மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 69

சிவமகுடம்-69
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்-69

பதிகம் பிறந்தது, கதவு திறந்தது

திகம் பிறந்தது கதவு திறந்தது!

உலகம் உவக்க, உயிர்கள் களிக்க, பாதச் சிலம்பொலிக்க, சிவகாமி உடன் ஆட, பூத கணங்களோடு பரமனார் தானும் ஆட... அவ்வேளையில் எண்திசை கொண்டு பறக்கும் அவரின் விரிசடை போல், தன்னுடைய பொற்கிரணங்களை விரித்தபடி பகலவன் வானெழுந்து பல நாழிகைகள் ஆகிவிட்டிருந்தன.


வழக்கமாய், கதிர்க் கிரணங்களின் வெம்மையில் சுட்டெரிக்கும், அந்தக் கடற்கரைத் தலத்தின் மணற்பரப்பு. ஆனால் அன்று திருக்கோயிலின்முன் கூடியிருந்த அந்தக் கூட்டத்தார் சூட்டை உணரவில்லை. அவர்களின் மத்தியில் ஞானச் சூரியன்கள் இருவர் இருக்க, பஞ்சபூதங்களின் தாக்கம் அவர்களைப் பாதிக்குமா என்ன?

`மூசு வண்டறைப் பொய்கையும்போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்று பாடி, கொடும் தீ சூழ்ந்த நீற்றறையையும் குளிர்ப் புனலாய் மாற்றியவர் அல்லவா வாகீசர். இங்கும் அவர் பாடிய பதிக வரிகள் கூட்டத்தாரின் சிந்தையைக் குளிர்விக்க, அவர்களின் தேகமும் குளிர்ந்து போனது போலும். ஆகவே வெம்மையை உணர்ந்தார்கள் இல்லை.

அதுமட்டுமா? தண்ணொளி பொலியும் சந்திரனாய் நிற்கும் சம்பந்தப் பிள்ளையின் செங்கனிவாய்க் குறுநகையும், ஓர் அருள்புனலாய் அவர் களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் குளிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.

ஆம், அறியாமை எனும் கொடுங் கனலை மட்டுப்படுத்தும் ஞானப் புனல் அல்லவா அந்தச் சீர்காழிப் பிள்ளை.

ஞானத்தில் மூன்று நிலைகள் உண்டு. உலகப்பொருள்கள் - உயிர்களைப் பற்றிய ஞானம் பாச ஞானம்; ஆன்மாவைப் பற்றிய ஞானம் பசு ஞானம்; இறைவனைப் பற்றிய ஞானம் பதி ஞானம் ஆகிய சிவஞானம். இந்த மூன்றையும் கொண்டதால்தான் அவர் திருஞானசம்பந்தர்.

எண்ணில் மறை ஒலி பெருக எவ்வுயிரும் குதூகலிக்க அருளும் அந்தப் புண்ணியக் கன்று, ஒட்டுமொத்த கூட்டத்துடன் சேர்ந்து, அப்பர் பெருமான் பாடும் அழகையே வைத்தக் கண் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒன்றா... இரண்டா... பத்துப் பாடல்கள் பாடிமுடித்துவிட்டார் திருநாவுக்கரசர். ஆனாலும் இறைவனின் மனக்கதவுகள் திறக்கவில்லை; அதனால் ஆலயத்தின் திருக்கதவமும் திறந்தபாடில்லை.

காரணம் என்னவாக இருக்கும்... அப்பரின் பாட்டில் அந்த அப்பனும் மெய்ம்மறந்து போனானா அல்லது முன்வினை இங்கும் வந்து நாவுக் கரசருக்கு எதிராய் சதிராடுகிறதா?

முன்வினையா... அப்பர் பெருமானுக்கா..?

ஆமாம். அதுபற்றி அவரின் தமக்கையாரான திலகவதியாரிடம் சிவப் பரம்பொருளே கூறியதாகச் சொல்கிறது பெரியபுராணம்.

ஆம்! திலகவதியாரிடம் `உன் உடன் பிறந்தான் முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான். அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வம்’ என்று அருளினாராம் சிவபெருமான்.

