Published:Updated:

சிவமகுடம் - 87

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

மலர்ந்தது பொற்றாமரை!

சிவமகுடம் - 87

மலர்ந்தது பொற்றாமரை!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

மலர்ந்தது பொற்றாமரை!

பூலோகக் கயிலாயமாகவும் சிவராஜதானியாகவும் திகழும் மதுரையம்பதியின் மண்ணும் மக்களும் அன்று பெரும் மகிமை பெற்றனர் என்றே சொல்லலாம்.

சிவமகுடம் - 87


தேவாரத் தலம்; திருவிளையாடல்களின் க்ஷேத்திரம்; தாண்டவக் கோனின் ரஜத சபை, யோக முறையில் சொல்லப்போனால் துவாதசாந்த பதி; அன்னை மீனாளின் தலைநகரம்... இப்படி எத்த னையோ சிறப்புகளைக் கொண்ட மாமதுரைக்கு அன்று மேலும் சிறப்பு சேர்ந்துவிட்டது திருஞானசம்பந்தரின் விஜயத்தால்.

அதனால்தானோ என்னவோ ஆலயத் தொண்டர்களின் முகங் களிலும் அடியார்களின் அகத்திலும் சொல்லவொண்ணா பூரிப்பு; ஆலயமெங்கும் அதீத சாந்நித்தியம் பொங்குப் பெருகுவதாய் உணர்ந்ததால் ஏற்பட்ட பெரும் சிலிர்ப்பு. அவ்வளவு ஏன்... ஆலயத் தூண் சிற்பங்கள் - யாழிச் சிலைகளிலும்கூட, `எங்கே உயிர்ப்பெற்று வந்து விடுமோ’ என்று எண்ணும்படியான அருள் துடிப்பு!

அடடா... இந்தப் பொற்றாமரைக் குளத்தைப் பாருங்களேன்... அதன் நீர்ப்பரப்பும் அதீத ஆனந்தத்தில் சிற்றலைகளைப் பரப்பி பொற்றாமரையைச் சுற்றிலும் கோலமிடுகிறதோ..!

ஆம்! இன்பச் சூழலில் பொருந்திவிட்ட பொங்கிதேவியின் உள்ளம் இப்படித்தான் எண்ணியது. ஞானப் பிள்ளையைக் கண்ட தில் மங்கையர்க்கரசியாருக்கு மட்டுமா மகிழ்ச்சி? மதுரை ஆளும் அம்மையப்பருக்கும் பெருமகிழ்ச்சி போல. அதனால்தான் மதுரை யின் உயிர்ப்பொருள் ஜடப்பொருள் சகலத்தையும் ஆனந்த அருள் பிரவாகத்தில் மூழ்கடித்துவிட்டார்கள் போலும்.

பொங்கியின் எண்ணம் சரிதான் என்பதுபோன்று, பொற்றாமரை யின் இதழ்களில் பட்டு பிரதிபலித்த சூரியக்கிரணங்களால், அந்தக் குளத்தின் நீர்ப்பரப்பு தங்கமாய்த் தகதகத்து ஒளிர்ந்தது.

ஆதிகாலத்தில், உருவமில்லாத அருவமான பரம்பொருள், திருவிளையாடல்களை நிகழ்த்தி உலகைப் பரிபாலிக்கக் கருதியது. அதனால், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்த தமது அருளை - முக்கண்கள், செஞ்சடைக் கற்றையுடன் பிறை அணிந்து, சூலமும் கபாலமும் தாங்கி, இடப்பாகத்தில் உமையம்மை காட்சி தர, அற்புதத் திருவுருவாக வெளிப்படுத்தியது. இங்ஙனம் சிவமாய்த் திருவடிவம் காட்டிய பரம்பொருள் பூமியை அடைந்தது; கடம்ப வனத்துள் புகுந்தது; அங்கேயே தங்கியது.

