மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம்

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

ஆலவாய் ஆதிரையன் - ஓவியர் ஸ்யாம்

நிகழும் யுகத்தில் திக்கெட்டிலும் உள்ள சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் விழிவிரித்து வியக்கும்படி உலகை ஆளுமை செய்து கொண்டிருந்த பாண்டியப் பேரரசின் பெருமைக்கும் கம்பீரத்துக்கும் சாட்சியாய்த் திகழ்ந்து கொண்டிருந்தது மாமதுரையின் கோட்டை.

பார்ப்பவர்களை மலைக்கவைக்கும் அதீத உயரத்துடனும், நிலைகளுடனும், ஆங்காங்கே காவல் கோபுரங்களுடனும் கூடிய மதில்கள், திசைப்புறங்களில் உரிய இடத்தில் பெரும் வாயில் களோடு திகழ்ந்தன. அந்த வாயில்களில்... பருத்த ஆணியால் கட்டி, செந்நிற அரக்கைத் தடவி... உறுதித் தன்மையில் வஜ்ஜிரத்தையும் தோற்கடிக்கும்படித் திகழ்ந்த பெருங்கதவுகள் மதிலின் கம்பீரத் துக்கு நிகராய் விளங்கின.

திருஞான சம்பந்தர்
திருஞான சம்பந்தர்

தோற்றத்தில் குவளைப் பூ போன்று திகழ்ந்தாலும்... பெருங் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த உலோகக் குமிழ்கள் யாவும், பகைவர் எவரேனும் களிறுகளை ஏவி மோதினால், அவற்றின் சிரங்களைப் பதம்பார்த்துவிடும் வகையில் பெரும் கூர்மையுடனும் திகழ்ந்தன. அதேநேரம் பாண்டியர்தம் அறக்கருணையை அழகு உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் ஆங்காங்கே மணிகளும்கூட தொங்கவிடப்பட்டிருந்தன.

மதில்புறத்துப் பெருங்கதவுகள் திறந்து மூடும்போதெல்லாம் வெண்கல உலோகத்தால் ஆன அந்த மணிகள் எழுப்பும் மங்கல ஓசையைச் செவிமடுக்கவே அயல்தேசத்து வணிக மனிதர்கள் பெருங்கூட்டமாக அந்த இடத்தில் காத்துக்கிடப்பார்கள்.

ஆனால் அன்றைக்கு ஒருமுறை மட்டுமே அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதிகாலைப் பொழுதில் `கோட்டையை விட்டு வெளியேறுவோர் வெளியேறலாம்... வெளி சென்றிருக்கும் கோட்டைவாசிகள் உள் நுழையவும் ஐந்து நாழிகைகள் வரையிலும் வாய்ப்பு தரப்படும்’ என்ற அறிவிப்பு வெளியானது.

பின்னர், குறிப்பிட்ட நாழிகைகள் கழிந்ததும் பேரிகைகளின் பெருமுழக்கங்களோடு பூட்டப்பட்ட வாயிற் கதவுகள், பின்னர் திறக்கப்படவில்லை.

சிவமகுடம்


``ஏதேனும் அவசரகால நிலையில்தான் இதுபோன்ற சம்பிரதாயங் கள் பின்பற்றப்படும். இப்போது கோட்டைக் கதவுகள் மூடப் படுகின்றன எனில், காரணம் என்னவாக இருக்கும்?’’

``சில தினங்களுக்குமுன் வைகைதீரத்தில் சிறு போர் நிகழ்ந்ததே... அதன் தொடர்ச்சியாக ஏதேனும்... களேபரங்கள் நிகழலாமோ... அதனால்தான் கோட்டை மூடப்படுகிறதோ’’

``அப்படி இருக்காது... நேற்றிரவு திருமடத்தில் தீ பற்றியதே... அது விபத்து அல்லவாம்... சதிச்செயலாம்... சதிகாரர்கள் தப்பிவிடாமல் இருக்கவே கதவுகள் மூடப்படுகின்றன என்று பேச்சு’’

கோட்டைவாசிகள் பலரும் பலவிதமாய் யூகங்களை வெளிப் படுத்திக்கொண்டும் பேசிக்கொண்டும் கலைந்துகொண்டிருக்க, இந்த உத்தரவைப் பிறப்பித்தவரோ, அரண்மனை மாளிகையில் மாமன்னரின் அந்தரங்க அறையில் அவரின் படுக்கைக்கு அணுக்கத் தில் இருந்தார்.

