மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 66

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

`தடாகக் கரைச் சிந்தனைகள்...'

உள்ளத்துக்கு உவப்பான சூழலும் அனுபவமும் உயர்ந்த சிந்தையைக் கொடுக்கும். பேரமைச்சரின் சிந்தனைகளும் உயர்வான பல விஷயங்கள் குறித்து வேகவேகமாகக் கணக்கிட ஆரம்பித்தது. அவருக்கு இப்படியோர் உற்சாகம் உள்ளத்தில் எழ காரணம், அந்த முன்னிரவுப் பொழுதும் அது தந்த குழுமையும்தான்!

தடாகம் ஒன்றின் கரையில் அமர்ந்திருந்த குலச்சிறையார் நீண்டதொரு பயணத்துக்கும் அதன் நிறைவில் நிகழப்போகும் போருக்கும் தயாராகிக் காத்திருந்தார். வனப்புறத்தில் சேனைகளை ஆயத்தப்படுத்தச் சென்றிருக்கும் தண்டநாயகர்கள் வந்ததும் புறப்பட வேண்டியதுதான்!

தன் கிரணங்களால் அந்தத் தடாகத்தின் பரப்பைப் பால் வண்ணமாக்கி ஒளிரவிட்டிருந்த குளிர்நிலவு, தன் திருமுக பிம்பத்தையும் நீரில் மிதக்கச் செய்து, ஆம்பல் மலர்களைச் சீண்டி விளையாடத் தயாராவது போல் ஒரு காட்சியைக் கொடுத்தது இயற்கை. அதன் அழகில் சிந்தனை களைந்த குலச்சிறையார் நீராம்பல் மலர்களை நோக்கினார்.

`நீரளவே ஆகுமாம் நீராம்பல்’ எனும் முன்னோர் வாக்கு நினைவில் வந்தது. உண்மைதானே... அல்லிக்கொடியின் அளவு நீரின் ஆழத்தைப் பொறுத்தே அமையும். சான்றோர்தம் நுண்ணறிவு அவர்கள் படித்த நூலளவு அமையும். அப்படியேதான் தவத்துக்கேற்ற செல்வமும், குலத்துக் கேற்ற குணமும் அமையும்! முன்னோரின் இந்த அருள்வாக்கு பாண்டிய மன்னருக்கு மிகவும் பொருந்தும். குலப்பெருமையைக் குன்றில் ஏற்றத் துடிக்கிறார். ஆனால்... `பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால்...’

``அரிசி எனும் அட்சயம் கிடைப்பது அரிதாகி விடும் சுவாமி!’’

திடுமென வந்த குரலொலி அவர் சிந்தையைக் களைத்திட, குரல் வந்த திசையை நோக்கினார் பேரமைச்சர். தென்னவன் திருமுகத்தான் ஒரு புன்னகையோடு நின்றிருந்தான்.

பேரமைச்சர், தன் சிந்தனையோட்டத்தின் நிறைவாக முணுமுணுத்த வரிகள் அவன் செவிகளிலும் விழுந்திருக்கவேண்டும்.ஆகவேதான், வினாவுக்கு விடை பகர்ந்ததுடன், சரியான பதிலைச் சொல்லிவிட்ட திருப்தியில் புன்னகைக்கவும் செய்தான். மேலும், தன் நூல்ஞானத்தை வெளிப்படுத்தும் விதமாக, அமைச்சரின் அந்த வரிகளுக்கு முழுமையான விளக்கத்தைத் தரவும் தலைப்பட்டான்.

சிவமகுடம் - 66``சூழ்ந்திருக்கும் உமி நீங்குமுன் முளைப்பது அரிசிதான். எனினும் வளர்ச்சி முழுமையாகும் முன் உமி நீங்கிவிட்டால் அரிசி முளைக்காது. இதுதானே விளக்கம், அமைச்சர் பிரானே!’’

``ஆம்! சரியான விளக்கம்தான். ஆனால்... இந்த வரிகள் சொல்லும் அறிவுரையை அறிவாயா?’’

``ஓரளவு...’’

``எங்கே சொல் பார்க்கலாம்’’

``எத்தகைய வல்லமையை ஒருவன் பெற்றிருந் தாலும் சகல ஞானத் திலும் அவன் முன்னவனாக இருந்தாலும் துணையாகிய வலிமையை இழந்துவிட்டால், எடுத்தக் காரியத்தில் வெல்வது இயலாது!’’