அதாவது, முற்பிறவியில் வாகீசர் என்ற திருப்பெயருடன் சிவஞானத் தவம் செய்து சிவனாரை அடைய முயன்றாராம் நாவுக்கரசர். அந்தத் தவத்தில் அவர் சிறிது வழுவினார். அதனால் மறுபிறவி பெற்றுள்ளார். அவர் சமணம் புகுந்ததற்கும் சூலை நோயுற்று வருந்தியதற்கும் அந்த முன்வினைப் பயனே காரணம் என்கிறது பெரிய புராணம். அப்பரின் திருச்செங்காட்டங்குடி பதிகம் ஒன்றும் இத்தகவலை நமக்குச் சொல்கிறது.

அவ்வினையே இங்கும் வந்து விளையாடுகிறதோ?!

`பண்ணை ஒத்த மொழியாளாகிய உமை அம்மையை உடலின் ஒரு பாகம் கொண்ட மறைக்காடரே, வேதங்களால் அடைக்கப் பெற்ற கதவு களை உறுதியாகத் திறந்து எமக்கு அருள் செய்க.

திரண்ட செஞ்சடை கொண்ட ஈசனே, வலிமையான இந்தக் கதவின் வலுவினை, எமை ஆட்கொண்ட நீரே நீக்க வேண்டும்.

ஐம்பூதங்களாகவும், சூரிய-சந்திரராகவும், ஆன்மாக்களாகவும் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் அட்டமூர்த்தியே, செம்மையாக நான் உம்மைக் காணும்படி திருக்கதவைத் திறந்தருள வேண்டும்.

நான்மறைகள் நவின்ற நாயகா, திருபுரம் எரித்த சிவமே இந்தக் கதவம் விரிந்து திறக்க அருள்புரியவேண்டும்...’ - இங்ஙனம் பலவாறு வேண்டிப் பணிந்தும் மன்றாடிப் பாடித் தொழுதும் திருக்கோயிலின் திருக்கதவு திறக்காததால் மனம் கலங்கினார் திருநாவுக்கரசர். `இறைவா என்ன இது விளையாட்டு’ என்று மனத் துக்குள் கசிந்துருகினார். நிறைவாக திருக்கடை காப்புப் பாடலையும் பாடினார்:

`அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்

இரக்கம் ஒன்றிலீர் எம் பெருமானிரே

சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ

சரக்க இக்கதவம் திறப்பிம்மினே...’

`எந்தையே... ஈசனே... திருக்கயிலை மலையையே பெயர்த்தெடுக்க முற்பட்ட ராவணனின் வலிமையை அடக்கிய சிவப்பரம்பொருளே, உம் அடியானாகிய எம்பொருட்டு இரக்கம் இல்லாமல் இருக்கிறீரே... தேன் சுரக்கும் புன்னை மலர்கள் நிறைந்த திருமறைக்காட்டில் அருளும் சிவனே, விரைந்து இந்தக் கதவுகளைத் திறந்து அருள் செய்யும்’ என்று பொருள்பட திருநாவுக்கரசர் பாடி முடிக்கவும் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

திடுமென விண்ணில் திரண்ட கருமேகங்கள், வாகீசரையும் சீர்காழிப் பிள்ளையையும், அங்கு கூடியிருந்த மற்றவர்களையும் ஆசீர்வதிப்பது போல், பன்னீர்த் துளிகளாய் சாரலைப் பொழிந்தன.

அப்போது ஒருகணம் மண் அதிர்வதாய் உணர்ந்து மக்கள் திகைக்க, பெருங்காற்றொன்றும் வீசியது. ஆலய மணிகள் பெருமுழக்கம் செய்ய, பெருங்காற்றின் விசையால் தள்ளப்பட்டது போல் பேரோசையை வெளிப்படுத்தியவாறு ஆலய மணிக்கதவுகள் திறந்தன!

அந்த அற்புதத்தைக் கண்டு, திருமறைக்காட்டின் சமுத்திர ஓசையை விஞ்சும்படி மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்தது.

``ஓம் நமசிவாய’’

``தென்னாடுடைய சிவமே போற்றி’’

``எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’’

எங்கும் ஐந்தெழுத்து முழக்கம்; சிவநாமப் போற்றி என்று ஊரே பரவசத்தில் திளைத்தது. நாவுக்கரசரின் கண்களில் நீர்த்துளிகள் மலர்ந்தன. ``என் இறைவா... என் சிவமே...’’ என்று வாய்விட்டு அரற்றியவரின் தேகம், சிலிர்ப்பில் சற்றுத் தள்ளாட, அவர் சாய்ந்துவிடாதபடி தளிர்க் கரத்தால் அணைத்துக்கொண்டார் திருஞானசம்பந்தர்.