பகைவர்தம் தூக்கத்தைக் கெடுத்த மாவீரரும், போரில் பல விழுப் புண்களை ஏற்ற மேனியரும், கூன்பாண்டியருமாகிய மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி, மஞ்சத்தில் துவண்டுகிடந்தார். வாழையின் இளங்குருத்தும் பட்டால் கருகிவிடும் அளவுக்கு அவரின் திருமேனி தகித்தது; நடுநடுங்கிக் கொண்டிருந்தது.

ஏற்கெனவே அவரின் நிலையை அறிந்து, நோய் தீர்ப்பதாகச் சொல்லி வந்த அமணத் துறவியர்கள் தங்களின் முயற்சியில் தோல்வியுற்றார்கள். தங்களின் ஆற்றலால் நோய் நீங்கும் என்று கூறி, மயிலிறகுகளைக் கொண்டு மன்னரின் மேனியை வருட முற்பட்டார்கள். ஆனால் அவை வெம்மையில் தீய்ந்துபோயின. வேதனை அதிகமாக அவர்களைக் கடிந்துகொண்டார் பேரரசர்.

அங்கிருந்து அவர்கள் அகன்றுவிட, பேரரசியார் மட்டும் அருகிலிருந்தார். `தென்னவருக்கு ஆபத்து இல்லை’ என்று அவரின் உள்ளுணர்வு உணர்த்தினாலும், கண்களால் கண்ட காட்சி வேதனையை அளித்தது. பொங்கிவரும் துக்கத்தை அடக்கிக் கொண்டு, மன்னரின் நிலைக்கு மருந்து தேட முயன்றார்.

நீர் நிறைந்த அவரின் விழிகள் மூடிக்கொள்ள, மனத்தில் மகேச னைத் தியானித்து வேண்டினார். மனத் திரையில் மாமதுரையின் சொக்கரோ, தில்லையின் கூத்தரோ தோன்றவில்லை; தண்ணொளி பொலியும் பூரணச் சந்திரனாய் சம்பந்தப் பிள்ளையின் புன்னகைத் திருமுகமே தோன்றியது. `பிணிக்கு மருந்து பிள்ளையின் அருளே’ என்பது தெள்ளத் தெளிவானது.

பேரமைச்சரை வரவழைத்தார். தன் எண்ணக்கிடக்கையை விவரித்தார். இருவரும் அரசரிடம் சென்றனர். ஞானப்பிள்ளையின் மேன்மையை மெள்ள எடுத்துரைத்தனர்.

``வெம்மை நோய் மட்டுமல்ல பிறவிப் பிணியையும் அறவே அகற்றும் தெய்வக் குழந்தை அவர்’’ என்று மன்னரின் செவியருகே சென்று எடுத்துரைத்தார் பாண்டிமாதேவியார்.

`திருஞானசம்பந்தர்’ என்று தேவியார் கூறிய திருப்பெயர், திருச்செவிகளில் விழுந்ததுமே, தமது தளர்ச்சி சிறிது நீங்கியதாக உணர்ந்தார் மாமன்னர். `படுபாதகம் நிகழ்த்த அனுமதித்துவிட்ட குற்றமே இப்படி வெப்பு நோயாக வந்து துன்புறுத்துகிறதோ’ என்ற சிந்தையும் அவருள் எழாமல் இல்லை.

மெள்ள கண் திறந்தார். அன்புக்குரிய தேவியாரை நோக்கினார். ``தேவி! உன் விருப்பத்தை தடைசெய்ய விரும்பவில்லை. நீ சொல்வதுபோன்று அந்தப் பிள்ளை வரட்டும். ஒருவேளை அவரால் பிணி நீங்குமா என பார்க்கலாம்...’’ என்றார் முனகலாக.

தேவியார் செய்த வழிபாட்டின் பயனே மாமன்னருக்கு இப்படி யான சிந்தையைக் கொடுத்து, அனுமதியையும் தரவைத்தது என்றே சொல்லவேண்டும். மிகவும் அகமகிழ்ந்தார் தேவியார். சம்பந்தரை அழைக்க தாமே புறப்பட்டார்!

மாமன்னரைப் பொறுத்தவரையிலும் தன் தரப்புத் துறவிகளை விட்டுக்கொடுக்க இயலாத நிலை. மட்டுமன்றி, அதுவரையிலும் அவர் ஏற்றிருந்த தத்துவங்கள்; போற்றிய சம்பிரதாயங்கள் அனைத் தையும் சட்டென்று புறக்கணித்துவிட முடியாதே!