கணங்களும், முனிவர்களும் ஸ்வாமியைப் பூஜிக்க முனைந்தனர். அக்காலத்தில் புனித தீர்த்தம் எதுவும் பூமியில் இல்லை; அந்தக் குறையைப் போக்கும்படி இறைவனிடம் யாசித்தனர்.

சிவம் கண்ணசைக்க சூலம் பூமியுள் பாய்ந்தது. அது நிலவுலகத் தையும் கிழித்துக்கொண்டு, பிரம்ம தடாகத்தையும் துளைத்தது. அதற்கும் அப்பாலிருந்த பெரும்புறக் கடல் பொங்கி எழுந்து, துளை வழியே புகுந்தது. இங்ஙனம் பூமியின் மேற்பரப்பை அடைந்து பொங்கிய தீர்த்தப்பெருக்கின் கொந்தளிப்பைத் தமது கையைக் காட்டி அடக்கிய இறைவனார், ஜடாமுடியிலிருந்து கங்கை நீரை எடுத்து அதனுள் தெளித்தார். பெரும்புனிதம் பெற்றது அந்தத் தீர்த்தம். அதுதான் இந்தப் பொற்றாமரைக் குளம்.

விருத்திராசுரனைக் கொன்ற பாவம் தொலைய தேவேந்திரனும் இங்கு வந்து வழிபட்டானாம். அப்போது அவன் `தங்கப் பூக்களால் இறைவனை வழிபட்டால் நன்றாக இருக்குமே’ என்று எண்ணம் கொள்ள, சிவச்சித்தப்படி அப்போது இந்தக் குளத்தில் பொற் கமலங்கள் தோன்றினவாம்!

குலப் பெரியவர்கள் தனக்கு ஒரு கதையாய்ச் சொன்ன தல புராணம் குறித்து சிலகணங்கள் சிந்தித்த பொங்கிதேவி, மீண்டும் ஒருமுறை பொற்றாமரைக் குளத்தை உற்றுநோக்கினாள்.

`அட... அதென்ன நீர்ப் பரப்பில் புதிதாய் ஒரு கமலம்?!’ வியப்பில் விழிவிரித்த பொங்கி, மறுகணமே உண்மை நிலை உணர்ந்தாள்... அது கமலம் அல்ல; பாண்டிமாதேவியாரின் திருமுக பிம்பமே என்று. ஆம்! ஞானப்பிள்ளையின் தரிசனத்தால் விளைந்த மலர்ச்சி தேவியாரின் திருமுகத்தில் புதுப்பொலிவைக் கொடுத்திருந்தது!

இப்போது பொங்கிதேவி பாண்டிமாதேவியார் இருக்கும் இடத்தை நோக்கினாள். ஏற்கெனவே, ஞானசம்பந்தர் பெருமான் அங்கிருந்து விடைபெற்றிருக்க, தேவியாரும் புறப்படுவதற்கு ஆயத்த மாகிக் கொண்டிருந்தார். பொங்கியும் அவருடன் சேர்ந்து கொண்டாள்.

பல்லக்கு நகரத் தொடங்கியது. பொங்கிதேவி கோயிலில் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை - அனுபவங்களைச் சொல்லிக்கொண்டே வர, தேவியாரின் சிந்தனையிலோ திருஞானசம்பந்தப் பெருமானே நிறைந்திருந்தார்!

திருவடியைப் பணிந்து வணங்கிய தம்மை நோக்கி, `சூழுமாகிய பரசமயத்திடைத் தொண்டு வாழு நீர்மையீர் உமைக்காண வந்தனம்’ எனக் கூறியதோடு, ``கவலையின்றி செல்லுங்கள் அன் னையே. பாண்டிய நாட்டைப் பற்றியிருக்கும் இருளை நீக்குவது, இனி என் பணி’’ என்று ஞானசம்பந்தர் அளித்த வாக்கு, பெரும் திருப்தியை அளித்திருந்தது மங்கையர்க்கரசியாருக்கு!

`இனி பாண்டியதேசம் பூரணமாய் மீண்டெழும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். அவரின் பரிவாரம் அரண்மனையை நோக்கி விரைந்தது!