விலங்குகளா, வேடர்களா...

பழையாறை மாளிகையின் மகாமண்டபத்துத் தூண்டாமணி விளக்கின் தீபம், இந்தத் திருக்கதையைக் கேட்டு அதீத ஆனந்தம் கொண் டது போல், முன்னைக் காட்டிலும் அதிகப் பிரகாசத்துடன் சுடர்விட்டு ஜொலித்தது.

அவ்வப்போது மெள்ள அசைந்தாடவும் செய்த தீபத்தின் ஒளியில், பாண்டிமாதேவியாரின் திருமுகம் பூரணச் சந்திரனாய் பொலிந்ததைக் கண்டார்கள், அவரின் எதிரில் அமர்ந்து கதையை விவரித்துக் கொண் டிருந்த இளங்குமரனும் கோச்செங்கணும்.

அவ்வளவு பிரகாசம் தேவியாரின் திருமுகத்தில். அதேநேரம், தீபத்தின் அசைவால் சுடரொளி விலகியபோது, முழுநிலவு சட்டென்று மறைந்தது போன்றும் தோன்றி யது அந்த வீரர்களுக்கு!

இருவரும் தேவியாரின் திருமுகத்தில் வேறொன்றையும் கவனித்தார்கள். அவரின் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. மட்டுமன்றி, அவர்கள் தங்களின் விவரிப்பை நிறுத்திச் சில கணங்கள் கழிந்து விட்டிருந்த நிலையிலும், தேவியாரிடத்தில் எவ்விதச் சலனமும் இல்லை.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்


இளங்குமரன் பதற்றமானான். அந்த நிலையில், `மகா ராணியார்’ என்ற பதவி நிமித்தமான மரியாதைச் சொல்லைத் தவித்து, ஒரு பிள்ளையின் உரிமையோடு ``தாயே... தாயே...’’ என்று அழைத்தான்.

``என்னவாயிற்று தங்களுக்கு’’ என்று கூறி அவரை உசுப்பவும் முற்பட்டான்.

அவர்கள் சொன்ன திருக்கதையில் திளைத்து, அதுவரை யிலும் கண் மூடி செவிமடுத்துக் கொண்டிருந்த பாண்டிமா தேவியார், இளங்குமரன் அழைத்ததும் மெள்ள கண் திறந்தார். அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

``அன்னையாரின் கண்கள் நீர் உகுப்பதை இன்றுதான் கண்டேன்’’ உணர்ச்சிமிகுதியுடன் சொன்னான் கோச்செங்கண்.

``கண்ணீர் ஏன் அம்மா?’’ பரிதவிப்போடு கேட்டான் இளங்குமரன்.

``திருமறைக்காட்டில் நிகழ்ந்த அற்புதத்தை நேரில் தரிசிக்கும் பேறு எனக்கு வாய்க்கவில்லையே... அதுகுறித்த ஆற்றாமை எனக்குள்...’’

அவர் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தான் இளங்குமரன்.

``தாயே! இறைச்சித்தம் கூடுமா னால், அந்த அற்புதர்கள் இந்தப் பழையாறைக்கும் நம் மதுரைக்கும்கூட வருவார்கள். இங்கும் அங்கும் அவர் களால் அற்புதங்கள் நிகழும்...’’

``உண்மை இளங்குமரா! என் உள் மனமும் அப்படித்தான் சொல்கிறது. ஆனால்...’’

``என்ன தாயே? சொல்லுங்கள்...’’

``அவை சாத்தியமாவது உங்கள் இருவரின் கைகளில்தான் உள்ளது?’’

``எங்கள் கைகளிலா... புரியவில்லையே..?’’ திகைப்புடன் கேட்டான் கோச்செங்கண்.