அதேநேரம், சீர்காழிப் பிள்ளையையும் அவரால் குறைத்து மதிப்பிட்டுவிட முடியவில்லை. காரணம்... பிள்ளையின் திருப் பெயரே ஏதோ மகிமை நிறைந்ததாகத் தோன்றியது மன்னருக்கு. அந்த நாமத்தைக் கேட்டதுமே உள்ளுக்குள் ஓர் புத்துணர்வை உணர்ந்தாரே!

ஆகவேதான் இப்படியான தீர்மானத்துக்கு வந்தார். `யானுற்ற பிணியைத் தீர்த்து வென்றவர் பக்கம் சேர்வேன்’ என்று முடிவு செய்து, பிள்ளையை அழைத்து வரும்படி மங்கையர்க்கரசியாருக்கு அனுமதி கொடுத்தார்.

ராஜ வீதிகள் மெய்க்காவல் படையின் கட்டுப்பாட்டில் வந்தன. வீதிகளில் நிறைந்திருந்த கூட்டம் விலக்கிச் சீர்ப்படுத்தப்பட்டது. பரிவாரங்கள் சூழ பேரமைச்சர் முன்செல்ல, பாண்டிமாதேவியாரின் முத்துப்பல்லக்கு பின்சென்றது.

திருமடத்தை அடைந்ததும் பல்லக்கிலிருந்து இறங்கிக்கொண்டார் பாண்டிமாதேவியார். இருவரின் வருகை குறித்தும் மடத்துக்குள் சென்று திருஞானசம்பந்தரிடம் தகவல் தெரிவித்தனர் அணுக்கத் தொண்டர்கள்.

``உடனே உள்ளே அழைத்து வாருங்கள்’’ - சீர்காழிப்பிள்ளையின் உத்தரவை ஏற்று, மீண்டும் வாயிற்புறம் வந்த அணுக்கர்கள், மிகுந்த பரிவுடன் பேரமைச்சரையும் மங்கை யர்க்கரசியாரையும் திருஞானசம்பந்தரிடம் அழைத்துச் சென்றனர்.

இருவரும் பிள்ளையைக் கண்டனர். மலர்ச்சியோடு புன்னகைத் தார் திருஞானசம்பந்தர். சிவஞானமே ஓருருவாய் அங்கே அமர்ந்து மலர்ந்து சிரிப்பது போன்று தோன்றியது அமைச்சருக்கும் தேவியாருக்கும். இந்தச் சம்பவத்தை - இருவரும் பிள்ளையைக் கண்ட சூழலைப் பிற்காலத்தில் புராணமாய் பாடிய சேக்கிழார் பெருமான் மிகச் சிறப்பாகப் பாடுகிறார். எப்படித் தெரியுமா?

`ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை

வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை

தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்

கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்’

ஆஹா... உண்மைதான். தேவியாரின் மனத்தில் இருந்ததைப் படித்தது போன்று பாடிவிட்டார் சேக்கிழார் பெருமான்!

அதேநேரம், பிள்ளைக்கு முந்தையநாள் இரவில் நிகழ்த்தப்பட்ட தீங்கு செயலை நினைத்து பாண்டிமாதேவியாரின் தாய்மை உணர்வு பரிதவித்தது. அதனால் பெரும் ஆற்றாமையும் எழுந்தது அவருக்குள்.தன் நாட்டை, தன் மக்களை, தன் நாயகனை மீட்டெடுக்க இந்தத் தெய்வக் குழந்தையை ஈடுபடுத்த வேண்டியிருக்கிறதே என்று நினைத்தும் மருகினார்.

சிவமகுடம்
சிவமகுடம்
ஓவியர் ஸ்யாம்

இப்படியான உணர்வுகள் எழுந்து பேச்சை அடக்கிவிட, தேவியார் சீர்காழிப்பிள்ளையின் தாமரைத் திருவடிகளை வணங் கிப் பற்றிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சரும் பணிந்து வணங்கினார்.

ஞானப்பிள்ளை பேசியது. ``திருவுடைய பிள்ளைகளே வருந்த வேண்டாம். இறையருளால் எல்லாம் நலமாகும். தென்னவரும் திருநீறு அணியும் நாள் வரும்!’’ என்று அருளியது.

இங்கு இவ்வாறு திருஞானசம்பந்தர் அபயமொழி அளித்துக் கொண்டிருந்த அதேநேரம், துறவியர்க் கூட்டம் தங்கள் இடத்தில் ஒன்று கூடி இவர்களுக்கு எதிரான உபாயங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தது!

- மகுடம் சூடுவோம்...