சிவமகுடம்
சிவமகுடம்


`காலம் பதில் சொல்லும்!’

அன்றைய மாலைப்பொழுதில் குலச்சிறையாரின் மாளிகையில் அவரைச் சந்திக்கக் காத்திருந்தான் இளங்குமரன். திருஞான சம்பந்தரும், அவரின் தொண்டர்களும், அடியார்களும் தங்குவதற் கான ஏற்பாடுகளில் பெரிதும் முனைந்திருக்கிறார் பேரமைச்சர் என்ற தகவலைச் சொன்னார்கள் சேவகர்கள்.

ஆகவே, அவர் வரும் வரை காத்திருப்பது என முடிவுசெய்தான். ஏனெனில் அவரிடம் மிக அவசரமாகப் பகிரவேண்டிய ஒரு தகவல் அவனிடமிருந்தது. இங்ஙனம் காத்திருக்கச் செய்த காலம், அவனைப் பெரும் சிந்தனையிலும் ஆழ்த்தியிருந்தது.

`ஞானநூல்களில் ஒன்று அற்புதமாய் சில விஷயங்களைப் போதிக்கிறது. நற்குலத்தில் பிறப்பு, கலைகளில் ஞானம், அனுபவம், அடக்கம், பராக்கிரமம், அதிகம் பேசாது இருப்பது, சக்திக்கு ஏற்ற தானங்களை பூரணமாய்ச் செய்வது, நன்றி மறவாமை இந்த எட்டுக் குணங்களும் ஒரு மனிதனைப் பிரகாசப்படுத்துகின்றன; அவன் புகழோங்கித் திகழக் காரணமாகின்றன என்கிறது ஒரு நூல்.

அவ்வகையில் மாமன்னர் மாறவர்மன் மிகப் பிரகாசமானவர். இந்த நற்குணங்கள் வாய்த்ததால் பெரும்புகழும் கொண்டிருக்கிறார்.

அந்த ஞானநூல்கள் வேறொன்றையும் போதிக்கின்றன. தெய்வங்களின் சித்தம், ஞானவான்களின் பெருமை, நல்லவர்களின் வணக்கம், தீயோர்களின் சதி ஆகிய நான்கும் உடனே பலனளிக்கு மாம். இவற்றில் நான்காவது காரணம், மாமன்னரை வீழ்த்திவிடக் கூடாது. ஆம்! அவரைச் சூழ்ந்திருக்கும் சிலரால்... அவர் சார்ந்திருக் கும் இடத்தால்... பெரும் அச்சம் எழுகிறது. இதில் நான் வேறு...’

``இளங்குமரா! மன்னருடனான சந்திப்பு முடிந்ததா...’’

ஆற்றாமையும் தவிப்புமாக நீண்டிருந்த அந்த இளைஞனின் சிந்தனையோட்டத்தைக் கலைத்தது பேரமைச்சரின் குரல்.

பேரமைச்சரைக் கண்டதும் எழுந்து, தமது பதவிக்கு உரியபடி சிரவணக்கம் செய்தான் இளங்குமரன். பேரமைச்சர் சிரித்தார். அவனை நெருங்கி வந்து தோளோடு சேர்த்து அணைத்துக் கொண் டார். அத்துடன் அந்தக் கேள்வியையும் உதிர்த்தார்...

``என்ன... மன்னர்பிரானிடம் சிவமகுடத்தின் ரகசியத்தை உடைத்துவிட்டாயா?’’

அவர் அப்படிக் கேட்டதும் பெரிதும் அதிர்ந்தான் இளங்குமரன்.

`என்ன மனிதர் இவர்... இந்த தேசத்தில் இவரின் கவனம் தாண்டி எவ்வித பேச்சும் செயலும் அணுவளவும் நிகழாதோ? அந்தரங்க விசாரணைக்கு ஆட்பட்டு, மன்னரிடம் நான் பதிலுரைத்த விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்தது? எனில், இவரின் புலனாய்வுப் படை மாமன்னர் விஷயத்திலும் தலையிடுகிறதோ...’