``அற்புதம்... மிக அற்புதம் தென்னவா! சரி, இன்னொரு வினா தொடுக்கிறேன் பதில் சொல் பார்க்கலாம்...’’ என்றவர் அந்தக் கேள்வி யைக் கேட்டார்:

``நம் மாமன்னர் விஷயத்தில், அவருக்குத் துணை எனும் வலிமை சாதகமா, பாதகமா?’’

மதியூகியான தென்னவன் திருமுகத்தானுக் குள், அமைச்சரின் இந்த ஒரு கேள்வி பற்பல சிந்தனைகளைப் பதில்களாகத் தோற்றுவிக்க, எது சரியானது என்பது அறியாமல், பதில் சொல்லத் திணறினான்.

பேரமைச்சர் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டார். இந்தக் கேள்விக்குத் தனக்கே ஒரு தீர்க்கமானதொரு பதில் தெரியாதபோது, பாவம் இந்த அணுக்கன் என்ன செய்வான் என்று எண்ணியவராய், அவனை அருகில் அழைத்தார்.

``தண்டநாயகனே! எவ்விதமான சிந்தனைகள் இப்போது உனக்குள் எழுந்து உன்னைத் திணறச் செய்கின்றனவோ, அவையே என்னையும் திணறடிக்கின்றன. வா இப்படி... அருகில் வந்து அமர்ந்துகொள்... நம் இருவருக்குமான மந்திராலோசனை நிரம்ப இருக்கிறது!’’

பதில் பேசாமல் அமைச்சரின் கட்டளையை ஏற்றான் அந்த தண்டநாயகன். அவர் இருந்த இடத்துக்குச் சற்றுத் தாழ்வாக... தடாகத்தின் சரிவில் சாய்ந்து அமர்ந்தான். அவன் பாதங்கள் பட்டு நீர்ப் பரப்பு சலனப்படவே, சிற்றலைகளில் அல்லாடியது பால் நிலவின் முக பிம்பம்.

``தென்னவா! நம் மன்னர்பிரான் தனக்கான துணை வலிமையை இழந்துவிடுவாரோ என்று அச்சம் கொள்கிறது என் மனம்...’’

``காரணம்?’’

``காரணங்கள் பல உண்டு. ஆனால் அவற்றுக்குக் கர்த்தா ஒருவனே!’’

``அவர் யாரென்று நான் அறியலாமா?’’

``இல்லை... இப்போது நான் சொல்வ தற்கில்லை. ஒருவேளை போரின் போக்கு அந்த நபரை உங்களுக்கு அடையாளப்படுத்தலாம்.’’

``அமைச்சர்பிரானே மன்னிக்கவும். தங்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி எனக்கில்லை. என்றாலும் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும்.’’

``சொல்!’’

``மாமன்னரின் இந்தப் போர்த் திட்டமே தன் துரோகியை அடையாளம் காணத்தான். அப்படியிருக்க, தெள்ளத் தெளிவாக நீங்கள் துரோகியை அறிவீர்கள் எனில், அந்தத் தகவலை இப்போதே மன்னரிடம் தெரிவிக்கலாமே... மாமதுரை ஓர் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பும் அல்லவா?’’

``இல்லை தண்டநாயகா! மன்னர் இருக்கும் நிலையில், துரோகியைப் பற்றிய உண்மையைச் சான்றுகளுடன் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒருவேளை, நாம் சொல்வதை மாமன்னர் தவறாகப் புரிந்துகொண்டாலோ அல்லது ஏற்க மறுத்தாலோ, நாம் அச்சப்பட்டதுபோல் தனக்கான துணை வலிமையை அவர் இழக்க நேரிடும்!’’

``துணை வலிமை என்று நீங்கள் சொல்வது...’’

``நம்மை, நம் மக்களின் ஆதரவைப் பேரரசர் இழப்பார். ஆம், அந்தளவுக்கு நுணுக்கமான சதிவலையைப் பின்னி வைத்திருக்கிறார் அந்தத் துரோகி. சதியின் விளைவு... மாமன்னருக்கு இப்போது எவரைக் கண்டாலும் பெரும் சந்தேகம். ஏன்... என்மீதுகூட அவருக்கான சந்தேகம் முழுமையாக விலகவில்லை என்பதே எனது தீர்மானம்.’’

``எதை வைத்து இப்படியொரு தீர்மானத்துக்கு வந்தீர்கள் சுவாமி?’’

``மார்க்க பேதங்களை வைத்து. நான் சைவன்; பேரரசர் சமணம் சார்ந்திருக்கிறார். இது போதாதா?’’

``எனில், பாண்டிமாதேவியார்...’’

