் தரிசித்து அருள்பெறுவோம். பிறவிகளைக் குறைத்து சிவகதியினை அருளும் சிவலோகநாதரரை வேண்டி வணங்கிச் சிறப்புப் பெறுவோம்.

எப்படிச் செல்வது ? : சீர்காழி - சிதம்பரம் சாலையில் கொள்ளிடத்தில் இறங்கி, கிழக்கே 8 கி.மீ.தூரம் பயணித்தால் ஆச்சாள்புரம் ஆலயத்தை அடையலாம். பேரூந்து, கார், ஆட்டோ வசதிகள் உண்டு.

`நந்தி மடு!’

ஜோதி தோன்றியபோது அதைக் கண்டு பலரும் அஞ்சி ஓடினார்களாம்.

`இத்தகைய பேறு இனி கிடைக்காது’ என்பதை உணராமல் விலகி ஓடியவர்களுக்கும் அருள் செய்ய எண்ணினார் இறைவன். ஆகவே, நந்தியெம்பெருமானை  அனுப்பி, சிதறி ஓடியவர்களை வெருட்டி ஜோதியில் சேர்க்கும்படி அருளினாராம்.

அப்படி நந்தி நின்று  வெருட்டிய இடம் இன்றும் 'நந்தி வெருட்டி' என்ற பெயராலேயே விளங்குகிறது. அங்கே நந்தி நின்ற மடு  `நந்தி மடு' என்று அழைக்கப்படுகிறது. 

`யாவரும் ஜோதியில் சேருங்கள்’ என்று கடைக்கண்ணால் சமிக்ஞை காட்டியருளிய விநாயகருக்கு 'கடைக்கண் விநாயகர்' என்பது திருநாமம். அவர் எழுந்தருளிய இடமே இன்றைய கடைக்காநல்லூர் (கடைக் கண் நல்லூர்) என்கிறார்கள்.