திகைத்து நின்றவனின் சிந்தனையை மீண்டும் கலைத்தது பேரமைச்சரின் இடிச்சிரிப்பு. பெரிதாய்ச் சிரித்து ஓய்ந்தவர், அவனின் மனதைப் படித்தவர் போல் பேசினார்.

``இளைஞனே... இதில் புலனாய்வு எல்லாம் எதுவும் இல்லை. அனுபவம்... யூக அறிவு... அவ்வளவே!’’ என்றார். பின்னர் அவனை யும் இழுத்துக்கொண்டு மாளிகையின் நந்தவனத்தை அடைந்தார். அங்கே அவருக்குப் பிடித்த மலர்ச்செடிகளின் நடுவில் அவர் வழக்கமாக அமரும் கல்லால் ஆன இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

அவனும் அருகில் சென்று தரையில் புல் பரப்பில் அமர்ந்தான். பேரமைச்சர் மேற்கொண்டு என்ன சொல்லப்போகிறார் என்று கவனித்தான். அவரோ சில கணங்கள் எதுவும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டு, தேகத்தைத் தழுவிய தென்றலின் குளிர்ச்சியை அனுபவித்தவராய் அமர்ந்திருந்தார். சிலகணப் பொழுதுகள் கழித்து, மெள்ள கண்திறந்தவர் சிறு புன்னகையோடு மென்மையான குரலில் பேச்சைத் தொடர்ந்தார்.

``இளங்குமரா! ரகசியம் என்பது யாதெனில், ஒருவருக்குள் மட்டுமே உறைந்து ஒளிந்து கிடப்பது. வேறொருவருக்குக் கடத்தப் பட்டுவிட்டது எனில், அது எவருக்கோ எதன்பொருட்டோ வெளிப் படுத்த வேண்டிய தகவலாகிவிடுகிறது! அவ்வகையில், பாண்டிமா தேவியார் எமக்குக் கடத்தியதை நான் உனக்குக் கடத்தினேன். நீயும் எவருக்கு வெளிப்படுத்த வேண்டுமோ, அவருக்கு வெளிப் படுத்திவிட்டாய். அவ்வளவே!’’

இளங்குமரன் திகைத்தான். பேரமைச்சரது அரசியல் விளையாட் டின் தீவிரத்தை அவனால் உணரமுடிந்தது. எனினும், தனது திகைப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசினான்.

``விஷயம் அறிந்த மாமன்னர் பெரிதும் சீற்றம் கொண்டுவிட்டார் என்றே தோன்றுகிறது!’’

இளங்குமரின் இந்தப் பதிலையும் எதிர்பார்த்தவர் போன்று புன்னகைத்த பேரமைச்சர், அவனிடம் சொன்னார்: ``அதிகம் சீற்றம் கொள்வார்தான். ஆனால் அவரின் சீற்றத்தைத் தணிக்கும் சம்பவங்களை காலம் அடுத்தடுத்து நிகழ்த்தும் என்பது என் யூகம்!’’

இப்படிச் சொன்னவர் மீண்டும் கண்மூடி, வைகையைத் தீண்டி வரும் மாலைக் காற்றின் குளிரைத் தன் தேகமெங்கும் உள்வாங்கத் தொடங்கினார்!

பேரமைச்சரின் யூகம் சரிதான் என்பதுபோல், அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழத் தொடங்கின. அன்றைய இரவில், பரங்குன்றின் சரிவில் தாங்கள் வழக்கமாகச் சங்கமிக்கும் குகை போன்ற இடத்தில் சந்தித்துக்கொண்டார்கள் அந்த நபர்கள்.

அவர்களில் ஒருவன் கேட்டான்: ``நமது திட்டம் எங்கு எப்போது தொடங்கப் போகிறது?’’

மற்றொருவன் பதில் சொன்னான்: ``நாளையே... அரண்மனையில் மாமன்னரிடத்தில் தொடங்கும்!’’

- மகுடம் சூடுவோம்...