அவன் இந்தப் பெயரைச் சொன்னதும் சட்டென்று துணுக்குற்ற பேரமைச்சர், தென்ன வன் திருமுகத்தானின் இடைக்கச்சையை வலுவுடன் பற்றி, அவனைத் தன்பக்கம் இழுத்து அவன் செவிக்கருகில் சென்று ரகசியக் குரலில் சொன்னார்...

``அவரும் சிவபக்தைதான். உனக்கொன்று தெரியுமா? சக்கரவர்த்திகள், துரோகி என்று முழுமையாய் நம்பும் ஒரே நபர் பாண்டிமா தேவியார்தான்!’’

இதைக்கேட்டுப் பெரிதும் அதிர்ந்தான் தென்னவன் திருமுகத்தான். அவன் அதிலிருந்து மீள்வதற்குள் மென்மேலும் அதிரவைக்கும் தகவல்களை ஒவ்வொன்றாக விவரித்தார் பேரமைச்சர். `அவை தனக்காகச் சொல்லப்படவில்லை; தன் மூலம் பேரரசருக்குச் சொல்லப்படுபவை’ என்பதையும் அந்த மதியூகி அணுக்கன் அறியவே செய்தான்!

அடிகளாரும் அணுக்கர்களும்
அடிகளாரும் அணுக்கர்களும்

அற்புத லிங்கங்கள்!

தென்னவன் திருமுகத்தானிடம் பேரமைச் சர் குலச்சிறையார் என்னென்ன விஷயங்களை விவரித்துக் கொண்டிருந்தாரோ, அவற்றையே சிறிதும் பிசகாமல் சோழர்பிரானிடம் விவரித்து முடித்தார் பாண்டிமா தேவியார்.

``இப்போது, நீ என்ன செய்யப் போகிறாய் மானி!’’

``மாமன்னரின் சிந்தனைக்கேற்ப செயல்படப் போகிறேன். அவரின் ஆணையை சிரமேற்கொள்ளப் போகிறேன்...’’

``விளைவு என்னவாகும் தெரியுமா?’’

``தெரியும்... சதிச் செயல்கள் என்னைச் சிறைப்பிடிக்கும்!’’

``அதைப் பார்த்துக்கொண்டு சோழம் சும்மாயிருக்கும் என நினைக்கிறாயா?’’

``இருக்காது! சேனையுடன் எல்லையில் பாய்வீர்கள்... துரோகிகள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்...’’

``என்ன சொல்கிறாய் மானி!’’

``ஆம் தந்தையே! தங்களின் படைகள் பாண்டியருக்கு எதிராகக் கொடி ஏந்தினால், அதையே நான் துரோகி என்பதற்குச் சான்றாகக் காரணம் காட்டுவர்கள் எதிரிகள்!’’

``புரிகிறது! எனில், இப்போது நாம் என்னதான் செய்வது?’’

தந்தையின் இந்தக் கேள்விக்கு உடனே பதில்சொல்லாமல் சற்று சிந்தனையில் ஆழ்ந்த தேவியார், பின்னர் தீர்க்கமாகக் கூறினார்:

``தந்தையே! பல சோதனைகளைத் தந்து நிறைவில் அருள் செய்வதுதான் பரமனின் கருணை. அவரின் கணக்கு நமக்குப் புரியாது. இந்தச் சோதனையைத் தந்திருக்கும் அவரே மீளவும் அருள் செய்வார்... நாம் மட்டுமல்ல, பாண்டிய நாடும் மறைமுக எதிரிகளின் பிடிலியிருந்து மீளும். அதற்கு இந்தச் சிவமூர்த்தங் கள் உதவும்’’ என்றவாறு, தன் உள்ளங்கையில் இருந்தவற்றைச் சோழரிடம் ஒப்படைத்தார் தேவியார்.

பாண்டிய ராஜ்ஜியத்தைச் சிவராஜதானியாய் மாற்றப்போகும் அற்புதங்கள் அந்தத் தாரு லிங்கங்கள் என்பது, அப்போது மணிமுடிச் சோழருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்!

அதேநேரம்... பாண்டிமாதேவியார் எதிர்பார்ப்பதுபோன்ற அற்புதம் எதுவும் பாண்டிய மண்ணில் நிகழ்ந்துவிடக் கூடாது என்று தீர்க்கமாகச் செயல்பட்டு வரும் அந்தக் காரணகர்த்தா, வைகைக் கரையில் ரகசிய இடம் ஒன்றில் அணுக்கர்களோடு பெரும் ஆவேசத்துடன் உரையாடிக்கொண்டிருந்தார்!

- மகுடம் சூடுவோம்...