திருமறைக்காடு
திருமறைக்காடு
shyams131


``தளபதியாரே! நீங்கள் இருவரும் மறைக்காட்டுக்கு மீண்டும் பயணப் பட வேண்டும். அங்கே திருமடத்தில் தங்கியிருக்கும் சீர்காழிப் பிள்ளையைப் பணிந்து, அவரை நம் திருஆலவாய் நகருக்கு வரும்படி என் சார்பில் அழைப்பு விடுக்க வேண்டும். அது உங்கள் பொறுப்பு. முறைப்படியான அழைப்போலை விரைவில் உங்களிடம் ஒப்படைக்கப்படும்...’’

பாண்டிமாதேவியார் இப்படிச் சொன்னதும் இளங் குமரன் தயக்கத்தோடு கேட்டான்: ``தாயே! பணியைச் சிரமேற் கொள்கிறோம். ஆனால் எப்போது வேண்டு மானாலும் போர் தொடங்கலாம் அல்லவா? அதில் நாங்கள்...’’

``நிச்சயம் பங்களிக்கப் போவதில்லை!’’

உறுதிபட தெரிவித்த மகாராணியார், ஒருகணம் அவர்கள் இருவரின் முகத்தையும் கூர்ந்து நோக்கினார். `போரில் பங்களிக்கப் போவதில்லை’ என்ற தேவியாரின் கூற்று, அவர்களுக்குள் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்க வேண்டும். அதனால் உண்டான வருத்தம் அவர்களின் முகத்தில் தெரிந்தது.

ஆசனத்திலிருந்து எழுந்து நின்ற பாண்டிமா தேவியார் சாளரத்தை நோக்கி நகர்ந்தார். இருவரும் அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் அவரையே கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

சாளரக் கதவுகளில் சாய்ந்து நின்றுகொண்ட தேவியார் இருவரையும் பார்த்துச் சொன்னார்: ``நிகழும் சதிராட்டத்தில் நம்மில் ஓரிருவராவது தப்பிப் பிழைத்திருக்க வேண்டாமா?’’

``என்ன சொல்கிறீர்கள்?’’ பதைபதைப்புடன் கேட்டான் கோச்செங்கண்.

``ஆம் தளபதியரே... பாண்டிய மாமன்னர் மாபெரும் வலையை விரித்து வைத்திருக்கிறார். வலையில் சிக்கப்போவது விலங்குகளா, வேடர்களா என்பது இறையின் கையில்தான் இருக்கிறது!’’

பாண்டிமாதேவியாரின் இந்தப் பதிலுக்குள் ஏதோ தீர்க்கமான உள்ளார்த்தம் இருக்கும் எனப் புரிந்துகொண்ட அந்த மதியூகியர் இருவரும், தங்களின் நிலைப்பாடு குறித்து மேலும் மறுத்துப் பேசவோ, கருத்து கூறவோ விரும்பவில்லை.

``நாங்கள் பயணத்துக்கு ஆயத்தமாகிறோம். உத்தரவு கொடுங்கள்...’’ எனப் பணிந்தார்கள். மகாராணியார் இதழ்களில் இப்போது புன்னகை. பரிவோடு இளங்குமரனிடம் கேட்டார்: ``இளங்குமரா! இன்னும் நீங்கள் சீர்காழிப் பிள்ளை நிகழ்த்திய அற்புதத்தைச் சொல்லவில்லையே...’’

நொடியில் சூழலைத் தன்வயப்படுத்தும் தேவியாரின் இயல்பை, ஆளுமையை எண்ணி உள்ளுக்குள் வியந்தவாறே, சீர்காழிப் பிள்ளை நிகழ்த்திய அற்புதத்தை விவரிக்க ஆயத்தமானான் இளங்குமரன்!

- மகுடம் சூடுவோம்...


கொன்றை!

சிவனாருக்குக் கொன்றை மலரைச் சமர்ப்பித்தால், நம் தோஷங்கள் நீங்கும். இம்மலர் பிரணவாகார புஷ்பம், எனச் சிறப்பிக்கப்படுகிறது. கொன்றை மரத்தையே சிவமாகக் கருதி வழிபட்டவர் ஆனாய நாயனார். சிவ திருவுருவங்கள் அமைக்கும்போது, சடாமகுடத்தின் உச்சியிலிருந்து இருபுறமும் கொன்றைச் சரங்கள் தொங்குவது போல் அமைக்க வேண்டுமாம்!

-சி.ராமு, கரூர்